போரில் வெற்றி பெற்றோரின் நீதி

போரில் வெற்றி பெற்றோரின் நீதி

— மூத்த செய்தியாளர் பி.கே. பாலச்சந்திரன் அவர்களின் கட்டுரை ஒன்றை தழுவி, தமிழில் எழுதியவர் சீவகன் பூபாலரட்ணம் — 

ஒரு போரில் வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்களை எப்படி நடத்தினார்கள் என்பது கலாச்சாரத்துக்கு கலாச்சாரம், நாட்டுக்கு நாட்டு, காலத்துக்குக் காலம் வேறுபட்டிருக்கின்றது. 

வன்முறை மோதல்கள் ஒன்றுக்கொன்று முரணான இரு பிரிவினரை தோற்றுவிக்கின்றன. அதில் ஒருதரப்பு “வென்றவர்கள்” அடுத்தது “தோற்றவர்கள்”. ஆனால், வென்றவர்கள் தோற்றவர்களை நடத்தும் முறை பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மாறுபடுகின்றது. கலாச்சாரம், நாட்டின் கொள்கை மற்றும் சித்தாந்தம், மோதல் நடந்த காலகட்டம், மோதலை வென்றவர்கள் அதனை உணரும் விதம் ஆகியவை அதில் தாக்கம் செலுத்துகின்றன. 

புராதன இலங்கையில்… 

1818 இல் ஊவா வெல்லச கிளர்ச்சியை அடக்கிய ஆங்கிலேயர், அதன் பிறகுதான் தம்மை இலங்கையில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர். அவர்கள் ஓரளவு ஸ்திரமற்ற நிலையிலேயே இருந்தனர். அதனால், ஊவாவின் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை அவர்கள் படுகொலை செய்தனர். அவர்களது கால்நடைகளை நிர்மூலம் செய்தனர். வீடுகளை எரித்து, நீர்ப்பாய்ச்சல் கால்வாய்களை சிதைத்தனர். படுமோசமான பழிவாங்கலில் ஈடுபட்டனர். “மிருகத்தனம்” என்பது போர் ஆயுதங்களின் ஒரு பகுதியாக அன்று இருந்திருக்கின்றது. அதுவும் குறிப்பாக சுதேசிகளுக்கு எதிரான போர்களில் அது அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.  

நான்காவது ஈழப்போருக்குப் பின்னர், விடுதலைப்புலிகள் அமைப்பின் இராணுவத் தளபதிகள், இராணுவ விடயங்களில் இருந்து தள்ளிவைக்கப்பட்டனர். ஆனால், தவறான வழி நடத்தலாலோ அல்லது ஈர்க்கப்பட்டோ இயக்கத்தில் சேர்ந்த, பெரிய குற்றங்களை செய்யாத உறுப்பினர்கள் இருவருடம் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் கடும்போக்கு குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இராணுவ தளபதியாக இருந்த கருணா அம்மான் நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டு அமைச்சரானார். ஒரு முன்னாள் போராளியான பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். 

எப்படியிருந்தபோதிலும், புனர்வாழ்வழிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் அமைதியான வாழ்க்கைக்கு திரும்ப, தமிழ் அரசியல் வர்க்கத்தினர் “போர்க்குற்ற” விவகாரத்தை கையிலெடுத்து, புலம்பெயர் தமிழர் ஆதரவுடன், ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அதனை முன்னெடுத்தனர்.  அதேவேளை, மேற்கத்தைய அரசாங்கங்கள், தேசியவாத ராஜபக்‌ஷ அரசாங்கத்தை தூக்கியெறிய ஆர்வம் காட்டினர்.  

போரின் பயங்கரங்கள் குறித்த ஒரு பக்க தகவல்களும் மற்றும் மரணங்கள் பற்றிய பெரிதுபடுத்தப்பட்ட தகவல்களும் ஒரு நல்லிணக்கத்துக்கான பொறிமுறையின் அவசியத்தை வலியுறுத்தின. இது தமிழ் மக்களுடனான நல்லிணக்கம் பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கடுமையாக்கியது. 

