உயர் பாதுகாப்பு வலயம்: தெற்கில் உரிமை மீறல்! வடக்குக் கிழக்கில் உரிமையாக்கல்? 

உயர் பாதுகாப்பு வலயம்: தெற்கில் உரிமை மீறல்! வடக்குக் கிழக்கில் உரிமையாக்கல்? 

  — கருணாகரன் — 

உயர் பாதுகாப்பு வலயங்களாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் செய்யப்பட்ட பிரகடனத்தை ஒரு மாதத்தில் அவரே நீக்க வேண்டியேற்பட்டது. அதனால் அந்தப் பிரகடனம் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான அழுத்தம் தென்பகுதியில் எழுந்ததே காரணமாகும். இதைச் செய்தவர்கள் சிங்கள உயர் குழாத்தினர். சட்டம் மற்றும் அறிவியல் துறைகளில் இருந்தோர். 

இவ்வாறே “அரகலய” போராட்டத்தில் இணைந்திருந்தோரின் கைதுகளுக்கு எதிரான குரலும் கண்டனமும் தென்னிலங்கையில் பலமாக எழுந்துள்ளது. இதன் காரணமாகவே சிறைப்பிடிக்கப்பட்ட அரகலயவினர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்; விடுவிக்கப்படுகின்றனர். பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டாலும் சிறை நீடிக்கப்படவில்லை. 

இதேவேளை அரசாங்கத்தின் இந்த மாதிரியான (ஜனநாயகச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும்) நடவடிக்கைகளை சர்வதேச சமூகமும் எதிர்க்கிறது. கண்டனம் செய்கிறது. இதுவும் அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது. 

ஆனால், இதே நிலைமை – இதே பிரச்சினைகள் வடக்கிலும் கிழக்கிலும் உண்டு. 

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொது மக்களின் காணிகள், வாழிடங்கள், தொழில் மையங்கள் உட்படப் பல இடங்கள் பல ஆண்டுகளாக உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. 

பலாலி, மயிலிட்டி, கட்டுவன், காங்கேசன்துறை, வடமராட்சி கிழக்கு, தீவுப் பிரதேசத்தில் பல இடங்கள், இயக்கச்சியில் பல பகுதிகள், கிளிநொச்சி நகரத்தில் பல இடங்கள், வட்டக்கச்சி, முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான், கேப்பாபிலவு, மாங்குளம் பிரதேசத்தில் பெருமளவு பகுதி, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு என எல்லா மாவட்டங்களிலும் இந்த அத்துமீறல் உண்டு. 

மக்களுடையதும் அரசினதும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் படைகளின் முகாம்களாகவும் தளங்களாகவும் நீடிக்கின்றன. கீரிமலை காங்கேசன்துறை பிரதான வீதி உள்பட பல பிரதான வீதிகள் படைத்தரப்பினால் மூடப்பட்டுள்ளன. இதில் கீரிமலை –காங்கேசன்துறை பிரதான வீதியானது காங்கேசன் துறைமுகத்துக்கானதாகும். திருகோணமலையிலும் இவ்வாறான தடைப் பிரதேசங்கள் உண்டு. 

இதற்கு எதிராக பாராளுமன்றத்திலும் வெளியே மக்களாலும் மக்கள் அமைப்புகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்புகளாலும் கண்டனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்ப்பு நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும் அரசாங்கம் அதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை. மசியவும் இல்லை. 

இதனால் வடக்குக் கிழக்கில் தொடர்ச்சியாகப் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அவர்களுடைய அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்பாடல் மட்டுறுத்தப்பட்டுள்ளது. 

இதில் இன்னும் நாம் கவனிக்க வேண்டியது, பலருடைய சொந்தக் காணிகள் படையினரால் அத்துமீறிக் கையகப்படுத்தப்பட்டுள்ளமையாகும். இந்தக் காணிகள் இவற்றுக்கு உரித்தானவர்களுடைய சொத்து, உரிமை, உறுதிக்காணிகள், எந்தச் சட்டத்திலும் இவ்வாறான காணிகளை எதன் நிமித்தமும் உரியவர்களுடைய அனுமதியின்றி அடாத்தாக வைத்திருக்க முடியும் என்று சொல்லப்படவில்லை. ஆனாலும் படைத்தரப்பு இவற்றை அத்துமீறி வைத்திருக்கிறது. இப்படிப் பல கிராமங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. 

யுத்த காலத்தில் இவ்வாறு நிகழ்வது தவிர்க்க முடியாதது. அந்தச் சூழலும் நிலைமையும் வேறு. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடவடிக்கைகளும் வேறு. ஏன் சட்டமும் கூட அப்பொழுது நெகிழ்ந்து வேறு விதமாகி விடுவதுண்டு. இதை நாம் புரிந்து கொள்ள முடியும். 

