சிங்கத்தின் குகைக்குள் புலிகள்..! (மௌன உடைவுகள் 09) 

சிங்கத்தின் குகைக்குள் புலிகள்..! (மௌன உடைவுகள் 09) 

      — அழகு குணசீலன் — 

அரசியலில் நடக்காது என்பார் நடந்துவிடும். நடக்கும் என்பார் நடக்காது. தமிழ்த்தேசிய அரசியல் வரலாற்றை இந்த வார்த்தைகளுக்குள் பொத்திக்கொள்ளலாம். அண்மையில் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் இந்தியாவின் தலைநகரில் -புது டெல்லியில் சிங்கத்தின் குகைக்குள் கூட்டம் ஒன்றை நடாத்தி இருக்கிறார்கள். 

இந்த கூட்டம் பற்றி வெளிப்படையாக குறிப்பிடாத ஈழத்தமிழர் நட்புறவுக்கழகத்தின்  தலைவர் காசி.ஆனந்தன் இந்த சந்திப்பை மறைமுகமாக சாடி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனைப் படிக்கும் போது தனக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் “உறவுக்குள்”, இடையில் முன்னாள் புலிகள் புகுந்துவிட்டார்கள் என்று அவர் நினைப்பது புரிகிறது. காசியின் வார்த்தைகளில் கூறுவதானால் இவர்கள் போலிப்புலிகள். 

முதலில், சந்திப்பு குறித்து முன்னாள் புலிகளான ஜனநாயகப் போராளிகள் தரப்பில் வெளியிடப்பட்ட   கருத்துக்களை நோக்கினால்…… 

1. “விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் காலத்தில் நடந்த சில ‘கசப்பான உண்மைகளை’ மறந்து இந்தியா நீட்டியிருக்கும் நேசக்கரத்தை பற்றி எழ நாங்கள் தயார்.” 

2. “இலங்கையில் சீன ஊடுருவலைத் தவிர்க்க தமிழீழம் அமைப்பதே ஒரே வழி”. 

3. “தமிழ்நாடு எங்கள் தாய் மடி, ஓடிவிளையாடும் இடம். எங்கள் தலைவர்கள், விடுதலைப்புலிகளின் தலைவர்கள் உட்பட அனைவரும் தமிழ்நாட்டில் இருந்த வரை பாதுகாப்பாக இருந்தார்கள், ஈழம் சென்ற பின்பே கொல்லப்பட்டார்கள்”. 

இந்தக் கருத்துக்களின்படி சில “கசப்பான உண்மைகளுக்கு” பிரபாகரனின் தலைமைத்துவம் பொறுப்பாகிறது. அந்த கசப்பான உண்மைகள் என்ன? அன்ரன் பாலசிங்கம் சொன்ன “துன்பியல் நிகழ்வுகளின் மறுவாசிப்பா….? 

  அவை இந்தியப்படையுடன் மோதும் பிரபாகரனின் முடிவு, ராஜீவ்காந்தி கொலை, இந்தியப் படையின் வெளியேற்றம், கலைஞர் கருணாநிதியை புறக்கணித்தது, இந்தியாவில் -தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும், சகோதரப் படுகொலைகளுமா….? 

ராஜீவ்காந்தி கொலைவழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள இன்றைய சூழலில் முன்னாள் புலிகளின் “கசப்பான உண்மைகள்” வார்த்தைப் பிரயோகம் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இவர்களின் விடுதலைக்குப் பின்னால் பரந்து விரிந்த எதிர்கால அரசியல் இலக்கும் இருக்கிறது. 

ஜனநாயக வழியில் தமிழீழம் அமைக்கமுடியும் அதற்கு சீனாவைக் காட்டி இந்தியாவைக் கட்டிப்போடலாம் என்று இன்னும் நம்புகிறார்கள் இவர்கள். இந்தியாவில் தலைவர்கள் பாதுகாப்பாக இருந்திருக்கிறார்கள். இலங்கையில் தான் கொல்லப்பட்டார்கள்.  

அப்படியானால் புலிகளின் தலைமைக்கான பாதுகாப்பை இந்தியா வழங்கியிருக்கிறது என்பதை அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள்.   

தமிழ்நாட்டில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்கள் கொல்லப்பட்டனர், உமா மகேஸ்வரன் சுடப்பட்டார், சர்வதேச/ இந்திய கடற்பரப்பில் கிட்டு….? இவை எல்லாம் எந்த வகையைச் சாரும்?எங்கள் தலைவர்கள், விடுதலைப்புலிகளின் தலைவர்கள் “உட்பட” எனும் போது அதற்குள் அடங்கும் வேறு எங்கள் தலைவர்கள் யார்? 

