— அகரன் —
சிறுகதைக்கு புக்கர் பரிசும், இலக்கியத்திற்கான நோபல் பரிசும் பெற்ற அலிஸ் மன்றோ கனடாவில் வாழ்கிறார். அவர் தினமும் ஏதாவது ஒரு நற்செயலை செய்வதை வழக்கத்தில் கொள்வாராம். வீதியில் வீசப்பட்ட குப்பை ஒன்றை எடுத்து குப்பைத்தொட்டியில் போடுவது, வாழ்த்துச் சொல்வது, பறவைக்கு உணவிடுவது, அல்லது குறைந்தது வீட்டில் வளரும் செடிகளுக்கு நீர் ஊற்றுவது வரை அது மிக எளியது.
இதைப் படித்ததும் ஒவ்வொரு மனிதரும் கடைபிடிக்கக் கூடிய எளிய கொள்கை. இதை கடைபிடித்தால் மனங்கள் பூவாகி மானுடம் இவ்வளவு அமைதி பெறும் என்று நினைத்துக்கொண்டேன்.
அன்றிலிருந்து தினமொரு நற்செயல் என்பதை கடைப்பிடிக்க ஆரம்பித்தேன். எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சி கிணறு வெட்டும்போது நீர் ஊற்றுக்கண்டு புகுபுகுவென கிணறு நிறைவது போலமனம் நிறைந்தது.
ஒரு நாள் இரண்டு சாப்பாடுகளை பார்சல் கட்டிக்கொண்டு வீடு வந்தேன். வீட்டை நெருங்கும்போது வீதியோரம் ஒரு மனிதர் ஒரு தொப்பியை வானம் பார்க்க வைத்து விட்டு அருகே வயலினை வைத்து விட்டு எங்கோ பார்த்தவாறு இருந்தார். அந்த மனிதருக்கு முகம் நிறைந்து வழியுமாறு பசி இருந்தது. பசி இல்லாவிட்டால் அந்த வயலின் மூலம் தன் சோகப் பாடலை பாடியிருப்பார். என்னிடம் இருந்த ஓர் உணவுப் பார்சலை நீட்டியவாறு ‘நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் இந்த உணவைத் தர விரும்புகிறேன்’ என்றேன். அவர் அதிர்விலிருந்து மீண்டவராக இருகைகளையும் நீட்டினார். அதை பிரித்து அந்த உணவை பார்த்ததுமே உண்ண ஆரம்பித்தார். நான் 500 மீட்டர் நடந்து வந்த பிறகு என் காதுகளுக்கு ஓர் குரல் ‘நன்றி மனிதா’ என்று கேட்டது. என் மனமெங்கும் பூக்கள்!
இரண்டு சிறுவர்கள் போட்டிக்காக சைக்கிள் ஒட்டி வந்தார்கள். பன்னிரண்டு வயது இருக்கலாம். நான் எதிரே நடந்து வந்து கொண்டிருந்தேன். என் அருகே வந்ததும் அதில் ஒரு சிறுவன் சறுக்கி விழுந்தான். தார்த்தரை என்பதால் பலத்த அடி. பொதுவாக யாரும் விபத்துக்குள்ளானால், உயிர் போகிற காரியம் என்றாலும் அவர்களை தொடுவதை யாரும் விரும்புவதில்லை. காரணம் தவறாக அவர்களுக்கு முதலுதவி செய்து மேலும் ஆபத்தை விளைவிக்கக் கூடாது என்பது. முதலுதவி வண்டி வரும்வரை காத்திருக்க வேண்டும். அச்சிறுவன் விழுந்தவாறு அழுதான். வலி பெரிதாக இருக்கலாம். தலை அடிபட்டிருக்கும். மற்றச் சிறுவன் பதறியவாறு இருந்தான். வன்சோ… வன்சோன்… என்று அவனை தூக்க முயன்றான். நான் அவனைத் தடுத்தேன். விபத்துக்குள்ளான அவர்களை அவசரமாக தூக்குவது தவறு என்று அறிந்துள்ளேன். அவன் தலையை என் மடியில் வைத்தவாறு அவன் மயங்குவதைத் தடுக்க கேள்விகளைக் கேட்டவாறு அவசர வைத்திய வண்டிக்கு அழைத்தேன். அவனிடம் தாயாரின் தொலைபேசி இலக்கத்தை கேட்டு அழைத்து விடயத்தை சொன்னேன். அவர், தான் உடன் வருவதாகக் கூறினார். வைத்தியவண்டி வரமுதல் அவன் தாயார் மிக உயர்ந்த பெறுமதியான டெஸ்லா காரில் அங்கு வந்து மகனைப் பார்த்து பதறாமல் என் மடியிலிருந்து தாங்கியவாறு ‘நன்றி கனவானே! உங்களுக்கு முதலுதவி தெரிந்திருக்கிறது. ‘மிக்க நன்றி’ என்றார். நான் புன்னகைத்து ‘இது மனிதக் கடமை’ என்று விட்டு வீடு வந்தேன்.