அதேவேளை, தமிழ் மக்கள் மத்தியில் பழைய கிளர்ச்சி உணர்வு தொடரும் பட்சத்திலேயே தாம் மீண்டும் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாக முடியும் என்று நம்பிய சில தமிழ் அரசியல்வாதிகள், அதனை மீளத்தூண்டுவதற்காக விடுதலைப்புலிகளின் நாட்காட்டிகளில் இருந்த நிகழ்வுகளை அனுட்டிக்கத் தொடங்கினர். அதனால், தமிழ் மக்களுக்கு நன்மை உண்டா, இல்லையா என்பதுபற்றி அவர்கள் கவலைப்படவில்லை.  

போரினால், குலைந்துபோன வடக்கு கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் ஆர்வம் காட்டியபோதிலும், தமிழ் தீவிரவாத – பிரிவினைவாத உணர்வுகளோ அல்லது இயக்கங்களோ அங்கு மீள எழுந்துவிடக் கூடாது என்பதில் அது விடாப்பிடியாக இருந்தது. விடுதலைப்புலிகளின் பல மயானங்களையும் தமிழ் கிளர்ச்சியின் ஏனைய அடையாளங்களையும் இடித்து தரைமட்டமாக்கிய அது, மாவீரர் தினம், திலீபனின் நினைவுநாள் போன்ற   விடுதலைப்புலிகளின் நாட்காட்டியில் இருந்த மரணங்களை, நிகழ்வுகளை பொது நிகழ்வாக அனுட்டிப்பதை தடை செய்தது. 

சர்வதேச பயங்கரவாதம் குறித்த ஒரு நிபுணரும், சேர் ஜோண் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தற்போதைய கௌரவ பேராசிரியருமான டாக்டர் றொஹான் குணரட்ண இது குறித்து கருத்துக் கூறுகையில், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஜேர்மனி நாசிகளின் சின்னங்களையும் செயற்பாடுகளையும் தடை செய்ததுபோல விடுதலைப்புலிகளின் பிரச்சாரத்தை என்றென்றும் தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் ஒரு பகுதியின் கவலையீனம் குறித்து எச்சரித்த அவர், ஆப்கானிஸ்தானிலும் இரானிலும் அமெரிக்கா வெற்றியை பிரகடனம் செய்த பின்னரும், அங்கு பயங்கரவாதிகளுக்கான உட்கட்டமைப்பு ஆதரவு தகராமல் அப்படியே இருந்த காரணத்தால், அங்கு பயங்கரவாதம் மீள எழுந்தது என்று கூறுகிறார்.  

ஜனநாயகங்களில் சகிப்புத்தன்மை வன்செயல்களை மீள உருவாக்கிவிடும். ஒரு ஜனநாயக நாடு பயங்கரவாதத்தின் அம்சங்களை காட்சிப்படுத்துவதை அனுமதித்தால், அதன் பரப்புரை பிரச்சாரங்களை அனுமதித்தால், அதன் அடுத்தபடியாக போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் வன்செயலாகவே மாறும். இஸ்லாமிய அரசு மற்றும் அல்கைதா போல விடுதலைப்புலிகளும் மரணத்தை கொண்டாடுபவர்கள். மரணத்தை அனுட்டிப்பதும் கொண்டாடுவதும் அனுமதிக்கப்பட்டால், அது கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும். 

அரசாங்கத்தின் கவலையீனம் காரணமாக இறுக்கத்துக்கு மாறாக ஒரு தளர்வு நிலை காணப்பட்டால், அதிலிருக்கும் இடைவெளியையும் ஓட்டைகளையும் பயன்படுத்தி பயங்கரவாதக் குழுக்கள் மீண்டும் முளைத்துவிடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எதிர்கால வன்செயல்களை தடுக்க, பயங்கரவாதத்தை கொண்டாடும் தனி நபர்களும் குழுக்களும் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். 

புலிகளும் ஜேவிபியும்.. 

