பல்கலைக்கழக பகிடி – சித்திரவதை..! கன்ரீனில் புளு ஃபில்ம்…!! (மௌன உடைவுகள் – 03) 

பல்கலைக்கழக பகிடி – சித்திரவதை..! கன்ரீனில் புளு ஃபில்ம்…!! (மௌன உடைவுகள் – 03) 

                  — அழகு குணசீலன் — 

 மேற்குலக பல்கலைக்கழகங்களில் பகிடிவதையானது ஒரு புதிய வன்முறைக் கலாச்சாரமாக வளர்ந்து வருகின்றது. இன்றைய நிலையில் தென்கிழக்காசிய பல்கலைக்கழகங்களில் இதன் தாக்கமும், வளர்ச்சியும் மிகவும் அதிகமாகவும், மிருகத்தனமாகவும் உள்ளது. இதற்கு இந்த நாடுகளின் சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகள் காரணமாக அமைகின்றன. 

பகிடியின் பெயரில் இடம்பெறும் இந்த வன்முறையும், சித்திரவதையும் பல மாணவர்களின் தற்கொலைக்கு காரணமாக அமையும் அளவுக்கு ஒரு சமூகக் கொடுமையாகவும், சமூக நோயாகவும்  மாறி உள்ளது. அண்மைய ஆண்டுகளில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இந்த நிலைமை தொடர்ந்தும் மோசமடைந்து வருவதை நாம் அவதானிக்க முடியும். 

 இந்தச் சூழலில் “பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்தமை நிரூபிக்கப்பட்டால் கறுப்புப் பட்டியல்” என்று அறிவித்திருக்கிறார் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன். நிரூபிக்க முடியவில்லை என்றால் பகிடிவதை இடம்பெறவில்லை என்று அர்த்தமா? 

வகுப்புத்தடை, பட்டம் இரத்து,உள்ளூர் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு அனுமதியின்மை, அரசதுறையில் பணியாற்றத்தடை போன்ற பல “தண்டனைகளை” அவர் பட்டியலிட்டு இருப்பதுடன், இதற்காக புதியசட்டங்கள் தேவையில்லை இருக்கின்ற சட்டங்களே போதும் என்றும்  அவர் கூறுகிறார். 

இலங்கை அரசியலமைப்பின் 126வது சரத்தில் இது மனித உரிமை மீறல் வன்முறைக்கு ஒப்பானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1978ம் ஆண்டின் பல்கலைக்கழக சட்டத்தின் 16ம் இலக்கபிரிவும், 1998ஆம் ஆண்டின் கல்வி நிறுவனங்கள் தொடர்பான  20ம் இலக்க சட்டமும் பகிடிவதையை தடைசெய்வதுடன், தண்டனைக்குரிய குற்றம் என்றும் கூறுகின்றன. 

இத்தனை சட்டங்கள் இருந்தும் இந்த உடல், உளரீதியான வன்முறையை இதுவரை இச்சட்டங்கள் தடுத்து நிறுத்தவில்லை. ஆகக்குறைந்தது ராக்கிங் வன்முறைகள் குறைவடைந்ததற்கான ஆதாரங்களும் இல்லை. 

இதன் அர்த்தம் இந்த சட்டங்கள் செயற்திறன் அற்றவை என்பதா? அல்லது அவை இதுவரை சரியாக செயல்படுத்தப்படவில்லை என்பதா? 

கலாநிதி ராகவன் தண்டனைகள் பற்றியே அதிகம் பேசியுள்ளார்.  

சித்திரவதை நடந்து முடிந்தபின் அது நிரூபிக்கப்படவேண்டும். 

