— ஸ்பார்ட்டகஸ் —
அண்மையில் தீபாவளி தினத்தன்று எட்டு தமிழ்க் கைதிகளுக்கு மன்னிப்பு அளித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுதலை செய்த பிறகு ஜனாதிபதி செயலகம் அறிக்கையொன்றை வெளியிட்டது.
எட்டு கைதிகளில் மூவர் 1999 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக கொழும்பு நகர மண்டப மைதானத்தில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்கள் என்றும் அவர்களில் நால்வர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டனையையும் விட கூடுதலான காலம் சிறைவாசத்தை அனுபவித்திருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
இதில் பெரும்பாலான ஊடகங்கள் திருமதி குமாரதுங்க கொலை முயற்சி விவகாரத்துக்கே முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடடன. அந்த மூன்று கைதிகளுக்கும் மன்னிப்பு அளிப்பதற்கு முன்பாக ஜனாதிபதி செயலகம் திருமதி குமாரதுங்கவுடன் தொடர்புகொண்டு கேட்டதாகவும் அவர் அதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் கூட தெரிவிக்கப்பட்டது. ஆனால், நான்கு கைதிகள் அநியாயமான முறையில் கூடுதல் காலம் சிறையில் வாடியதை பற்றிய தகவலுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.சில பத்திரிகைகளில் சிறிய செய்தியாகவே அது வெளிவந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதி 14 வருடங்கள் சிறைவாசத்தை அனுபவித்ததாகவும் 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் 14 வருடங்கள் சிறைவாசத்தை அனுபவித்ததாகவும் 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இருவர் 14 வருடங்கள் சிறையில் இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டது.
இதன் உண்மைத் தன்மை குறித்து சந்தேகிக்கவேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், ஜனாதிபதி செயலகம் இத்தகைய தவறான ஒரு தகவலை பரப்பும் என்று புத்திசுவாதீனமுடைய எவரும் நினைக்கமாட்டார். முன்னைய அரசாங்கம் என்றால் இந்த கைதிகளுக்கு மன்னிப்பு அளித்திருக்குமா என்ற சந்தேகத்துக்கு அப்பால் கைதிகள் நீதிமன்றத் தீர்ப்பையும் விட கூடுதல் காலம் சிறையில் வைக்கப்பட்டதை பற்றிய தகவல் வெளிவந்திருக்கவும் மாட்டாது. எது எவ்வாறிருந்தாலும் தகவலை வெளியிட்ட ஜனாதிபதி செயலகத்தின் செயல் வரவேற்கத்தக்கது. நீண்டகாலமாக சிறையில் வாடும் தமிழ்க் கைதிகளின் அவலத்தை இது பிரகாசமாக அம்பலப்படுத்துகிறது.
வழக்குகள் தொடரப்படாமல் அல்லது வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்படாமல் தமிழ்க் கைதிகள் வருடக்கணக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது போக, நீதிமன்றம் வழங்கிய சிறைத்தண்டனையையும் விட கூடுதல் காலம் சிறையில் கைதிகள் வாடுகிறார்கள் என்பதும் இப்போது வெளியில் வந்திருக்கிறது.
11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதி 14 வருடங்கள் சிறையில் வாடியிருக்கிறார் என்றால் அவர் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னதாக எவ்வளவு காலம் விளக்கமறியலில் இருந்திருப்பார் என்பதையும் நினைத்துப் பார்க்கவேண்டும். சில சந்தர்ப்பங்களில் உண்மையான தண்டனையின் இரு மடங்கு காலத்தில் கைதிகள் சிறையில் இருந்திருக்கக்கூடிய சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை.
ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இரு கைதிகள் 14 வருடங்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட அவர்களுக்கான தண்டனையையும் விட மூன்று மடங்கு வருடங்கள் சிறையில் அவர்கள் வாடியிருக்கிறார்கள். எந்த அடிப்படையில், எந்த சட்டத்தின் கீழ் இவர்கள் கூடுதல் காலம் சிறையில் அடைக்கப்பட்டார்கள்?
இது ஒரு பாரதூரமான விவகாரமாகும். இந்த தவறுக்கு அரசாங்கம் நிச்சயம் விளக்கம் கூறியேயாக வேண்டும். இது வரையில் இந்தப் பிரச்சனை தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் போதிய கவனத்தை ஈர்க்கவில்லை என்பது அதிர்ச்சி தருகிறது.
இந்த கட்டுரையாளர் அறிந்தவரையில் இந்த தமிழ் கைதிகளின் அவலம் குறித்து கலாநிதி ஜெகான் பெரேராவை நிறைவேற்றுப் பணிப்பாளராகக் கொண்ட இலங்கை கேசிய சமாதானப் பேரவையே (National Peace Council) இதுவரையில் குரல் எழுப்பியிருக்கிறது.
“தீபாவளி தினத்தன்று மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழ்க் கைதிகளில் நால்வருக்கு நடந்திருப்பது சர்வதேச மனித உரிமைகள் சாசனங்களின் பிரகாரம் பாரதூரமான மனித உரிமைகள் மீறலாகும். தண்டனைக் காலத்தையும் விட கூடுதல் காலம் அவர்கள் இவ்வாறாக சிறையில் அடைத்துவைக்கப்பட்ட செயல் பொறுத்துக்கொள்ள முடியாத அதிகார துஷ்பிரயோகமாகும்” என்று அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கும் தேசிய சமாதானப் பேரவை, அநியாயமாக சிறையில் கைதிகள் கழித்த வருடங்களை கருத்தில் எடுத்து இழப்பீட்டை அரசாங்கம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டிருக்கிறது.
இந்த கைதிகள் உரிய காலத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தால், அவர்கள் தங்களதும் குடும்பங்களினதும் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அநியாயமாக அவர்கள் சிறையில் கூடுதலாக அடைக்கப்பட்டிருந்த வருடங்கள் அவர்களைப் பொறுத்தவரையில் மாத்திரமல்ல குடும்பங்களுக்கும் கூட வீணாக அபகரிக்கப்பட்ட காலப்பகுதியேயாகும். இவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு கட்சிகளும் மனித உரிமைகள் குழுக்களும் சிவில் சமூக அமைப்புக்களும் அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்கவேண்டும்.
இந்த கைதிகளைப் போன்று வேறு கைதிகள் இன்னமும் சிறையில் அநாவசியமாக கூடுதல் காலம் வாடிக்கொண்டிருக்கிறார்களா என்பதை உடனடியாக கண்டறிய நீதி, சிறைச்சாலைகள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழ்க் கைதிகளில் சிலர் தனது வயதையும் விட (35) கூடுதலான காலம் எந்தவிதமான குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் விளக்கமறியலில் இருக்கிறார்கள். குற்றவாளிகளாகக் காணப்பட்ட 35 கைதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையையும் விட கூடுதலான காலம் விளக்கமறியலில் இருந்தார்கள். 38 கைதிகளின் வழக்குகள் மேல் நீதிமன்றத்தில் 20 வருடங்களுக்கும் கூடுதலான காலமாக நிலுவையில் இருந்து வருகிறது என்று சில மாதங்களுக்கு முன்னர் வேறு யாருமல்ல தமிழ்க் கைதிகளை மன்னிப்பு அளித்து விடுதலை செய்யவேண்டும் என்று இடையறாது விடுக்கப்பட்டு வந்த கோரிக்கைகளை அலட்சியம் செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச பாராளுமன்றத்தில் கூறியது இச்சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.