மாகாண சபை அரசியலின் மறுபக்கம்..! (மௌன உடைவுகள்: 07 (பகுதி1)) 

மாகாண சபை அரசியலின் மறுபக்கம்..! (மௌன உடைவுகள்: 07 (பகுதி1)) 

          — அழகு குணாசீலன் —  

இலங்கையின் அரசியல், பொருளாதார ஸ்த்திரமற்ற இன்றைய சூழல், தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அரியசந்தர்ப்பம் என்று கருத்துக்கள் வெளிவருகின்றன. தேர்தலை நடாத்தி மாகாண சபைகளை மக்கள் பிரதிநிதிகள் மூலம் மீள இயங்கச் செய்தல் உள்ளிட்ட  13ம் திருத்தத்தின் ஊடான அதிகாரப்பகிர்வு பற்றியும் பேசப்படுகிறது. இந்த நிலையில் கடந்தகால மாகாண சபை அரசியலின் மௌனத்தை கலைக்கிறது மௌன உடைவுகள். 

1987 யூலை 29ம் திகதி அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் ஒப்பமிட்ட இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கையின் ஒரு பிரசவமே மாகாண சபைகள். இது ஒரு சுகப்பிரசவம் அல்ல என்பது எல்லோரும் அறிந்ததே. அவசர, அவசரமாக, அழுத்தங்களுக்கும், கட்டாயங்களுக்கும் மத்தியில் அழுங்குப் பிடியில் நிகழ்ந்த பிரசவம். இதுவே கடந்த 35 ஆண்டுகளாக மாகாண சபை இயக்கத்திற்கு இன்னும் இடையூறாக இருக்கின்ற முக்கியமான காரணம். அடிப்படையில் பிறப்பிலேயே தவறு இருக்கிறது. 

 வடக்கு, கிழக்கு நிர்வாக மாகாணங்கள் இணைந்த இந்த மாகாண சபையில் மக்களிடம் இணைப்பதற்கான ஆணை பெறப்படவில்லை. 1977 இல் தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு என்று கூறி தமிழர் விடுதலைக் கூட்டணி நடாத்திய தேர்தல் அரசியல் கருத்துக்கணிப்பே (?) இன்றும் பேசப்படுகிறது. கடந்த 45 ஆண்டுகளில் வடக்கு, கிழக்கு மக்களின் சமூக, பொருளாதார, அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், அரசியல் பலம், பலவீனங்கள், பிராந்திய, சர்வதேச மாற்றங்கள் எவையும் கருத்தில் கொள்ளப்படாமல் காலாவதியான வட்டுக்கோட்டை தீர்மான தேர்தல் வாக்குறுதியே பெறப்பட்ட ஆணையென அரைத்தமாவை திருப்பி அரைப்பது நடந்துவருகிறது. 

இந்திய- இலங்கை சமாதான உடன்பாட்டின்படி, உடன்பாடு கைச்சாத்திட்டு ஒரு வருடத்திற்குள் கிழக்கு மாகாண மக்களிடம் அவர்கள் வடக்கு மாகாணத்துடன் இணைய விரும்புகிறார்களா? என்ற கேள்வியுடன் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டிருக்கவேண்டும். அன்றைய சூழலில் அதனைச் செய்யமுடியாது என்று காரணம் காட்டி ஜனாதிபதியினால் ஆண்டுதோறும் கால நீடிப்பு செய்யப்பட்டது. ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்தே இருந்தன. 

இந்த சர்வஜன வாக்கெடுப்பு ஏற்பாடானது கிழக்கில் வாழும் மூன்று இன மக்களையும் அன்றைய சூழலில் திருப்திப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்று. முக்கியமாக ஏ.சி.எஸ். ஹமீட், கே.டபிள்யூ. தேவநாயகம் போன்ற முற்றிப் பழுத்த அரசியல்வாதிகள் இதன் பின்னணியில் இருந்தார்கள். இந்த சர்வஜன வாக்கெடுப்பை கயிறு திரிக்கும் மேலாண்மை அரசியல், அது வடக்கு, கிழக்கு மாகாண ஒட்டு மொத்த மக்களிடமும் நடாத்தப்படுவதைக் குறிக்கிறது என்று திரிக்கிறது. 