மூன்றாவது நாள் ஒரு பெண்ணின் குரல் கைபேசியில் வந்தது. ‘வன்சோனுக்கு ஒன்றும் இல்லை. சிறிதாக தலை அடிபட்டுள்ளது. நான் ஒரு வைத்தியர். நீங்கள் என் மகனுக்காக காட்டிய அக்கறைக்கு நன்றி’. என்றார். மனமெங்கும் பூப்பூத்தது.
மற்றொருநாள் வனப் பாதையில் நடந்து கொண்டிருந்தேன். அந்த ஒற்றையடிப் பாதையால் நடைப்பயிற்சியாளர்களும், உந்துருளி ஓட்டிகளும் இயற்கையை அனுபவித்து பயணம் செய்வர். அதற்காகவே நகரின் அருகில் அழிக்காமல் வைத்திருக்கும் காடு அது. அப்பாதையில் ஒரு கூரான ஆணி இருந்தது. அது மிக வலுவாக இருந்தது. அதை அரை மணி நேரம் செலவழித்து அந்த இடத்திலிருந்து அகற்றினேன். எத்தனை உயிர்களின் குருதியைக் குடிக்கவோ, வண்டிகளின் காற்றைக் குடிக்கவோ காத்திருந்த ஆணியை அகற்றியது மனதில் மலர்களைப் பூக்கச் செய்தது.
ஒரு அதிகாலை. இரவு வேலை முடித்து இரவைக் குடித்த வெறியில் தள்ளாடித்தள்ளாடி வந்துகொண்டிருந்தேன். கால்கள் என்னோடு வரமாட்டேன் என்றது.
அப்போது வீட்டின் அருகே ஒரு புறா தத்தித்தத்தி நடந்து கொண்டிருந்தது. பார்த்தால் அதன் கால்கள் நைலோன் கயிற்றில் சிக்குண்டு இருந்தது. அதை கவனிக்க வேறு புறாக்கள் இல்லை. எப்படி தனித்துப்போனதோ தெரியவில்லை. உணவு தேடிக் கொண்டிருந்தது.
எனது காருக்குள் பிஸ்கட் இருந்தது. அதை எடுத்து வந்து அதற்கு போட்டபோது அது அருகே.. அருகே.. மானடப் பயத்தில் மெதுவாய்.. மெதுவாய்… வந்தது. கையில் தூளாக்கிய பிஸ்கட்டை வைத்திருக்க கையில் கொத்திக்கொத்தி படபடப்புடன் அதைச் சாப்பிட்டது. அதன் சொண்டுகளின் தீண்டலால் என் உடலில் மென்மயிர்கள் எழுந்து பார்த்தன. அது தன் பயத்தையும் இடையிடையே காட்டியது. மறு கையால் அதைப் பிடித்தபோது பறக்க முயன்று தோற்றது. அதன் கால்களை நைலோன் சிக்கில் இருந்து மீட்டு பறக்க விட்டபோது, அதன் லாவகமான பறப்பு விடுதலையின் காட்சியை காற்றில் வீசியது. முதன்முதல் அப்புறாவிற்கு மனிதர்களில் ஆண்டாண்டு காலம் இருந்த பயம் நீங்கி இருக்கும் என்று நினைத்தேன். அப்போது மனம் எங்கும் பூக்கள் நிறைந்தது.
அன்றொருநாள் முதியவர்கள் தங்கள் காருக்குள் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். நான் ‘துணை செய்யலாமா?’ என்றுவிட்டு பதில் வர முதல் பொருட்களை ஏற்ற ஆரம்பித்தேன். அவர்கள் முகங்கள் கோடுகளால் மேலும் நிறைந்தன. அந்த முதிய பாட்டி வைரஸ் பரவலைக்கூட சிந்திக்காது என்னை அணைத்து கன்னத்தில் முத்தம் தந்தார். அந்த அன்பு என் கன்னத்தை விட்டு வாழ்நாள் பூராக போகாது. அவரின் கணவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் வியந்த பார்வையில் என் இதயம் பூக்களால் நிறைந்து கொண்டிருந்தது.
