மட்டக்களப்பு மாந்தீவுக்கோர் பாலம் அமைப்போம்..! (மௌன உடைவுகள் -04) 

மட்டக்களப்பு மாந்தீவுக்கோர் பாலம் அமைப்போம்..! (மௌன உடைவுகள் -04) 

                   — அழகு குணசீலன் — 

மட்டுமாநகரில் வாவிமகள் ஆரத்தழுவியுள்ள மூன்று தீவுகள் இருக்கின்றன. புளியந்தீவு, எருமைத்தீவு, மாந்தீவு. இலங்கையின் அல்லது மட்டக்களப்பு தமிழகத்தின் கவன ஈர்ப்பை ஒருகாலத்தில் அதிகளவு பெற்றிருந்தது மாந்தீவு. இப்போது கவனிப்பாரற்று தனித்துக் கிடக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. மாற்றார் சொன்னால் உண்மையும் கசக்கிறது, நம்மவர் சொன்னால் பொய்யும் இனிக்கிறது. 

இதுதான் இன்றைய சமூக நிலை.  

மாந்தீவின் உண்மையான நிலையை – தனிமையை உலகிற்கு வெளிக் கொணர்ந்து இருக்கிறார்கள் இரு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள். சுவிட்சர்லாந்தின் பிரபல ஊடகமொன்றின் புதுடெல்லியில் உள்ள தென்கிழக்காசிய ஊடகவியலாளர்களே இந்த “ரிப்போர்ட்டை” இன்றைய மாந்தீவின் படங்களுடன் எழுதியுள்ளனர். ஆன்றியாஸ் பாப்ஸ்ற் மற்றும் ரேபேக்கா கன்வே ஆகியோரே அவர்கள். 

அவர்கள் ஜேர்மன் மொழியில் வெளியிட்டுள்ள பயணக்கட்டுரை வடிவிலான அந்த ரிப்போர்ட்டின் தகவல்களையும், தரவுகளையும் கொண்ட தழுவல்   பதிவு இது. அரங்கம் வாசகர்களுக்காக இவ்வார மௌன உடைவாக இடம்பெறுகிறது. 

இருண்ட நீரையும், கறுப்பு பறவைகளையும் கொண்ட உலகின் தனித்த தீவு, இலங்கையின் கிழக்கு கரையில் மட்டக்களப்பு வாவியில் கிடக்கிறது. காடு வௌவால்களின் குடியேற்றம், நீர்ப்பரப்பு முதலைகள் புகலிடம் என்று தொடங்குகிறது அந்த ரிப்போர்ட். 

 மாந்தீவின் நூற்றாண்டை மறந்த மட்டக்களப்பு ..! 

1921 இல் பிரித்தானிய காலனித்துவ காலத்தில் மாந்தீவு (LEPRA/LEPROSY) தொழு நோயாளர்களுக்கான புகலிடத்தீவாக உருவாக்கப்பட்டது. கடந்த வருடம் 2021இல் தனது நூற்றாண்டை அது தனித்தும், மௌனித்துமே கழித்திருக்கிறது. வௌவால்கள் மட்டுமே அன்றைய இரவைக் கொண்டாடியிருக்கும். எல்லா இரவுகளையும் போன்றே நூற்றாண்டு இரவும் சேனா, பொன்னையா, உதவியாளருக்கு விடிந்திருக்கிறது. 

இது கொண்டாடப்படுவதற்கான நூற்றாண்டு அல்ல. மாறாக நினைவுகூர வேண்டியதும், மட்டக்களப்பின் வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட வேண்டியதுமாகும். குறிப்பாக அன்றைய மிஷனரிகள் மட்டக்களப்புக்கு ஆற்றிய கல்விச்சேவையை மட்டும் கொண்டாடும் நாம், மற்றைய சமூகசேவைகளை மறந்துவிடுகிறோம் . 

அந்த வகையில் மாந்தீவின் நூற்றாண்டும் மறக்கப்பட்டு விட்டது. 

குஷ்டரோகம்/ தொழுநோய் என்ற அந்த நோயின் தாக்கம், அது ஒரு தொற்றுநோய் என்ற அச்சம் என்பன காரணமாக நோயாளிகள் புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட நிலையில் கிறிஸ்தவ மிஷனரியினால் இந்த வாழ்விடம் உருவாக்கப்பட்டது. இங்கு வரும் நோயாளிகள் இறக்கும் வரை இங்கு வாழ்ந்து மடிவர். ஆரம்பத்தில் 150 நோயாளிகள் இருந்த தீவில் இன்று இரண்டே இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருவர் சேனா, மற்றவர் பொன்னையா. 1960 ல் அரசாங்கம் இந்த பராமரிப்பு வைத்தியசாலையை பொறுப்பேற்கும் வரை கன்னியாஸ்திரிகளே நோயாளர்களைப் பராமரித்துள்ளனர் என்று கூறுகிறது ரிப்போர்ட்.  

மாந்தீவில் தற்போது நோயாளர் பராமரிப்பில் உள்ள உதவி தாதிகளின், மற்றும் நோயாளிகள் இருவரினதும், ஒரு கன்னியாஸ்திரியினதும், வரையறுக்கப்பட்ட தகவல்களை மட்டுமே கொண்டும், வரையறுக்கப்பட்ட  சமகால வைத்தியத்துறை அதிகாரிகள் ஆகியோரின் தகவல்களையும், தரவுகளையும் கொண்டதாகவே அந்த ரிப்போர்ட் அமைகிறது. மட்டக்களப்பின் ஒரு பெண் வைத்திய உயர் அதிகாரி தகவல்களை வழங்க மறுத்ததாகவும் ரிப்போர்ட் கூறுகிறது. அவருக்கு தகவல்கள் தெரியாததால் இது நடந்ததா? அல்லது தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்று அவர் கருதியதால் நடந்ததா என்பது சம்பந்தப்பட்டவருக்குத்தான் வெளிச்சம். 

இலங்கையின் 1901ம் ஆண்டுச் சட்டம் இந்த நோயாளர்களை கட்டாயமாக தடுத்து வைப்பதை சட்டரீதியாக்குகிறது. ஐ.நா. அறிக்கையின்படி உலகில் இவ்வாறான நூறு சட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடைமுறையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜமேக்கா, தாய்லாந்து, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளை உதாரணம் காட்டுகிறது ரிப்போர்ட். அத்துடன் மாந்தீவு போன்ற குஷ்டரோக நோயாளர் குடியேற்றங்கள்  உலகில் இன்னும் ஆயிரம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1995 இல் இந்த நோயை வெற்றி கொண்டதாக இலங்கை அறிவித்துள்ள போதும் வருடாந்தம் ஆயிரம் பேருக்கு நோய்ப் பரவல் ஏற்படுவதாக அறிக்கை கூறுகிறது. 

நீண்டகாலமாக டாக்டர்கள் இந்த நோய் இலகுவாகவும், விரைவாகவும் தொற்றக்கூடியது என்று நினைத்தார்கள். இதனால் கிராமத்தில் ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் இடம்பெற்றது. எகிப்து, இந்தியா, ஹவாய் போன்ற நாடுகளில் மதில்கள் கட்டப்பட்டு அந்த குறிப்பிட்ட பகுதியில் நோயாளிகள் அடைக்கப்பட்டார்கள். இன்று பொருத்தமான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், இலங்கையில் இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளபோதும் மாந்தீவு மட்டும் இன்னும் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சேனா மல்லியும்பொன் ஐயாவும் …! 

தனக்கு தாய், தந்தையோ, உறவினர்களோ இல்லை என்று கூறும் சேனா, தான் 13 வயதில் புகையிரதத்தில் மட்டக்களப்பு வந்தது நினைவில் இருப்பதாக கூறுகிறார். தான் ஒரு கிறிஸ்த்தவர் என்பதும் யாரோ ஒருவர் சொல்லித்தான் தனக்கு தெரியவந்ததாம். நாற்பது வருடங்களாக மாந்தீவில் இருப்பதாகக் கூறுகிறார் அவர். ஆனால் அதை மறுதலிக்கும் வகையில் உதவித்தாதி ஒருவர் குறைந்தது அறுபது ஆண்டுகளாவது இருக்கும் என்று கூறியுள்ளார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் அவரால் நிதானமாகப்  பேச முடியாது என்றும் அவர் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

சேனா இளவயதில் வந்ததால் எல்லோரும் அவரை “மல்லி” என்று அழைத்துள்ளனர், அது இன்னும் தொடர்கிறது. தென்னிலங்கையில் ஹக்மன பகுதியைச் சேர்ந்தவர் சேனா. இவர் பள்ளிக்கூடப் பக்கமே போனதில்லை. அவரது கட்டிலருகில் ஒரு மணிக்கூண்டு உள்ளது. அதில் நேரம் பார்ப்பது எப்படி என்று இப்போது கற்றுக்கொண்டிருக்கிறார். 

பொன்னையாவை “ஐயா” என்று அழைக்கிறார் சேனா. இவர் திருகோணமலையில் உள்ள இந்துக்கோயில் ஒன்றில் இருந்தே மாந்தீவு வந்துள்ளார். இவரை கோயில் ஐயர் தத்தெடுத்திருந்ததாகவும், ஒரு நாள் தனக்கு தலைமுடி வெட்டியவர் தனது தோலில் மாற்றம் ஏற்படுவதைக் கண்டதாகவும், தற்போது உடல்முழுக்க பரவிவிட்டதாகவும் கூறுகிறார் பொன்னையா. உடல் முழுக்க பச்சை குத்தியது போன்று உள்ளது என்று ரிப்போர்ட் கூறுகிறது. 2014 இல் தன்னைக் கவனிக்க எவரும் இல்லாததால் பொன்னையா மாந்தீவை வந்தடைந்தார்.  

பொன்னையாவின் ஒருகால் அகற்றப்பட்டுள்ளது. அவருக்கு செயற்கைக்கால் வழங்கப்பட்டுள்ளபோதும் அது தூசு படிந்து ஒரு மூலையில் கிடக்கிறது. டாக்டர்கள் திட்டியான சமதரையில் நடக்கவே செயற்கைக் காலை பயன்படுத்தும் படி கூறியிருப்பதால் மணல் தரையையும், காடுகளையும் கொண்டுள்ள மாந்தீவில் அதைப்பயன்படுத்த முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2020 நவம்பர் 16 ம் திகதி தனக்கு மறக்க முடியாத நாள் என்ற பொன்னையாவிடம் ஏன்? என்று கேட்டபோது அன்றுதான் என் கால் அகற்றப்பட்டது என்று கூறியுள்ளார் அவர். 

கடந்த வருடம் வரை குருநாதன் என்ற மூன்றாவது நபர் ஒருவரும் இருந்தார். அவர் இரைப்பை புற்றுநோயினால் இறந்ததாக மற்றைய இருவரும் தகவல் கூறியுள்ளனர். இவர் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர் அவரது சடலம் ஊருக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிகிறது. 

சேனா: “எனக்கு மட்டக்களப்பு நகரில் ஒரு இடம் கிடைக்குமாயின் அங்கு போக விருப்பம். அதுவரை இங்குதான் இருக்கவேண்டும்”. 

பொன்னையா: “நான் தனியாக இல்லை. எனக்கு சேனா மல்லி, உதவித்தாதியர்கள் இருக்கிறார்கள். ஒரே ஒரு இடமே போவதற்கு இருக்கிறது. அது சொர்க்கம்”.  

சேனா : “பொன் ஐயாவுக்கு வயது போய்விட்டது. அவரால் சரியாகக் கதைக்கவும் முடியாதுள்ளது. நான் அவரை ஒரு தகப்பன் போன்று மதிக்கிறேன். வேறென்ன செய்யமுடியும் நானும் பைத்தியம், அவரும் பைத்தியம். அவரது உடுப்புகள், மற்றைய பாவனைப் பொருட்களையும் நானே கழுவிக்கொடுக்கிறேன்”. 

பொன்னையா இறந்தால் அவரது உடல் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டு, கோயிலில் உள்ளவர்களின் உதவியுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று ஒரு அதிகாரி கூறினார். 

சேனா இறந்தால்…..? 

அவருக்கு எவரும் இல்லை. யாரையும் தெரியாது. நீதிமன்ற உத்தரவைப் பெற்று மாந்தீவு சுடவையில்  அடக்கம் செய்யப்படுவார். மாந்தீவில் அடக்கம் செய்யப்பட்ட இறுதி நோயாளியாக சேனா இருப்பார். 

இத்தனை காலம் போர் நீடித்தும் பொன்னையாவினதும், சேனாவினதும் அண்ணன், தம்பி சகோதர உறவை அந்தப் போரால் தகர்க்க முடியவில்லை என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இலங்கைத்தீவு இன்னும் இரண்டாகவே இருக்கிறது என்கிறார்கள் ரிப்போட்டர்கள். 

சேனாவும், பொன்னையாவும் ஏதாவது ஒரு மொழியைப் பயன்படுத்தி முழுமையாக உறவாட முடியவில்லை ஆயினும் மனிதம், மனித உறவு, புரிந்துணர்வு அங்கு நிலவுகிறது. தமிழ் சினிமாப் படங்களில் இருந்து கற்றுக்கொண்ட ஒரு சில தமிழ் வார்த்தைகளை மட்டும் சேனாவால் பேச முடிகிறது. பொன்னையாவின் நிலையும் அதுதான். 

கன்னியாஸ்திரி, பணியாளர்கள், பேசுகிறார்கள்…..! 

பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கு கடமையாற்றிய கன்னியாஸ்திரி ஒருவரை சந்திகக் கூடிய வாய்ப்பு ஊடகவியலாளர்களுக்கு கிடைத்துள்ளது. றோஷாரி என்ற அவருக்கு வயது 70. மட்டக்களப்பின் ஒரு வயோதிபர் இல்லத்தில் அவர் வசிக்கிறார். அவர் ஒருவரே மாந்தீவு பற்றிய இறுதித்தகவல்களை தரக்கூடிய ஒருவர் என்று அறிக்கை கூறுகிறது. 

மாதம் ஒருமுறை தீவுக்கு வந்து சேனாவையும், பொன்னையாவையும் பார்த்துச் செல்கிறார். வெளிநாட்டு மிஷனரியினரும் மாந்தீவில் வாழ்ந்ததை நினைவுகூரும் அவர், என்றோ ஒருநாள் மாந்தீவு முற்றாக அதன் வரலாற்றை மறந்துவிடும், சுவடிகளோ, போட்டோக்களோ கிடையாது என்று றோசாரி கவலைப்பட்டுள்ளார். 

நத்தார் தினத்தில் இவர்களுக்கு சீனியும், பால்மாவும் அன்பளிப்பு செய்கிறார். மாதத்தில் ஒரு தடவை வரும்போது இரண்டு மணித்தியாலங்கள் இவர்கள் இருவரோடும் செலவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நோய் தொற்றாது என்பது எனக்குத்தெரியும். எனினும் மனித இடைவெளியைக் பேணி வருகிறேன் என்கிறார் அந்த மூத்த சகோதரி. 

அங்கு சமையல் வேலைகளுக்கு பொறுப்பாக உள்ள ஒருவர் விக்கினேஸ்வரன். 1990 இல் 8 நோயாளிகள் அங்கு இருந்ததாகக் கூறும் அவர் சேனாவுக்கும், பொன்னையாவுக்கும் நன்றி கூறினார். ஏனென்றால் இவர்கள் இல்லாவிட்டால் தனக்கு வேலை இல்லை என்கிறார் அவர். பேச்சின் இடையில் சிலவேளைகளில் “அபி பொட்டக் அறக் வொன்ட புளுவங், நேயத மாத்தையா? என்றார் சேனா. 

விக்கினேஸ்வரன் 22 வருடங்களாக அங்கு வேலை செய்கிறார். முறைப்படி அவர் அடுத்த வருடம் ஓய்வு பெறவேண்டும். ஏற்கனவே ஓய்வு பெற்ற ஒருவர் தொடர்ந்தும் வேலை செய்வதாகவும் அவர் கூறினார். உதவித் தாதியர்கள் எவரையும் நாம் அங்கு காணவில்லை என்கிறார்கள் ரிப்போட்டர்கள். 

பெயர்கூற விரும்பாத 20 வருடங்களாக பணியாற்றும் ஒருவரும் உள்ளார். கடந்த 20 வருடங்களில் இங்கு ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்று கேட்டோம் ….? 

“வரும்போது கிரேட்  ஒன் ,உத்தியோகத்தராக வந்தேன் இப்போது கிரேட் திறி உத்தியோகராகியுள்ளேன்” என்று எடுத்த எடுப்பில் கூறினார். 

நோயாளர்கள் பக்கத்தில் ஏற்றப்பட்ட மாற்றங்களை, முன்னேற்றங்களைக் கேட்கிறோம் என்று கேள்வியைத் திருப்பிக் கேட்டோம். 

“அவர்களைப் பற்றி பேசுவது எனது வேலையல்ல” என்று முகத்தில் அறைந்தால் போல் சொல்லியுள்ளார் அவர். 

முதலாவது மாடியில் உள்ள நிர்வாக அறையில் இருக்கும் “அவர்” காலை 8:30 மணிக்கு வருகிறார் தொப்பியைக் கழட்டி வைக்கிறார்,மாலை 16:50 மணி படகில் ஏறுகிறார் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. 

மாந்தீவுக்கு பொறுப்பான ஒரு வைத்தியர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் உள்ளார். இவர் வைத்தியசாலைகள் பணிப்பாளரின் கீழ் கடமையாற்றுகிறார். வைத்தியசாலை பணிப்பாளரோ கொழும்பு சுகாதார அமைச்சின் பணிப்பாளரின் கீழ் கடமையாற்றுகிறார். இப்படி நிர்வாகம் ஒரு நீண்ட சங்கிலித்தொடர். இவர்கள் அனைவரும் நோயாளர்களின் பிரச்சினைகளில் இருந்து வெகுதூரத்தில் உள்ளனர் என்பதை ரிப்போர்ட் உரத்துச் சொல்லுகிறது. 

மாந்தீவின் சுற்றாடல் காட்சிகள்……! 

மாந்தீவு காடெழும்பி, கட்டிடங்கள் இடிந்து, சிதைந்து காட்சியளிக்கிறது. சவக்காலையை காட்டுக்குள் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். மழை நீரினால் அழுகிய புற்களும், இலை குழைகளும் துர்நாற்றம் தருகின்றன.  

சுடலையில் பெரிய எட்டு கற்சிலுவைகள் உள்ளன. இங்கு மரணித்த வெளிநாட்டவர்களின் புதையலில் அவை நாட்டப்பட்டிருப்பதாக அறியக் கிடைத்தது. 

இந்து, கிறிஸ்த்தவ, இஸ்லாம், பௌத்த மதத்தவர்களுக்கு என சவக்காலை பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. காடு விழுங்கியுள்ள சுடலையில் கன்னியாஸ்திரி ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உள்ள ஒரு சிலுவையில் யேசுவின்சிலை இன்னும் தொங்குகிறது. 

புத்தர் கோயிலை படையினர் புதிதாக திருத்தி வர்ணம் தீட்டியுள்ளனர். தீவின் மறுபகுதியில் ஒரு இந்துக் கோயில். தன்னார்வ மட்டக்களப்பு மக்களால் இது திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

கிறிஸ்தவ தேவாலயம் பாழடைந்து,தூசு படிந்து கிடக்கிறது. புதிய ஏற்பாட்டின் ஒரு பிரதி அட்டைகள் அற்று  அகல விரிந்து கிடக்கிறது. 

சுவரில் பாப்பரசர் இரண்டாவது யொகானஷ் போலின் படம் தொங்குகிறது.  

பிரார்த்தனை மண்டபம் இரண்டாகப்பிரிக்கப்பட்டு ஒரு பகுதியில் நோயாளர்களும், மறுபகுதியில் ஆரோக்கியமானவர்களும் பூசையில் கலந்து கொண்டதை கிறிஸ்தவ சகோதரி றோஷாறி நினைவு கூர்ந்தார். 

மாந்தீவின் எதிர்காலம்……

சேனாவும், பொன்னையாவும் மரணித்த பின்னர் மாந்தீவின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை அறிய முயன்றோம். 

கொரோனா காலத்தில் படையினரின் தனிமைப்படுத்தல் நிலையமாக ஒருபகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நான்கு படையினர் இங்கு கடமைக்கு வருகிறார்கள். இவர்களும் தீவை பங்கு போட்டுக் கொள்கிறார்கள். 

எதிர்காலத்தில் விமானப்படையினர் முழுத்தீவையும் தமது பொறுப்பில் எடுக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.  

மாந்தீவுக்குப் பொறுப்பான ஒரு வைத்தியர் உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் வகையில் ஒரு உணவு விடுதி அல்லது பறவைகள் சரணாலயம் போன்றவற்றை அமைக்கலாம் என்று கூறியுள்ளார். 

ஒரு தடவை மாந்தீவை கடும்குற்றம் புரிந்தவர்களுக்கான சிறைச்சாலையாக மாற்றியமைப்பது பற்றி பேச்சுக்கள் அடிபட்டதாகவும் நினைவு கூறப்பட்டுள்ளது. 

எது எப்படியோ மாந்தீவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் மட்டக்களப்பு அரசியலும், மாவட்ட, மாகாண நிர்வாகங்களும் இப்போதிருந்தே விரைவாகச் செயற்பட வேண்டும், இணைந்து செயற்பட வேண்டும்  என்பதை இந்த ரிப்போர்ட் சொல்லாமல் சொல்கிறது. 

கிறிஸ்தவ சமூகசேவை பாரம்பரியத்தை கொண்ட எங்கள் மாந்தீவை காப்பாற்ற மட்டக்களப்பு ஆயரும், ஆயர் இல்ல நிர்வாகமும் களத்தில் இறங்கவேண்டும். இதை நாளை அல்ல இன்று தொடங்க வேண்டும். 

ஆக, இன்றே செய்….! அதை நன்றே செய்….!!    செய்வார்களா …?