 அதற்குப் பின்னரே பல்கலைக்கழக நிர்வாகமோ, நீதிமன்றமோ தண்டனை வழங்கமுடியும். இதற்கு இலங்கை பல்கலைக்கழகங்களிலும், நீதித்துறையிலும்  இருக்கின்ற வாய்ப்புக்கள் என்ன? சட்டங்களின் முதற்கடமை ராக்கிங் வன்முறைகள் இடம்பெறாமல் முற்காப்பு செய்வது. இரண்டாவதே அதையும் மீறி இடம்பெற்ற சம்பவத்திற்கு தண்டனை வழங்குவது. இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இங்கு சட்டத்தின் பின்பகுதி பற்றியே பேசுகிறார். அவர் பேசுவது முற்காப்பு அல்ல நடந்தபின் தண்டிப்பது. அனுபவரீதியாக இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் இது தோற்றுப்போன ஒரு அணுகுமுறை. 

றுகுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பகிடிவதையில் ஈடுபட்ட 17 மாணவர்களை கைது செய்து விளக்கமறியலில் வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். நடந்தது என்ன? ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டிலிருந்த மாணவர் சங்கம் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டது.  

இதனால் சட்டம் இருந்தும் சட்டநடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகம், நீதித்துறை அனைத்து தரப்பும் அஞ்சுகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் கழுத்துக்கு மேல் வெள்ளம் போகும் நிலையில் தான் ஏதாவது செய்கிறார்கள். அதுவும் முறையீடு அல்ல தற்கொலை. 

அமெரிக்காவில் 2007க்கும் 2017க்கும் இடைப்பட்ட பத்து ஆண்டுகளில்  40 பேர் பகிடிவதையின் பெயரில் தற்கொலை செய்துள்ளனர். இந்தியாவில் 2000 முதல் 2007 வரை ராக்கிங் காரணமாக 30 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் 2021இல் மட்டும் 511 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிகமான முதலாம் ஆண்டு மாணவர்கள் மனநோய் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். 

 தென்கிழக்காசிய நாடுகளில் பகிடிவதை வன்முறைப் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தை இலங்கை பிடித்துள்ளது. இவை சட்டங்கள் செயலிழந்து இருப்பதையே காட்டுகின்றன. 

மக்களின் வரிப்பணத்தில் -பொதுப்பணத்தில் இலவசக்கல்வியை கற்றுக்கொண்டு சக பட்டதாரி மாணவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற இந்த வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் வறிய குடும்பங்களைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்களாக உள்ளனர்.  இந்த மாணவர்களும், அவர்களது பெற்றோரும், குடும்பத்தினரும் எதிர்காலத்திற்காக செய்த தியாகங்கள் எத்தனை? கண்ட கனவுகள் எத்தனை?  

அத்தனையும் ஒரு குறுகிய காலத்தில் “சிரேஷ்ட மாணவர்” என்ற ஒரே ஒரு தகுதியினால் சிதைக்கப்பட்டுவிடுகிறது. பல்கலைக்கழகங்கள் வேடிக்கை பார்க்கின்றன. மாணவர்களுக்கிடையே “சமத்துவம்” நிலவ ராக்கிங் தேவை என ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ராக்கிங்கை விரும்புகிறோமோ, இல்லையோ வாயைத்திறக்காமல் இருப்பதைத்தவிர எமக்கு வேறுவழியில்லை என்று ஒரு பகுதி மாணவர்களும், நிர்வாகமும் அச்சத்தில்  மௌனித்து வாழ்கின்றனர். 

தேனீர்ச்சாலையில் ஃபுளு பில்ம்…..! 

2015இல் 23 வயதான சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி அமாலி சதுரிகா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்தும் முன் எடுக்கப்படமுடியாமல் கிடப்பில் போடப்பட்டன. பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பீடாதிபதி ஆகியோர் அமாலி மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மன அழுத்தம் இருக்கிறது. அதற்காக அவர் சிகிச்சை பெற்ற ஆதாரங்கள் இருப்பதாக கூறினர். அவருக்கு கற்றல் ஒரு சுமையாக அமைந்ததால் அவர் தற்கொலை முடிவுக்கு வந்தார் என்று கூறி பூசி மெழுகினர். 

அமாலி இறப்பதற்கு முன்னர் எழுதிய கடிதத்தை அடிப்படையாக வைத்தும், தனது மகளின் செயற்பாடுகளின் அவதானிப்புக்களையும் கொண்டு பொலிஸ் விசாரணையின் முடிவில் ஏதோ மூடி மறைக்கப்படுகிறது என்ற சந்தேகம் தாய்க்கு ஏற்பட்டது.  தாய் விவாகரத்து பெற்றவர். அமாலி ஒரே மகள். அவளுக்கு ஆறு வயதாக இருக்கும் போது  பெற்றார் விவாகரத்து பெற்றனர். தனது மரணச் சடங்கில் பல்கலைக்கழக மாணவர்களை அனுமதிக்கவேண்டாம் என்பது அமாலியின் கடிதத்தின் இறுதி விருப்பம். 

கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸ் விசாரணைகள் தொடரவேண்டும் என்ற தனது விருப்பத்தை தாயார் கடிதமூலம் தெரிவித்தார். அமைச்சர் விசாரணையை தொடர உத்தரவிட்டார். பாலியல் ராக்கிங் வன்முறைக்கொடுமை அம்பலத்திற்கு வந்தது. 

ராக்கிங் காலத்தில் அமாலியை தேனீர்ச்சாலைக்கு அழைத்த அந்த இரு மாணவர்களும் தங்கள் ரெலிபோனில் இருந்த ஃபுளு பில்ம் ஒன்றை பார்க்க கட்டாயப்படுத்தி உள்ளனர். பின்னர் அந்தப் படக்காட்சிகளை தங்களுக்கு செய்துகாட்டுமாறும் வற்புறுத்தி உள்ளனர். இந்த அவமானமும், அதனால் ஏற்பட்ட மனநோயும் அவளால் கற்கையை தொடரமுடியவில்லை. அமாலியால் அமைதியாக மனதை ஒருமனப்படுத்தி படிக்க முடியவில்லை . இரவில் நித்திரையில்லை. எப்போதும் தேனீர்ச்சாலை காட்சிகளே அவளுக்கு படமாக ஓடின. 

 பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படாமல் கௌரவத்தை காக்கவும், பதவியில் தொங்கவும் மனிதாபிமானம் அற்று என்ன விலையையும் மாணவர்களின் உயிராக கொடுக்கத் தயாராக இருக்கிறது என்பதற்கான பல நூறு உதாரணங்களுள் இது ஒன்று மட்டுமே. பல்கலைக்கழக அழுக்கை அகற்ற அமாலி மீது அழுக்கை அள்ளி வீசியிருக்கிறது நிர்வாகம். 

ராக்கிங் மனித உரிமை மீறல்கள்….! 

பொதுவாக தங்கள் பிள்ளைகளுக்கு எதிராக எவ்வாறான வன்முறைகள் இடம்பெறுகின்றன என்பது பற்றி பெற்றோருக்கு தெரியவருவதில்லை. அப்படி அவர்கள் அறிந்திருந்தாலும் அவை முழுமையானவை அல்ல. இலங்கையின் கலாச்சாரச் சூழலில் மாணவர்கள் தமது வீடுகளில் அவற்றை அப்பட்டமாக ஒப்புவிக்க தயங்குகின்றனர். இதனால் சாமானிய சமூகம் இதுபற்றி அலட்டிக் கொள்வதில்லை. சகலதையும் அறிந்த உயர்கல்விச் சமூகமும், பல்கலைக்கழக நிர்வாகமும் “கௌரவம்”, பல்கலைக்கழக “நற்பெயர்” என்ற போலிக் காரணங்களுக்காக பொய்யைச் சொல்லி மாணவர்களைப் பலிகொடுத்து கௌரவத்தையும், நற்பெயரையும் காப்பாற்றுவதிலேயே இலக்காக உள்ளனர். 