வீட்டில் அவசியமற்று நெகிழி பயன்படுத்தாமல் இருப்பது, தண்ணீரை வீணாக செலவழிக்காமல் இருப்பது, முடிந்தவரை பொருள் மாடங்களுக்கு துணிப்பைகளை கொண்டு செல்வது. வீணான மின் பாவனையைத் தவிர்ப்பது, அவசியமற்ற ஆடம்பரங்களைத் தவிர்ப்பது, பொருட்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவது இப்படிப்பட்ட எல்லா செயல்களும் பூமியின் ஆயுளுக்கு தனிமனித பங்களிப்பாக இருக்கும். புவி வெப்பமடைதலில் இருந்து காக்கும். இப்படி ஒங்வொரு முறை செய்யும்போதும் மனமெங்கும் பூக்கள் பூக்கும்.
நான் அவ்வப்போது புதிதாக பிரான்சுக்கு வந்தவர்களுக்கு மொழி உதவி புரியச்செல்வதுண்டு. அன்று ஆனந்தன் அண்ணர் அழைத்து அந்த உதவியை கேட்டார். ‘புதிதாகத் திருமணம் செய்து வந்த ஒரு பிள்ளைக்கு அடிக்கடி வலிப்பு வருதாம் தம்பி, ஒருக்கா வைத்தியசாலைக்கு நீங்கள் போய் வைத்தியரோடு பேச உதவ முடியுமா?’
‘அவாவுடைய கணவர் மொழி பேச மாட்டாரோ?’
‘இல்லையாம் தம்பி! அந்தப் பொடியன் தான் காசுக்கெண்டாலும் யாரையாவது பிடித்துத் தரச்சொல்லிக் கேட்டவன்.’
பொதுவாக மொழி தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு உதவச் சென்றால் 50€, 100€ என்று கூலி பெறுவதையும் சிலர் தொழிலாகச் செய்கிறார்கள்.குண்டுவீச்சில் வீழ்ந்துகிடந்த குழந்தையின் காப்பை கழற்றும் பேர்வழிகளும் இல்லாமலில்லை. ஆனால் சகமனிதனுக்காய் நேரம் செலவிடும் மனிதரைப் பார்த்தால் மனமெங்கும் பூக்கள்தான்.
அப்படித்தான் அந்த வைத்தியசாலை முன்னே அந்த இளம் ஜோடியைச் சந்தித்தேன். அந்தப் பெண் பாவாடை சட்டையுடன் ஊரில் பார்த்த இளம் பிள்ளைகளின் தோற்றத்தில் இருந்தார். இருவருக்கும் இடையில் ஆறடி இடைவெளி இருந்தது. அந்தப் பையன் காதில் ஒரு மிக மலிவான தோடும், காலில் விலை உயர்ந்த பாதணி, குறுக்காக பூணூல் போல் மாட்டப்பட்ட சிறு பை என்று பெண்ணை விட அலங்காரமாக இருந்தான்.
கைலாகு கொடுத்து ‘நன்றி அண்ணா வந்ததற்கு’ என்றான். பெயர் விபரம் கேட்டுவிட்டு அந்தப் பெண்ணைப் பார்த்து ‘வணக்கம்’ என்றேன். வாய் அசைவு மட்டும் இருந்தது. குரல் வராமல் ‘வணக்கம்’ என்ற காத்து மட்டும் என்னை அடைந்தது.
‘தம்பி வந்து கனகாலமோ?’
‘‘ஏழு வருடம்.’
ஏன் இன்னும் மொழி படிக்கேல்லை?’
‘கடன், வேலைதானே அண்ண.’
‘இங்கு வாழ்வதற்கு வேலையை விட மொழி முக்கியமல்லோ?’
‘ஓமண்ண.’
‘சரி தங்கச்சின்ர பிரச்சனையை முதலே எனக்கு சொல்லுங்கோ. வைத்தியருக்கு சரியாகச் சொல்லவேணும்.’
‘அண்ண, இவா வந்து ஆறு மாதம். இங்கு வந்த பிறகு மூன்று தடவை வலிப்பு வந்திற்ருது. அதுதான்…..’ என்று இழுத்தான்.
‘தங்கச்சிக்கு இங்கு ஒருவரும் இல்லையோ?’
பதில் இடம் வலமாக தலை ஆட்டுவதாக இருந்தது.
‘வாயைத் திறந்து சொல்லன்டி….’
என்று அவன் கத்தினான்.
அந்தப் பெண் அதிர்ந்து…. பயந்து ‘ஒருவரும் இல்லை’ என்றுவிட்டு மறுபக்கம் பார்த்தது. எனக்கு ஓரளவு எல்லாம் புரிய ஆரம்பித்தது.
