மாகாணசபை அரசியலின் மறுபக்கம்..! (மௌன உடைவுகள்: 07 (பகுதி 2)) 

மாகாணசபை அரசியலின் மறுபக்கம்..! (மௌன உடைவுகள்: 07 (பகுதி 2)) 

— அழகு குணசீலன் —

கிழக்கு மாகாணசபை தேர்தல் முடிவுகளுக்கு முன்னர், 1988இல் இடம்பெற்ற இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணசபை தேர்தல் பற்றி நோக்குவது பின்னால் ஆராயப்படவேண்டிய விடயங்களுக்கு ஆதாரமாக இருக்கும்.  

தமிழீழ விடுதலைப்புலிகள் இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையையும், 13வது திருத்தத்தையும் முற்றாக நிராகரித்து மாகாணசபைத் தேர்தலை மக்கள் முற்றாக பகிஷ்கரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்கள். எல்லாத்தரப்பு ஆயுத வன்முறைகளுக்கும் மத்தியிலும் இந்த தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஒன்று நடாத்தப்பட்டது ஒருபகுதி மக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை முழுமையாகப் பயன்படுத்தமுடியவில்லை, வேட்பாளர்கள் தமது அரசியல் உரிமைகளை வரையறுக்கப்பட்ட வகையில் பயன்படுத்தினர். மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் வாய்ப்பு, பன்மைத்தன்மை அரசியல் தேர்வு அங்கு இருக்கவில்லை. தேர்தல் ஒன்று நடாத்தப்பட்டது என்பதற்காக மட்டும் இந்ந தேர்தல் ஜனநாயக ரீதியானது என்றால் அது போன்ற மோசமான அநாகரிக அரசியல் தவறு இந்த உலகில் இருக்கமுடியாது. 

மேலே கூறப்பட்ட அனைத்து உரிமை மறுப்புக்களுக்கும் அப்பால் மிகமோசமான உரிமைமறுப்பும், மனித உரிமைகள் மீறலும், ஜனநாயக, கருத்துச் சுதந்திர மறுப்பும், வன்முறையும், ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வடக்கு தேர்தல் மாவட்டங்களில் ஈ.பி.ஆர்.எல்.எப் – ஈ.என்.டி.எல்.எப் கூட்டணியைத் தவிர வேறு எந்தக்கட்சியும் போட்டியிட முன்வரவில்லை. போட்டிபோடும் உரிமை வன்முறையின் மூலம் மறுக்கப்பட்டது. பிறகு என்ன எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள். 

மாவட்டங்களை பங்கீட்டுக் கொண்டதன்படி யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களை ஈ.பி.ஆர்.எல்.எப். எடுத்துக்கொண்டது. கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை ஈ.என்.டி.எல்.எப். எடுத்துக்கொண்டது. போட்டியின்றி இவர்களின் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். தேர்தல் நடாத்தவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. தேர்தலை நடாத்தாமல் இருப்பது அடிப்படை உரிமை மீறல் என்றால், எதிர்தரப்பு போட்டியிடாத சூழலை ஏற்படுத்தி போட்டியின்றி தெரிவாவதும் அந்த வகையைத்தானே சாரும்? . 

1988 மாகாணசபை தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 பேரும், மன்னார் மாவட்டத்தில் 5 பேரும் ஈ.பி.ஆர்.எல்.எப். இல் மாகாணசபை உறுப்பினராகினர். ஈ.என்.டி.எல்.எப். உறுப்பினர்கள் கிளிநோச்சி -03, முல்லைத்தீவு -05, வவுனியா -04 பேர்கள். வடமாகாணத்தில் இருந்து மொத்தம் 36 மாகாணசபை உறுப்பினர்கள். கிழக்கு மாகாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் 17 பேர், முஸ்லீம் காங்கிரஸ் 17, ஐ.தே.க.1. ஈ.என்.டி.எல்.எப். இல் இருந்து எவரும் தெரிவாகவில்லை. மொத்தம் 35 பேர். வடக்கு, கிழக்கு மாகாணசபை மொத்தம் 71 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. கிழக்கு மாகாணத்தில் பல கட்சிகள் போட்டியிட்டன, அரசியல் பன்மைத்துவம் நிலவியது. தேர்தல் நடந்தது என்பது ஒரு மாற்று. 