இன்றைய பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள், கலாநிதிகள், பேராசிரியர்கள், உபவேந்தர்கள் அனைவரும் இதன் பங்குதாரர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் “சிரேஷ்டமாணவர் அந்தஸ்த்தில்” இதே பகிடி – சித்திரவதையை சகோதர புதிய மாணவர்களுக்கு செய்தவர்கள். அதே போன்றுதான் இன்று புதிய மாணவர்களாக ராக்கிங் கொடுமையை அனுபவித்த மாணவர்களில் ஒருபகுதியினர் மற்றொரு தொகுதி புதிய மாணவர்களின் வருகைக்காக தாம் பெற்றதை “திருப்பிக் கொடுக்கக் காத்திருக்கிறார்கள். 

தனிமனித சுதந்திரமறுப்பு, ஜனநாயக மறுப்பு, பெண்ணியம், மனித உரிமை மீறல்கள் என்று வந்தால் அரசியல் கட்சிகளுக்குப் பின்னால் போர்க்குரல் எழுப்புபவர்களும், கொடிபிடிப்பவர்களும் இவர்கள்தான். 

இவர்களின் ஆசான்களான பேராசிரியர்கள் மேடைகளில் வாய்கிழியப் பேசி விட்டு “சிவசிவா” என்று தூங்கிப்போய்விடுகிறார்கள். பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும் இந்த கல்விச் சமூகத்தினர் தங்களின் சமூகக்கடமையை மறந்தவர்களாக இருக்கிறார்கள்.  

ஒரு போதும் இல்லாத அளவுக்கு இலங்கையின் சில பல்கலைக்கழகங்களில் கீழிருந்து மேல்வரை மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன. பாலியல் லஞ்சம் கோரப்படுகிறது. பல மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில் ராக்கிங் என்று வந்தால் பல்கலைக்கழகத்தின் “கௌரவத்தை” காப்பாற்ற, தங்களின் பதவிகளை தக்கவைத்துக்கொள்ள விசாரணைகளின் போது பாதிக்கப்பட்ட மாணவர்கள் குறித்து கதைகட்டி விடுகிறார்கள். 

இது பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீதான மற்றொரு உளவியல் வன்முறை. இதை அவர்கள் தெரியாமல் செய்யவில்லை. தெரிந்தே செய்கிறார்கள். மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தகதை. 

பெரிய பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை இலகுவில் அடையாளம் காண சிரேஷ்டமாணவர்கள் சில கட்டளைகளைப் பிறப்பிக்கின்றனர். 

 (*) உதாரணமாக சேலை, நீளப் பாவாடை அணியவேண்டும் என்று மாணவிகளும், கறுப்பு அல்லது வெள்ளை சேட் அணியவேண்டும் என்று மாணவர்களும் ராக்கிங் காலத்தில் வற்புறுத்தப்படுகிறார்கள். புதியவர்களை இனம்காண்பதற்கான வழிமுறை. 

(*) மாணவர்கள் சாராயம், மூத்திரம், மலசலகூட கழிவுநீர், விந்து போன்றவற்றைக் குடிக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். 

(*) மாணவர்களிடம் அவர்களின் ஆண் உறையின் அளவு கோரப்படுகிறது, மாணவிகளிடம் அவர்களின் மார்புக்கச்சை அளவு கேட்கப்படுகிறது. அவர்களின் காதலன், காதலி பற்றி கேட்கப்படுகிறது. 

(*) புதிய மாணவர்களுக்கு “பட்டப் பெயர்கள்” சூட்டப்படுகின்றன இந்தப் பெயரை அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சுமக்கவேண்டியும் உள்ளது. சிரேஷ்ட மாணவர்களை “SIR”‘  “MADAME” என்று அழைக்காவிட்டால் அடி, உதை. அட்டாங்க, பஞ்சாங்க நமஸ்காரம் செய்யவேண்டும். 