‘தம்பி இப்படிக் கதைக்காதையும். புதிதாக வந்த பிள்ளையல்லோ…?’
என்றுவிட்டு வைத்தியசாலைக்குள் நுழைந்தோம்.
எங்கள் வரவைப் பதிந்து விட்டு அமர்ந்திருந்தோம். குறிப்பிட்ட நேரத்திற்கு வைத்தியர் அங்கே வந்து
‘அமலன், இசைநிலா’
என்றார். நாம் மூன்று பேர் இருந்தது வைத்தியரைக் குழப்பி இருக்க வேண்டும். நான் முந்திக் கொண்டு இசைநிலாவைக் காட்டி விட்டு ‘நான் மொழிமாற்றி உதவ வந்துள்ளேன்’ என்றேன். கணவரை அமர்ந்திருக்குமாறு கூறிவிட்டு இசைநிலாவிற்கும் எனக்கும் கைலாகு கொடுத்து அழைத்துச் சென்றார் அந்த இளம் வைத்தியர். சுறுசுறுப்பாகவும், பெண்ணாகவும், ரோஜாப்பூவின் இதழ்கள் போல் கன்னங்களோடும், தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பாவிப்பவராகவும் இருந்தார். உதடுகளில் இருந்து வரும் வார்த்தைகள் கருவறையில் இருந்து வந்தது. பிறந்த குழந்தையின் பாதம் போல் உதடுகள் சாயம் இன்றி இருந்தது.
மொழி மாற்றி உதவுவதற்கு நன்றி’ என்றவாறு அவர் இசைநிலாவைப் பற்றிய விபரங்களை கேட்டு கணனியில் பதிந்தார்.
‘பரம்பரையாக யாருக்காவது இந்த நோய் இருக்கிறதா?’
என்ற கேள்வியை வைத்தியர் கேட்டதும் இசைநிலாவின் கண்கள் ஓடிச்சிவந்தது. ‘அண்ணா, பரம்பரை என்று யாரும் இல்லை’ என்றாள்.
‘அம்மா, அப்பா இல்லையா? இரத்த உறவுக்காரர்..?’
எல்லாவற்றுக்கும் இல்லை என்றாள். அவள் கண் கலங்கியதை வைத்தியரும் இனங்கண்டு விட்டார்.
‘சிறுவயதில் மூளைக்காய்ச்சல் வந்ததா?
தெரியாது.
‘தங்கச்சி நீங்கள் விபரமாய்ச் சொல்லனும். அப்பத்தான் டாக்டர் உங்கள் வருத்தத்திற்கு காரணம் கண்டுபிடிப்பார்’ என்றேன்.
‘அண்ணா! எனக்கு அம்மா, அப்பா இல்லை. சண்டையில் செத்திட்டினம். நான் செஞ்சோலைப் பிள்ளைகளோட வளர்ந்தனான். பிறகு வவுனியாவில் சிவன் கோவில் காப்பகத்தில் சர்வாணி அம்மா தான் வளர்த்தவா. பிறகு அமலன் என்னைத் திருமணம் செய்தவர்’ என்றாள்.
‘அம்மா, அப்பாக்கு உறவினர்கள் இல்லையோ?
‘தெரியேல்லை. அம்மாவும் அப்பாவும் இயக்கத்தில் இருந்தவை. அப்பா பொறுப்பில் இருந்தவர். எங்களுக்கு இயக்க அண்ணா, அக்காவையத்தான் தெரியும். அம்மா ஒரு செல் தாக்குதலில் 2008ல் இறந்ததும் என்னை அப்பா செஞ்சோலையில் விட்டுவிட்டார். அண்ணாவை அறிவுச்சோலையில் விட்டுவிட்டார். அதற்குப் பிறகு அண்ணாவையும், அப்பாவையும் நான் பார்க்கவே இல்லை.’
‘சரி தங்கச்சி; பொறுங்க. ஓரளவு வைத்தியருக்கு உங்கள் நிலைமையைக் கூறுகிறேன்.’
கதையைக் கேட்ட வைத்தியரின் முகம் மாறியது.
‘இங்கு உங்களுக்கு ஏதும் காய்ச்சல் வந்ததா? வேறு ஏதாவது அதிர்ச்சியான சம்பவம் உண்டா?’
என்று கேட்குமாறு வைத்தியர் கூறினார். அதை இசைநிலாவிடம் கேட்டேன்.
ஒரே பதில் ‘பயமாய்க் கிடக்குது’.
அவள் கண்கள் அசையாது எதிரே இருந்த ஜன்னலுக்குள்ளால் வந்த வானத்தை பார்த்து நின்றது.
