— ஸ்பார்ட்டகஸ் —
இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு பெரும் எண்ணிக்கையில் புலம்பெயர்வது ஒன்றும் புதுமையான விடயம் அல்ல.1983 கறுப்பு ஜூலையைத் தொடர்ந்து உள்நாட்டுப்போர் காலப்பகுதியில் தமிழர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு குறிப்பாக மேற்கு ஐரோப்பாவிற்கும் அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பெரும்பாலும் அகதிகளாகச் சென்று தஞ்சமடைந்தார்கள்.
மேற்குலக நகரங்களில் நவீன யூதர்கள் போன்று 15 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கை தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட தமிழர்களின் புலம்பெயர்வு பெரிதாக தணியவில்லை. தொடர்ந்து அவர்கள் வெளியேறிக் கொண்டேயிருக்கிறார்கள். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி எஞ்சியிருக்கக்கூடிய தமிழர்கள் மத்தியிலும் உள்நாட்டு வாழ்வில் நம்பிக்கையை வைக்க முடியாத துரதிர்ஷ்டவசமான நிலைவரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆய்வொன்றை நடத்தினால் பெரும்பாலான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் நாட்டம் கொண்டவர்களாகவே இருப்பதை தெரிந்துகொள்ளமுடியும். பெரும்பாலான பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு வெளிநாடுகளில் திருமணம் செய்துவைப்பதில் நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால், தற்போது தென்னிலங்கையில் ஏனைய சமூகத்தவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் காட்டுகின்ற அதீத நாட்டம் முற்றுமுழுதாக பொருளாதார நெருக்கடியின் விளைவானது. ஏற்கெனவே சில தசாப்தங்களாக தென்னிலங்கை மக்கள் வெளிநாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு, கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்களை தேடி ஆயிரக்கணக்கில் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அனுப்புகின்ற பணம் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்புக்கு பெரும் பங்களிப்பை செய்துவந்தது.
இவ்வருட ஆரம்பத்தில் இருந்து தீவிரமடையத் தொடங்கிய பொருளாதார நெருக்கடி வௌநாடுகளில் வேலை வாய்ப்புக்களை பெற்றுச் செல்லாவிட்டால் வாழ்க்கை சூன்னயமாகிவிடும் என்ற பீதியை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டது. கடந்த சில மாதங்களாக இவர்களின் வெளியேற்றம் கடுமையாக தீவிரமடைந்திருப்பதை காணக்கூடியதாக ருக்கிறது.
தற்போது மணித்தியாலத்துக்கு 32 இலங்கையர்கள் நாட்டில் இருந்து வெளியேறிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இவ் வருடத்தின் முதல் 6 மாதங்களில் 113,140 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்; கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 30,797 இலங்கையர்களே வெளியேறினார்கள் என்று உத்தியோகபூர்வ தகவல்கள் கூறுகின்றன.
வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள், பொருளாதார நெருக்கடிக்கு தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் வெளிநாடுகளில் வாழும் உறவினர்களுடன் இணைவதற்கு செல்பவர்கள், உகந்த கல்வியை உள்நாட்டில் தொடருவது சிரமம் என்றும் நம்பும் மாணவர்கள் என்று வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் பல பிரிவினர் இருக்கிறார்கள்.
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையை எழுதிமுடித்த பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் தங்கள் உயர்கல்வியை தொடருவதற்காக வெளிநாடுகளுக்கு செல்லும் போக்கும் தீவிரமடைந்திருக்கிறது. முதலில் கொவிட் –19 பெருந்தொற்று நோய் பிறகு எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் பாடசாலைக் கல்வி முறைமை நீண்ட காலமாக சீர்குலைந்து போயிருக்கிறது. தங்களது கல்வியை பூர்த்திசெய்வதற்கு வெளிநாடுகளுக்கு செல்வதைத் தவிர பெருமளவு மாணவர்களுக்கு வேறு மார்க்கம் இல்லையென்றாகிவிட்டது. முக்கியமான பரீட்சைகள் அடிக்கடி ஒத்திவைக்கப்படுகின்றன. ஆனால் நாட்டை பெரிதும் பாதித்திருக்கும் டொலர் நெருக்கடி காரணமாக இலங்கை மாணவர்களை உள்வாங்குவதில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் அக்கறை காட்டுவதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை, அரசாங்கமும் வெளிநாட்டு வேலைக்கு இலங்கையர்கள் செல்வதை மும்முரமாக ஊக்குவிக்கிறது. வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லவிரும்பும் அரசாங்க ஊழியர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்தது. ஐந்து வருடங்கள் கழித்து அவர்கள் திரும்பிவந்து மீண்டும் அரச சேவையில் இணையும்போது வருடாந்த சம்பள உயர்வோ அல்லது பதவியுயர்வு வாய்ப்புக்களோ பாதிக்கப்படமாட்டாது என்றும் அரசாங்கத்தினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அவ்வாறு வெளிநாட்டு வேலைக்கு செல்லும் அரச ஊழியர்கள் இலங்கையில் வங்கிக்கணக்கொன்றை வைத்திருக்கவேண்டும் என்பதுடன் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை நாட்டுக்கு அனுப்பவேண்டும் என்ற நிமந்தனையுடனேயே இந்த வசதி வழங்கப்படுகிறது.