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்று கூறப்பட்டபோது, அதை மறுத்த முஸ்லீம் தலைமைகள் முஸ்லீம்களின் தாயகமும் அதுதான் என்று கூறினார்கள். வடக்கோடு இணைக்கப்படும்போது தங்கள் இன விகிதாசாரம் வெறும் 17 வீதமாகிவிடும் என்று அஞ்சிய அவர்கள் அதற்கான சில பரிந்துரைகளையும் முன் மொழிந்தார்கள்.  

1. இணைந்த மாகாண சபையில் 17 வீத இன விகிதாசாரத்திற்கும் அதிகமான பிரதிநித்துவம்.  

2. அம்பாபாறை மாவட்ட முஸ்லீம்களுக்கான ஒரு தனி அலகு. அதற்குள் உள்ள தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படுவதற்கு சமமாக, மற்றைய மாவட்டங்களில் சிறுபான்மையாக உள்ள முஸ்லீம்களின் நலன்களையும் பாதுகாப்பதற்கான ஏற்பாடு. 

3.  வடக்கு கிழக்கில் முஸ்லீம்கள் வாழும் பிரதேசங்களை உள்ளடக்கிய நிலத் தொடர்பற்ற ஒரு யூனியன் பிரதேசம். 

இவை எதையும் சிங்கள பெரும் தேசியவாதிகளும், தமிழ் குறுந்தேசியவாதிகளும் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இரு தரப்பும் கட்டிப்போட்டு அடிப்பதிலேயே கண்ணாய் இருந்தார்கள். 

 இந்த நிலையில் இன்றைய மாகாண சபைகளுக்கான தேர்தல் நடாத்தப்படாமல் இருப்பது எப்படி அந்தந்த மாகாண மக்களின் அடிப்படை உரிமை மீறலோ, கிழக்கு மாகாண மக்களின் விருப்பு அறியாது வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட்டதும் அந்த மக்களின் அடிப்படை உரிமை மீறல். உடன்படிக்கை குறிப்பிட்டது போன்று சர்வஜன வாக்கெடுப்பு கிழக்கில் நடாத்தப்படாததும் கிழக்கு மக்களின் அபிலாஷை அறியப்படாததும் அடிப்படை உரிமை மீறல்தான். இதனை மறுதலித்து வடக்கு, கிழக்கை கட்டாயத் திருமணப் பாணியில் கழுத்தை நீட்டச் சொல்லி வலிந்து தாலியைக் கட்ட முயற்சிக்கப்படுகிறது / பட்டது. 

ஒரு பக்கம் உரிமைப் போராட்டம், மறுபக்கத்தில் அதன் பெயரில்  ஒட்டு மொத்த கிழக்கு மக்களின் அடிப்படை அரசியல் உரிமையை மறுத்து சூதாட்டம். இணைப்பைக்கோரும் அரசியல், இணைப்பால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஆலோசனைகளையோ, கிழக்கு மக்கள் மத்தியில் நிலவும் நியாயமான அச்சத்தைத் போக்குவதற்கான நடைமுறைகளையோ இதுவரை அறியத்தரவில்லை. இந்த இழுபறியில், வன்முறையினால் இதைச் சாதிக்கலாம் என்ற கனவை ஜே.வி.பி. கலைத்துவிட்டது. 

இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல் 1988 நவம்பர், 19ம் திகதி நடைபெற்றது. விடுதலைப்புலிகளின் தேர்தல் பகிஷ்கரிப்புக் கோரிக்கைக்கு மத்தியில், இந்திய இராணுவத்தின் அனைத்து வளங்களையும், பலத்தையும் பயன்படுத்தி வேட்பாளர் பட்டியல் சமர்ப்பித்த ஈ.பி.ஆர்.எல்.எப் – ஈ.என்.டி.எல்.எப் கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் முடிவின்படி இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதலும், இறுதியுமான முதலமைச்சராக வரதராஜா பெருமாள் இருந்தார்.  1988 டிசம்பர் 10ம்திகதி முதல் 1990மார்ச் 10ம் திகதி வரையானது அவரது முதலமைச்சர் பதவிக்காலம். 

வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் இன்றைய நிலைக்கு அவர் தலைமையில் இடம்பெற்ற கூட்டாட்சியும், அரசியல் அராஜகமும், வன்முறைகளும், மனித உரிமை மீறல்களும், இந்தியப் படையுடன் இணைந்து நடாத்திய தர்பார் ஆட்சியும் பொறுப்பு. தமிழ் மக்கள் ஏன்?மாகாண சபையில் அக்கறையற்று இருக்கிறார்கள்? அவர்கள் ஏன்? மாகாணசபைகள் வெறுமையானவை என்று கருதுகிறார்கள் என்ற கேள்விக்கு  ஈ.பி.ஆர்.எல்.எப் -ஈ.என்.டி.எல்.எப் ஆட்சியில் அவர்கள் பெற்ற கசப்பான அனுபவங்கள் ஒரு காரணம். தமிழ்மக்கள் மட்டுமல்ல வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லீம், சிங்கள, மலையக மக்களுக்கும் இதே அனுபவம்தான்.  

இவர்களின் மாகாண சபை ஆட்சியில் முதலில் CITIZEN VOLUNTEER FORCE (CVF) குடிமக்கள் தொண்டர் படை அமைக்கப்பட்டு பின்னர் அது TAMIL NATIONAL ARMY (TNA) தமிழ்த்தேசிய இராணுவம் என்று கூறப்பட்டது. இதில் புளட், ரெலோ உறுப்பினர்களும் பிற்காலத்தில் சேர்ந்து கொண்டார்கள். வரதராஜபெருமாள் தலைமையிலான இந்ந ஆட்சியில் கட்டாய ஆட்சேர்ப்பு இடம்பெற்றது. மாநகர சபை கட்டாக்காலி நாய்களை வீதிக்கு வீதி, ஒழுங்கைக்கு ஒழுங்கை தேடிப்பிடிப்பது போல் இளைஞர்கள் போன போன இடங்களில் பிடிக்கப்பட்டார்கள். நாய்களுக்கு கூட தங்களைப் பிடிக்க வருவோர்களை எதிர்த்து குரைக்கும் உரிமை இருந்தது. இளைஞர்களின் குரல்வளையில் துப்பாக்கிதான் இருந்தது. இதை கண்டித்து அரசியல் இலாபம் அடைந்த புலிகள் பின்னர் தாமும் ஒரு கட்டத்தில் அதையே செய்தார்கள். 

ஆயுதம் தாங்கிய இவர்கள் மாகாணத்தின் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான துணைப் படையினர் எனக் கூறப்பட்டது. இந்தப் படையணி ஒட்டு மொத்தத்தில் சட்டம், ஒழுங்கை குழிதோண்டி புதைத்து மக்கள் வதைப்படையாகவே செயற்பட்டது. புலிகளில் இருந்து தம்மைப் பாதுகாக்கவே, தற்காப்புக்காக ஆயுதம் ஏந்தியுள்ளோம் என்று கூறிக்கொண்டு, சாதாரண தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களுக்கு எதிராகவே ஆயுதங்களைத் திருப்பினார்கள். இப்போது புரிகிறதா மக்கள் ஏன்?மாகாண சபை அரசியலில் ஆர்வமற்று இருக்கிறார்கள் என்று? தங்களை பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலையில் நடுத்தெருவில் விட்டு கப்பல் ஏறியவர்கள் என்பதுதான் இவர்களின் தலைமைத்துவம் குறித்த மக்களின் நிலைப்பாடு. 

முதலமைச்சர் வரதராஜா பெருமாளின் நிர்வாகம் 19 அம்சக்கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை இலங்கை அரசாங்கத்திற்கு சமர்ப்பித்தது. இவை குறித்து இலங்கை அரசாங்கம் அலட்டிக் கொள்ளாததால் “ஈழப்பிரகடனம்” செய்துவிட்டு இந்தியா சென்றார் அவர். இந்தியப் படை 1990 மார்ச் 1ம் திகதி வெளியேறத் தொடங்கியிருந்தது. மாகாண சபையின் ஆட்சியாளர்கள் யூன் 1990 இல் கப்பல் ஏறத்தொடங்கினர். வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் நல்லெண்ணத்தையும், இன ஐக்கியத்தையும் சீர்குலைத்து இன்றைக்கும் குறிப்பாக கிழக்கில் இருக்கின்ற இனமுறுகலுக்கு இந்தியப் படையுடன் இணைந்து பொறுப்பேற்க வேண்டியவர்கள் வரதராஜா பெருமாள் ஆட்சியாளர்கள். இதன் அர்த்தம் மற்றைய ஆயுத அமைப்புக்கள் இன உறவு சீர்குலைவுக்கு பொறுப்பல்ல என்பதல்ல. அவர்களுக்கும் அதில் பங்குண்டு. 