‘ஏன் தங்கச்சி ..?’
அண்ணா, உங்களோட ஒருக்கா தனியக் கதைக்கவேணும்.’ வைத்தியரிடம் வேண்டுதலைக் கூறினேன். அவர் தன் அறைக்குள் இருந்த தன் தனிப்பட்ட அறையைத் திறந்து விட்டார்.
இசைநிலாவோடு அதற்குள் சென்றேன். என் இதயம் தன் தொழிலை வேகமாக்கியது. சென்று சில நொடிகளில் இசைநிலா தன் பாவாடையைத் தூக்கி காலின் மேற்பகுதியை காட்டினார். வட்ட வட்டத் தீக்காயங்கள் சிகரெட்டால் சுடப்பட்டு சில பொங்கி இருந்தன. ஒரு போராளித் தளபதியின் குழந்தையின் கால்கள் புள்ளிக் காயங்களால் நிறைந்திருந்தது. அவள் பின் விம்மி அழ ஆரம்பித்தாள்.
‘அண்ணா ஏன் கலியாணம் கட்டினேனோ தெரியவில்லை. அமலன் கொடியவன். ஒரே சித்திரவதை. குடித்து விட்டு அவன் என்னை விலங்கை விட மோசமாக நடத்துகிறான்’ என்றாள். ‘என் உடலெங்கும் நடுங்க ஆரம்பித்தது.
‘அண்ணா எனக்கு ஒருத்தரும் இல்லை. எனக்கு ஒரு அண்ணா இருந்தான். செஞ்சோலையில் இருந்தவனுக்கு கடைசி நேரம் என்ன நடந்தது என்று தெரியவில்லை. யாரும் இல்லை என்பதால் அமலனுக்கு வசதியான பெண்ணாய்ப் போய்விட்டன். இப்படியே போனால் சீக்கிரம் செத்திடுவன். என்ர அண்ணாவாய் உங்களை நினைக்கிறன். என்னைக் காப்பாத்துங்க.’
நான் தாமதிக்கவில்லை. வைத்தியரை அழைத்து விவரத்தைக் கூறினேன். அவரின் முகத்தில் இருந்து குருதி வெளியேறி விடும் போல் இருந்தது. வெளியே சென்று பார்த்தார். அமலன் காதுக்குள் கேட்பானைப் போட்டு பாடல்கள் கேட்டவாறு இருந்தான்.
‘இன்னும் சற்று நேரம் காத்திருங்கள் அமலன்’
என்றுவிட்டு உள்ளே வந்த வைத்தியர் உடனே போலீசுக்கு அழைப்பெடுத்தார். மேலும் விபரங்களைக் கேட்டுப் பதிந்த வைத்தியர் ‘lamictal’ என்ற மாத்திரையை எழுதித் தந்தார். ‘காலையும் மாலையும் வாழ்க்கை பூராவும் இதை அவசியம் பாவிக்க வேண்டும். தனியே எங்கும் செல்லக்கூடாது’ என்று கூறினார். உளவியல் ஆலோசனை வைத்தியரை உடன் தொடர்பு கொண்டு அவரை சந்திக்க அனுமதி பெற்றிருந்தார். அப்போது வெளியில் போலீஸ் ‘அமலன்’ என்ற பெயரை விசாரிக்கும் சத்தம் கேட்டது. அவர்கள் அவன் கைகளில் மாலை அணிவித்து அழைத்துச் சென்றனர்.
நான் இசைநிலாவை வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். என் மனைவியிடம் விவரத்தைக் கூறி அவளை ஒப்படைத்து விட்டு வேலைக்குச் சென்றேன். மாலை வீடு வரும்போது மனைவி இசைநிலாவின் காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டிருந்தாள். அவள் அழுது கண்கள் பூத்திருந்தது. அன்று அலிஸ் மன்றோவின் நற்செயல் பூரணம் அடைந்ததாக உணர்ந்தேன். வரப்போகும் எந்த ஆபத்தையும் இசைநிலாவிற்காகச் சண்டையிட தயாரானது மனது. அலிஸ் மன்றோவின் நாளொரு நற்செயல் முழுமையான பலத்துடன் போரிட ஆரம்பித்தது.
இது அலிஸ் மன்றோவிற்க்கு தெரியாது. தெரியவேண்டுமென்றால் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துக்கு தெரியவேண்டும். அவையெல்லாம் கடினமான காரியம். ‘நாளொரு நற்செயல்’ மிக.. மிக.. எளிமையான காரியம். அது மனதில் பூக்களை நிறைக்கும்.