(*) மாணவர்கள் அரை, முழு நிர்வாணமாக்கப்பட்டு தன்னினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பல சந்தர்ப்பங்களில் இந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. 

(*)  கட்டளைகளை செய்யத்தவறும் மாணவர்கள் அதிகமாகவும், நீண்டகாலத்திற்கும் ராக்கிங் கொடுமைக்கு உள்ளாகின்றனர். அடித்து, உதைக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் உடல், உளரீதியான ஆரோக்கியப் பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர். 

(*) பல சந்தர்ப்பங்களில் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே அழைத்துச்செல்லப்பட்டு ராக்கிங் செய்யப்படுகிறது. விடுதியின் மறைவிடங்கள், புகையிரத நிலையம், பஸ் நிலையம், பொதுவிடங்கள், பூங்காக்கள் போன்வற்றிற்கும் அழைத்துச் செல்லப்பட்டு பொதுமாக்களுக்கு முன் துன்புறுத்தப்படுகின்றனர். ராக்கிங் செய்பவர்களின் அறைகளுக்கும் மாணவர்கள் பலாத்காரமாக இழுத்துச் செல்லப்படுகிறார்கள். 

பல்கலைக்கழகம் வழங்கிய “தற்கொலைப்பட்டம்”

புதிய மாணவர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற ராக்கிங் சித்திரவதையை கட்டுப்படுத்த திராணியற்ற பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்கள் உடல், உளப்பாதிப்பால் உயிரை மாய்த்துக் கொண்டால் அதற்கு “தற்கொலைப்பட்டம்” சூட்டுகிறது. நிர்வாகம் கூறுகின்ற “சோடிக்கப்பட்ட” காரணம் என்ன தெரியுமா…..?  

“குறிப்பிட்ட மாணவிக்கு, மாணவனுக்கு படிப்பு சுமையாக இருக்கிறது. அவர்கள் வகுப்புக்கு ஒழுங்காக வரவில்லை, கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து சமர்ப்பிக்கவில்லை” என்று மரணித்த அனைத்து மாணவர்களினதும் பூதவுடலில் குற்றம் பத்திரத்தை சமர்ப்பிக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம். 

உண்மையில் இது தற்கொலையா? அல்லது ராக்கிங் தற்கொலைக்கு தூண்டுதலாக அமைந்ததா? இது பல்கலைக்கழக நிர்வாகம் வன்முறையை கட்டுப்படுத்த முடியாததினால் எடுக்கப்பட்ட முடிவு. பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கவேண்டிய சட்டப்படியான பொறுப்பு பல்கலைக்கழக நிர்வாகத்திற்குரியது. இந்தக் கடமையில் இருந்து நிர்வாகம் தவறியதால், உடல், உள ரீதியான பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கு பொருத்தமான கற்றல் வசதிகளையும், வாய்ப்புக்களையும் செய்து கொடுக்கத் தவறியதால் எடுக்கப்பட்முடிவு. 

இந்த முடிவை எடுப்பதற்கான அழுத்தம் எந்த ஆதரவும், உதவியும் அற்ற நிலையில், பல்கலைக்கழகத்தில் கொண்ட வெறுப்பின் வெளிப்பாடு. இதற்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்று கைகழுவியும், நழுவியும் விட்டு வெள்ளையடித்து கறையை மறைத்துக்கொள்கிறது நிர்வாகம். மாணவர்களுக்கு சமூகப்பாதுகாப்பை வழங்காது தட்டிக்கழித்து, ராக்கிங் வன்முறைக்கு உடந்தையாக இருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம்.  

காரணம் ராக்கிங்கார்கள் அரசியலின் உதவியுடன் தமக்கு எதிராக திரும்பிவிடுவார்கள், பகிஷ்கரிப்பில் ஈடுபடுவார்கள், தாக்குதல் நடத்தவும் தயங்கமாட்டார்கள் என்று அஞ்சுவதுதான். 

