(1960 களில் எழுதத் தொடங்கி 2022வரை ஓயாது அறுபதாண்டு காலம் எழுத்துலகில் தொடர்ச்சியாக இயங்கி வந்த தெளிவத்தை ஜோசப் அவர்களுடன் இறுதி இருபத்திரண்டு ஆண்டுகள் ஓர் உதவியாளனாக, ஒரு மகனாக, ஓர் இளைய நண்பனாக பயணித்த அனுபவங்களைப் பதிவு செய்யும் எத்தனிப்பு இந்தத் தொடர்.)
— மல்லியப்புசந்தி திலகர் —
இலக்கிய ஆளுமைகளான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியுடன் பத்தாண்டுகள், கவிஞர் சக்தீ அ. பால அய்யாவுடன் ஆறு ஆண்டுகள் என நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தாலும் கூடவே பயணிக்கும் வாய்ப்பு அதிகம் வாய்த்தது தெளிவத்தையாருடன்தான். அத்தகைய பயணங்களில் அவருடனான உரையாடல்கள் சுவாரஷ்யம் நிறைந்தவை. நிகழ்வுகள் அழகானவை, நினைவுகள் பசுமையானவை. அந்த பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொள்வதும் பதிவு செய்வதும்தான் இந்தப் பத்தி. நினைவுகளுடன் பகிர்ந்து கொள்ள ஏராளமாய் நிழற்படங்களும் உண்டு.
இனிப்புச் சந்திப்பாய் அமைந்த முதல் சந்திப்பு
இரண்டாயிரமாம் ஆண்டுவரை கூட எனக்கு தெளிவத்தையார் ஒரு சாதாரண எழுத்தாளர்தான். அதற்கு காரணம் அவ்வப்போது நான் வாசித்திருந்த அவர்களது சிறுகதை ஒன்றிரண்டு மட்டுமே. ஆனால் 2000-2002 காலப்பகுதியில் தினகரன் வார மஞ்சரியில் அவர் எழுதிய ‘ஈழத்து இதழியலும் இலக்கியமும்’ ஒரு சாதாரண எழுத்தாளர் என்ற மனநிலையைத் தாண்டி அவர் மீதான ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியது. அப்போது கொழும்புப் பல்கலைக் கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்கை நெறியைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். ‘மொழியும் தொடர்பாடலும்’ (Language and communication) எனும் பாடத்தைக் கற்பித்தவர் பேராசிரியர் கா.சிவத்தம்பி. கூடவே ‘இதழியல் வரலாறு’ (History of Journalism) என்றொரு பாடம். இந்தப் பாடத்திற்கு இலங்கையில் வெளியான தமிழ்ப் பத்திரிகைகள், நாளிதழ்கள், சஞ்சிகைகள், சிற்றிதழ்கள் பற்றிய தேடல் தேவையாயிருந்தது. எனது தேடலை இலகுவாக்கியதில் தெளிவத்தையாரின் தினகரன் கட்டுரைத் தொடர் முக்கிய பங்கு வகித்தது.
காலையில் அந்தக் கட்டுரையை வாசித்த பின்னர்தான் விரிவுரைக்கே செல்வதுண்டு. அந்த வாசிப்பு பெரும் உத்வேகத்தைத் தருவதாக இருந்தது. அவர் குறித்து நான் கொண்டிருந்த பார்வை விரிவடையத் தொடங்கியது. இவ்வளவு தேடல்களையும் அந்தப் பத்திரிகை அல்லது சஞ்சிகையின் அட்டைப் படங்களுடன் அவர் தருவதைப் பார்த்து வியந்து போனேன். அப்போதிருந்தே அவரை குருவாக ஏற்றுக் கொண்டேன்.
இதே சமகாலத்தில் ஹட்டனில் ‘லோயல் கல்வியக’ நிர்வாகியாக இயங்கியதுடன், கல்லூரி நண்பன் கிருபாகரனின் தந்தையார் கவிஞர் க.ப. லிங்கதாசன் எழுதிய கவிதைகளைத் தொகுத்து அவரது மறைவின் பின்னர் ‘குறிஞ்சித்தேன்’ கவிதைகள் என வெளியிடும் முயற்சியில் இருந்தோம். வெளியீட்டு விழாவினை யாருடைய தலைமையில் நடத்தலாம் என்று கூடிப் பேசியபோது நினைவில் வந்தவர் தெளிவத்தை ஜோசப்.
