— அழகு குணசீலன் —
கிழக்கின் ஜதார்த்தம்
புலிகளின் பார்வையில்……!
” கிழக்கின் ஜதார்த்தத்தைப் புரியாமல் மார்ட்டின் ரோட்டில் நடக்கும் கலந்துரையாடல்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதை மாவை சேனாதிராஜா எப்போது நிறுத்தப்போகிறார்?”
“மாவையின் சில செயற்பாடுகள் தமிழரசுக்கட்சியின் இறுதிச் சடங்காக முடிவடைந்து விடும்”
“கிழக்கு தேசியம் எனும் பெயரில் வெறும் வாயை மென்றுகொண்டிருக்கும் சிலருக்கு இது அவலாகி விடும்”
“தமிழ்தேசியத்தில் தாங்கள்தான் 24கரட் என்று அடம்பிடிக்கும் தமிழ்தேசியமுன்னணியையும் விஞ்சும் விதத்தில் செயற்படும் இவர்களால் தமிழரசுக் கட்சிக்கு பின்னடைவே ஏற்படும்”
“தமிழர் அரசியலில் ஒரு இளைஞர் தனது ஆற்றலை சமீபநாட்களாக வெளிப்படுத்திவருகிறார். அவர்தான் சாணக்கியன்”.
“2015 இல் மட்டக்களப்பில் விருப்புவாக்கில் கடைசி இடம் பொன். செல்வராசா. ஒரு தலைமை வேட்பாளர் இறுதியாக வந்த வரலாறு இவருக்கு மட்டுமே உள்ளது. பொதுமக்களுடனான தொடர்பில் இவர் எப்போதும் பெ(f)யில் தான்”.
“பென்சன் வயது அடைந்த பின்னரே வேட்பாளராகலாம் என்ற எழுதப்படாத விதியை மட்டக்களப்பில் மாற்றி அமைத்தார். அதற்கான வழியைக் கண்டுபிடித்து, 2020 இல் வேட்பாளரானார். கடந்த தேர்தலில் தோற்ற கூட்டமைப்பு பிரமுகர்கள் விமர்சனங்களை, தூற்றுதல்களை பரவவிட்டனர். இந்த நிலையில் வெற்றிக்கான வழிகளில் பிரதானமானது எது என ஊகித்தார் சாணக்கியன். தமிழரசுக்கட்சி, தமிழ் இளைஞர் பேரவை, தமிழர் விடுதலைக் கூட்டணி என்று தொடங்கி விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டத்திலும் கிழக்கிலிருந்து முதன்முதல் இணைந்து முள்ளிவாய்க்கால் வரை பயணித்த யோகன்பாதரைச் சந்தித்தார். அவரது ஆதரவு கிடைத்தது, வெற்றி பெற்றார்.”
“இந்த வில்லங்கங்களுக்குள் பொன். செல்வராசாவை மட்டக்களப்பு விவகாரங்களுக்காக நியமித்து, தானும் குழம்பி மக்களையும் குழப்புகிறார் மாவை. மக்கள் உணர்வை எந்த வயதில் புரிய முயற்சிக்கப்போகிறார் இவர்”.
“தந்தை செல்வா காலம் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை, அறவழி மற்றும் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட பாலிப்போடி சின்னத்துரையை கட்சியின் செயலாளராக்குங்கள் என்ற வேண்டுகோள் கிணற்றில் போட்ட கல்லுப் போல் இருக்கிறது. தனது இளமைக்காலம் முழுவதையும் தமிழ்த்தேசியத்திற்காக அர்ப்பணித்த யோகன்பாதரின் விடயத்தை கவனத்தில் எடுக்காமல், 2015 இல் விருப்புவாக்கில் கடைசி இடத்தைப்பிடித்தவரை நியமித்து, கட்சிக்கு இறுதிச்சடங்கு நடத்த நினைக்கிறாரா? மாவை”.