கிழக்கில் புலிகளின் பகிஷ்கரிப்புக் கோரிக்கையையும் மீறி மக்கள் குறிப்பாக மட்டக்களப்பு, திருகோணமலையில் ஓரளவுக்கு வாக்களிக்கச் சென்றனர். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. தமிழ் மக்கள் வாக்களிப்பை பகிஷ்கரித்தால் மாகாணசபையில் முஸ்லீம்களினதும், சிங்களவரினதும், கையோங்கிவிடும், என்று ஈ.பி.ஆர்.எல்.எப் கூட்டணி பிரச்சாரம் செய்தது. மறுபக்கத்தில் வடக்கில் தேர்தல் இல்லாததால் இந்தியப் படையினரதும், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.என்.டி.எல்.எப் கூட்டணியினரதும் கவனம் கிழக்கில் குவிந்திருந்தது. 

தமிழ் வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டைகள் வந்து சேரவில்லை. அவற்றை தபால் நிலையங்களில் இருந்து சூறையாடி ஈ.பி.ஆர்.எல்.எப். கட்டுக்கட்டாக வாக்களித்ததாக ஊடகங்கள் பேசின. மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்றபோது அவர்களின் வாக்குகள் போடப்பட்டிருந்தன. தேர்தல்நாளில் கிராமங்களில் வீடு வீடாகச் சென்று வாக்காளர் அட்டைகள் சேகரிக்கப்பட்டு வாக்களிப்பு நடந்தது. இந்த மகத்தான ஜனநாயகத்தின் ஊடாகவே வடக்கு, கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டது. வரதராஜா பெருமாள் முதலமைச்சரானார். 

கிழக்கு மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்டபின் அதற்கான தேர்தல் 2008 இல் நடைபெற்றது. இதில் 19 அரசியல் கட்சிகள்/ குழுக்கள் போட்டியிட்டமை குறிப்பிடக்கூடிய அரசியல் பன்மைத்துவம். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இணைந்து போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (UPFA) 20 ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைத்தது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் (பிள்ளையான்) சி.சந்திரகாந்தன் முதலமைச்சரானார்.  

2012 தேர்தலில் இவர்கள் 14 ஆசனங்களைப் பெற்றனர். 11 ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, 7 ஆசனங்களைப் பெற்ற முஸ்லீம் காங்கிரஸுடன் நிபந்தனையற்று இணந்து ஆட்சி அமைக்க உதவியது. முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் முதலமைச்சரானார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தரின் ஒருதலைப்பட்ணசமான நிபந்தனையற்ற இந்த தீர்மானம் குறித்த அதிருப்தி கிழக்கு மாகாண தமிழர்களுக்கு இன்றும் உள்ளது. இதற்கு மட்டக்களப்பு தமிழ் மக்கள் கடந்த பொதுத்தேர்தலில் கணக்குத் தீர்த்திருக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 4  உறுப்பினர்களும், தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து ஒருவரும் தெரிவாகினர். 

வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணசபை முதலமைச்சர் வரதராஜா பெருமாள், கிழக்கு மாகாண முதலாவது முதலமைச்சர் சந்திரகாந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆகிய மூவரையும் ஒப்பிடுகையில். முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் காலம் வடக்கு கிழக்கு மக்களைப் பொறுத்தமட்டில் ஒரு இருண்டகாலம். இதற்கு அன்றைய அரசியல் சூழ்நிலையும் கணிசமான பங்களிப்பை வழங்கியிருக்கிறது. தனது அமைப்பின் ஆயுத கலாச்சாரத்தை கட்டுப்படுத்த அவரால் முடியவில்லை. முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புக்கள் எதையுமே நிறைவு செய்யவில்லை. அபிவிருத்தியும் இல்லை. உரிமையும் இல்லை. அவர் எதையும் சாதிக்காமல் தேசிய அரசியலுக்குள் நுழைவதற்கு மட்டும் மாகாணசபை ஏணியாக அமைந்திருக்கிறது. இப்போது இணக்க அரசியலுக்கு தயாராகிறார். 

கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனைப் பொறுத்தமட்டில் அவரது அரசியல் பிரவேசம் கிழக்கில் பல அபிவிருத்தி பணிகளை அறுவடையாக விட்டுச் சென்றிருக்கிறது. அதன் காரணமாகத்தான் 2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் சிறையில் இருந்துகொண்டே மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெறக்கூடிய வாய்ப்புக்கிடைத்தது. இந்த வாக்குகள் வெறும் பிள்ளையானுக்கு மக்கள் அளித்த வாக்குகள் அல்ல. பிள்ளையான் முதலமைச்சராக செய்து காட்டிய அபிவிருத்திப் பணிக்கு அளிக்கப்பட்ட வாக்குகள். 

இந்த வகையில் முழு இலங்கைக்குமே ஒரு மாகாணசபை முதலமைச்சர் எப்படி செயற்பட முடியும் என்பதை அதுவும் குறைந்த அதிகாரங்களுடனும், குறைந்த நிதி, பௌதிக வளங்களுடனும் பிள்ளையான் சாதித்துள்ளார். இதற்கு அன்றைய அரசியல் சூழலும், யுத்தத்தின் முடிவும், சர்வதேச உதவிகளும் வாய்ப்பாக அமைந்தன. இலங்கையின் முதலமைச்சர்களுக்கான மாநாடே இதை உறுதி செய்திருக்கிறது. சகல விமர்சனங்களுக்கும் மத்தியில் இதனை நேர்மையுடன் ஒத்துக்கொள்கின்ற எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளும் உள்ளனர். 

அதேபோன்று யுத்தத்தின் பின் தமிழ் -முஸ்லீம் உறவை மீளக்கட்டி எழுப்புவதில் பிள்ளையானும், ஹிஸ்புல்லாவும் அவர்கள் மீதான விமர்சனங்களுக்கு அப்பால் மாகாணசபையில் இணைந்து செயற்பட்டிருக்கிறார்கள். கிழக்கு மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்கு கொழும்புடன் பிள்ளையான் பேச்சுக்களை மேற்கொண்டார். ஆனால் துரதிஷ்டவசமாக அன்றைய பிரதியமைச்சர் கருணா அம்மான் மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் தேவையில்லை, அவர்களுக்கு எதற்கு இந்த அதிகாரம் என்று எதிர்க்குரல் எழுப்பியதால் முதலமைச்சரின் முயற்சி தடைப்பட்டது. 

இவற்றின் ஊடாக இணக்க அரசியல் ஊடாகவே இருதரப்பு நம்பிக்கையை வளர்த்து பிரச்சினைகளுக்கு தீர்வுகாணமுடியும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் சந்திரிகா பண்டாரநாயக்க காலத்தில் அவரது கட்சியில் தேசியப்பட்டியலில் இணையும் நோக்கில் நாடுதிரும்பினார். இது அவரின் ஈழப்பிரகடன எதிர்ப்பு அரசியலில் அவர் நம்பிக்கை இழந்ததன் விளைவு அல்லது கற்றுக்கொண்ட பாடம்.இணக்க அரசியல் மீதான நாட்டம். வடக்கிலும் இணக்க அரசியல் வளர்கிறது. இந்த வகையில் இணக்க அரசியலின் நாட்டம் அதிகரித்துச் செல்கிறது எதிர்ப்பு அரசியல் தங்களுக்குள்ளே குத்துச்சண்டையிட்டு சிதைந்து கொண்டிருக்கிறது. 

கிழக்கு மாகாணத்தில் ஒருகாலத்தில் தமிழ்த்தேசிய அரசியல் முன்னிலைப்படுத்தப்பட்டு,இணக்க அரசியல் மீது குறைகூறப்பட்டது. கிழக்கின் தலைவர்களான நல்லையா, தேவநாயகம், இராசதுரை, இராஜன் செல்வநாயகம் போன்றவர்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகள் இந்தவகையில்தான் “துரோக அரசியலாக” அடையாளப்படுத்தப்பட்டன. இப்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பன்மைத்துவ இன அடையாளங்களையும், கலாச்சார பண்பாட்டு விழுமியங்களையும் கொண்ட ஒரு நாட்டில் – ஒரு பிராந்தியத்தில் இணக்க அரசியல் ஒரு முன்மாதிரி. இதை கிழக்கு மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இதனால்தான் அவர்கள் நல்லையா, தேவநாயகம், இராசதுரை, இராஜன் செல்வநாயகம் ஆகிய முன்னாள் இணக்க அரசியல் தலைமைகளின் சிந்தனைகள் குறித்து மறுவாசிப்பு செய்யத் துணிந்துள்ளனர். ஆனால் இணக்க அரசியல் ஒரு கை ஓசை அல்ல சிங்கள ஆட்சியாளர்களும் தங்கள் கைகளை இணைக்க வேண்டும். 

 “ஆல்” அரசியல் பக்கம் திரும்பினால் 1982 இல் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டிருந்தா “ஆல்”, இடது சாரிகள் வெற்றி பெற்றிருப்பார்கள், அதனால் 1983 இனக்கலவரம் ஏற்பட்டிருக்கமாட்டாது என்று நிறுவ முற்படுவது தவறானதும், ஆதாரமற்றதும். ஆயுதப்போராட்டத்தின் வேகத்தை துரிதப்படுத்தியதற்கு இடதுசாரிகள் அங்கம் வகித்த ஐக்கிய முன்னணி அரசாங்கமே காரணமாக அமைந்தது. லங்கா சமசமாஜக் கட்சியின் கொல்வின். ஆர். டி. சில்வாவினால் தயாரிக்கப்பட்ட, எண்ணிக்கையில் சிறுபான்மையினரான மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்த 1972 குடியரசு அரசியல் அமைப்பு சட்டமே  ஆயுதப்போராட்ட மூலகாரணம். 

 இந்த அமைச்சரவையில் கலாநிதி கொல்வின்.ஆர்.டி. சில்வா (அரசியலமைப்பு அமைச்சர்), கலாநிதி என்.எம்.பெரேரா (நிதி அமைச்சர்,) பீற்றர் கெனமன் (வீடமைப்பு அமைச்சர்) லெஸ்லி குணவர்த்தன (போக்குவரத்து அமைச்சர்) உள்ளிட்ட மற்றும் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் விவியன்குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, சரத்முதட்டுவேகம எனப்பலர் இருந்தார்கள். பலமான இடதுசாரி அரசியல் இருந்தது ஆனால் அந்தப்பலம் தமிழ் மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டது.  

சோல்பரி அரசியல் அமைப்பின் 29வது பிரிவின் 2வது சரத்து சிறுபான்மையினருக்கு வழங்கிய பாதுகாப்பு நீக்கப்பட்டது. பௌத்தம் அரச மதமாக்கப்பட்டது. சிங்களமொழி முதன்மைப்படுத்தப்பட்டது. இடதுசாரிகள் ஒரு மதத்தை முதன்மைப்படுத்தி, ஒரு இனத்தை முதன்மைப்படுத்தி, சிறுபான்மை இனங்கைகளை அடிமைகளாக பிரகடனம் செய்த அரசியல் அமைப்பு இந்த இடதுசாரிகளின் ஆட்சியில் தான் அரங்கேறியது. இவர்கள் 1983 இனக்கலவரத்தை எந்த வகையில் தடுத்திருக்க முடியும்?   

1082 காலப்பகுதி சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சியின் மூடப்பட்ட பொருளாதார நிலையில் இருந்து திறந்த பொருளாதார நிலைக்கு திரும்பிய காலமும் அதன்மூலமான நன்மைகளை ஓரளவுக்காவது மக்கள் பெறத் தொடங்கிய காலமும். இந்த நிலையில் இடதுசாரிகள் வெற்றி பெற்றிருப்பார்கள் என்பது ஒரு விருப்பமாக மட்டுமே இருக்கமுடியும். ஜதார்த்தமாக அமைய முடியாது. 

இன்றைய கோத்தபாய அரசின் பொருளாதார கஷ்டங்களையே சிறிமா ஆட்சியிலும் மக்கள் அனுபவித்தார்கள். கொள்கைகள் முன்னேற்றகரமானவைதான். பிரச்சினைகள் நடைமுறைப்படுத்துவதிலும், மக்களின் ஏற்புடமையிலும், எதிர் விளைவுகளை முன் கூட்டியே அடையாளம் காண்பதிலும் தங்கியுள்ளன. 

விடுதலைப்புலிகள் திருநெல்வேலிச் சந்தியில் வைத்து வெடிக்கவைத்த கண்ணிவெடியிலும், தொடர்ந்த சண்டையிலும் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினரையும் சாட்டாகக் கொண்டே இந்த வன்முறை வெடித்தது. இடதுசாரிகள் இணைந்து ஆட்சியமைத்த சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஆட்சியில்  1971இல் “சேகுவேரா” இயக்கதை – ரோகண விஜயவீர தலைமையிலான ஜே.வி.பி. கிளர்ச்சியை அடக்க எடுக்கப்பட்ட அனைத்து இராணுவச் செயற்பாடுகளுக்கும் இந்த இடதுசாரிகள் உடந்தையாகவே இருந்தார்கள். இவர்களிடம் இருந்து தமிழர்கள் காப்பாற்றப் பட்டிருப்பார்களா? 1983 கலவரம் தடுக்கப்பட்டிருக்குமா? என்ற கேள்வியை இங்கு எழுப்பவேண்டிய தேவை உள்ளது. இலங்கையில் இடதுசாரி அரசியலில் இருந்த நம்பிக்கையை இல்லாமல் செய்தவர்கள் இந்த “இடதுசாரிகள்”. இறுதிக்கட்டத்தில் சண்முகதாசனும், வி.பொன்னம்பலமும் இவர்கள் மீது நம்பிக்கையிழந்து இருந்தார்கள், போலி இடதுசாரிகளுக்கு எதிராக அரசியல் செய்தார்கள் என்பது வரலாறு தரும் பாடம். 

                                        ************************