தெளிவத்தை ஜோசப் எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார்? என்பது போன்ற வினாக்கள் இப்போதே என்னுள் எழுந்தது. அங்குமிங்குமாகத் தேடி நானும் நண்பன் கிருபாவும் கொழும்பு, இங்குருகடே சந்தி, செய்ன்ஸ்தான் தியேட்டர் பகுதியில் அமைந்த ‘Modern Confectioneries’ நிறுவனத்தை சென்றடைத்தோம். “ஜோசப் அவர்களைச் சந்திக்க வேண்டும்” என்றோம். வாசலில் நின்ற காவலர் உள்ளே அனுமதிக்கவில்லை. உள்ளே தொடர்பு கொண்டு விட்டு, சந்திக்க வாய்ப்பில்லை என்றார். “கவிதைப் புத்தகத்துடன் இரண்டு இளைஞர்கள் வந்திருக்கிறார்கள் என்று கூறுங்கள்” என துரும்பை அடித்தேன். சில நிமிடங்கள் கேட்டுக்கு வெளியே நின்றிருந்தோம். யாரோ?! என்ற ஆச்சரியக் குறியை முகத்தில் சுமந்தவாறே எங்களை நோக்கியவர் தெளிவத்தை ஜோசப். கிருபா – திலகர் என்றால் தெரியவா போகிறது?. “கவிஞர் லிங்கதாசன் மகன், அப்பாவின் புத்தகத்தை வெளியிட உள்ளோம், அய்யாதான் தலைமை தாங்கணும்” என ஒரே மூச்சில் மூன்று வசனங்களையும் கூறி முடித்தேன். ஹா… ஹா… என்ற தெளிவத்தை brand சிரிப்பு STAR brand நிறுவன வாசலில் பலமாக ஒலித்தது. இருவருக்கும் கைலாகு கொடுத்தார். உள்ளே அவரே அழைத்துப் போனார்.
STAR toffee என பள்ளிக்காலத்தில் பகிர்ந்துண்ட அந்த இனிப்பு உற்பத்தி நிறுவனத்தில் நிற்கிறோம் என்பதே ஒரு வித குதூகலத்தைத் தந்தது. கூடவே தெளிவத்தை ஜோசப் எனும் எழுத்தாளுமையுடன் உரையாடிக் கொண்டிருக்கிறோம் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
எல்லோருக்கும் ‘எழுத்தாளர்’ என்றுதானே அவரைத் தெரியும். ஆனால் அவர் பிழைப்புக்கு ‘கணக்காளராக’த் தானே கடமையாற்ற வேண்டி இருந்தது. “ஒரு கணக்காளருக்குள் இத்தனை இலக்கியத் தேடலா?!” என, கணக்கியல் கற்ற நான் கணக்குப் போட்டுக் கொண்டே, “அய்யா தினகரனில் எழுதும் இதழியல் தொடர் கட்டுரையை விடாமல் வாசிக்கிறேன்” என பின்னணி பற்றி பேசினேன். தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து, “ம்ம்ம்… கிரேட். வாசிக்கிறீங்க, அதுபற்றி பேசுறீங்க, அப்பாவுட்டு புஸ்த்தகத்த போடனும்னு நெனைக்கிறீங்க. தெட்ஸ் கிரேட்” என உற்சாகப்படுத்தினார்.
தெளிவத்தையாருடன் பேசும்போது இடையிடையே ஆங்கிலத்தில் பேசுவார். அது ஆங்கில மொழிமூலம் அவர் கற்றதன் எதிரொலி.
தமிழ் எழுத்தாளராக நாம் கொண்டாடும் தெளிவத்தை ஆங்கில மொழி மூலம் கற்றவர் என்பதும் இங்கே கவனத்துக்குரியது.
“நல்ல முயற்சி, எழுதுறவிங்கள பெருசா யாரும் கண்டுக்கிறதில்ல. குறிப்பா அவிங்க குடும்பத்திலேயே. ஆனால் அப்பா எறந்த பிறகும் அவரோட புத்தகத்தைப் போடனும்னு நெனைக்கிற பிள்ளைகளும் இருக்கத்தான் செய்து” என்று கூறி எங்களை மீண்டும் வாழ்த்தி பிராண்ட் சிரிப்பை உதிர்த்தார் தெளிவத்தை.
திகதி விபரங்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டார். அட்டனில்… என்று அவர் ஆரம்பிக்க “அய்யா போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்றம்” என்றேன் அவசரமாக. மீண்டும் சிரித்தார். விடைபெற்றுக் கொண்டோம்.
இப்படியாக ஓர் இனிப்புக் கம்பனியில் தொடங்கிய இனிப்பு சந்திப்பாகத்தான் எங்கள் உறவின் தொடக்கம் இருந்தது. அப்போதெல்லாம் அவருக்கு நான் க.ப.லிங்கதாசன் மகன் என்பதாக மனதில் பதிந்திருந்தது எனக்கு பின்னாளில் தான் தெரிந்தது.
(தொடரும்)