— கருணாகரன் —
“ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டிவிடும்” என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் என்று சொல்லப்படுவோராலும் அப்படித்தான் கூறப்படுகிறது. ஏறக்குறைய இது ஒரு பொது நம்பிக்கையாகவே வளர்க்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணமும் உண்டு. ராஜபக்ஸக்கள் நேரடியாகப் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும் அவர்களுடைய அதிகாரப் பிடியிலிருந்து ஆட்சி மாறவில்லை. இன்னும் பொதுஜன பெரமுனவே ஆட்சியில் செல்வாக்குச் செலுத்துகிறது. அதாவது ராஜபக்ஸவினரே நிழல் ஆட்சி செய்கின்றனர். ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக இருந்தாலும் அவரால் பொதுஜன பெரமுனவை –ராஜபக்ஸக்களை- க் கடந்து சுயாதீனமாக எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாத சூழலே நிலவுகிறது. இதனால்தான் அமைச்சரவையிலும் அரசியல் தீர்மானங்களிலும் பொதுஜன பெரமுனவின் செல்வாக்குத் தொடர்கிறது.
ரணில் விக்கிரமசிங்க தட்டாமல் முட்டாமல் ஒருவாறு சாதுரியமாக – கெட்டித்தனமாக ஆட்சியைக் கொண்டு போகிறார் என்பது உண்மையே. இது எப்போது, எங்கே முட்டும் என்று சொல்ல முடியாது. “நித்திய கண்டம், தீர்க்க ஆயுள்” என்று சொல்வார்களே, அதைப்போல இந்த ஆட்சிக்கு எப்பொழுது, என்ன நடக்கும் என்று தெரியாமல் தத்தளிக்கும் நிலையே உண்டு. இதை மீறிச் செயற்படக் கூடிய பலம் இன்னும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உருவாகவில்லை. பொதுஜன பெரமுனவைக் கட்டுப்படுத்துவதற்கே அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க முயற்சித்தார். ஆனால் அது சாத்தியமற்றுப் போனது.
இவ்வாறான சூழலில்தான் “உடனடியாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்று ஆளும் தரப்பைத் தவிர, அனைத்துக் கட்சிகளும் கூட்டாகக் கேட்கின்றன. அதாவது இனி நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலை ஒரு சர்வரோக நிவாரணியாக இவை பார்க்கின்றன அல்லது அப்படிக் காட்ட முற்படுகின்றன. அரகலய போராட்டத் தரப்பினரும் இதையே வலியுறுத்துகின்றனர்.
ஆனால், இந்த ஆட்சி கலைக்கப்பட்டுப் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால், அதற்குப் பிறகு உருவாகும் ஆட்சி சர்வரோக நிவாரணியாக அமையுமா? அல்லது அதுவும் வெறுமனே ஆள் மாற்றம் – தலைமை மாற்றம் என்ற அளவில் சுருங்கிக் கிடக்குமா? எனக் கேட்க வேண்டியுள்ளது.
ஏனென்றால், நாடு பல வகையிலும் மிக மோசமான நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்ற இந்தச் சூழலிலும் கூட, உண்மையான பிரச்சினை என்ன? இது எதனால், எப்படி ஏற்பட்டது? என்பதைப் பற்றிப் பகிரங்கமாகப் பேசுவதற்குப் பலரும் தயங்குகின்றனர். ஆதார – அடிப்படைப் பிரச்சினையைத் தந்திரமாகத் தவிர்த்து விட்டு, ராஜபக்ஸக்களினால்தான் நாட்டுக்கே பேரழிவு ஏற்பட்டது என்று சுருக்கிக் காட்ட முற்படுகின்றனர். நாட்டை முடக்க நிலைக்குக் கொண்டு வந்ததில் ராஜபக்ஸக்களுக்குக் கூடுதல் பொறுப்புண்டு. அதை மறுக்க முடியாது. அதைப்போல இதுவரையில் ஆட்சியிலிருந்தோருக்கும் அப்போதெல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவளித்தோருக்கும் பொறுப்புண்டு. எனவே அனைவரும் இதில் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.
ஆனால், இதில் நேர்மையாக யாரும் செயற்படுவதாகக் காணமுடியவில்லை. காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கான வழிமுறைகளைப் பற்றி இதுவரையில் ஒருவர் கூட, ஒரு கட்சி கூட தங்கள் பக்கத்தில் உள்ள திட்டம் என்ன, நிலைப்பாடு என்ன என்பதைப் பற்றிப் பேசக் காணோம்.