இதை “அடிக்காத பிள்ளை படிக்காது” என்றும் சொல்லலாம், “அடிக்கிற கைதான் அணைக்கும்” என்றும் சொல்லலாம். எது எப்படியோ முள்ளிவாய்க்கால் முன்னாள் புலிகளுக்கு பிராந்திய அரசியல் பாடத்தின் முக்கியத்துவத்தை புகட்டியிருக்கிறது என்பது மட்டும் உண்மை. 

காசி ஆனந்தன் வார்த்தைகளுக்குள் மறைந்திருந்து தாக்கும் அறிக்கையின் உள்ளடக்கத்தில் சில வரிகள்…! 

1. “தாயகத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் இயங்கும் சில தமிழர் அமைப்புக்களுக்கு சிறிலங்கா அரசாங்கமும், தமிழ் அரசியல்வாதிகளும் பங்களிப்பு வழங்குகின்றனர்”. 

2. “புலிகளின் பெயரில் போலியாக இயங்கும் சில குழுக்கள் போதைப்பொருள் சமூகச் சீரழிவுகளில் ஈடுபடுகின்றனர்”. 

3. “புதிதாக வரும் அமைப்புக்கள் சிறிலங்கா, புலம்பெயர்ந்த நாடுகளின் புலனாய்வு அமைப்புக்களுடன் சேர்ந்து இயங்குகின்றனர்”. 

 பாராளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறிய கருத்துக்களுக்கு சான்றுப்பத்திரம் வழங்குகிறார் காசி. அதேவேளை மாற்றுக் கருத்தாளர்களை முற்றிலும் புலிப்பாணியில் துரோகிகள் என சேற்றை அள்ளி வீசுகிறார்.  

இந்தியாவுடன் நெருங்கும் புலிகளின் இந்த நிகழ்ச்சித்திட்டம் நீண்டகாலமாக மேற்கொண்ட காய்நகர்வுகளின் பலன். கடந்த ஆண்டின் இறுதியில் சுவிட்சர்லாந்து தலைநகர் பேர்ணில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. இதில் சுவிஸ் புலிகளின் பிரதிநிதிகள் ஈழத்தமிழ் மக்களுக்கான அடிப்படை உதவிகள், மற்றும் அபிவிருத்தி பற்றிப் பேசினார்கள். 

2022 இல் புலிகளின் பல்வேறு கட்டமைப்புக்களிலும் செயற்பட்டு ஐரோப்பாவில் சிதறிக்கிடந்த உறுப்பினர்களை ஒருங்கிணைத்து விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டது. அப்போது மேற்குலகின் ஜனநாயக, மனித உரிமை, எழுத்து,பேச்சு சுந்திரங்களையும், விழுமியங்களையும் கடைப்பிடித்து முற்றிலுமாக ஒரு ஜனநாயக அரசியல் சக்தியாக செயற்படப்போவதாக அரசியல் பிரிவு அறிவித்திருந்தது.  

இந்த ஆண்டு தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல்வாதிகளின் (கறுப்பு ஆடுகளைத் தவிர்த்து) ஆதரவின்றி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டபோது ஜனநாயகப் போராளிகளின் மட்டக்களப்பு -வெல்லாவெளி தலைமையகத்தில் இருந்து, ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கையை வலியுறுத்தியும் அவரை வாழ்த்தியும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இது பாராளுமன்ற தமிழ்தரப்பு ரணில் மீது சீறிப்பாய்ந்ததால் அவருக்கு ஏற்பட்ட நோவுக்கு ஒத்தடம் இட்டு தடவி விடுவதாக அமைந்தது. 

இந்த ஒத்தடம் உண்மையில் தமிழ் மக்களும், தமிழ்தேசிய பாராளுமன்ற அரசியல்வாதிகளும் எதிர்பாராத ஒன்று. இனப்படுகொலையாளி என்று புலிகளால் வர்ணிக்கப்படுகின்ற கோத்தபாய ராஜபக்சவினால் ஒரு தலைப்பட்சமாக நியமிக்கப்பட்டவர் ரணில் என்பதே அந்த எதிர்பாராத வாழ்த்து குறித்த அதிர்ச்சிக்கு காரணம். அடுத்து விடுதலைப்புலிகள் அமைப்பை உடைத்து கருணா அம்மான் வெளியேறக் காரணமாக இருந்தவர் ரணில் என்பது தொடர்ந்தும் புலிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இது அடுத்த அதிர்ச்சி. 