இப்பொழுது நிலைமை வேறு. இது யுத்தம் முடிந்து –  யுத்தத்தின் பிரதான தரப்பான விடுதலைப்புலிகள் முற்றாகவே அழிக்கப்பட்ட அல்லது முடக்கப்பட்டு விட்ட – 13 ஆண்டுகளுக்குப் பிறகான நிலைமை –சூழலாகும். அதாவது இயல்பு நிலை உருவாக்கப்பட்டு, மீள்குடியேற்றம் செய்யப்பட்ட சூழலாகும். 

நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததாக வெற்றிப் பிரகடனம் செய்யப்பட்டதோடு, வெற்றிகரமாக இயல்பு நிலை உருவாக்கப்பட்டதாக உத்தியோக பூர்வமாக பிரகடனம் செய்து பல வெற்றிக் கொண்டாட்டங்களையும் நடத்திவிட்டது அரசாங்கம். யுத்த வெற்றி, இயல்பு நிலை உருவாக்கம், புனரமைப்பு, புனர்வாழ்வு போன்றவற்றுக்கெல்லாம் உரிமை கோரியிருக்கிறார்கள் தலைவர்கள். 

இதற்குப் பிறகும் எந்த விதமான அறிவிப்புகளோ அக்கறைகளோ இல்லாமல் குறித்த காணிகளையும் மையங்களையும் படையகங்களாகவும் உயர்பாதுகாப்பு வலயங்களாகவும் அரசும் படைகளும் அடாத்தாகப் பிடித்து வைத்திருப்பது தவறாகும். இது நீதி மீறல், அறமற்ற செயல் மட்டுமல்ல, தன்னுடைய சொந்தக் குடிமக்கள் மீதான அடக்குமுறையை தொடருவதாகும். ஏனெனில் இந்த நிலங்களும் உடமைகளும் எதிர்த்தரப்பாகிய விடுதலைப் புலிகளுடையவை அல்ல. அவ்வளவும் மக்களுடையவை. அல்லது அரசுக்குச் சொந்தமானவை. அரசுக்குச் சொந்தமானவை என்றால் அதுவும் மக்களுக்குரியதே. 

இவ்வாறே அரசியற் கைதிகள் என்ற பேரில் ஒடுக்குமுறைக்கு எதிராகச் செயற்பட்ட விடுதலையாளர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதுமாகும். இவர்களுடைய விடுதலையை இனிமேலும் தாமதிக்கவேண்டியதில்லை. 

இதைக்குறித்தெல்லாம் தென்பகுதியில் உள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சட்டவாளர்கள், நீதிமான்கள், அறிவுசார் புலத்திலுள்ளோர், ஊடகர்கள், அரசியலாளர்கள் எவருக்கும் அக்கறைகள் கிடையாது. இவர்களில் பலரும் உத்தியோகபூவர்வமான பயணிகளாகவும் சுற்றுலாப் பயணிகளாகவும் கடந்த 13 ஆண்டுகளிலும் வடக்குக் கிழக்கு வந்து சென்றிருக்கின்றனர். 

இப்படி வரும்போது எப்படியான சூழலில் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர்? மக்களுக்கான உரிமைகள் எவ்வளவுக்கு மீறப்பட்டுள்ளது? எவ்வளவு நிலப்பகுதி படையாதிக்கத்தின் கீழுள்ளது? யுத்தத்திற்குப் பிறகும் இப்படியெல்லாம் செய்வது சரியா?என்பதையெல்லாம் நேரிலேயே பார்க்க முடிந்துள்ளது. 

இதைப்போல காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நடத்துகின்ற போராட்டம், தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலையாளர்களின் (கைதிகளின்) விடுதலைக்காகப் போராடும் மக்களுடைய நிலைமை போன்றவற்றையும் கண்டறிந்துள்ளனர். 

ஆனாலும் இதைக்குறித்து இவர்களுடைய அகக்கண் திறக்கப்படவே இல்லை. அப்படித் திறக்கப்பட்டிருந்தால் இதற்கான ஆதரவுக் குரலை –அரசாங்கத்தின் நியாய மீறல் நடவடிக்கைகளுக்கு எதிரான குரலை எழுப்பியிருப்பர். குறைந்த பட்சம், இப்பொழுது தெற்கில் நடப்பவற்றுக்கு எதிராக எழுப்புகின்ற குரலோடு சேர்த்து இவற்றுக்கும் எதிராகச் செயற்பட்டிருப்பர். ஆனால் அப்படி நடக்கவே இல்லை. 

இதேவேளை தமிழ், முஸ்லிம் தரப்புகளும் நீதிக்காகச் சிந்திக்கக் கூடிய சிங்களத் தரப்புகளோடு இணைந்து பயணிக்கத் தயாராக இல்லை. உரையாடல்களையும் உறவாடல்களையும் சரியாக நடத்துவதும் இல்லை. அந்தத் தரப்பிலிருந்தும் பொருத்தமான மன அமைப்புக் காணப்படுவதில்லை. 