மரணங்களை அனுட்டித்தலில் இன ரீதியான பாகுபாடு காண்பிக்கப்படுவதாக தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வாதிடுகிறார். 1970 மற்றும் 1980களில் சிங்கள தீவிரவாத இயக்கமாக இருந்த ஜேவிபி, அதன் மரணித்த உறுப்பினர்களை நினைவுகூர அனுமதிக்கப்படும் அதேவேளையில், விடுதலைப்புலிகளின் மாவீரர்களை நினைவுகூர தமிழர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.  

ஆனால், இலங்கை நிலைமைகளை மிக நெருக்கமாக அவதானிக்கும் ஒருவர், இரண்டுக்கும் வேறுபாடு இருப்பதாக குறிப்பிடுகிறார். ஜேவிபி நாட்டைப் பிரிக்கக் கோரவில்லை என்றும், அது அரசின் கொள்கையை சித்தாந்தத்தை மாற்றவே கோரியது என்றும், ஆனால், விடுதலைப்புலிகள் நாட்டை இரண்டாகப் பிரித்து, இரண்டு சுதந்திர நாடுகளை உருவாக்க கோரினர் என்றும் அவர் கூறுகிறார். ஜேவிபி ஒரு புரட்சிகர அமைப்பாயினும் அது தேசியத்துக்கு எதிரானது அல்ல என்றும் ஆனால், விடுதலைப்புலிகள் தேசியத்துக்கு எதிரானவர்கள் என்றும் அவர்களுக்கு எந்த இடமும் வழங்கப்படக் கூடாது என்றும் அந்த ஆய்வாளர் கூறுகிறார். 

ஜேவிபியும் விடுதலைப்புலிகளும் கொடூர பலம் கொண்டு அடக்கப்பட்ட அமைப்புக்கள். ஆனால், ஜேவிபியின் உறுப்பினர்கள் தமது இறந்த சகாக்களை நினைவுகூர அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், இந்த இரு இயக்கங்களின் கொள்கைகளில் பெரும் வேறுபாடு இருப்பதாக கருதும் அரசாங்கம் விடுதலைப்புலிகளுக்கு நினைவுகூரல்களுக்கு அனுமதிக்க மறுக்கிறது. விடுதலைப்புலிகளின் பிரிவினைவாதச் சித்தாந்தம் இருப்புக்கான ஒரு அச்சுறுத்தலாக பார்க்கப்படும் அதேவேளை, ஜேவிபியின் மார்க்ஸிஸ சித்தாந்தம் ஒரு உண்மையான அச்சுறுத்தலாக இனி இல்லை. அதனால், ஜேவிபி விடயத்தில் சகிப்புத்தன்மை காண்பிக்கப்படுகின்றது. 

ஏனைய நாடுகளில் தோற்றவர்கள் நடத்தப்பட்ட விதம்: 

அமெரிக்க சுதந்திரப் போரில் பிரிட்டன் 1781இல் தோற்றபோது, எல்லோரும் அதனைக் கொண்டாடினார்கள் என்று சொல்ல முடியாது. சுமார் 20 வீதமான மக்கள் பிரிட்டிஷ் முடி அரசுக்கு விசுவாசமாகவே இருந்தார்கள், அவர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டார்கள். பிரிட்டன் அங்கிருந்து வெளியேறிய போது, ஆயிரக்கணக்கான அவர்களது ஆதரவாளர்கள், பிரிட்டனுக்கும், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் ஏனைய பகுதிகளுக்கும் மற்றும் கனடாவுக்கும் இடம்பெயர்ந்தனர். அமெரிக்க சரித்திரத்தின் இந்த அழுக்கான, சங்கடத்துக்குரிய பகுதி வரலாற்றுப் புத்தகங்களில் பெரிதாக பதியப்படவில்லை.  

