கே.எஸ். சிவகுமாரன்— ஒரு தனித்துவமான விமர்சகர்

கே.எஸ். சிவகுமாரன்— ஒரு தனித்துவமான விமர்சகர்

         —- கருணாகரன்—-

யாரோடும் முரண்படாமல் தன்னையும் இழக்காமல் பொதுவெளியில் (இலக்கியத்திலும் ஊடகத்திலும்) இயங்குவதென்பது கடினம். அப்படி யாராவது இயங்கினால் அவர்களைக் குறித்த கேள்வியும் விமர்சனமும் பலராலும் முன்வைக்கப்படுவதுண்டு. “அது எப்படிச் சாத்தியமாகும்?” என்ற திகைப்பே இதற்குக் காரணம். சரி அல்லது பிழை, நல்லது அல்லது கெட்டது என்று நிறுதிட்டாகச் சொல்லாத – உறுதியாக வெளிப்படுத்தாத – நிலைப்பாட்டை எடுக்காத நழுவல் போக்கு இதுவாகும் என்பது அவர்களுடைய கருத்து. நெற்றியலடித்தாற் போலிருக்கும் விமர்சனமே (அது கண்டனமாக – நிராகரிப்பாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புத்தான் இதனுடைய அடிப்படையாகும்) தேவை. மற்றதெல்லாம் பூசி மெழுகுதல். அல்லது loby செய்தல் என்றே கொள்ளப்படுகிறது. இதனுடைய  அடிப்படை, இது ஒரு தனியான போக்கு, இதிலுள்ள நியாயம் போன்றவற்றையெல்லாம் கவனத்திற் கொள்ள முயற்சிப்பதில்லை. நேரடியாகச் சொன்னால் “நீ எந்தப் பக்கமாக நிற்கிறாய்?” என்று நேரடியாக வெளிப்படுத்த வேண்டும் என்பதே இவர்களுடைய எதிர்பார்ப்பாகும். அதாவது “நீ யாருடைய தரப்பு? எதனுடைய பிரதிநிதி?” என்பதை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். அப்படி வெளிப்படுத்தாமல் இருப்பது நியாயமற்றது. அது அங்கிடுதத்தித் தனம். அயோக்கியம். பச்சோந்திப் பண்பாடு. மதில் மேல் பூனை, கழுவுகிற தண்ணியில் நழுவுகிற மீன், துணிச்சலற்ற தன்மை இப்படி ஏதாவது ஒரு அடையாளத்தை வலிந்து சூட்டி விடுகிறார்கள்.

இந்த வலிந்த அடையாளப்படுத்தல் மிகப் பெரிய ஆபத்தான அரசியலாகும். இதனுள்ளே அதிகாரம் வலுவாகச் செயற்படுகிறது. “நீ சுயாதீனமாக இருக்க முடியாது” என்பதை மறைமுகமாக வலியுறுத்துகிறது. ஆகவே எவரும் சுயாதீனமாக இருப்பதையும் இயங்குவதையும் கட்டுப்படுத்துகிறது. மறைமுகமாகத் தன்னுடைய நோக்கை அதிகாரமாகக் கட்டளையிடுகிறது. ஏனென்றால் எதனொன்றிலும் சேராத ஆள் என்பதே இவர்களைப் பொறுத்த வரையில் ஆபத்தானது என்பதாகும். ஒன்றில் “நீ நம்முடைய ஆளாக இந்தப் பக்கம் இருக்க வேண்டும். அல்லது அவர்களுடைய ஆளாக அந்தப்பக்கம் நிற்க வேண்டும். அதுதான் நம்பிக்கைக்குரியது. இரண்டும் இல்லாமல் இடைநடுவில் நிற்பது எப்படி? அது நம்பமுடியாதது, ஆபத்தானதாகும்” என்ற  கண்ணோட்டமும் அது உண்டாக்கும் அச்ச உளவியலுமே இவர்களைப் பதட்டமடைய வைக்கிறது.

