‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்

 தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்

இலங்கையின் அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் என்று அழைக்கப்பட்ட சட்டமூலம் 22.10.2022 இல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பெற்று அது அரசியல் அமைப்பின் 21 ஆவது திருத்தமாக உள்வாங்கப்பட்டுள்ளது. 

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை, இந்தத் திருத்தத்தை தூக்கிப்பிடித்து ஆதரிப்பதற்கோ அல்லது மூர்க்கமாக எதிர்ப்பதற்கோ அவசியமெதுவுமில்லை. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனை ஆதரித்த ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியவற்றுடன் இணைந்து பாராளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்துள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மட்டும் இச்சட்டமூலத்தை மூர்க்கமாக எதிர்த்துள்ளதுடன் வாக்கெடுப்பிற் கலந்து கொள்ளாமலும் விட்டிருக்கின்றார்.

இச்சட்டமூலத்தை ஆதரிப்பதென்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முடிவெடுத்திருந்தால் அதன் பாராளுமன்றக் குழுவின் தீர்மானத்திற்கு அல்லது அதன் பெரும்பான்மையோரின் முடிவுக்கு மாறாகச் செயற்பட்ட சுமந்திரன் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக்கட்சி) எடுக்கப் போகும் ஒழுக்காற்று நடவடிக்கை யாது?

இது ஒரு புறமிருக்க, இச்சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்ட சுமந்திரன் நிறைவேற்று ஜனாதிபதி முறை முற்றாக ஒழிக்கப்படவேண்டுமென்றும் புதிய அரசியலமைப்பு தேவையென்றும் காரசாரமாகப் பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். 

நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டுமென்றால் அதற்கான அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பங்கு பெரும்பான்மையால் நிறைவேற்றப்படுவது மட்டுமல்ல அது மக்கள் வாக்கெடுப்பிற்கும் விடப்பட்டு நிறைவேற்றப்படவும் வேண்டும். இது இலங்கையின் இன்றுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியற் சூழலில் சாத்தியமா?

சாத்தியமற்ற ஒன்றைப் பற்றிச் சுமந்திரன் ஏன் பேசுகிறார்? நிறைவேற்று ஜனாதிபதி முறை முற்றாக ஒழிக்கப்படுவதால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடைக்கப் போவதில்லையே?

அதே வேளை, நிறைவேற்று ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தியே 1987இல் அமைச்சரவை அங்கீகாரமில்லாமலும்-பாராளுமன்றத்தின் தீர்மானமின்றியும் இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் அப்போதைய ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன அவர்களினால் கைச்சாத்திட முடிந்தது என்பதையும் இலங்கைத் தமிழர் தரப்பு மனம் கொள்ள வேண்டும்.

தமிழர் தரப்பு எப்போதுமே ‘ஆழமறியாமல் காலை விடும்’ அரசியலையே முன்னெடுத்து வந்துள்ளது / வருகிறது.

2015 – 2019 காலகட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேனிலவு கொண்டாடிய போது புதிய அரசியலமைப்புப் பற்றிப் பலவிதமான வியாக்கியானங்களையும் விளக்கங்களையும் நம்பிக்கையையும் தந்து மூக்குடைபட்ட சுமந்திரன் மீண்டும் புதிய அரசியலமைப்பு தேவை எனக் குரல் எழுப்பியுள்ளமை சூடு கண்ட பூனை மீண்டும் அடுப்படியை நாடுவதைப் போன்றதாகும். இதனை விளக்க வேண்டிய அவசியமில்லை.