எப்படியிருந்த போதிலும் அமெரிக்காவில் 1860களின் முன்பகுதியில் உள்நாட்டுப் போர் ஆரம்பமான காலகட்டத்தில் கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஐக்கிய அமெரிக்காவில் இருந்து சுதந்திரம் கேட்ட பிராந்தியங்களைச் சேர்ந்த கொண்பிடரேட்ஸ் (அமெரிக்காவின் தென்பகுதி மாநிலங்களை பிரித்து தருமாறு கோரியோர்), அடிமைகள் விடயத்தில் தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் “அடிமைகொள்வதை” ஆதரித்தவர்கள். அதனால் அவர்கள் தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட்டதுடன், சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் தேசத்துரோகத்துக்காக தண்டிக்கப்படவும் முடியும். இருந்தாலும், அங்கு தேசத்துரோகம் என்பது துண்டுப்பிரசுரங்களிலும் செய்திப்பத்திரிகைகளிலும் பொதுக்கூட்டங்களிலும் பேசப்படும் ஒரு விடயமாக மாத்திரமே இருந்தது. ஆக, மக்கள் சட்டத்தை தமது கைகளில் எடுத்துக்கொண்டனர். அரசாங்க இயந்திரத்தின் போதாமை, “சட்டமற்ற சூழல்” நிலவ உதவியது. ஒரு ஆய்வு சொல்வதன்படி பார்த்தால், அங்கு மத்திய அரசா, மாநில அரசா அல்லது உள்ளூராட்சியா, யார் கைதுகளை செய்வது என்று தெரியாத தெளிவற்ற நிலைமை காணப்பட்டது. எப்படியான நடவடிக்கைகள் தேசத்துரோகமாகும் என்பதை யார் நிர்ணயிப்பது என்பதும் தெரியவில்லை. அரச ஆதரவு விழிப்புணர்வுக்குழுக்களை(கொஞ்சம் காடையர் என்றும் கொள்ளலாம்?) பொறுத்தவரை, அவர்களுக்கு அதிபர் ஆப்ரஹாம் லிங்கொனை விமர்சிப்பதும் தேசத்துரோகமாகப் பட்டது. 1863இல் சில முக்கிய கொண்பிடரேட்ஸ் தளபதிகளை(முக்கிய புள்ளிகளான றொபர்ட் ஈ லி, ஜோசப் ஈ. ஜோண்ஸ்டன் ஆகியோரும் இதில் அடக்கம்) சிறைபோக வேண்டியவர்கள் என்று ஆப்ரஹாம் லிங்கொனே அடையாளம் கண்டார். 

ஆனால், இறுதியில் மென்போக்கு வந்தது. அனைத்து படிநிலைகளைச் சேர்ந்த கொண்பிடரேட்ஸ் படையினரும் பரோலில் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராக முறையான தேசத்துரோகக் குற்றச்சாட்டு எதுவும் போடப்படவில்லை. தேசத்துரோகத்துக்காக எவருக்கும் மரண தண்டனை வழங்கப்படவில்லை. கொண்பிடரேட்ஸ் தலைவரான ஜெபர்சன் டேவிஸ் மீது சட்ட நடவடிக்கையே எடுக்கப்படவில்லை. தொடர்ச்சியாக தேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தி, ஒப்பாரி வைத்து வருவது, மிக முக்கிய இலக்குகளான தேசத்தின் நிர்மாணம் மற்றும் சமூக நீதியை கொண்டு வருதல் போன்றவற்றுக்கு இடையூறாக அமையும் என்று வடபகுதி தலைவர்கள் நம்பத்தொடங்கினர். 

இந்திய விடயங்கள்: 

இந்தியாவில் நடந்த போர்களைப் பொறுத்தவரை, 19ஆம் நூற்றாண்டுவரை, சண்டைகளில் வெற்றிபெற்றால் அதன் தொடர்ச்சியாக படுகொலைகளும் சூறையாடல்களும் நடந்துதான் வந்திருக்கின்றன. வெளிநாட்டு முஸ்லிம் ஆக்கிரமிப்பாளரான நதிர் ஷா 1739இல் டில்லியை சீரழித்துள்ளார். 1748க்கும் 1761க்கும் இடையில் அஹ்மட் ஷா அப்தலலி டில்லியையும் பஞ்சாப்பையும் பல தடவைகள் சூறையாடி, பல்லாயிரக்கனக்கானோரை படுகொலை செய்திருக்கிறார்.  