1. 1974இல் கணித ஆசிரியையான வித்தியலங்கார மாணவி கொ.குலரட்ன தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. 

2. 1975 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதலாவது மரணம் நிகழ்ந்தது. 22 வயதான விவசாய பீடமாணவி ரூபா ரத்னசீலி இராமநாதன் விடுதியில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்ததாக விசாரணை அறிக்கை கூறியது. ஏன் பாய்ந்ந்தார்? ராக்கிங் கார்களிடம் இருந்து தப்பிக்கொள்ளப் பாய்ந்தார். 

3.1997இல் இரு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 21 வயதான செல்வராசா வரப்பிரகாஷ் ராக்கிங் வன்முறையில் சிறுநீரகம் செயலிழந்ததால் மரணித்தார். கெலும் துவார விஜயதுங்க அம்பாறை தொழில்நுட்ப கல்லுரியில் ராக்கிங் வன்முறையில் அளவுக்கு அதிகமாக மது ஊடட்டப்பட்டதால் சிறுநீரகம் செயலிழந்து மரணிக்க வேண்டி ஏற்பட்டது. 

4. 2002இல் சமந்த விதானகே என்ற ராக்கிங் எதிர்ப்பு அணி மாணவன் ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் 200 ஜே.வி.பி. ஆதரவு மாணவர்களால் தாக்கப்பட்டு இறந்தான். அன்றைய ஜே.வி.பி. மாணவர் சங்கத்தலைவர் கம்பியூட்டரால் சமந்தவின் தலையில் அடித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இன்னும் மிருகத்தனம் சமந்தவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதையும் இந்தக் கூட்டம் தடுத்துள்ளது. இவர்கள்தான் காலிமுகத்திடல் போராட்ட வீரர்கள்.  

5. 2006இல் ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சன்டிமா விஜயபண்டார ராக்கிங் வன்முறையை ஆட்சேபித்து பதவியை இராஜினாமாச் செய்தார். இலங்கையின் பல்கலைக்கழக வரலாற்றில் ராக்கிங் வன்முறையை பகிரங்கமாக எதிர்த்து நின்று பதவி துறந்த ஒரே துணைவேந்தர். 

6. 2014இல் டி.கே. நிஸங்க என்ற மாணவனின் உடல் பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் மார்க்கஸ் பெர்ணாண்டோ ஆண்கள் விடுதியின் அருகில் மரமொன்றில் தொங்கியது. இதுவும் தற்கொலை என்று விசாரணை அறிக்கை கூறியது. 

7. 2019இல் 23 வயதான டில்கன் விஜயசிங்க மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இறந்து கிடந்தான். தற்கொலை என்றது விசாரணை. இவர் யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் இருந்து இடமாற்றம் பெற்றவர். 

8. 2022இல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்தன.  

இதில் இன்னொரு சுவாரஸ்யமான தகவலும் உண்டு.   அதுதான் யாழ். பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் தனக்கு பதவி கிடைக்கவில்ல என்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது .   

9. அண்மையில் அஞ்ஞன குலதுங்க என்ற 24 வயதான 4ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழக உளவியல் கற்கைநெறி மாணவனின் உடல் மகாவலியில் கரையொதுங்கியது. தற்கொலை என்று கூறப்படுகிறது. இவர் ராக்கிங் எதிர்ப்பாளர் என்று கூறப்படுவதுடன், இப்படியானவர்களை தீண்டத்தகாதவர்களாக ஜே.வி.பி ஒதுக்கி வைத்துள்ளது. இவர்களுக்கு பேராதனையில் தனி கன்ரீனாம். “அள” தனிமை / தனித்துப்போ என்று இவர்களுக்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள் சமத்துவ சமதர்ம சக்திகள். 