முக்கியமாக இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வு? அதை எப்படிக் காண்பது? எவ்வளவு கால எல்லைக்குள் காண்பது? அதற்கான வழிமுறை என்ன? என்பதைக் குறித்து இதுவரையிலும் யாருமே பேசவில்லை.
இவ்வளவுக்கும் இனப்பிரச்சினை எழுபது ஆண்டுகளுக்கு மேலாக நாட்டைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதைப் பற்றிப் பேசாத நாட்களுண்டா? பேசாத கட்சிகள், தலைவர்கள், ஊடகங்கள் உண்டா? இதைத் தீர்ப்பதற்கென்று கடந்த அறுபது ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அத்தனை அரசாங்கங்களும் முயற்சி எடுத்தன. அல்லது அப்படிக் காண்பித்தன. இருந்தும் இன்னும் அது தீர்க்கப்படவேயில்லை.
பதிலாக இந்தப் பிரச்சினை மேலும் மேலும் விரிவடைந்து பல புதிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இனப்பிரச்சினையோ முன்னரை விட உச்சமான கொதிநிலையை அடைந்துள்ளது. அத்துடன் உள்நாட்டுப் பிரச்சினை என்ற நிலையைக் கடந்து இப்பொழுது சர்வதேச ரீதியாகப் பேசப்படுகின்ற – தலையீடுகளைச் செய்கின்ற அளவுக்கு வளர்ந்துள்ளது.
இனப்பிரச்சினையினால் எத்தனை உயிர்கள் மாண்டுள்ளன? எத்தனை அருமையான மனிதர்களை இழந்திருக்கிறோம்? மனித வளம் என்பது தேசத்தின் வளங்களில் ஒன்றாகும். அருமையான வளம். பிற நாடுகள் ஆற்றலுள்ளோரைப் பல வழிகளிலும் தமது நாட்டுக்குள் உள்ளீர்க்கின்றன. அப்படி உள்ளீர்த்துப் பயனடைகின்றன. ஆனால், நாம் அந்த வளத்தை அழித்துப் புதைக்கிறோம். யுத்தத்தினால் எத்தனை கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகளையும் இயற்கை வளத்தையும் அழித்திருக்கிறோம்?
இன்றைய பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணங்களில் ஒன்று யுத்தச் செலவீனமாகும். இப்பொழுது கூட பெருமளவு நிதி பாதுகாப்புத் தரப்புக்கே செலவழிக்கப்படுகிறது. இந்தச் சிறிய நாட்டுக்கு இது தாக்குப் பிடிக்க முடியாதது என்று பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்தும் எச்சரிக்கின்றனர்.
இப்படியெல்லாம் இருந்தும் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணவேண்டும். அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வரவில்லை.
ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்கிறார்கள். இது சுத்த ஏமாற்றன்றி வேறென்ன? இவ்வாறுதானே ஒவ்வொரு ஆட்சியின்போதும் சொல்லப்படுகிறது –வாக்குறுதி அளிக்கப்படுகிறது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு,நடைமுறை வேறாகி விடுகிறது.
ஆகவே இது வெறுமனே அதிகாரப் போட்டியே தவிர, வேறில்லை என்பது மிகத் தெளிவானது. இதற்காக தேர்தல் வரக்கூடாது, இந்த ஆட்சி மாறக்கூடாது என்று இங்கே நாம் வாதிடவில்லை. மாற்றுத் தீர்மானங்கள், தீர்வுக்கான வழிமுறைகள் பற்றிய தெளிவும் உறுதிப்பாடும் இல்லாமல் வெறுனே ஆட்சி மாறுவதால் –தலைகள் மாறுவதால் – எந்தப் பயனும் ஏற்படாது. அது வழமையைப் போல தலைகள் –ஆட்கள் – கட்சி – மாறுவதாக மட்டுமே அமையும்.
இரண்டரைக் கோடி மக்கள் வாழும் நாட்டில் 25 லட்சம்பேர் நாளாந்த உணவுக்கே அல்லற்படுகிறார்கள். அதாவது, பத்தில் ஒரு பங்கினர் பசியாலும் பிணியாலும் துன்பப்படுகிறார்கள். இது வெட்கக் கேடில்லையா? இதையிட்டு எத்தனை பேருக்கு கவலை உண்டு?
