‘என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’ –காலனித்துவக் கல்விக்கொள்கைக்கு முண்டு கொடுக்கும் அடிமைச் சிந்தனை! 

‘என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’ –காலனித்துவக் கல்விக்கொள்கைக்கு முண்டு கொடுக்கும் அடிமைச் சிந்தனை! 

       — தேசம்நெற் ஆசிரியர் ஜெயபாலன் — 

இன்று திராவிடர்களாகிய தமிழர்கள் விநாயகசதுர்த்தியை மிகக் கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள். இந்த விநாயகர் சதுர்த்தி திராவிட காலாச்சாரத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மாபெரும் கலாச்சாரப் படுகொலையின் அடையாளம் என்பதைக் கூட உணராமல் அதனை இன்று கொண்டாடி வருகின்றோம். இந்தியாவில் ஆரியத்தின் பிரவேசத்திற்கு முன்னரே திராவிடம் தழைத்தோங்கியிருந்தது. தமிழ் கோலோச்சி வந்தது. இந்நிலையில் ஆரியம் தமிழையும் திராவிடத்தையும் அழிக்க சமஸ்கிருதத்தை தேவபாஷையாக்கியது. தென்னிந்தியாவுக்குள் கடவுளை வைத்து ஊடுருவியது. ‘பழையன கழித்து புதியன புகுத்தும் ‘விநாயகர் சதுர்த்திக் கலாச்சாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி வீட்டில் உள்ள பழையதை எரித்து துப்பரவு செய்து புதியதை வாங்கும் பழக்கம் உருவானது. இந்த பழையன கழிக்கப்படும் போது கடவுள் நம்பிக்கை கண்ணை மறைக்க, திராவிடத்தின் தமிழின் பொக்கிஷங்களை அவர்களே தீயிட்டு கொழுத்தினர். பிராமணர்கள் தங்கள் பங்கிற்கு பிள்ளையாரை மண்ணில் செய்து அப்பிள்ளையாரை கடலில் கரைத்தனர். இந்தப் பிராமணர்களின் தேவபாஷையில் மயங்கிய எம்மவர்கள் தங்கள் வீடுகளில் இருந்த ஓலைச்சுவடிகள், ஆவணங்கள் என்பனவற்றை பழையன எனக் கழித்து தங்கள் வரலாற்றுக்கு தாங்களே தீயிட்டனர். 

ஐரோப்பாவில் இருந்து ஊடுருவியதாகக் கொள்ளப்படும் சமஸ்கிருதம் தமிழுக்கு முந்தையதாகக் கொள்ளப்பட்டாலும் அம்மொழியானது தற்காலத்தில் எந்த மக்களாலும் பேசப்படுவதில்லை. அதன் இலக்கியப் பரப்பும் மிக மிக மட்டுப்படுத்தப்பட்டதே. உலகின் மூத்தமொழியாகவும் 80 மில்லியன் மக்கள் இன்றும் பேசுகின்ற மொழியாகவும் இருப்பது தமிழ் மட்டுமே. தமிழில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் அளவுக்கு வேறு மொழிகள் வளர்ந்திருக்கவில்லை. ஒரு மொழி வளர்வதற்கு கல்வி அவசியம். தமிழ் மொழியின் இலக்கண, இலக்கிய பாரம்பரியம் அப்படியிருக்க ஷேக்ஸ்பியருக்கு பின்னர் இலக்கியத்தை வளர்த்துக் கொண்ட காலனித்துவ வாதிகள் தமிழர்களுக்கு கல்வியைக் கொடுத்தனர் என்பது எவ்வளவு அபத்தமானது என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை. 

சேற்டிபிகற் – சான்றிதழ் அவசியம் என்கின்ற முறைசார் கல்வி வித்துவான்களுக்கும் அடிமைச் சிந்தனையில் இருந்து விடுபடாதவர்களுக்கும் இது ஏற்றுக்கொள்ள சற்று கடினமானது தான். இப்பின்னணியில் காலனித்துவத்தின் நன்மையாக இந்த முறைசார் கல்விமுறையை முன்வைக்கின்றார் ஜஸ்ரின். காலனித்துவ வாதிகள் வரும்வரை நாங்கள் என்ன படிப்பறிவற்றவர்களாகவும் நாகரீகமற்றவர்களாகவும் இருந்தது போலும் ஜஸ்ரின் கட்டுரையை வரைந்துள்ளார். 

பிரித்தானியர் இந்து சமுத்திர பிராந்தியத்தை அடிமைப்படுத்துவதற்கு முன்: பிரித்தானியர் உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்குச் சென்ற பொழுது உலகின் 27 வீதமான மொத்த தேசிய உற்பத்தி கொண்ட நாடாக இந்தியா 1700க்களில் இருந்தது.1800க்களில் உலகின் மொத்த தேசிய உற்பத்தியில் 23 வீதம் இந்தியாவிலேயே இருந்தது. ஆனால் 200 ஆண்டுகால காலனித்துவம், கொள்ளை, திருட்டு, அழிவு என்பனவற்றால் குழந்தைகள் பட்டினியால் மரணிக்கும் அளவுக்கு பிரித்தானிய ஆட்சி இந்தியாவை பின்னுக்கு தள்ளியது. 200 ஆண்டுகளுக்கு சற்று மேலான பிரித்தானியர் ஆட்சியில் உலகின் மொத்த தேசிய உற்பத்தியில் மூன்று வீதத்தை மட்டுமே இந்தியாவிடம் விட்டுச்சென்றனர். அப்போது இந்திய மக்கள் தொகையில் 90 வீதமானவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்தனர். கல்வி வீதம் 17 வீதத்திலும் குறைவாக இருந்தது. ஆயுள் காலம் வெறும் 27 ஆண்டுகளாக இருந்தது.1900இல் இருந்து 1947இல் சுதந்திரமடைவது வரை இந்தியாவின் வளர்ச்சி வீதம் 0.001 வீதமாக இருந்தது. இந்தியர்களுக்கு கல்வியை வழங்குவது அவர்களின் ஆகக்குறைந்த கரிசனையாகவே இருந்தது. 

ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை பிரித்தானியர்கள் முழு இந்தியாவுக்கும் கல்விக்கு ஒதுக்கியது நியூயோர்க் மாநிலத்தின் உயர்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் ஐம்பது வீதத்திலும் குறைவானது என 1930க்களில் அமெரிக்க வரலாற்றாசிரியர் பதிவுசெய்துள்ளார். பிரித்தானியர்களின் வருகைக்கு முன் உலகிலேயே ஆடை உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகித்தது. 2000 ஆண்டுகள் உலக வர்த்தகத்தில் இந்தியா கொடிகட்டிப் பறந்தது. ஆனால் பிரித்தானியர்கள் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்ததும் சொத்துக்களைச் சுருட்டிக்கொண்டு சென்றதுடன் இந்தியா தொடர்ந்தும் வளர்ச்சியடையாத வகையில் அதன் தொழிற்துறைகளை திட்டமிட்டு முடக்கியது. ஐரோப்பிய ஆரியர்கள் செய்த கலாச்சார, பண்பாட்டு, பொருளாதாரப் படுகொலையை பிரித்தானியர்களும் திட்டமிட்ட முறையில் மேற்கொண்டனர். மிகத்திட்டமிட்ட முறையில் பட்டினிச்சாவை நோக்கி இந்தியாவைத் தள்ளியதுடன்,வேரறுந்து போய்க்கொண்டிருந்த சாதியத்தை அரசகட்டமைப்புக்குள் கொண்டுவந்து அதனை நிறுவனமயப்படுத்தி பிரித்தாளும் தந்திரத்தினூடாக தங்களைத் தாங்களே அழிக்க வைத்தனர். 

இலங்கையினுடைய நிலை இந்தியாவில் இருந்து ஒன்றும் பெரிதாக மாறுபட்டதில்லை. பிரித்தானியர்கள் வருகைக்கு முன்னரே இலங்கை 2000 ஆண்டுகள் சிறப்புக்கொண்ட உலகிலேயே சிறந்த நீர்ப்பாசனத் திட்டங்களில் ஒன்றாக இருந்ததை பிரித்தானிய பிரதமர் மார்க்கிரட் தட்சர் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்து இருக்கின்றார். முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளை போன்ற அடிமைச் சிந்தனையில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ளாதவர்கள் தொடர்ந்தும் அடிமைச்சுகத்திற்கு பழகிக்கொண்டுவிட்டனர். 

இலங்கையின் கல்வி முறையிலும் வட அமெரிக்காவின் கல்வி முறையிலும் மாணவனாகவும் ஆசிரியனாகவும் இருந்ததாக தன்னை அறிமுகம் செய்யும் ஜஸ்ரின் எழுப்பும் மில்லியன் டொலர் கேள்வி என்னவென்றால், ‘இலங்கையின் அரசியல் பொருளாதார பின்னடைவுக்கு நாட்டின் கல்விமுறை எப்படிப் பங்களித்தது?’ என்பது. இக்கேள்விக்கு என்னுடைய கட்டுரையில் பதில்கள் எவையும் வெளிப்படையாக இல்லையாம் என்று வேறு குற்றச்சாட்டை வைத்திருந்தார் கட்டுரையாளர். அவருடைய கேள்வியே அவருடைய கேள்விக்குப் பதில். ஒரு நாடு தன் இளம் தலைமுறையினருக்கு வழங்கும் கல்வி அவனைச் சுற்றியிருக்கும் சமூகத்திற்கு,அந்நாட்டுக்கு பயன்பட வேண்டும் என்ற அடிப்படை உணர்வைக் கூட ஊட்டவில்லை என்பதை ஜஸ்ரினின் கேள்வி துல்லியமாக வெளிப்படுத்துகிறது. இப்படிப்பட்ட சேட்டிபிகற் – சான்றிதழ் கல்வியை வழங்கும் முறையை தகர்த்தெறிவதைத் தவிர இலங்கைக்கு வேறு வழியில்லை ஜஸ்ரின். 

உலகம் முழவதும் இன்று முறைசார் கல்வி முறையே நடைமுறையில் உள்ளது. ஆனால் எந்தவொரு நாட்டிலும் கல்வியின் நோக்கத்தை கற்பவர் தீர்மானிப்பதில்லை. இதனைப் புரிந்துகொள்ளாத கட்டுரையாளர் முஸ்லீம் அடிப்படைவாதிகளின் ஆட்சியில் இருக்கும் நாடுகளில் சில பிரிவினருக்கு தொழில்களில் நிபுணத்துவம் பெறுவதற்கு சுதந்திரம் கிடையாது என்கிறார். அது மட்டுமல்லாமல் அந்நாடுகளை மேற்கின் தாராளவாத அரசுகள் ஆக்கிரமிப்பின் மூலமோவேறு வழிகளிலோ தங்கள் கைப்பொம்மைகளாக்கி தனிமனித சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட கல்விமுறையை அறிமூகம் செய்தால் ‘காலனித்துவ ஆக்கிரமிப்பின் ஆயுதம் இந்தக் கல்வி’ என்ற கண்டனக் குரல்கள் எழுகின்றதாம் என்றும் கட்டுரையாளர் புலம்பி இருக்கின்றரர். கட்டுரையாளர் இஸ்லாமோபோபியாவினால் பாதிக்கப்பட்டிருப்பதை அவரது எழுத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன. 

அதுமட்டுமல்லாமல் மேற்குலகு தனி மனித சுதந்திரத்தைக்கொண்ட கல்விமுறையை வளர்த்து அவர்களை முன்னேற்றுவதற்காகவே ஆக்கிரமிப்பு அல்லது வேறுவழிகளைக் கையாள்கின்றனர் என்கின்றார். ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா, தற்போது பாகிஸ்தான் இந்நாடுகளில் எல்லாம் ரெஜீம் சேன்ஜ் செய்ததெல்லாம் தனிமனித சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட கல்விமுறையை அறிமூகம் செய்ய என்றா கட்டுரையாளர் சொல்ல வருகின்றார். பிரித்தானியர்களுக்கு முன்னதாகவே ஈரான், ஈராக், எகிப்து போன்ற நாடுகள் மிகப்பழமையான நாகரீகங்களில் ஒன்றான மொஹன்சதரோ – ஹரப்பா –மொசப்பெதெனியா நாகரீகத்தின் சொந்தக்காரர்கள். அவர்கள் பல்வேறு துறைகளிலும் கொடிகட்டிப் பறந்தனர். மேற்குலகம் தான் அவர்களுக்கு தனிமனித சுதந்திரத்தைக் கொண்ட கல்வியை அறிமுகப்படுத்தி அவர்களை நாகரீகமாக்குகின்றது என்ற வாதம் உண்மைக்குப் புறம்பானது. 

முறைசார் கல்வியின் நோக்கம் மனிதனுக்கு சுதந்திரத்தை வழங்குவதாகவும் அச்சுதந்திரம் பொருளாதார, சமூக, அரசியல் என எல்லாத் தளங்களிலுமான சுதந்திரமாக அமைந்தால் அது சிறந்த முறைசார் கல்வி என்கிறார் கட்டுரையாளர். உலகத்தில் உள்ள எந்தவொரு நாடும் மனிதனுக்கு சுதந்திரம் வழங்குவதற்காக கல்வியை வழங்கவில்லை. காப்ரேட் கம்பனிகளில் வேலை செய்வதற்காகவே கல்வி ஊட்டப்படுகிறது. கட்டுரையாளர் தனக்குள்ளேயே பல்வேறு முரண்பாடுகளுடன் கட்டுரையை எழுதி இருக்கின்றார். இஸ்லாமிய சமூகத்தை ஆக்கிரமிப்புச் செய்து இஸ்லாமியர்களுக்கு தனிமனித சுதந்திரத்தை மேற்குலக தாராளவாத அரசுகள் வழங்குகின்றன என்றல்லவா ஜஸ்ரின் குறிப்பிடுகின்றார். 

இன்று இலங்கையில் ஆங்கில மொழியில் கல்வி கற்பிக்கப்படாததால் இலங்கையின் கல்விமுறை காலனித்துவக் கல்விமுறையின் எச்சமில்லை என்ற வாதம் மிகச் சிறுபிள்ளைத்தனமானது. என்னுடைய கட்டுரையின் அடிப்படை கல்வி என்ன மொழியில் கற்பிக்கப்படுகின்றது என்பதல்ல. கல்வியின் உள்ளடக்கத்தையே கேள்விக்குட்படுத்தி இருந்தேன். கல்வியின் உள்ளடக்கம் கட்டுரையாளர் போன்ற காலனித்துவ அடிமைச் சிந்தனையாளர்களையே பெரும்பாலும் உருவாக்கி வருகின்றது. அவரவர் தனிமனித வெற்றிக்கு இக்கல்விமுறை ஒரளவு பங்களிப்புச் செய்துள்ளது என்பதில் ஓரளவு உண்மையுண்டு. கட்டுரையாளர் குறிப்பிட்டது போல் அவ்வாறான பொருளாதார முன்னேற்றத்திற்கு அவரொரு உதாரணம். மற்றும்படி தற்போதைய கல்விமுறை தனிமனித சுதந்திரம் என்ற கொக்கரிப்புடன் சமூகத்தை சீரழித்து, தனிமனிப் பண்புகளைச் தனிமனிதர்களையும் சீரழிக்கின்றது. 

கல்வியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆங்கிலேயர்களுக்கோ தமிழர்களுக்கோ ஒரு போதும் இருக்கவில்லை. இடதுசாரிகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து கன்னங்கராவே இலங்கையில் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தி கல்வியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்தார். 

அடுத்தது இலவசக் கல்வியும் பரீட்சையும் பற்றி கட்டுரையாளரின் கருத்து மீண்டும் அவருடைய முரண்பாடுகளையே பிரதிபலிக்கின்றது. இலங்கையில் உயர்கல்வி இலவசமாகக் கிடைப்பதால் அதற்கான போட்டி காரணமாக இலங்கையில் திறமையைக் கணிக்கும் அளவீடாக பரீட்சையை பயன்படுத்தும் தேவை ஏற்படுகின்றது என்று குறிப்பிடுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இலங்கையின் கல்விமுறை பிரித்தானியாவின் காலனித்துவ கல்விமுறையின் தொடர்ச்சி. அதில் அங்குமிங்குமாக சில சோடிப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும் காலனித்துவ கல்விக்கொள்கையில் இருந்து சுயபாஷையில் கற்பதைத் தவிர அடிப்படையில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை. 

பிரித்தானியாவில் உயர்கல்வி இலவசமல்ல. அது மிகச் செலவுகூடியது. பிரித்தானியாவில் பல்கலைக்கழகக் கல்வியைக் கற்கும் மாணவன் மூன்று ஆண்டுகளின் முடிவில் 2 கோடி ரூபாய்க்கு கடன்காரராக பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுகிறார். ஆனால் அங்கும் இறுதிப் பரீட்சைகள் உண்டு. 

இறுதிப் பரீட்சைகள், போட்டிப் பரீட்சைகள் என்பன இலவசக் கல்வியோடு சம்பந்தப்பட்ட விடயங்கள் அல்ல. ஒரு மாணவனுடைய தகமையை அளவிடுகின்ற அளவுகோல். இந்த அளவுகோலானது மிக மோசமானது. மாணவர்களின் பரந்த ஆற்றல்களை குறுக்கி பரீட்சைக்கான கினிபிக்ஸ் ஆக்குகின்றது என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. பிரித்தானியா இவ்வாறான கல்விக் கொள்கையை வைத்திருப்பதன் நோக்கம் சமூகத்தினை ஏற்றத் தாழ்வோடு வைத்திருக்க முடியும். ஆளுவதற்கான மேட்டுக்குடி இப்போட்டிப் பரீட்சைகளில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படும். சராசரியினர் இப்பரீட்சைகளில் சாதிப்பது கடினமாக இருக்கும். அவர்கள் ஆளும் குழுமத்திற்கு சேவை செய்ய ஏனைய தொழில் துறைகளில் நுழைவார்கள். அனைவரும் பல்கலைக்கழகம் சென்று கற்க வேண்டிய அவசியமில்லை. அது மேட்டுக்குடிகளுக்கானதாகவே இன்றும் இருக்கின்றது. ஏற்றத்தாழ்வு, சமத்துவமின்மை என்பது பிரித்தானிய கல்விக்கொள்கையின் இயல்பு. 

ஆனால் ஐரோப்பாவில் இவ்வாறான இறுதிப் பரீட்சைகள் போட்டிப் பரீட்சைகள் தவிர்க்கப்படுகின்றது. அங்கு மாணவர்கள் காலத்திற்குக் காலம் மதிப்பீடு செய்யப்படுவதுடன் இம்மதிப்பீடுகள் மாணவர்களின் புரிதலை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறான மதிப்பீடுகள் அசஸ்மன்ற் போர் லேர்னிங் என்று அழைக்கப்படுகின்றது. இக்கல்விமுறை மாணவர்களின் சுயதேடலை வளர்ப்பதுடன் பரீட்சைக்காக கல்வியைப் பலவீனப்படுத்தும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கின்றது. மேலும் ஒரு மாணவனுடைய திறமையை வகுப்பறை ஆசிரியரைத் தவிர பரீட்சையால் அளவிட முடியும் என்பதே மிக அபத்தமானது. வகுப்பறை மதிப்பீடுகள் எப்போதும் மோசடியாகவே இருக்கும் என்பதால் போட்டிப் பரீட்சைதான் தீர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். போட்டிப் பரீட்சைகள் மோசடியிலிருந்து விதிவிலக்கானவை அல்ல. போட்டிப் பரீட்சைகளிலும் மோசடிகள் சகஜமாகவே இடம்பெறுவதாக முன்னாள் பரீட்சைத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார். சில சமயம் வினாத்தாள்களை திருத்துகின்ற போது அடுத்தடுத்து பத்து மாணவர்கள் வரை ஒரே மாதிரியாக பதிலளித்த வினாத்தாள்களை தான் திருத்தியதாக வினாத்தாள்களைத் திருத்தச் செல்லும் உத்தியோகஸ்தர் எனது நண்பர் தெரிவித்தார். 

ஆகவே தான் முந்தைய அரசு நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னான கல்விக்கொள்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பரீட்சைகளுக்கு 30 வீதம் முதல் 40 வீதம் வரைக்கும் புள்ளிகளை மட்டுப்படுத்த உள்ளது. இக்கல்விக்கொள்கையை அமுல்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மேற்குலகின் பூரண ஒத்துழைப்போடு ஜனாதிபதி கோட்டபாய ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டு மேற்கின் செல்லப் பிள்ளையான ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக்கப்பட்டார். ஜனாதிபதியானதும் அவர் செய்த முதற்கட்ட வேலைகளில் ஒன்று புதிய கல்விக்கொள்கைக்கான குழவைக் கலைத்தது. புதிய கல்விக்கொள்கை அமுல்படுத்தப்பட்டால், தற்போதைய பயனற்ற காலாவதியாகிப்போன போட்டிப் பரீட்சைகளுக்கு இறுதிப் பரீட்சைகளுக்கு ஒரு நிரந்தரமான முடிவு கட்டப்படும்.