“கருணா, பிள்ளையான், வியாழேந்திரனை எதிர்கொள்ள செல்வராசா போன்றோரால் இயலாது என்பது மாவைக்கு புரியாததல்ல. இப்போது சாணக்கியனுக்கு எதிராக (வடக்கைச் சேர்ந்தோர் உட்பட) மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாவிடில் தமிழரசுக்கட்சியின் இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்யவேண்டியது தான்”.
அன்பான வாசகர்களே!
சத்தியமாகச் சொல்கின்றேன் இந்த வார்த்தைகளின் சொந்தக்காரன் நான் அல்ல. அவர் ஒரு மூத்த போராளி. மட்டக்களப்பிற்கு தளபதிகள் என்று நியமிக்கப்படாத காலத்தில் பொறுப்பாளராக இருந்தவர்.
படுவான்கரையும், மண்முனைசார் முஸ்லீம்கிராமங்களும், ஆரையம்பதியும் நன்கு அறியப்பட்ட ஒருவர்.
ஆம்!
பசீர் காக்கா என்று புலிகள் அமைப்பில் அறியப்பட்ட மனோகர் என்ற விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர்.
“சாணக்கியனுக்கு அம்பு எய்வோரின் கவனத்துக்கு” என்ற தலைப்பில் மட்டு நேசன் மற்றும் தயாளன் போன்ற பெயர்களில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. இதைப் புகலிட ஊடக இணையமான ஐபிசி தமிழ் வெளியிட்டிருந்தது.
இந்த அறிக்கை முழுமையானதல்ல என்றாலும் இயலுமானவரை முக்கிய கருத்தாடல்களை வடிகட்டியுள்ளேன்
கிழக்கிற்கு இந்த அறிக்கை எந்தளவு எட்டியது என்று தெரியவில்லை. ஆனால் கிழக்கு மக்கள் அறிய வேண்டிய, ஆராயவேண்டிய, மற்றும் தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக வகுக்கப்பட்ட வியூகங்கள் என்று பல விடயங்கள் இதில் உள்ளன.
இந்த அறிக்கை கிழக்கின் ஜதார்த்தம் – உணர்வு, சாணக்கியனின் வெற்றியின் இரகசியம், மட்டக்களப்பு எதிர்தரப்பு தமிழ் அரசியல்வாதிகளை எதிர்கொள்ளல் போன்றவற்றுடன் தமிழரசைதாக்கி, சாணக்கியனை தூக்கி இவ்வறிக்கை பேசுகின்ற அரசியலை, காலக்கண்ணாடி காட்சிப்படுத்துகின்றது.
கிழக்கின் ஜதார்த்தம் – உணர்வு
கிழக்கின் ஜதார்த்தம் – உணர்வு என்பதை கிழக்கில் தமிழரசுக்கட்சியின் புனரமைப்பாகவும், மட்டக்களப்பைச் சேர்ந்த சிலரை கட்சியின் சில பதவிகளுக்கு நியமித்தால் அது கிழக்கின் ஜதார்த்தம் – உணர்வு என்றாகிவிடும் என்ற அடிப்படையில் பார்க்கிறார் காக்கா.
இதன் மூலம் கிழக்கில் இழந்த செல்வாக்கை மீளப்பெற முடியும் என்பது காக்காவின் பார்வை. அதுமட்டுமன்றி அந்த புனரமைப்பில் புலிகளின் மூத்த போராளிகளை உள்வாங்கி தமிழரசுக்கட்சியை தம்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வகுக்கப்பட்டுள்ள ஒரு வியூகமாகவே இந்த அறிக்கையை கொள்ள வேண்டியுள்ளது.
இதற்காகவே பொன்.செல்வராசாவிற்கு எதிராகவும் பா.சின்னத்துரையையும், யோகன் பாதரையும் சில பதவிகளுக்கு முன் மொழிவதாகவும் உள்ளது.