இவ்வளவுக்கும் மிக வளமான நாடு நமது. விவசாயச் செய்கைக்குரிய இயற்கை வளமும் கால நிலைப் பொருத்தமும் மிகச் சிறப்பாக உள்ள நாடு. உலகில் உள்ள அனைவரும் நம்முடைய நாட்டைப் பார்த்து ஆசைப்படுகிறார்கள். இந்த நாட்டைச் சரியாக நிர்வகித்திருந்தால் இன்று எவ்வளவு பெரிய வளர்ச்சியை எட்டியிருக்க முடியும்! உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவாக்கியிருக்கலாம். மெய்யாகவே ஆசியாவின் ஆச்சரியமாக இருந்திருக்கும்.
ஆனால், எல்லோருமாகச் சேர்ந்து ஆசியாவின் கண்ணீர்த்துளியாக அல்லவா இலங்கையை மாற்றி வைத்திருக்கின்றனர். இலங்கை சுதந்திரம் பெற்றபோது அந்நியச் செலாவணி மிக உச்சத்தில் இருந்தது என்று சொல்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. உண்மையும் அதுதான். அதற்குப் பிறகு அந்த நிலையைத் தலைகீழாக்கியது யார்? நமது அருந்தலைவர்கள்தானே! இனவெறி போதையாகித் தலைக்குள் புழுக்கத் தொடங்கியவுடன் நமக்குக் கண்ணும் தெரியவில்லை. மண்ணும் புரியவில்லை. அதனால்தான் தலைவர்கள் தவறாகச் செயற்படும்போதெல்லாம் அதைக் காணாமலே இருந்தோம். இப்போதும் அப்படித்தான் இருக்க முற்படுகிறோம்.
இப்பொழுது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உலகமெல்லாம் பிச்சைப் பாத்திரம் ஏந்துகின்ற போது கூட இனவாதத்தைக் கைவிட வேண்டும். ஜனநாயகத்தைச் செழிப்பூட்ட வேண்டும். ஐக்கியத்தை உருவாக்க வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டும். அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும். பன்மைப் பண்பாட்டுக்கு இடமளிக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.
உலகில் ஒவ்வொரு நாடும் ஜனநாயக விழுமியச் செழிப்பை உண்டாக்கி, வளர்ச்சியில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றன. ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்ற நாடுகள் அழிவில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றன. இந்த வேறுபாட்டை, இந்த உண்மையைப் புரிந்து கொண்டு, நம் நாட்டில் ஜனநாயகத்தை விருத்தியாக்க வேண்டும் என்றோ, மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்றோ யாரும் சிந்திக்கக் காணோம்!
இந்தத் தவறுகள்தான் நெருக்கடிகளைத் தொடராக உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. மீளவும் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கத் தொடங்கியுள்ளனர். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கோரி, ஜனநாயக அடிப்படைகளை வலியுறுத்தி, கட்டற்ற அதிகாரத்துக்கு எதிராகத் தெருவிலே முழக்கமிடுகிறார்கள். இந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் படைகளை நிறுத்துகிறது. இதனால் அமைதியின்மை உருவாகிறது.
உள்நாட்டு நெருக்கடி அமைதியின்மையையே எப்போதும் உருவாக்கும். அமைதியின்மை நாட்டின் வருவாயைப் பாதிக்கும். குறிப்பாக சுற்றுலாத்துறைக் கடுமையாகப் பாதிக்கும். முதலீடுகளைப் பாதிக்கும். மக்களுடைய உழைப்பு நேரத்தையும் உழைப்புச் சக்தியையும் பாதிக்கும்.
நாடு இன்னும் டொலர்ப் பற்றாக்குறையிலிருந்து மீளவேயில்லை. இப்போது கூட மசகு எண்ணெயுடன் வந்திருக்கும் கப்பல் ஒன்று 44 நாட்களாகக் கடலில் தரித்து நிற்கிறது. தாமதக்கட்டணம் மட்டும் 99 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்தக் கட்டணம் மக்களுக்கு மேல்தானே செலுத்தப்படப்போகிறது. இந்தளவுக்கு யதார்த்தம் நம்முடைய அடிப்பக்கத்தைச் சுட்டாலும் நமக்குப் புத்தி வரவில்லை. அந்தளவுக்கு இனவாதத்திலும் (கட்சி) தலைமைத்துவ விசுவாசத்திலும் பைத்தியக்காரத்தனமாக ஊறிப்போய் கிடக்கிறோம்.
உண்மையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நம்மையெல்லாம் ஆழமாகச் சிந்திக்கச் செய்திருக்க வேண்டும். உலகமெல்லாம் பிச்சை கேட்கும் நிலை ஏன் நமக்கு வந்தது? இதை நாம் மாற்ற முடியாதா? என்று சிந்தித்திருக்க வேண்டும். இதற்கான பொறிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் அனைவரும் ஒன்றிணைந்து பங்களிப்பதைப் பற்றிச் சிந்தித்திருக்க வேண்டும். அவசரகால அல்லது இடர்கால பொறிமுறை – வேலைத்திட்டம் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு வேலை செய்ய வேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருக்க வேண்டும். இதை அரசாங்கமும் செய்யவில்லை. எதிர்த்தரப்புகளும் செய்யவில்லை. சமூக மட்டத்திலுள்ளோரும் செய்யவில்லை. எனவே நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான முயற்சிகள் எதுவும் நடக்கவே இல்லை. இது வெட்கப்பட வேண்டிய உண்மையாகும்.
பதிலாக ஆட்சி மாற்றம் வேண்டும் – தேர்தல் வேண்டும் என்று மட்டும் தந்திரமாகச் சொல்லப்படுகிறது. ஆட்சி மாற்றமும் தேர்தலும் என்ன மந்திரக் கோலா? எல்லாப் பரிகாரத்துக்குமாக?
நாம் துணிவாகச் சிந்தித்தால், சரியாகச் செயற்பட்டால் நிச்சயமாக நம்மால் இந்த நெருக்கடியிலிருந்து மீள முடியும். மாற்றங்களை உண்டாக்க முடியும். இடர்காலத்திட்டத்தைத் தீட்டி, உரிய பொறிமுறையை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அதை உறுதிப்பாட்டுடன் மேற்கொள்ள வேண்டும். ஒரு ஐந்து ஆண்டுத் திட்டமாக முதற்கட்டமாக இதைச் செய்யலாம். இதற்கான பொருளாதாரக் கொள்கை, வேலைத்திட்டம், சட்ட உருவாக்கம், நிர்வாக நடைமுறை போன்றவற்றை சிறப்பு ஏற்பாடாகச் செய்ய வேண்டும்.
ஆனால், அப்படி ஒன்றிணைந்து செயற்பட்டு ஒரு புதிய யுகத்தைக் காணுவோம் என்ற திடசங்கற்பத்தைப் பூணுவதற்கு எவருமே முன்வரவில்லை. இதுதான் மிகத் துயரமானது. மிக வெட்கக் கேடானது.
எனவேதான் நாடு நெருக்கடியிலிருந்து மீளும் என்று நம்பிக்கை கொள்ள முடியவில்லை என்று துணிந்து கூற முடிகிறது. காரணம், வெளிப்படையானது. புண்ணுக்கு வைத்தியம் செய்வதை – மருந்து போடுவதை – விட்டு விட்டு, புண்ணைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். இதுதான் நமக்குப் பழக்கமானது. இதைத்தான் எப்போதும் செய்து கொண்டிருக்கிறோம். நமக்கு முன்னே உள்ள எந்தப் பிரச்சினைக்கும் நாம் தீர்வு காண்பதில்லை. பதிலாக அவற்றைப் பேசிப் பேசியே பராமரித்துக் கொள்கிறோம்.
அரசாங்கத்துக்கு வெளியே பல கட்சிகள் உண்டு. அமைப்புகள் உண்டு. புத்திஜீவிகள் உள்ளனர். செயற்பாட்டியக்கங்கள் இருக்கின்றன. பல தலைவர்களும் நிபுணர்களும் உள்ளனர். இவ்வளவும் இருந்தாலும் பொருளாதார நெருக்கடிக்கு என்ன வகையான தீர்வு சாத்தியம்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? அதற்கான வழிமுறை என்ன? அரசின் பங்களிப்பும் பொறுப்பும் எத்தகையது? மக்களுடைய பங்களிப்பு எவ்வாறிருக்க வேண்டும்? இதைச் சாத்தியப்படுத்துவது எப்படி? சர்வதேச உதவிகளைப் பெறுவதும் அதைப் பயனுடையதாக மாற்றுவதும் எவ்வாறு? என்பதைப்பற்றி ஒருதர் கூடப் பேசக் காணவில்லை.
அதைப்போல இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன? அதற்கு என்ன செய்ய வேண்டும்? அதற்கான வழிமுறை என்ன? அரசின் பங்களிப்பும் பொறுப்பும் எத்தகையது? மக்களுடைய பங்களிப்பு எவ்வாறிருக்க வேண்டும்? இதைச் சாத்தியப்படுத்துவது எப்படி?என்று சிந்திப்பதைக் காணவில்லை.
எவ்லோரும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார்கள். அதைப்பேசிப் பேசியே காலத்தை ஓட்டுகிறார்கள். பிரச்சினையைப் பற்றி எல்லோருக்கும்தான் நன்றாகத் தெரியுமே. இப்பொழுது இந்த நெருக்கடியிலிருந்து எப்படி மீள்வது? என்பதே பேச வேண்டியதும் செயற்பட வேண்டியதுமாகும். இதற்கு வழிகாட்டுவது யார்?சாத்தியங்களை உருவாக்குவது யார்?
தற்போது வெளியே ஆட்சி மாற்றம் போலொரு தோற்றம் காட்டினாலும் நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்பது உண்மையே. சிறிய அளவில் தட்டுப்பாடு நீங்கினாலும் பொருட்களின் விலை குறையவில்லை. அரசுக் கொள்கையில் மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு எதுவும் கிட்டவில்லை. குறிப்பாக விவசாயச்செய்கைக்கான அரச உதவிகள் இன்னும் கேள்வியாகவே உள்ளன. மீள்வதற்கான புதிய பொருளாதாரக் கொள்கையோ நெருக்கடி கால வேலைத்திட்டங்களோ முன்னெடுக்கப்படவில்லை.
இதனால் இன்னும் இளையோர் தொடக்கம் முதியோர் வரையில் பலரும் சும்மாதான் இருக்கிறார்கள். என்ன வேலையைச் செய்வது என்று தெரியாத நிலையில் 30 வயதுக்குட்பட்ட லட்சக்கணக்கானோர் உள்ளனர். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இளைய சக்தி அநாவசியமாக வீணடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு கட்சியும் ஆட்சியைப் பிடிப்பதற்காகவே ஆவலாதிப்படுகின்றன. இதற்கான அரசியற் கூட்டுகள் உருவாகின்றன. அல்லது அதைப்பற்றி தீவிரமாக யோசிக்கப்படுகிறது. பொதுஜன பெரமுனவும் மீள் எழுச்சியடைவதற்கான ஏற்பாடுகளைத் துரிதகதியில் செய்கிறது. “யாரும் நம்மைத் தோற்கடிக்க முடியாது. மீண்டும் நாம் வருவோம் என்று சூளுரைத்திருக்கிறார்” இளைய ராஜபக்ஸ.
நாடு இருக்கின்ற நிலையில் அதை முன்னேற்றுவதை விட்டு விட்டு ஆட்சியை மீளக் கைப்பற்றும் முயற்சியிலேயே முழுக்கவனத்தையும் வைத்திருக்கின்றனர் ராஜபக்ஸவினர். இவ்வளவுக்கும் இன்றைய சீரழிவு நிலைக்குப் பெரும்பொறுப்பு ராஜபக்ஸக்களே. இதையிட்ட பொறுப்புணர்வோ குற்றவுணர்வோ அவர்களுக்கிருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் இந்த மாதிரி இளைய ராஜபக்ஸ கதைத்திருக்க மாட்டார். மட்டுமல்ல, புத்தளம் தொடக்கம் ஒவ்வொரு இடத்திலும் தங்களுடைய மீள் எழுச்சிக்கான எத்தனத்தை வெளிப்பத்திக் கொண்டிருக்கின்றனர் பொதுஜன பெரமுனவினர். அதற்கு ஆதரவளிப்போருக்கும் தவறுகளில் பொறுப்புண்டு.
ராஜபக்ஸக்களைக் குற்றம் சாட்டி, ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து மட்டும் நாட்டுக்கு நன்மைகளைச் செய்து விட முடியாது. அதற்கு மாற்று வழியே தேவை. இதனால்தான் சிஸ்டம் சேஞ்ஜ் (System change) வலியுறுப்படுகிறது. நாட்டுக்கு மெய்யான சர்வரோக நிவாரணி என்பது System change மட்டுமே. அதற்கு இப்போதுள்ள எந்த அரசியற் தலைகளும் பொருத்தமானவை அல்ல.