— தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —
‘இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங்கும்’ என்ற தலைப்பிலான இணையவழிக் கலந்துரையாடலொன்று தமிழக பா.ஜ.க துணைத்தலைவர் வானதி சீனிவாசனின் ஏற்பாட்டில் 04.10.2020 அன்று நடந்தது. அதில் உரையாற்றிய யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் 13வது அரசியல் சட்டத் திருத்தத்தின் இன்றைய நிலைகுறித்து ஆராய்ந்துள்ளார். உரையில் 13வது சட்டத்திருத்தத்திலுள்ள குறைபாடுகளைக் கூறி இறுதியில் இந்தியா தவறிழைத்துள்ளது என்கிறார். அவரது உரையைக் குறைகூறுவது இப் பத்தியின் நோக்கமல்ல. ஆனால் இன்றைய தமிழ்ச்சூழலில் தமிழ்மக்களிடையே ‘புத்திஜீவிகள்’ என அறியப்பட்டவர்கள் விடும் தவறைச் சுட்டிக்காட்டுவதே இப்பத்தியின் நோக்கமாகும்.
தமிழ்ப் ‘புத்திஜீவிகள்’ என அறியப்பட்டோரில் பெரும்பாலானவர்கள் ஒரு விடயத்தை ‘ Subjective’ வாகப் பேசுகிறார்களே தவிர ‘Objective’ வோடு செயற்படுகிறவர்களாக இல்லை. ஒரு சிலர்தான் சமூக அக்கறையோடும் வினைத்திறனோடும் உபாயங்களை வகுத்துச் செயற்படுபவர்களாக உள்ளனர். இத்தகையோர் எப்போதும் இலைமறை காய்களாகவே உள்ளனர். தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகள் வேண்டுமென்றே இவர்களைக் கண்டு கொள்வதில்லை. ஏனெனில், தமிழ்த்தேசிய அரசியலின் தற்போதைய தலைமைப் பீடத்திற்குத் தேவை “தலையாட்டிகள்” மட்டுமே.
13வது அரசியல் சட்டத்திருத்தத்தில் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டிய குறைபாடுகள் இருக்கலாம். இக்குறைபாடுகளையெல்லாம் கடந்து வடக்கு கிழக்கு இணைந்த முதலாவது மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளினாலும் பின்னர் கிழக்குமாகாணசபையில் முதலமைச்சர்களான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்), அப்துல் நஜீப் மற்றும் நஸீர் அகமட் ஆகியோரினாலும் ஏதாவது சாதிக்கமுடிந்தது என்றால் வடமாகாண முதலமைச்சராக இருந்த சி.வி விக்னேஸ்வரனால் இவர்களைப்போல் செயற்படமுடியாமற் போனமைக்குக் காரணம் என்ன?
‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்பார்கள். 13வது அரசியல் சட்டத்திருத்தம் அளித்த மாகாணசபைகளின் அதிகாரச் சட்டகத்துள்ளே நின்று கொண்டு அதி உச்ச சேவைகளை மக்களுக்கு வழங்கும் உபாயங்களைக் கையாளாமல் 13வது அரசியல் சட்டம் அளித்த அதிகாரங்களுக்கு வெளியே அதிகாரமளிக்கப்படாத பல விடயங்களை அவர் கையாள முற்பட்டதை அவர் தனது உரையில் மூடி மறைத்துள்ளார். அவரிடம் ஒப்படைக்கப்பெற்ற வேலையை மறந்து, வேறு ‘சோலிகள்’ பார்க்கத் தொடங்கியதே அவர்விட்ட பிழை.
ஆடத்தெரியாத நாட்டியக்காரி அரங்கம் பிழையென்று சொன்னதைப்போல வடக்குமாகாண முதலமைச்சராகத் தான் பதவிவகித்த காலத்தின் தனது இயலாமையை அல்லது வினைத்திறனற்ற செயற்பாடுகளை நியாயப்படுத்துவதாகவும் அவரது உரை அமைந்திருந்தது. தமிழ்ச் சமூகம் தற்போது வேண்டிநிற்பது புலமையாளர்களை விடவும் ‘புத்திஜீவி’களை விடவும் செயற்பாட்டாளர்களையே.
தமிழர்களுடைய உரிமைப் போராட்ட அரசியலைப் பொறுத்தவரை 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த இனப்பிரச்சனையில் இந்திய அரசாங்கத்தின் தலையீடும் அதன் இறுதி விளைவான இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தமும் தமிழர்களுக்குக் கிடைத்த இராஜதந்திர வெற்றியாகும். அதனைத் தமிழர்தரப்பு சரியாகப் பயன்படுத்திக் கொண்டதா? இதைப்பற்றி ஆராயாமல் எடுத்த எடுப்பிலேயே இந்தியா தவறு என்பது எந்தவகையில் தமிழர்களுக்கு உதவப் போகின்றது.
ஆரம்பத்தில் சிங்கள அரசியல் தலைவர்கள் பிழை- பின்னர் இந்தியா பிழை- பின்னர் ஒரு காலகட்டத்தில் மத்தியஸ்தம் வகிக்கவந்த நோர்வே பிழை- பின் அமெரிக்கா பிழை- முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது சர்வதேசமும் பிழை என்று எப்போதுமே மூன்றாம் தரப்பொன்றையே பிழையாகக் காட்டுகின்ற தமிழ்த்தரப்பு, தான் ஒரு பிழையும் விடவில்லையா? தான் விட்ட தவறுகளை எப்போதாவது சுயவிமர்சனப் பார்வையுடன் தமிழ்த்தரப்பு சீர்தூக்கிப் பார்த்துள்ளதா?
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஏனைய சகோதரப் போராளி இயக்கங்களைத் தடைசெய்து அவற்றை ஓரங்கட்டி அல்லது ஒழித்துக் கட்டித் தாங்களே தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற நிலைக்கு இறுதியில் வந்ததை ஒரு புறம் வைத்துவிடுவோம். புலிகளைத் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டமையும் ஒரு புறம் இருக்கட்டும்.
புலிகள்,
– இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை எதிர்த்ததால்
– இந்திய சமாதானப்படைமீது போர்தொடுத்ததால்
– அமிர்தலிங்கத்தைச் சுட்டுக் கொன்றதால்
– இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைக் கொலை செய்ததால்
– தற்காலிகமாகவேனும் இணைந்திருந்த முதலாவது வடக்கு கிழக்கு மாகாணசபையின் நிர்வாகத்தைக் குழப்பியதால்
– பிரபாகரன் – பிரேமதாசாக் கூட்டினால்
தமிழர்களுக்குக் கிடைத்த நன்மைகள் என்ன?
இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை புலிகள் அனுசரித்துப் போயிருந்தால் – இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்த அமுலாக்கத்திற்குப் புலிகள் இறுதிவரை ஒத்துழைப்பு வழங்கியிருந்தால், ஒருவருட காலத்திற்குள் கிழக்கில் சர்வஜனவாக்கெடுப்பு மூலம் வடக்குக்கிழக்கு மாகாணங்கள் சட்டரீதியாக நிரந்தரமாக இணைந்த அதிகாரப் பகிர்வு அலகு உட்பட எவ்வளவோ சமூக பொருளாதார அரசியல் நன்மைகள் தமிழர்களுக்குக் கிடைத்திருக்கும். வடக்குகிழக்கு இணைந்த ஒற்றை மொழிவாரி மாகாணமொன்று உருவாகியிருக்கும். இச்சந்தர்ப்பத்தை இழந்தோம். அதுதான் போகட்டும். அதற்குப் பிராயச்சித்தம் தேடுமாற்போல் அல்லது அதனை ஈடு செய்யுமாற்போல் பின்னாளில் ‘நோர்வே அரசாங்கத்தின் மத்தியஸ்தம்’ கிடைத்தது. இதனையாவது தமிழ்த்தரப்பு புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியதா? இலங்கை அரசாங்கம் ஒத்துக் கொண்ட உள்ளக சுயாட்சியையும் நிராகரித்து ‘அடைந்தால் மகாதேவி; இல்லாவிட்டால் மரணதேவி’ என்ற மனப்போக்கினால் தமிழ்மக்கள் அடைந்த நன்மைகள் எதுவுமேயில்லை. இழப்புகள்தான் ஏராளம். இது சரியா? இப்படி ஓராயிரம் கேள்விகளைத் தமிழ்த்தேசியத் தரப்பு தன்னைத் தானே கேட்டுக்கொள்ள முடியும்.
இக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடும் பொதுவெளிக் கலந்துரையாடல் தமிழ்ச் சூழலில் நடைபெறாமல், மீண்டும் மீண்டும் அரைத்தமாவையே அரைத்துக்கொண்டு, வீறாப்பும் வீரவசனங்களும் பேசிக்கொண்டு வழமைபோல் அப்பாவித்தமிழர்களை உணர்ச்சியூட்டி உசுப்பேற்றிக் கொண்டிருப்போமேயானால் இதுவரையில் பட்டுவேட்டிக்குக் கனவு கண்டு இறுதியில் கோவணத்துண்டுதான் எஞ்சியுள்ளது. இனிமேல் கோவணத்தையும் இழக்கும் நிலைதான் தமிழர்களுக்கு ஏற்படும். வேண்டுமானால் ‘போலி’த் தமிழ்த் தேசியவாதிகள் சிலர் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் மாகாணசபை உறுப்பினர்களாகவும் உள்ளூராட்சிச்சபை உறுப்பினர்களாகவும் பதவிகளைப்பெற்றுப் பவனி வருவார்களேயல்லாமல் மக்களுக்கு எதுவும் ஆகப்போவதில்லை.
என்னதான் அரசியல் சித்தாந்தங்களை நாம் பேசினாலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா ஒரு வல்லரசாக இருக்கும்வரை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இலங்கைத்தமிழர்கள் எதிர்பார்க்கும் நிரந்தரமான அரசியல் தீர்வு இந்தியாவின் தலையீடு அல்லது அனுசரணை இல்லாமல் வருவதற்கு வாய்ப்பேயில்லை என்பதே அரசியல் யதார்த்தம்.
இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் – 13வது அரசியல் சட்டத்திருத்தத்தில் – இந்தியா இதுவரை கையாண்ட அணுகுமுறைகளில் குறைபாடுகள் இருக்கலாம். இக்குறைபாடுகளால் தமிழர்கள் பாதிக்கப்பட்டும் இருக்கலாம். ஆனால் அவைகளையே சதா பேசுபொருளாக்குவதால் பயன்விளையாது. ஏற்கனவே இந்தியாவைப் பகைத்துக் கொண்டுள்ள தமிழ்த்தரப்பு மீண்டும் இந்தியாவைத் தம் பக்கம் இழுக்கும் செயற்பாடுகளையே இப்போது முன்னெடுக்க வேண்டும். இந்தியாவை விமர்சித்துக்கொண்டும் இந்தியா தவறிழைத்தது எனப் பொருள்படப் பேசிக்கொண்டும் இதனைச் சாத்தியப்படுத்த முடியாது.
எனவே இனிமேல் தமிழ்மக்களுக்குத் தேவை புதியசிந்தனை – மக்கள் நலன் சார்ந்த புதிய அரசியல் கலாசாரம் – புதிய அணுகுமுறை – வினைத்திறன் மிக்க செயற்பாடு – தென்னிலங்கை, இந்துசமுத்திரப் பிராந்திய மற்றும் பூகோள அரசியலை அனுசரித்துப் போகின்ற அறிவுபூர்வமான இராஜதந்திர அரசியல் என்பவையே. இதற்கு முதலில் தேவை சுயவிமர்சனமும் அதனோடிணைந்த ஐக்கியமும் ஆகும். இது குறித்த கலந்துரையாடல்களை இனியும் தாமதியாமல் அரசியல் பொதுவெளியில் ஆரம்பித்து வைப்போம். அதற்கு இப்பத்தி பிள்ளையார்சுழி இடட்டும்.