எதனுடனும் முழுதாக உடன்படாமல் அல்லது எதையும் முழுதாக மறுக்காமல் இடையில் நின்று கொண்டிருப்பவர் எதனோடும் எப்போதும் சேராமல் விலகிச் சுதந்திரமாக, சுயாதீனமாக நிற்கிறார். அப்படி விலகி, யாரோடும் சேராமல் தனித்து, மாற்றுப் பார்வையுடன் புதிய வெளியொன்றில் நிற்கிறார் என்பதே இவர்களுடைய புரிதலில் கலவரமடைய வைக்கிறது. இதில் நிகழ்வது நீ எதனோடும் முழுதாகச் சேராதவர். யாரோடும் அடையாளப்படுத்தாதவர் என்பதால் நம்பமுடியாத ஆள் என்பதாகும். இது இவர்களுக்குப் பதட்டத்தை உண்டாக்குகிறது. உண்மையில் இந்தச் சுயாதீனத்தன்மையும் இதில் உள்ள சுதந்திரமும்தான் பலருக்குமான பிரச்சினை. ஏற்கனவே நிர்ணயமாக இருக்கின்ற இந்தப்பக்கம் அல்லது அந்தப் பக்கம் என்ற இரு அதிகார மையங்களுக்கு அப்பால் இன்னொரு அதிகாரமற்ற தரப்பாக  – தனித்து நிற்றல், தனித்துவமாக நிற்றல் என்பதை இவர்களுடைய மரபார்ந்த மனம் ஏற்க மறுக்கிறது. ஏனெனில் இவர்கள் ஏற்கனவே அதிகாரத் தரப்பொன்றின் நிறுவன மயப்பட்டவர்களாக (அகம் சார்ந்தோ புறநிலையிலோ) இருப்பதால் அதைக்கடந்து சிந்திக்க முடியாது போய் விடுகிறது.  தாம் சார்ந்து நிற்கும் தரப்பை கேள்விக்கிடமின்றி முழுதாக ஆதரிப்பவர்கள் அல்லது எதிர்த்தரப்பை முழுதாகவே நிராகரிப்பவர்கள் அப்படித்தான் சிந்திக்க முடியும். காரணம், தங்களுக்கிருக்கும் வரையறைகள், மட்டுப்பாடுகள் எல்லாம் விலகி நிற்பவருக்கில்லை. பதிலாக இவர் சுயாதீனமாக இயங்குகிறார் என்ற உள்வருத்தமாகும். அதனால்தான் இந்தப் போக்கினையும் இயல்பையும் ஏற்க மறுக்கின்றனர்.

இதனால் – இந்தக் கலாசார வல்லாதிக்கத்தனத்தினால் – பலரும் தங்களுடைய சுயாதீனத்தைக் கடந்து – மறுதலித்து – ஏதோ ஒரு பக்கத்துக்குச் சாய்ந்து விட நேர்கிறது. அப்படி ஏதாவது ஒரு பக்கத்துக்குச் சாய்ந்தால் பாதுகாப்பும் அனுகூலங்களும் அதிகமுண்டு. இல்லையென்றால் விலக்கலே –புறக்கணிப்பே நிகழும். இந்த விலக்கல் என்பது கடுமையான நவீன தீண்டாமையாகும். தீண்டாமையின் அரசியலைப்பற்றி நான் அதிகமாக இங்கே விளக்க வேண்டியதில்லை. அதனுள் தொழிற்படுகின்ற அறமற்ற அரசியலையும் அதிகார வன்முறையையும் பற்றி பொதுவெளியில் நிறையப் பேசியாயிற்று. ஆனாலும் இது மறைவதாகவோ குறைவதாகவோ இல்லை. இதற்குக் காரணமான அதிகார மனநிலை எளிதில் அதிலிருந்து (அதனுடைய இருட்பரப்பிலிருந்து) விடுபடுவதில்லை. எனவே இது ஒரு சிக்கலான – தீராத பிரச்சினையாகவே உள்ளது.

யாரோடும் முரண்படாமல் இருக்க வேண்டும் என்றால் சமரசம் செய்ய வேண்டும். தன்னை இழக்காமல் இருக்க வேண்டுமானால் எதிலும் சமரசம் செய்யாதிருக்க வேண்டும். இவை இரண்டும் நேரெதிரானவை. எதனோடும் எவரோடும் சமரசம் செய்து கொள்ளவில்லை என்றால் முரண்பாடும் விலக்கலும் (விலகலும் கூடத்தான்) ஏற்படும். இது  எப்படியோ எதிர்ப்பில், பகையில் கொண்டு போய் நிறுத்தும். ஆனால், யாரோடும் முரண்படாமல். தன்னையும் இழக்காமல், எவரோடும் எதனோடும் சமரசம் செய்து கொள்ளாமல் கடைசிவரை பொதுவெளியில் இயங்கியவர் கே.எஸ். சிவகுமாரன். இது ஆச்சரியம். அபூர்வம்.

நானறிந்த வரையில் கே.எஸ்.சிவகுமாரனுக்கு விரோதிகள் இல்லை. பல தலைமுறைகளிலும் நண்பர்களே உண்டு. தமிழ், சிங்கள, முஸ்லிம் நண்பர்கள். இதற்கு அப்பாலும்  உலகின் பல திசைகளிலுமுள்ள பல்வேறு இன, மத, பால் நண்பர்கள். அவரிடம் பேதங்களில்லை. அவர் முன்னிலையில் நிகழும், நிகழ்த்தப்படும் பேதங்களுக்கு அவர் கடுமையான எதிர்வினையை ஆற்றுவதில்லை. அதைத் தன்னுடைய பேதமற்ற நிலையினால் – உறுதிப்பாட்டினால் கடந்து விடுகிறார். இந்தக் கடந்து செல்லுதல் வெறுமனே தப்பித்தல் இல்லை. தன்னுடைய பேதமற்ற உறுதிப்பாட்டினால் தன்முன்பும் வரலாற்றிலும் நிகழ்த்தப்படும் பேதத்தை முறியடிப்பதாகும். இதுதான் கே.எஸ்.சிவகுமாரனின் நம்பிக்கை. வாழ்க்கை நெறி. அழகியல். அரசியல் எல்லாமே. ஏறக்குறைய காந்தியின் சாயலை இதில் காணமுடியும்.

பேதங்களில்லை என்ற பார்வையைக் கொண்டிருந்ததனால் சிவகுமாரனுக்கு எவர்மீதும் குரோதமும் விரோதமும் இல்லை. இதனால்தான் கே.எஸ் எல்லோருக்கும் இணக்கமாக இருந்தார். எல்லோருக்கும் இனியராக, நண்பராக இருந்தார். அவருடைய உலக நோக்கு, இலக்கிய நோக்கு. அரசியல் நோக்கு எல்லாமே இதை உள்ளடக்கமாகக் கொண்ட மென்னியல்பிலானவை. ஏன், அவரே மென்னியல்பைக் கொண்டவர்தான். அவர் பேசுவது, பழகுவது எல்லாம். இதற்கெல்லாம் அடிப்படையாக இருக்க வேண்டியது தெளிவான புரிதலும் உறுதியான நிலைப்பாடும்  உண்மையும் நேர்மையுமே.

தானறிந்த உண்மையையும் தான் கடைப்பிடித்த நேர்மையையும் அடிப்படையாகக் கொண்டவையாக சிவகுமாரனின் எழுத்துகள் இருந்தன. இதற்கமைய எதைத் தேர்வது, எதை விலக்கிக் கொள்வது என்ற தீர்மானத்தின்படி எதைப் பேசுவது, எதைத் தவிர்ப்பது என்று தன்னுள் வகுத்துக் கொண்டார். அதன்படியே அவருடைய தேர்வும் விலக்கலும் நிகழ்ந்தன. முக்கியமாக எதிர்மறையான பார்வையையும் முன்வைப்பையும் அவர் தவிர்த்தார். பதிலாக தான் காணும் சிறப்பம்சங்களையே முன்னிறுத்தினார். அவருடைய கண்ணுக்கும் மனதுக்கும் நல்லனவே எப்போதும் தெரிந்தன. தன்னுடைய வாசகர்களுக்கு நல்லனவற்றைப் பற்றிய சேதிகளும் உள்ளீடுகளுமே தேவை. அதையே தான் கொடுக்க வேண்டும். குறிப்பாகத் தான் படிக்கின்றவற்றிலும் பார்க்கின்றவற்றிலும் (சினமா) உள்ள நல்ல அம்சங்களையே அவர்களுக்கு அறிமுகப்படுத்த (Introducing) வேண்டும் என்று விரும்பினார் சிவகுமாரன். ஆழமாகப் பார்த்தல், அறிவார்ந்து நோக்குதல், ஆய்வு செய்தல் என்ற பேரில் பெரும்பாலோரால் கொட்டப்படும் வயிற்றெரிச்சல் விமர்சனங்களைச் சிவா முற்றாகவே நிராகரித்தார். “நாம் தோண்டுவது மலக்குழியா தங்கச் சுரங்கமா என்று முதலில் நமக்குத் தெரிய வேணும்” என்று நேர்ப்பேச்சில் ஒரு தடவை சொன்னதை இங்கே நினைவு கொள்ள முடியும். மேலும் “இலக்கியத் திறனாய்வில் ஈடுபாடு கொண்ட ஒருவனாகவும் அத்துறை சார்ந்த பத்தி எழுத்தாளர்களில் ஒருவனாகவும் நான் இருப்பதால் எனது அணுகுமுறை பல்நெறி (Multy Dicipilinary Approch) சார்ந்தது. ஆகையால்தான் அமைப்பியல்வாதம், அமைப்பியல் வாதத்தைத் தொடர்ந்து வரும் பின் அமைப்பியல்வாதம் (Post Structuralism) போன்ற நெறிமுறைகளில் நான் அதிகம் அக்கறை காட்டுவதில்லை..” என்று அவர் குறிப்பிட்டதையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