இவ்வாறு கட்டம் கட்டமாக நகர்த்தப்பட்ட காய்நகர்வுகளே புதுடெல்லியில் இச்சந்திப்பு இடம்பெற வாய்ப்பைக் கொடுத்தது. இலங்கையில் கொழும்பு, யாழ்ப்பாண தூதரகங்களும், அதேபோல் புலம்பெயர்ந்த நாடுகளின் குறிப்பாக லண்டன் இந்தியத் தூதரகமும் இதில் பெரும்பங்காற்றியுள்ளன. லண்டனிலும், சுவிற்சர்லாந்திலும்   விடுதலைப்புலிகளின் அமைப்பில் முக்கிய பொறுப்பேற்றிருந்து, தற்போது லண்டனிலும், சுவிற்சர்லாந்திலும் வாழும் இருவர் இந்த நகர்வுகளுக்கு பின்னணியில் உள்ளனர். 

 காசி ஆனந்தன் வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீள்பிரகடனம் செய்து இந்தியப்பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தபோது லண்டனில் இருந்து கடும் எதிர்புக்குரல் எழுந்தது. அவரின் மீள் பிரகடனம்  “ஒரிஜினலாக” இல்லை என்றும் கூறப்பட்டது. இதற்கு காசி ஆனந்தன் காத்திருந்து இப்போது பதிலளித்துள்ளாரா? என்று கேட்கத் தோன்றுகிறது. 

ஒக்டோபர் 10ம் திகதி டெல்லியில் தமிழ்மக்கள் சமூக நல அறக்கட்டளையும், லண்டன் சிறு துளி அறக்கட்டளையும் இணைந்து இராசேந்திரபவனில் ஈழத்தமிழ் மக்களின் அடுத்தகட்ட நகர்வு பற்றி பேசியிருக்கிறார்கள். “அறக்கட்டளை”க்கும், “காசுக்கட்டளை”க்கும் உள்ள தொடர்பு பற்றி மௌன உடைவுகள் கூறித்தான் தெரியவேண்டும் என்ற நிலையில் மக்கள் இல்லை என்பதால் அது பற்றி பேசுவது தவிர்க்கப்படுகிறது. 

லண்டனில் வசிக்கும் ஈழத்தமிழர் பெண் ஒருவர் தலைமையில் இச் சந்திப்பு இடம்பெற்றதாக ஊடகங்கள் எழுதுகின்றன/ பேசுகின்றன. டெல்லி தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், பாரதீயஜனதா, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஜனநாயகப் போராளிகள் கட்சியில் இருந்து தலைவர் துளசி, செயலாளர் கதிர், வெளியுறவுத்துறை பொறுப்பாளர் நெல்சன், மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் நடுவேல், கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் ஸ்ரிபன் ஆகியோர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.! 

இவர்கள் டெல்லியில் என்னதான் பேசினார்கள்? விடுதலைப்புலிகள் மீதான தடைநீக்கம், 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், சமஷ்டித்தீர்வு, வடக்கு கிழக்கு இணைப்பு, காணி அபகரிப்பு பற்றி பேசியிருக்கிறார்கள். கூட்டத்தில் சமஷ்டி. அறிக்கையில் தமிழீழம் தான் இந்தியாவுக்கு பாதுகாப்பு. ஆக, தமிழீழம் யாருக்காக….?! 

இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியானது பிரதமர் மோடி தலைமையில் இந்துத்துவத்தை முதன்மைப்படுத்தி, மற்றைய மதங்களைப் புறக்கணித்து செயற்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில் ஈழத்தமிழரை இந்துக்கள் என்று காட்டி மதரீதியாக இந்திய மத்திய அரசின் அனுதாபத்தையும், ஆதரவையும் பெறுவதே இங்கு நகர்த்தப்படுகின்ற காய். இலங்கையிலும் மதரீதியான மோதல்களுக்கு வழிசமைக்கப்படுகிறது. 

காசி ஆனந்தனின் வட்டுக்கோட்டை மீள் பிரகடனமும், மோடிக்கான கடிதமும் இந்த இலக்கைக் கொண்டவையே. ஆனால் டெல்லி மாநாடு காசி ஆனந்தனை பின்னுக்கு தள்ளி விட்டது. டெல்லியும், ஜனநாயகப்போராளிகளும் தங்கள் எதிர்பார்ப்பை காசி ஆனந்தனைக் கொண்டு அடையமுடியாது என்று கருதுவதால் காசிக்கு காய்வெட்டப்பட்டுள்ளது.  

தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்பு, இந்துத்துவ பார்ப்பனிய எதிர்ப்பு வலுவடைந்து வருகிறது. ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான மோதல் தினமும் இடம்பெறுகிறது. எம்.ஏ.சுமந்திரன் பா.உ. தமிழ்நாடு சென்றிருந்த போது பாரதீய ஜனதா கட்சியினர் சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். “மதம்மாற்றியே…! “திரும்பிப் போ…! என்று குரல் எழுப்பினார்கள். பின்னர் அண்ணாமலையின் தலையீட்டால் அது அடங்கிப்போனது. 

யாழில் இந்திய தூதரகம், பாரதீய ஜனதா கட்சி, சிவசேனா, விஷ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ், ஹிந்தி வகுப்பு என்று எல்லாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. எல்லாம் இந்துத்துவாவை நோக்கியே நகர்கின்றன. இலங்கைக்கு தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையின் வருகையின் பின்னணியும் இதுவே. 

பிரதமர் மோடியின் ஆட்சிக்கு முதல்வர் ஸ்டாலினின் “திராவிடமாடல்” ஆட்சி பெரும் தலையிடியாக மாறியிருக்கிறது. இதனால் தமிழக அரசைக் கைப்பற்றுவது பாரதீய ஜனதாவின் குறியாக உள்ளது. இதற்கு முன்னாள் புலிகளை தேர்ந்து எடுத்துள்ளது இந்தியா. இதன்மூலம் தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்களை பிரித்து இந்துத்துவத்தை முதன்மைப்படுத்தும் அரசியலை செயற்படுத்துவது நோக்கம். மத சார்பற்ற காங்கிரஸ் கூட்டணிக்கு தி.மு.க. வழங்கும் ஆதரவுக்கு எதிர்நடவடிக்கை.  

உண்மையில் இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் மோடியின் இந்துத்துவா நன்றாக விலைபோகிறது. இது மதசார்பற்ற காங்கிரஸ் கூட்டணிக்கு கடும் சவாலாகும். இதனால்தான் காங்கிரஸ் தெற்கு மாநிலங்களிலும் மற்றும் மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்களிலும் கவனம் செலுத்தவிரும்புகிறது. இதன் ஒரு வெளிப்பாடாகவே காங்கிரஸ் கட்சியின் தலைவராக கர்நாடகா மூத்த அரசியல்வாதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இந்தியாவிடம் இருந்து விடுதலைப்புலிகள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது பேசப்பட்ட விடயங்களில் தெளிவாகிறது. இதற்காக என்ன கைமாற்றை புலிகளிடம் இருந்து இந்தியா எதிர்பார்க்கிறது என்ற கேள்வி எழுவது சகஜம். வடக்கு கிழக்கில் சீன எதிர்ப்பு நடவடிக்கைகளை ஊக்குவித்தல், இந்துத்துவ செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கல், மரபு ரீதியான தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலுக்கு மாற்றாக ஜனநாயகப்போராளிகள் களத்தில் இறங்குதல்,  இவற்றின் ஊடாக கொழும்பு அரசுக்கு அழுத்தங்களை வழங்கி இந்திய நலன் சார்ந்த இலக்குகளை அடைதல். ஒரு வகையில் ஒரு காலத்தில் இந்திராகாந்தியும், ராஜீவ் காந்தியும் செய்ததை மோடி செய்யப்போகிறார்.  

ஒட்டு மொத்தத்தில் இந்திய நிகழ்ச்சித்திட்டம் அனைத்தும் விடுதலைப்புலிகளின் வழக்கமான குறுக்கு வழி அரசியலின் தொடர்ச்சியாக அமையப்போகிறது. ஒரு வித்தியாசம் அன்று வன்னியில் நாணயக்கயிறு இருந்தது இன்று ஐரோப்பாவில் அது இருக்கிறது. இந்தியா தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலுக்கு எதிராக ஜனநாயகப் போராளிகளை  களத்தில் இறக்கும்போது “சம்பந்தர் அன் கோ” பின்னால் போகவேண்டும். இது ரி.என்.ஏ.க்கு ஒன்றும் புது விவகாரம் அல்ல. 

சிங்கத்தின் வாலை புலிபிடிக்கும்…. 

புலியின் வாலை  ரி.என்.ஏ பிடிக்கும். 

இல்லையேல்… ” T.N.A .GO HOME….”தான். 

ஆப்பிழுத்த குரங்கின் கதைதான் நினைவில் நிற்கிறது…..!