மாவை அண்ணன் கிழக்கின் ஜதார்த்தத்தை புரியாத கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கும் பூனை என்றால், சகோதரர் காக்காவின் “ஜதார்த்தம்” என்பது மட்டக்களப்பு மக்களின் மனநிலையை கருத்தில் கொள்ளாது, வெறுமனே புலி அரசியலை மீளக் கட்டும் முயற்சி.
ஒரு பிரதேசம் சார்ந்த மக்களின் உணர்வை அந்த மக்களைத்தவிர வேறு எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களாலும் உணரமுடியாது. இதற்கு மாவை மட்டும் அல்ல காக்காவும் விதிவிலக்கல்ல. இது உளவியலாளர்கள் நிறுவிய முடிவு. கிழக்கின் ஜதார்த்தம் என்பது மேலாதிக்க அரசியலுக்கு வலுச் சேர்க்கின்ற மட்டக்களப்பார் சிலரை போடுகாய்களாக நியமிப்பதல்ல. இது சிங்களப் பேரினவாதம் தமிழர்களைக் பார்த்து “உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது” என்று கேட்பதற்கு சமமானது.
சாணக்கியனின் தேர்தல் வெற்றி
இந்த விடயத்தில் புலிகளின் பங்களிப்பை அளவிடுவதற்கு
சாணக்கியன் – யோகன் பாதர் சந்திப்பு முக்கியம். “சந்தித்தார் வெற்றிபெற்றார்” என்று சர்வசாதாரணமாகக் கூறிவிட்டு கடந்து செல்கிறார் காக்கா.
வகுக்கப்பட்ட வியூகம் என்ன? யோகன்பாதருக்கு முன்னாள் போராளிகளுடனான தொடர்பை பயன்படுத்தி, இந்த காய்நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பட்டிருப்பு தொகுதியில் இது இலகுவான ஒன்று. ,
கரிகாலன், பிரான்ஸ்சிஸ், தயாமோகன், ரமேஷ், கௌசல்யன், டேவிட், ரவி, ரமணன் உட்பட பல முக்கிய தளபதிகளையும், பொறுப்பாளர்களையும் கொண்ட பூமி பட்டிருப்பு. இவர்களின் பின்னணியில் எழுவானிலும், படுவானிலும் நூற்றுக்கணக்கான புலிகளின் ஆதரவாளர்களும், மாவீரர் குடும்பங்களும், முன்னாள் போராளிகளும் உள்ள பிரதேசம். இங்கு யோகன் பாதர் மூலம் ஆரவாரமற்ற உள் நகர்வொன்று கச்சிதமாக இடம்பெற்றுள்ளது. இவர்கள் தமிழரசின் மற்றைய வேட்பாளர்களை விருப்பு வாக்கில் தவிர்த்து, புலிகளின் ஆதரவுடனும், ஆசீர்வாதத்துடனும் சாணக்கியனை முன்னணிக்கு கொண்டு வந்தனர்.
காக்காவின் வார்த்தையாடல்படி, தோற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பென்சனுக்குப்பின் அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் அடிபட்டுப்போனார்கள். ஜனா தப்பிப்பிழைத்தார். மாவட்டம் முழுக்க பரந்து கிடந்த ரெலோ போராளிகளால் அவரின் வெற்றி உறுதியானது.
தமிழரசில் தேர்தல் படுமோசமான உட்கட்சிப்பூசலும் வெட்டுக்குத்தும் நிறைந்ததாக இருந்திருப்பதை பஷீர்காக்காவின் இந்த அறிக்கை சொல்லாமல் சொல்லுகிறது. புலியின் வாலைப்பிடித்த கதையாக சாணக்கியன் கதை தொடரப்போகிறது.