அண்மைய மாதங்களாக எரிபொருட்களைப் பெறுவதற்காக நீண்ட வரிசைகளில் மக்கள் இரவு பகலாக காத்துக்கிடந்தார்கள். அதே போன்றே வெளிநாடு செல்வதற்கு கடவுச்சீட்டுக்களை பெறுவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கொழும்பு தலைமையகத்திலும் பிராந்திய அலுவலகங்களிலும் முன்பாக மக்கள் தொடர்ந்தும் நீண்ட வரிசைகளில் காத்துநிற்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இலங்கையர்கள் வெளிநாட்டுக்கு படையெடுக்கும் இந்த போக்கிற்கு ஒரு ஆபத்தான பக்கமும் இருக்கிறது. அது நீண்ட கால நோக்கில் இலங்கைக்கு பாரிய பாதி்பைக் கொண்டுவரக்கூடியதாகும்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி அண்மைய எதிர்காலத்தில் ஓரளவேனும் தணிவதற்கான அறிகுறிகள் இல்லாத நிலையில் மூளைசாலிகளும் வெளிநாடுகளில் சிறப்பான வாய்ப்புக்களை தேடி சென்றுகொண்டிருக்கிறார்கள். இந்த மூளைசாலிகள் வெளியேற்றம் குறித்து ஏற்கெனவே கவலை வெளிப்படுத்தப்பட்டபோதிலும் அண்மைய மாதங்களாக இவர்களின் வெளியேற்றத்தில் காணப்படும் தீவிரம் அச்சம் தருவதாக இருக்கிறது. பொருளாதார நிலைவரத்தில் சாத்தியமானளவு விரைவில் மேம்பாட்டை ஏற்படுத்த முடியும் என்ற உத்தரவாதத்தை அளிக்கமுடியாத அரசாங்கமும் மூளைசாலிகள் வெளியேற்றத்தை தடுக்க எதையும் செய்யமுடியாததாக நிற்கிறது.
தகவல் தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் விஞ்ஞானம் போன்ற துறைகளில் நிபுணத்துவம் கொண்ட துறைசார் நிபுணர்கள் வெளிநாடுகளில் சிறப்பான வாய்ப்புக்களைத் தேடி பெரும் எண்ணிக்கையில் சென்றுகொண்டிருக்கிறார்கள். சில மாத காலத்திற்குள் 500 க்கும் அதிகமான மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் கணிசமான எண்ணிக்கையானவர்கள் அரசாங்கத்தின் அனுமதியை பெறாமலேயே வெளியேறியிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இந்த மூளைசாலிகள் வெளியேற்றம் குறித்து நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையான விபரங்களை அரசாங்கம் தெரியப்படுத்தாமல் இருப்பது கவலை தருகிறது.
மருத்துவத்துறையில் நிபுணத்துவமும் அனுபவமும் கொண்டவர்கள் வெளியேறுவதில் உள்ள முக்கியமான பிரச்சினை என்னவென்றால், வைத்திய நிபுணர்களின் வெளியேற்றத்தினால் ஏற்படக்கூடிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக பொருத்தமானவர்களை தெரிவுசெய்வதில் உள்ள இடர்பாடாகும். தாதிமாரில் கூட கணிசமான எண்ணிக்கையானவர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்வதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அரசாங்க நிறுவனங்களும் தனியார் தொழில்துறை நிறுவனங்களும் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. வெளிநாட்டு வேலைவாய்ப்பே ஒரே சர்வரோக நிவாரணி என்ற தோரணையில் அரசாங்கம் ஊக்கப்படுத்துவதால் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நாளடைவில் கொண்டுவரப்போகின்ற பிரச்சினைகள் குறித்து போதிய கவனத்தை தொழிற்சங்கங்கள் கூட செலுத்தாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் தேர்ச்சிபெற்ற ஊழியர்கள் பெருமளவில் இல்லாத ஒரு நிலை தோன்றும் ஆபத்து இருக்கிறது.
துறைசார் நிபுணத்துவப் பணிகளுக்கு அவசியமான நவீன கைத்தொலைபேசிகள், மடிக்கணனி மற்றும் அவற்றுக்கு தேவையான உபகரணங்களின் இறக்குமதி மீது அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட தடை கூட தறைசார் நிபுணர்கள் மத்தியில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் இலங்கையில் தங்களால் தொடர்ந்தும் பயனுறுதியுடைய முறையில் செயற்படுவது சாத்தியமில்லை என்று அவர்கள் நம்புவதாகவும் அதுவும் கூட அவர்களின் வெளியேற்ற நாட்டத்தை ஊக்குவிக்கிறது என்று கடந்தவாரம் கொழும்பு ஆங்கில தினசரியொன்று அதன் ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது.