வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு 

வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு 

— கருணாகரன் — 

“வடக்கில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இது மிகக் கவலையளிக்கும் நிலையாகும். பாடசாலை மாணவர்களும் பகிரங்கமாகப் போதைப் பொருள் பாவனையில் ஈடுபடும் அளவுக்கு நிலைமை வளர்ந்திருக்கிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு பாடசாலைகளின் பங்களிப்புப் போதாது. தங்களுடைய மாணவர்கள் போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிந்து கொண்டே பல பாடசாலைகள் அவற்றை மறைக்க முற்படுகின்றன. தங்கள் பாடசாலையின் பெயர் கெட்டு விடும் என்ற தவறான (மூடத்தனமான) கற்பிதமே இதற்குக் காரணம். தங்கள் மாணவர்கள் பாதிக்கப்படைந்து கெட்டுப்போவதைப் பற்றிச் சிந்திக்காமல், கவலைப்படாமல் தங்கள் பாடசாலைகளின் பெயர் கெட்டு விடும் என்று சிந்திப்பது எவ்வளவு முட்டாள்தனமானது?உண்மையில் இது “கொலைக்கு நிகரான செயற்பாடாகும்…” என்று தெரிவித்திருக்கிறார் யாழ் போதனா மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன். 

“வடக்கில் – குறிப்பாக யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையினால் பெருமளவு இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் ஊசி மூலம் போதைப் பொருளை பயன்படுத்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அண்மையில் இவ்வாறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூன்று பேர் சிகிச்சை பயனற்று உயிரிழந்து விட்டனர். ஒருவர் மருத்துவர்களின் மிகுந்த முயற்சியின் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளார். ஊசி மூலம் போதைப் பொருளை உட்செலுத்தியவர்களின் இதயமும் நுரையீரலும் கிருமித் தொற்றுக்குள்ளாகிறது. இப்படியானவர்களைக் குணப்படுத்துவதற்கு லட்சக்கணக்காகச் செலவு ஏற்படுகிறது. குடும்பத்தினரும் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகின்றனர். கடந்த ஆண்டு 10 பெண்களும் 491 ஆண்களும் போதைப் பொருள் பாவனைக்குட்பட்டவர்களாக சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 13 பெண்களும் 854 ஆண்களுமாக இந்த எண்ணிக்கை கூடியுள்ளது. பத்துப் பேர் மரணமடைந்துள்ளனர். இது ஒரு சமூகத் தொற்றுப் போல இளைய தலைமுறையினரை மோசமாகப் பாதிக்கிறது. ஆகவே இதைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். முக்கியமாக இதைப்பற்றிய விழிப்புணர்வு அவசியம்….” என்று கேட்டிருக்கிறார் யாழ் போதான மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி. 

இதேவேளை, பிரபலமான பாடசாலை ஒன்றில் மூன்று மாணவர்கள் போதைப்பொருளைப் பாவித்தமையினால் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னொரு பாடசாலையில் போதைப் பொருட்களுடன் சில மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவை வெளியே தெரியவந்த சேதிகள், தகவல்கள். இதை விட வெளியே தெரியவராத நிலையில் பல பிரச்சினைகள் உள்ளன. ஆனால், இன்று போதைப் பொருள் பாவனையில் தமிழ் இளையோர் சமூகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று எல்லோருக்குமே தெரியும். அப்படித் தெரிந்திருந்தாலும் எவரும் இதைக்குறித்து சீரியஸாகச் சிந்திப்பதாகத் தெரியவில்லை. 

இந்த நிலைமையைக் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்திருக்கும் கருத்துகள் முக்கியமானவையாகும். “போதைப் பொருள் பாவனை அதிகரித்துச் செல்கிறது என்றால் அதற்கு எம்முடைய சமூகம் வீழ்ச்சியடைந்துள்ளது என்றே அர்த்தமாகும். சமூக வீழ்ச்சிக்குப் பிரதான காரணம், சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாமையே. சரியான அரசியற் தலைமைத்துவத்தின் வழிகாட்டல் இல்லாத சமூகங்களின் நிலைமை எப்போதும் இப்படித்தானிருக்கும். இன்று எமது சூழலில் அதிகரித்திருக்கும் இயற்கை வளத்தைச் சிதைக்கும் சட்ட விரோத மணல் அகழ்வு, காடழிப்பு மற்றும் சமூகத்தைப் பாதிப்புக்குட்படுத்தும் மது உற்பத்தி (கசிப்புக் காய்ச்சுதல்) போன்றவற்றில் ஈடுபடுவோரில் அதிகமானோர் இளவயதினராகவே உள்ளனர். இவர்களில் பலரும் சில அரசியற் கட்சிகளின் ஆட்களாக உள்ளனர். இப்படியிருக்கும்போது இவர்களால் எப்படி இவற்றைக் கட்டுப்படுத்த முடியும்?மக்களுக்குச் சரியான வழிகாட்டலைச் செய்ய முடியும்? இன்று போதைப் பொருள் பாவனையும் விற்பனையும் அதிகரித்துள்ளது என்று மருத்துவத்துறையினர் கவலை தெரிவிக்கின்றனர். போதைப் பொருளைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டுள்ளோருடைய மருத்துவத்தை கவனிப்பதால் இந்தப் பாதிப்புப் பற்றி அதிகமாக அறிந்தவர்களாக அவர்களே இருக்கின்றனர். அதேவேளை இது கட்டுப்படுத்தப்படாது விட்டால் சமூகத்தை அளித்து விடும் என்று எச்சரிக்கின்றனர். ஆனால், இதைக்குறித்து ஊடகங்கள்  பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. சமூக மட்ட அமைப்புகள், அரசியற் தலைமைகள் எல்லாம் பாராமுகமாகவே உள்ளன. அல்லது இது அரசாங்கத்தின் திட்டமிட்ட சதி. புலனாய்வுத் துறையின் கைவரிசை என்று சாதாரணமாகச் சொல்லி விட்டுப் போய் விடுகிறார்கள். எப்படியிருந்தாலும் பாதிக்கப்படுவது எமது பிள்ளைகள் என்பதால் இதைக் கட்டுப்படுத்துவதைப் பற்றியே நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். பொலிஸ் மற்றும் சட்டத் தரப்புகள் அங்கங்கே சில நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இதைக் கட்டுப்படுத்தும் அளவுக்கோ கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்ததாகவே இல்லை. அப்படி இந்தத் தரப்புகள் அனைத்தும் செயற்பட்டிருந்தால் இன்றைய அதிகரிப்பு நிலை ஏற்பட்டிருக்காது அல்லவா! ஆகவே இனியும் தாமதிக்காமல், ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இது மிகமிக அவசியமானது. 

“போதைப் பொருட் பாவனையில் பாடசாலை மாணவர்கள் தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட இளைய தலைமுறையினரே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உடல், உள ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர். சிலர் இதற்காக வன்முறைகளிலும் திருட்டிலும் ஈடுபடுகின்றனர். அண்மையில் யாழ்ப்பாணத்தில் சகோதரால் சகோதரி ஒருவர் பாலியில் வன்முறைக்குள்ளாகிய நிலையில் தற்கொலை செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. இதெல்லாம் நல்ல அறிகுறிகளல்ல. இளைய தலைமுறை பாதிக்கப்பட்டால் எதிர்காலச் சமூகமே பாதிப்புக்குள்ளாகும். இன விடுதலை, தேச விடுதலை என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இனத்திற்கும் தேச விடுதலைக்கும் உரியவர்கள் எங்களுடைய இளைய தலைமுறையினரே. ஆகவே நிலத்தைப் பாதுகாப்பதைப்போல, எமது மொழியை, பண்பாட்டை, வளங்களைப் பாதுகாப்பதைப்போல எமது இளைய தலைமுறையையும் நாம் பாதுகாக்க வேண்டும். அவர்களே எமது மிகச்சிறந்த வளமாகும். 

“எனவே, இதைக்குறித்து நாம் மிகக் கரிசனை கொண்டு செயற்பட வேண்டும். ஆனால் இந்த மாதிரிப் பிரச்சினைகளுக்கு ஏதாவது தொண்டு நிறுவனங்கள் நிதி அளித்தால் மட்டுமே விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று பலர் கருதுகிறார்கள். சுயஈடுபாட்டுடன் இதைக்குறித்துச் செயற்படுவதற்கான ஆட்கள் குறைவாகி விட்டது” என்று தெரிவித்துள்ளார் சந்திரகுமார். 

போதைப் பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டோரை சிகிச்சையளித்துப் பராமரிப்பதற்கான நிலையங்கள் வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி (தருமபுரம்) போன்ற இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. இதில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் சிகிச்சைக்கு அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளனர். இதைவிட போதைப் பொருள் பாவனைக்குட்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் மிகுந்த மன நெருக்கடிக்கும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் உள்ளாகிய நிலையில் பலர் இருக்கிறார்கள். இவ்வாறான நிலை முன்னர் ஒருபோதுமே இங்கே இருந்ததில்லை. ஆகவே நிச்சயமாக இது சமூகத்தின் வீழ்ச்சியே ஆகும். 

நாளைக்கு உங்களுடைய உறவுச் சூழலில், உங்களுடைய பிள்ளைகள், சகோதர, சகோதரிகள்  இவ்வாறு பாதிக்கப்படலாம். ஏனென்றால் தினமும் கஞ்சா, போதைப் பொருட்கள் போன்றவற்றைக் கைப்பற்றும் நடவடிக்கைகள் நடக்கின்றன. இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது ஒரு தொகுதி பொருட்கள் கரையில் ஒதுங்கியுள்ளதாக வடக்குக் கடற்கரைப் பிரதேசமொன்றிலிருந்து செய்தி வந்துள்ளது. கைப்பற்றப்படுவதை விட பாவனையாளர்களின் கைகளுக்கு மாறிக் கொண்டிருப்பதே அதிகமாகும். 

ஆகவே தாமதிக்காமல் இதைக் கட்டுப்படுத்தக் கூடிய, முறியடிக்கக் கூடியவாறு  விரைந்து செயற்பட வேண்டும். இதற்கு முருகேசு சந்திரகுமார் கூறுவதைப்போல, ஏதாவது தொண்டு நிறுவனம் உதவினால்தான் எம்மால் விழிப்புணர்வைச் செய்ய முடியும் என்று காத்திருக்காமல் உடனடியாகவே களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். பாடசாலைகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசியம். வீட்டிலும் பெற்றோர் பிள்ளைகள் தொடர்பாக கூடுதலான கரிசனையைக் கொள்வது தேவை. மாற்று வழிமுறைகளைக் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். 

இதோடு நாம் மேலும் சில விடயங்களைப் பார்க்க வேண்டும். 

இளவயதுக் கர்ப்பங்களும் வடக்கில் அதிகமாகி விட்டது. கர்ப்பமாகிய பெண்கள் கைவிடப்படுவதும் கூடியுள்ளது. இதைக்குறித்த புள்ளி விவரங்களோடு செய்தி அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன். இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியவர்களைப் பாதுகாத்துப் பராமரிப்பதற்கான மையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறே சிறுவர் இல்லங்களில் பிள்ளைகள் சேரும் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு முடிவற்குள் இவ்வாறு சேர்க்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர். 

இதெல்லாம் ஒரு சமூகத்துக்கு ஆரோக்கியமான விடயங்களே அல்ல. தொழிற்சாலைகள், உற்பத்தி மையங்கள், ஆய்வகங்கள் என உருவாக்கப்படும் இடத்தில் –சூழலில் – இப்படி போதைப் பொருள் சிகிச்சை மையங்களும் சிறுவர் இல்லங்களும் இளவயதுக் கர்ப்பவதிகளைப் பராமரிக்கும் நிலையங்களும் உருவாகினால் சமூகத்தின் எதிர்காலம் எப்படியிருக்கும்? 

ஆனால், இதைப்பற்றிக் கவலை கொள்வோர் குறைவு. தமிழ் அரசியற் தரப்பினர் இந்த உகத்திலேயே இல்லை. அவர்கள் வேறு ஏதோ உலகத்தில் ஏதோவெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்குப் புலிகளின் போராளிகளை நிராகரித்துக் கொண்டு புலிகளைப் பற்றிப் பேசி வாழ்கிறார்கள். 

பொருளாதார நெருக்கடி, இன நெருக்கடி போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ்ச்சமூகம் இப்பொழுது இந்த மாதிரிச் சமூக நெருக்கடியிலும் சிக்கியுள்ளது. ஆக மொத்தத்தில் அதிகமான நெருக்கடிகளுக்கு தமிழ்ச்சமூகம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஒரு சமூகம் பல நெருக்கடிகளுக்குள்ளாகுமாக அல்லது பல நெருக்கடிகள் ஒரு சமூகத்தைப் பாதிக்குமாக  இருந்தால் அதனுடைய வளர்ச்சி பாதிக்கப்படும். 