கருணா,பிள்ளையான்,வியாழேந்திரனை எதிர்கொள்ளல்
சாணக்கியனை முதன்மைப்படுத்தியும், கருணா, பிள்ளையான், வியாழேந்திரனை தோற்கடிப்பதற்காக வியூகம் தேர்தலுக்கு முன் வகுக்கப்பட்டு, கட்டம் கட்டமாக நகர்த்தப்பட்டுள்ளது.
வியாழேந்திரனின் தோல்வியை எதிர்பார்த்த புலிகள், அம்பாறையில் கருணாவின் ஆதரவும், மட்டக்களப்பில் பிள்ளையானின் ஆதரவும் அதிகரித்தபோது சற்று ஆடித்தான்போனார்கள். கருணா மற்றும் பிள்ளையானின் கடந்தகால செயற்பாடுகள் தூசி தட்டப்பட்டு, தேடி எடுக்கப்பட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை ஊடகங்கள் மட்டுமன்றி, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்கள் ஊடாக மூச்சு முட்ட பிரச்சாரம் செய்யப்பட்டது. யாழ்ப்பாண, மட்டக்களப்பு புலம்பெயர்ந்த ஊடகர்கள் தங்கள் பாட்டிற்கு அரைத்தமாவை திருப்பி அரைத்தனர். என்ன செய்தும் பிள்ளையானின் வெற்றியை தடுக்க முடியவில்லை.
கருணாவின் வெற்றியை தடுத்து அம்பாறை வெறுமையானது.
பிராயச்சித்தம் இன்னும் பேசுபொருளாக உள்ள “தேசியப்பட்டியல்”.
கருணா பெற்ற வாக்குகள் புலிகள் எதிர்பார்க்காத ஒன்று.
பொன். செல்வராசாவால் கருணா, பிள்ளையானை எதிர்கொள்ள முடியாது என்பது மாவைக்கு தெரியாததல்ல என்கிறார் பஷீர் காக்கா.
ஆக, புலிகளின் ஆயுதம் சாணக்கியன். வேட்பாளர் நியமனம் தொடர்பாக பிரியாணி கதை ஒன்றை யோகேஸ்வரன் அவிழ்த்து விட்டார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
புலிகள் பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல என்பது பழைய கதை. பாராளுமன்ற கதிரை என்ற இலக்கை நோக்கி மெல்ல மெல்ல காய்கள் தமிழரசுக்கு சவாலாக நகர்த்தப்படுகின்றன என்பது புதுக்கவிதை. கேள்வி? தமிழரசை கைப்பற்றப்போவது போராளிகள் கட்சியா? அல்லது முன்னாள் போராளிகளா? என்பதுதான். பதில் காக்காவுக்கும் பாதருக்கும் தான் வெளிச்சம்.
இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒருவிடயம் யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தாவோ, அங்கயனோ இந்தளவு எதிர்ப்பிரச்சாரத்திற்கு முகம் கொடுக்க வேண்டி இருந்திருக்கவில்லை.
அங்கு புலிகளின் கவனம் வெளிப்படையாக சுமந்திரனைத் தோற்கடிப்பதிலும், மறைமுகமாக மாவையையும், திருகோணமலையில் சம்பந்தனையும் தோற்கடித்து இக்கட்டான சூழலில் கூட்டமைபு – தமிழரசுக்கட்சியை கைப்பற்றுவதுதான் இலக்கு.
ஆனால் பொதுவாக வாக்களிப்பு விகித அடிப்படையில் பார்த்தால், கிழக்கில் மக்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். புலிகள் தோற்றுப் போனார்கள். ஆனால் புலிகள் தூங்கவில்லை.
புலிகள் பதுங்குகின்றன!
இலக்கு பாராளுமன்ற கட்சி அரசியல்.
தமிழ்த்தேசியக் கட்சிகள் 24 கரட்டாக இருந்தாலும்…..
“காக்காவின் வார்த்தை” களில் இறுதிச்சடங்கு..,.!
என் வார்த்தைகளில் மெல்லத் தமிழரசு இனி…!!