இந்திய -இலங்கை உடன்பாடு சுகப்பிரசவம் அல்ல என்று ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் சிக்கலானதும், வில்லங்கமானதும் என்பதும் தெரிந்த விடயம். அரசியலில் கத்திமுனையில் நடக்கவேண்டிய தருணங்கள். தென்னிலங்கையில் இந்தியா நாட்டைப் பிரித்துக் கொடுத்துவிட்டது, இந்தியப் படை நாட்டைப் பிடித்துவிட்டன என்று, எதிர்க்கட்சியினர் களத்தில் நிற்கிறார்கள். ஜே.வி.பி. இந்திய மேலாதிக்க எதிர்புப் போராட்டத்தை வன்முறையைக் கையில் எடுத்து மைசூர்பருப்பு, பம்பாய் வெண்காயத்தைக்கூட இந்திய ஆதிக்க அடையாளமாக காட்சிப்படுத்தி கொலைக்களம் ஆடுகிறது.  

மறுபக்கத்தில் கொழும்பு ஆட்சியாளர்கள் பலவீனமாக உள்ளனர், இந்தியாவில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு அதிகரிக்கிறது. நிலைமை இப்படி இருக்கையில் வரதராஜா பெருமாள் ஆட்சி தென்னிலங்கையிலும், வடக்கு, கிழக்கிலும், குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லீம், சிங்கள மக்கள் மத்தியிலும் மேலும் அச்சத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துவதாக அமைந்தது. இது சிங்கள மக்களை கடின போக்கைக் கொண்ட சிங்கள தேசியவாதிகளின் பக்கம் தள்ளிவிட்டது. ஈழப்பிரகடனத்தைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரேமதாசவினால் மாகாண சபை ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுனரின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் ஒருவகையில் வரதராஜப்பெருமாள் ஆட்சி மாகாண சபை இருக்கிறது  -இல்லை என்பதற்கும் பொறுப்பாகிறது. இது அவர்களின் அரசியல் தற்கொலையில் முடிந்தது. 

இந்த வாய்ப்புக்கள் அனைத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி காலம் கனியும் வரைகாத்திருந்த ஜே.வி.பி. வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராக மூன்று மனுக்களை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, இணைப்பு அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று தீர்ப்பைக் பெற்றுக் கொண்டது. 1988 இல் இணைக்கப்பட்ட வடக்கும், கிழக்கும் 2006, ஒக்டோபர், 10 இல் பிரிக்கப்பட்டன. 2007 ஜனவரி 1ம் திகதியில் இருந்து கிழக்கு தனி மாகாணமாக, தனி மாகாண சபை நிர்வாகத்தை கொண்டதாக சட்டரீதியாக செயற்படும் நிலை ஏற்படுகிறது. இது இன்னொரு வகையில் கிழக்கு மக்களின் விருப்புக்குமாறாக நடந்த கட்டாயத் திருமணம், விவாகரத்தில் முடிந்த கதை. இதற்கு ஜே.வி. பி.யையும், சிங்கள அரசாங்கத்தையும் மட்டும் நோக்கி சுட்டு விரலை நீட்டமுடியுமா? இந்தியா, வரதராஜப்பெருமாள் ஆட்சி, விடுதலைப்புலிகள், மற்றைய சகல ஆயுதப்போராட்ட அமைப்புக்களும்  இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.  

2008 இல் நடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பொதுஜன மக்கள் முன்னணி பெரும் வெற்றியைப் பெற்றது. இதனை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திய அரசாங்கம் சப்பிரகமுவ, வடமத்திய, கிழக்கு மாகாண சபைகளுக்கு தேர்தலை நடாத்த முன்வந்தது. கிழக்கு மாகாணத்திற்கான தேர்தலில் பிள்ளையான் என்று நன்கு அறியப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சி.சந்திரகாந்தனின் தலைமையிலான தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிட்டது. இந்த மாகாண சபைத் தேர்தல் 2008 ,மேமாதம், 10 ம் திகதி நடைபெற்றது. 

(பகுதி 2  நாளை தொடரும்)