இதற்கு மாற்றுப் பொறிமுறைகள் அவசியம். அதைக்குறித்து சிந்திப்பதே நமது கடமையாகும். முக்கியமாகப் பிள்ளைகளை மிக இளைய வயதிலேயே வாசிப்பில் ஈடுபடுத்த வேண்டும். புத்தக வாசிப்பு மிக முக்கிமான ஒன்றாகும். ஒரு நூலகம் திறக்கப்படும்போது 100 சிறைச்சாலைகள் மூடப்படும் என்றார் சீனத்தலைவர் மாவோ சேதுங். கற்பதே முதன்மைச் செயற்பாடு என்றார் ரஷ்யத் தலைவர் லெனின். வாசிப்பதால் மனிதர் பூரணமடைகிறார்கள் என்று கூறினார் மகாத்மா காந்தி. பிள்ளைகளை வாசிப்பில் ஈடுபடுத்துங்கள். அவர்கள் சிறந்த, ஆற்றல் உள்ளவர்களாக மாறுவர் என்று உரைத்திருக்கிறார் அறிஞர் அப்துல் கலாம். 

இப்படி வாசிப்பின் சிறப்பைப் பற்றி பல தலைவர்களும் மேதைகளும் சொல்லியுள்ளனர். உங்கள் பிள்ளைகளை பாதுகாப்பதற்கு புத்தகங்களை வழிகாட்டியாகப் பயன்படுத்தக் கற்றுக் கொடுங்கள். பாடசாலைகளில் நூலகங்கள் உண்டு. பிரதேச ரீதியாகவும் நூலகங்கள் உள்ளன. இதைவிட நீங்களே வீட்டிலும் நூலகங்களை உருவாக்க முடியும். 

வாசிப்பைப் போல, இசைத்துறையில் பயில்தல், ஓவியம் வரைதல், நடனத்துறையில் ஈடுபடுதல், விளையாட்டுகளில் பங்குபற்றுதல், சமூக வேலைத்திட்டங்களில் ஆர்வத்தோடு செயற்படுதல், எழுத்துத்துறையில் இயங்குதல், ஒளிப்படங்களை (புகைப்படங்களை) எடுத்தல், விவாதங்கள், கலந்துரையாடல்களில் பங்குபற்றுதல், உடற்பயிற்சியில் (யோகாசனம், ஜிம்) ஈடுபடுதல் எனப் பலவற்றில் ஈடுபடுத்துவதன் மூலம் பிள்ளைகளின் ஆற்றலும் பெருகும். அறிவும் வளரும். நல்ல விளைவுகளும் கிட்டும். நலமும் கிடைக்கும். 

இதைக்குறித்து நாம் தீவிரமாகச் சிந்திப்பது அவசியமாகும். இதொன்றும் கடினமானதல்ல. அத்தனையும் இலகுவானவை. இந்தத் துறைகளில் பிள்ளைகள் ஈடுபட்டுப் பிரகாசிக்கும்போது அவர்களுக்கும் நன்மை கிட்டுகிறது. பெயரும் புகழும் பொருளாதார வளமுமாக வாழ்க்கை செழிக்கிறது. பிள்ளைகள் சுய அறிவைப் பெறுகின்றனர். பின்னர் அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. எந்தப் போதைக்கும் அவர்கள் அடிமையாக மாட்டார்கள். 

மனிதர்களை மீட்டு வளப்படுத்தி மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கே விளையாட்டு, கலைத்துறை, இலக்கியம், வாசிப்பு போன்றவை உள்ளன. உலகம் முழுவதிலும் இதற்காகவே பெருமளவு நிதியும் ஆற்றலும் செலவழிக்கப்படுகிறது. தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள், நூலகங்கள், சினிமா, யுரியுப் சனல்கள், சமூக வலைத்தளங்கள், இணையங்கள் என ஏராளமாக விரிந்து போயிருக்கின்றன பல்வகையான ஊடகங்கள். தாங்களும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விக்கும் வாழ்க்கை இதுவாகும். 

ஆகவே நாம் இன்றே விரைந்து செயற்படுவோம். பிள்ளைகளைப் பாதுகாப்பது என்பதே  நம்மைப் பாதுகாப்பதாகும். இனத்தையும் பண்பாட்டையும் தேசத்தையும் பாதுகாப்பது என்றால் இளைய தலைமுறையைப் பாதுகாப்பதே வழி.