 ஒருவரின் தற்கொலை மரணம் குறித்த ஒரு செய்தி 20 பேரை இக்கட்டான நிலையில் நாமும் அப்படி ஒரு முடிவை எடுத்தால் என்ன? என்ற முடிவுக்கு தள்ளி விடுகிறது என்று கூறுகிறார்கள் உளவியலாளர்கள். 

தமிழ்பேசும் கல்விச்சமூகம் செய்யக்கூடியது என்ன ?

சுரேன் ராகவன் கூறுகின்ற கொழும்பு சட்டங்கள் முழுமையான பாதுகாப்பை வழங்கப்போவதில்லை. அரசியலுக்கு அப்பால் வடகிழக்கு பல்கலைக்கழக நிர்வாகங்கள், பல்கலைக்கழக கல்வி, கல்விசாரா உத்தியோகத்தர்கள் சங்கம், பல்கலைக்கழக மாணவர் சங்கம், பல்கலைக்கழக பழைய மாணவர் (ALUMI) சங்கம், சிவில் பொது அமைப்புகள் போன்றவற்றின் ஊடாக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். தமிழ் பேசும் மக்களின் இன்றைய நிலையில் எமது எதிர்காலச் சந்ததிக்கு சிரேஷ்ட மாணவர்கள் செய்யும் வரலாற்றுத்தவறு இது என்பது உணர்த்தப்படவேண்டும். 

இது பல்கலைக்கழகத்திற்கு உள்ளும், வெளியும் செய்யப்பட வேண்டும். உயர்தர வகுப்பு பாடசாலைகளில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களுக்கு ராக்கிங் பற்றிய முழுமையான தகவல்கள் வழங்கப்படவேண்டும். தற்காப்பு தந்திரங்கள் போதிக்கப்படவேண்டும். புதிய மாணவர்களுக்கு உளவியல் மனவலுவூட்டல் விரிவுரைகள் அவசியம். 

பல்கலைக்கழக நிர்வாகம் இது விடயத்திலும் அக்கறையற்று இருக்குமானால் சிவில் பொது அமைப்புகள், கல்விச்சமூகம் மற்றும் அமைப்புக்களும் நிர்வாகத்திற்கு எதிராக ஜனநாயக ரீதியான போராட்டங்களில் ஈடுபடவேண்டும். இவை மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுதக்கூடாது. 

கலை, இலக்கிய முயற்சிகளுக்கூடாகவும் சில நகர்வுகளை செய்யமுடியும். நாடகம், கூத்து பயிற்சிப் பட்டறைகள் போன்று ராக்கிங் எதிர்ப்பு பயிற்சி பட்டறைகளை மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்பாடு செய்ய முடியும். கலை வடிவங்களினூடாக விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தவேண்டிய தேவை இருக்கிறது. 

இவை அனைத்தும் மரணவீட்டில் உரிமைகோரும் அரசியல் கலாச்சாரத்திற்கும், கட்சி அரசியலுக்கும் அப்பால் முற்றுமுழுதாக பொதுமக்களால், பொது அமைப்புக்களால் முன் எடுக்கப்படவேண்டும். 

இது எதிர்காலச் சந்ததிக்கான இன்றைய சமூகத்தின் கட்டாய கடமையாகும்.   

வேண்டுமானால் தமிழ்பேசும் அரசியல்வாதிகள் கொழும்பு பாராளுமன்ற – சட்டசபையில் சுரேன் ராகவனுடன் இணைந்து சட்டவாக்க நடைமுறையினூடாக சில மாற்றங்களைச் செய்ய முனையட்டும். 

தென் இலங்கைப் பல்கலைக்கழகங்களை தனது மாணவர் அமைப்புக்களினூடக, தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ராக்கிங் வன்முறைக்கு முற்றிலும் காரணமாகவுள்ள ஜே.வி.பி. மாணவர்சங்கங்களுக்கு பின்னால் போவதை வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள் கூட்டத்தோடு கோவிந்தா போடாமல் மறுபரிசீலனை செய்யவேண்டும்.