இது இனவாதம் எதிலும் எல்லாத் தரப்பிலும் வலுவாக செறிந்து போயுள்ளது என்பதையே தெளிவாகக் காட்டுகிறது. நமக்கு நடந்தால் வலிக்கும். மற்றவர்களுக்கு அதேபோல் நடந்தால் வலிக்காது என்ற விதமான சிந்தனையே இதன் அடியொலிப்பாகும். இல்லையென்றால், தெற்கில் உயர்பாதுகாப்பு வலயம் கூடாது. வடக்குக் கிழக்கில் என்றால் சரியானது, ஏற்புடையது என்ற எண்ணம் வருமா? இது எவ்வளவு பிழையான சிந்தனை? இப்படிச் சிந்திப்பது அழகற்றது,நியாயமற்றது, அறிவற்றது அல்லவா! 

அரசாங்கம்தான் தவறிழைக்கிறது. அரசியல்வாதிகள், அரசியற் கட்சிகள் எல்லாம் தவறாகச் செயற்படுகின்றனர் என்றால் மக்கள் நிலை நின்று சிந்திக்கக் கூடிய தரப்புகளும் தவறு விடலாமா? இப்படி பேதநிலைப்பட்டுச் சிந்திக்கலாமா? இப்படி விலக்கிச் சிந்தித்தால் புறக்கணிக்கப்படுகின்ற மக்கள் விலகி (தனித்து) நிற்கத்தானே விரும்புவர்? 

சட்டமும் நீதியும் உரிமையும் அன்பும் கருணையும் நியாயமும் அனைவருக்கும் பொதுவானவை. ஏன் ஆட்சியும்தான். இவையெல்லாம் ஆளாளுக்கு வேறுபடுமாக இருந்தால், குழப்பங்களும் பிரச்சினைகளும் அமைதியின்மையுமே ஏற்படும். இனம், மதம், சாதி, பிரதேசம், பால் என்று ஏதாவதொன்றின் பேராலும் பேதமாக இவற்றில் பாரபட்சம் நிகழுமாக இருந்தால் அதனால் நாடு முடிவற்றுப் பாதிப்படையும். இனப்பிளவு, நிலப்பிளவு, சமூகப் பிளவு என்று பிளவுகளே ஏற்படும். 

இன, மத, பிரதேச, வர்க்க ரீதியான பிளவுகளே இலங்கையைக் கடந்த காலத்தில் நாசப்படுத்தின என்பதை நாம் அனைவரும் நன்றாகவே அறிவோம். ஏன் இப்பொழுது கூட இந்தப் பிளவுகள்தான் நாட்டை நெருக்கடிக்குள்ளும் அமைதியின்மைக்குள்ளும் தள்ளி விட்டுள்ளன. உள்ளே நமக்குள் இணக்கம் கண்டு,ஒருங்கிணைந்து ஒற்றுமையாக இருக்க முடியாமல் தவிக்கும் நாம்  பிராந்திய சக்திகளுக்கும் சர்வதேச சக்திகளுக்கும் முன்னால் மண்டியிடுகிறோம். உதவிப் பிச்சை கேட்கிறோம். 

வளமானதொரு நாட்டை நியாயமாகப் பரிபாலனம் செய்ய முடியாததன் விளைவுகளுக்காக எவ்வளவு உயிர்களைப் பலியிட்டிருக்கிறோம்! எவ்வளவு கோடி பெறுமதியான வளங்களையும் சொத்துகளையும் அழித்திருக்கிறோம்! மகத்தான ஒற்றுமையைச் சிதறடித்திருக்கிறோம்! மாண்பையெல்லாம் இழந்து உலகத்தின் முன்னே குற்றவாளிகளாகவும் கடன்காரர்களாகவும் திறனற்றோராகவும் அகதிகளாகவும் மண்டியிட்டுக் கூனிக்குறுகி நிற்கிறோம். 

இப்படியெல்லாம் சீரழிந்து கிடந்தாலும் நம்முடைய அறிவீனமும் மமதையும் நம்மை விட்டுப் போவதாக இல்லை. அத்தனை பைத்தியக்காரத்தனத்தையும் மூட்டை கட்டிப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறோம். 

எங்களிடையே எந்த விதமான மாற்றங்களும் நிகழவில்லை. ஆனால், இலங்கையின் மீதான சர்வதேச இறுக்கம் வரவரக் கூடிக் கொண்டே வருகிறது. ஆம், சுருக்குக் கயிறு நம்முடைய குரல்வளையை நசுக்குகிறது. இதைத் தெரிந்தும் தெரியாதவர்களைப் போல நாம் மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். மூடர்கள் வேறு எப்படி இருப்பர்?