கே.எஸ்.சிவகுமாரனுடைய எழுத்துகளை இப்பொழுதும் யாரும் மீளாய்வு செய்து பார்க்கலாம். அவற்றில் அவர் எதையும் மிகைபடச் சொன்னதில்லை. எதையும் திட்டமிட்டு மறைத்ததும் இல்லை. அதற்கான அவசியம் (நுண்ணரசியல்) அவரிடத்தில் இருந்ததில்லை. ஏறக்குறைய Reporting Style லில்தான் அவருடைய எழுத்துகள் இருந்தன. இதற்கேற்ற விதத்தில் தனது விமர்சன முறையையும் கொண்டிருந்தார். அவர் முன்வைத்த இலக்கிய விமர்சனங்கள் (அவருடைய பார்வையில் திறனாய்வு – Review) நூல் அறிமுகங்கள், விமர்சனங்கள், சினமா (Cinema) பற்றிய எழுத்துகள் அனைத்தும் இந்த அடிப்படையிலானவையே. விமர்சனம் (Criticism) என்றால் ஒரு படைப்பைப் பற்றிய முழுமையான மதிப்பீட்டை அதனுடைய பயன், தரம், நன்மை (சிறப்பு), தீமை (குறைபாடுகள்), வரலாற்றுப் பெறுமானம், பிறவற்றிலிருந்து அது வேறுபட்டிருக்கும் தன்மை போன்றவற்றினூடாக முன்வைக்கும் பெரும் பணியாகும். அறிவியற் கண்ணோட்டத்தில் (கோட்பாட்டு ரீதியாக) குறித்த கலை வடிவம் பெற்றிருக்கும் வளர்ச்சியோடு ஒப்பிட்டும் ஆய்வு செய்தும் பேச வேண்டும். இவற்றைக் காணும் அடிப்படையை விளக்க வேண்டும். ஆனால் திறனாய்வில் (Review) இந்தச் சுமை குறைவு. அதில் அறிமுகத்துடன் கூடிய மதிப்பீடும் பண்பு நிலைகளுமே முன்னிலைப்படுகிறது. மேலும் சொல்வதென்றால், குறித்த படைப்பில் என்ன உண்டு. அது எப்படி உள்ளது? அதனுடைய சிறப்பு – திறன் அந்தப் படைப்பில் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது? அதன் வழியாக அது அந்தப் படைப்பை எப்படி முக்கியமானதாக ஆக்குகிறது? அந்தப் படைப்பு வாழ்க்கையைக் குறித்துப் பேசுவதைப்போல வாழ்க்கையை குறித்த படைப்பு எப்படி அணுகுகிறது என்பதை திறனாய்வு வெளிப்படுத்துகிறது. எனவே இரண்டாவது வகையான திறனாய்வை (Review) சிவகுமாரன் செய்தார். அவர் இயங்கிய தளம் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என்ற வெகுமக்கள் ஊடகம் என்பதால் அவற்றில் இலகு தன்மையைப் பின்பற்ற வேண்டியிருந்தது. அதைப் பின்பற்றினார். இது அவருக்கு பல வழிகளிலும் வசதியாக இருந்தது. இதை அவர் பத்திகளாக (Columns) எழுதினார். இலங்கையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியப் பத்திகளை எழுதியவர்களில் சிவகுமாரனே முன்னோடி என்று நினைக்கிறேன். தமிழ்ப் பண்பாட்டுப் பரப்பில் நிகழ்வன பற்றி ஆங்கிலம் வழியாக எழுதியதிலும் பேசியதிலும் சிவகுமாரன் முன்னோடி. மட்டுமல்ல மிகப் பெரிய பங்களிப்பாளரும் கூட. இதை ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அவர் செய்திருக்கிறார்.