இந்த நல்லாட்சிக் காலத்தில்தான் 19 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பெற்றது. இதில் அதிகாரப் பகிர்வுப் பொறிமுறையை (13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை) மேலும் வலுப்படுத்தும் ஏற்பாட்டை உள்ளடக்கிய ஷரத்தொன்று சேர்க்கப்பட்டிருக்குமாயின் அது பின்னாளில் தமிழர்களுக்கு நன்மையாக அமைந்திருக்கும். அதாவது அப்போது நிறைவேற்றப்பெற்ற 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் ஜனாதிபதிக்குரிய சில அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அல்லது மட்டுப்படுத்தப்பட்டு அவ்வதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கும் அரசியலமைப்புப் பேரவைக்கும் பாரப்படுத்தப்பட்டமை போன்று மாகாண ஆளுநருக்குரிய அதிகாரங்களைக் குறைத்து அல்லது மட்டுப்படுத்தி அவ்வதிகாரங்களை மாகாண முதலமைச்சருக்கும் ‘அரசியலமைப்புப் பேரவை’ போன்று மாகாண மட்டத்தில் உருவாக்கப்படும் பொருத்தமானதொரு பொறிமுறையொன்றுக்கும் அவ்வதிகாரங்களைப் பாரப்படுத்தும் ஷரத்துக்களையும் உள்ளடக்கியிருக்க முடியும். அத்துடன் மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்த பின்னர் அல்லது கலைக்கப்பட்டால் அதன் பதவிக்காலம் முடிந்த அல்லது கலைக்கப்பட்ட தினத்திலிருந்து குறிப்பிட்ட கால எல்லைக்குள் மக்களால் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த மாகாண சபை பதவியேற்க வேண்டுமென்ற ஷரத்தையும் சேர்த்திருக்க முடியும். அப்படிச் சேர்த்திருந்தால் மாகாண சபைத் தேர்தல்கள் காலவரையின்றி பிற்போடப்படுவதைத் தடுத்திருக்க – தவிர்த்திருக்க முடியுமானதாக இருந்திருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் இயலாமையால் (அசமந்தத்தினால்) அச்சந்தர்ப்பம் தவறவிடப்பட்டது. 

தவறவிடப்பட்ட அச்சந்தர்ப்பம் இப்போது 22 ஆவது திருத்தத்தின்போது மீண்டும் கதவைத் தட்டியபோதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதில் ஆர்வமோ அக்கறையோ காட்டாது தமிழ் மக்களுக்கு நன்மைகளைப் பெற்றுத்தரும் எந்த இலக்குகளுமின்றி வெறுமனே கும்பலிலே கோவிந்தாப் போடுமாற்போல் பாராளுமன்றத்தில் இச்சட்டமூலத்திற்கு எந்த நிபந்தனைகளுமின்றி ஆதரவாக வாக்களித்திருக்கிறது. 

தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் மேம்பாடுகள் குறித்தோ -தமிழ் மக்களின் எதிர்கால இருப்புக்குறித்தோ – தமிழ் மக்கள் யாசிக்கும் அதிகாரப் பகிர்வு இலக்கை அடைவதற்கான அணுகுமுறைகள் குறித்தோ எந்தவிதமான தெளிவான – திட்டவட்டமான சிந்தனைகளுமில்லாமல் முழுக்க முழுக்கப் பாராளுமன்ற (தேர்தல்) அரசியல் சாக்கடைச் சகதிக்குள்ளேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் விழுந்து புரள்கிறது என்பதற்கு இது இன்னுமோர் உதாரணமாகும். தமிழ் மக்களின் மேம்பாட்டிற்காகப் பாராளுமன்ற அரசியலைப் பயன்படுத்தும் வல்லமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அறவேயில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கட்சிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் ஏனைய கட்சிகளிடமுமில்லை. இவர்கள் போடுவது வெறும் ‘கூப்பாடு’ அல்லது ‘கூத்தாடு’ மட்டுமே. 

இனியாவது, போலித் தமிழ்த் தேசியக் கட்சிகளைத் தூக்கியெறிந்து விட்டுச் செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்கக்கூடிய வினைத்திறன் மிக்க மாற்று அரசியற்சக்தியொன்றின் தேவையைத் தமிழ் மக்கள் உணரத் தலைப்பட வேண்டும்.