1858இல் இந்திய பெரும் கலகத்தை அடக்கிய பிரிட்டிஷ்காரர்கள் இருபதினாயிரம் கிளர்ச்சிக்காரர்களையும் பொதுமக்களையும் கொன்றனர். பலர் பகிரங்கமாக தூக்கிலிடப்பட்டனர். அதனிலும் மோசமாக பலர் பீரங்கிகளில் கட்டி, பகிரங்கமாக  சுடப்பட்டனர். சில மொகாலய இளவரசர்கள் தெருக்களில் சுடப்பட்டனர். கடைசி மொகாலய மன்னரான “பஹதூர் ஷா ஷஃபர்” இன் உடல், ரங்கூனில் அடையாளம் தெரியாத ஒரு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. யாராவது அங்கு நினைவாலயத்தை அமைத்துவிடக்கூடாது என்பது அதன் நோக்கம். அதிகாரபூர்வ தரவு குறைவாக சொல்கிறது — 3306 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர், அதில் 2025 பேர் குற்றங்காணப்பட்டனர், 392 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது, 57 பேருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 

ஆனால், இந்தியர்கள் மீது கொஞ்சம் மென்போக்கு கொண்ட விக்டோரியா மகாராணி, இந்தப் படுகொலைகளை அங்கீகரிக்கவில்லை. கொடூர துஸ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்ட கிழக்கு இந்திய கம்பனியிடம் இருந்து இந்தியாவின் நிர்வாகத்தை அவர் 1858இல் பறித்துக்கொண்டார். இந்தியாவுக்கான ஆளுனராக விஸ்கொண்ட் சார்ள்ஸ் ஜோண் கன்னிங்கை நியமித்தார். அவரது மனிதநேய அணுகுமுறை வரவேற்பைப் பெற்றது. விக்டோரியாவின் அணுகுமுறை, தோற்றவர்களுடன் ஓரளவு நல்லிணக்கத்துக்கு வழி செய்தது. 

நுரெம்பேர்க் மற்றும் டோக்கியோ விசாரணைகள்  

தனது “World Beyond War”  என்ற நூலில், இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் நூரெம்பேர்க் மற்றும் டோக்கியோவில் நாசிக்களுக்கும் ஜப்பானிய தலைவர்களுக்கும் எதிராக நடந்த விசாரணைகள், ‘போரில் தோற்றவர்களை, போர்க்குற்றங்களுக்காக தண்டிப்பதற்கான விசாரணைகள் மாத்திரமே’ என்று கூறியுள்ளார் எலியட் அடம்ஸ். அதன் ஆரம்பக்கட்டம் இன்னும் பயங்கரமானது. ஐம்பதினாயிரம் முக்கிய நாசித்தலைவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என்று சோவியத் தலைவர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். கிழக்கு முன்னரங்கில் ரஷ்யர்கள் அனுபவித்த வண்டன் கொலைகளை தெரிந்தவர்களுக்கு அவை சட்டபூர்வமானவை என்று கூறப்பட்டது ஏன் என்பது இலகுவாக புரிந்திருக்கும். பிரிட்டனின் வின்ஸ்டன் சர்ச்சிலோ, தன் தரப்புக்கு, ஐயாயிரம் பேரை தூக்கிலிடுங்கள் என்று பரிந்துரைத்தார். 

இருந்தபோதிலும் ஒட்டுமொத்த தூக்கிலிடல் போரின் பாசிச எதிர்ப்பு கொள்கைகளுக்கு பொருத்தமில்லாதது என்று முடிவு செய்யப்பட்டது. ஜேர்மனி மீதான தரைமட்டமாக்கும் குண்டுத்தாக்குதல்கள் மற்றும் எண்ணிக்கையற்ற பொதுமக்கள் பலியாகக் காரணமான ஜப்பான் மீதான இரு அணுக்குண்டுத் தாக்குதல்கள் ஆகியவற்றுடன் போர் முடிவுக்கு வந்திருந்தாலும், தோற்றவர்களை பழிவாங்கும் நோக்கம் இருக்கவில்லை. நூரெம்பேர்க்கில் 19 பேரும் டோக்கியோவில் 25 பேரும் தண்டிக்கப்பட்டனர். தண்டனைகள் சில வருட சிறை முதல் மரண தண்டனை வரை வேறுபட்டது.