கடந்த ஐம்பது ஆண்டு காலத்தில் ஈழத்தமிழ்ப் பண்பாட்டுப்பரப்பில் அல்லது கலாச்சார வெளியில் நிகழ்ந்தவற்றைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்க வேண்டும் என்றால் (அதிலும் ஆங்கிலத்தில் அறிய வேண்டுமெனில்) சிவகுமாரனின் எழுத்துகளையே தேட வேண்டும். அந்தளவுக்கு அவர் இதில் தொடர்ச்சியாக இயங்கியிருக்கிறார். தன்னால் முடிந்த அளவுக்குக் கவனம் கொள்ள வேண்டியவற்றில் கவனமெடுத்திருக்கிறார். ஆனால், அவரிடம் நவீனத்துவம், நவீனத்துவத்தைக் கடந்த (பின் நவீனத்துவ மாற்றங்கள்) வளர்ச்சி பற்றிய கரிசனை குறைவாகவே இருந்திருக்கிறது. அதைக்குறித்து அவர் எங்கும் எதுவும் எழுதியதோ பகிர்ந்ததோ இல்லை. ஆனாலும் அவற்றை அவர் படித்துக் கொண்டும் அறிந்து கொண்டுமிருந்தார். கொழும்பிலே அவரை சந்தித்த வேளைகளில் அவர் புதிய போக்குகளைப் பற்றிக் கேட்டறியும் ஆர்வத்தோடிருந்ததைக் கவனித்தேன். எதையும் அறியும் அவருடைய ஆர்வம் குன்றவே இல்லை. இதனால்தான் அவர் அடுத்தடுத்த தலைமுறைகளிலும் ஊடுருவியும் தாவியும் செல்லக் கூடியதாக இருந்தது. அவர்களும் சிவகுமாரனை அவருடைய மூப்பு, பங்களிப்பு போன்றவற்றுக்கு அப்பாலும் நட்புடன் நெருங்கி நடந்தனர். இரு தரப்பிலும் எல்லைகளற்ற ஊடாட்டமும் நேசமும் உறவும் நிலவியது.

சிவகுமாரன், விரிந்த ஆழமான சமூக வரலாற்றுப் பரப்பில் எதையும் முன்வைத்துப் பார்க்கவில்லை என்ற பொதுவான கருத்துண்டு. அவருடைய விமர்சன அடையாளங்கள், ஆய்வு முறையியல் என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. வாசகர்களோ புதிய படைப்பாளிகளோ அவருடைய திறனாய்வில் அல்லது பத்திகளில் இருந்து பெற்றுக் கொள்வதற்கான சிறப்புப் பார்வைகள் போதாது என்ற விமர்சனங்களும் உள்ளன. அது உண்மைதான். ஆனால், அவருடைய நோக்கு தமிழ்ச் சிறுசூழலில் நிகழ்கின்றனவற்றைப் பற்றித் தமிழ்ப் பொதுச் சூழலுக்கும் தமிழைக்கடந்த பிற தரப்புக்கும் அறிமுகப்படுத்துவதே தன்னுடைய பணி என்பதாகும். அதைச் சரியாகச் செய்திருக்கிறார். அதில்தான் அவருடைய இடமும் அமைகிறது. அதற்கு அப்பால் கோட்பாட்டு ரீதியிலான – அறிவுசார்  – விமர்சனத்தையும் எழுத்தையும் அவர் முன்வைக்கவில்லை. அதில் அவருடைய நம்பிக்கையும் ஆர்வமும் குறைவு. ஆனால் அவர் கவனப்படுத்திய விடயங்கள் சாதாரணமானவை அல்ல. அதற்குச் செலவிட்ட உழைப்பும் குறைவானதில்லை. ஐம்பது ஆண்டுக்கும் மேலான தொடர்ச்சியான வாசிப்பும் பார்த்தலும் சிவகுமாரனுடையது. மேலும் கேட்டலும் எழுதுதலும் வெளிப்படுத்துதலுமான இயக்கம் அது. இதற்கொரு அர்ப்பணிப்பு – ஒப்புக் கொடுத்தல் வேண்டும். அதைச் சிவா செய்தார்.