— ஜஸ்ரின் —
அழகு குணசீலன் இலங்கைக் கல்வித் திட்டத்தின் முக்கிய குறிகாட்டியான பரீட்சைப் பெறுபேறுகள், அப்பெறுபேறுகள் சார்ந்து எழும் ஏற்றத் தாழ்வுகள் குறித்து எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையின் எதிர்வினையாக ஜெயபாலன் அவர்கள் இலங்கைக் கல்விமுறை முற்றாகத் தகர்க்கப் படவேண்டிய ஒன்று என்று எழுதியிருந்தார். இந்தக் கருத்திற்கு அடிப்படையாக ஜெயபாலன் அவர்கள் முன்வைத்த காரணிகள் உணர்ச்சி ரீதியான காரணிகளாகவே எனக்குத் தெரிகின்றன. “இலங்கையின் கல்வி முறை மேற்கின் முதலாளித்துவ நலனுக்காக காலனித்துவ வாதிகளால் உருவாக்கப்பட்டு, இன்றும் நவகாலனித்துவ வாதிகளால் மாறாமல் பேணப்படுகிறது” என்ற சாரமுடைய ஜெயபாலனின் கருத்திற்கு தரவு ரீதியான ஆதாரங்கள் எவை இருக்கின்றன?இலங்கையின் பொருளாதார, அரசியல் பின்னடைவிற்கு நாட்டின் கல்வி முறை எப்படிப் பங்களித்தது? இக் கேள்விக் குறிகளுக்கு அந்தக் கட்டுரையில் பதில்கள் எவையும் வெளிப்படையாக இல்லை.
இலங்கையின் கல்விமுறையிலும், வட அமெரிக்காவின் கல்விமுறையிலும் மாணவனாகவும், ஆசிரியனாகவும் இருந்த என் அனுபவத்தின் அடிப்படையில் இலங்கைக் கல்வி முறையின் நன்மைகளையும், சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்ட முயல்கிறேன்.
முறைசார் கல்வியின் நோக்கங்கள் எவை?
இது ஒரு தத்துவார்த்தமான கேள்வி. இதற்கான பதில், எப்போதுமே ஒருவரது அரசியல் – சமூகப் பார்வையின் பாதிப்பிற்குட்பட்டதாகவே இருக்கும். மேற்கோள் காட்டப்பட்ட கல்வியியலாளர் போலோ பிறெய்றேவின் பார்வை, அவரது தீவிர இடதுசாரிச் சிந்தனைகளால்பாதிக்கப் பட்டிருந்தமை ஆச்சரியத்திற்குரியதல்ல. ஆனால், இலங்கையிலோ அல்லது உலகின் எந்தவொரு மூலையிலோ இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வியியலாளர் பிறெய்றேவின் இடது சாரிப்பார்வை சார்ந்த பதில் மட்டுமே வேதவாக்காக இருக்காது. ஏனெனில் முறைசார் கல்வியின் நோக்கத்தைக் கற்பவர்தான் தீர்மானிக்கவேண்டும். அவ்வாறு தனிமனிதன் தன்னுடைய கல்வியின் பயனைத் தீர்மானிக்க அனுமதிக்காத நிலை சில நாடுகளிலும் சமூகங்களிலும் இன்றும் இருக்கின்றது. உதாரணமாக, முஸ்லிம் அடிப்படைவாதிகளின் ஆட்சியில் இருக்கும் நாடுகளில் சமூகத்தின் சில பிரிவினர் சில தொழில்களில் நிபுணத்துவம் பெறுவதற்கு சுதந்திரம் கிடையாது. இத்தகைய நாடுகளில், மேற்கின் தாராளவாத அரசுகள் – அது ஆக்கிரமிப்பின் வழியாகவோ அல்லது வேறு வழிகளிலோ- தனிமனித சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறைகளை அறிமுகம் செய்ய முயல்கிறபோதெல்லாம், “காலனித்துவ ஆக்கிரமிப்பின் ஆயுதம் இந்தக் கல்வி” என்ற கண்டனக் குரல்கள் எழுவதுண்டு. இதே போன்றதொரு குற்றச்சாட்டுத்தான் இந்த இலங்கைக் கல்விமுறை காலனித்துவத்தின் எச்சம் என்ற உணர்ச்சிகரமான குற்றச்சாட்டும்.
தனிமனித சுதந்திரத்தை ஆதரிக்கிற மனநிலையிலிருந்து நோக்கினால், முறைசார் கல்வியின் நோக்கம் ஒரு மனிதனுக்கு சுதந்திரத்தை வழங்குவதாக இருக்கவேண்டுமென நான் அபிப்பிராயப் படுகிறேன். அந்த சுதந்திரம் பொருளாதார, சமூக அந்தஸ்து, அரசியல் கொள்கை ஆகிய எல்லாத் தளங்களிலும் கிடைக்கும் சுதந்திரமாக இருந்தால் அது சிறந்த முறைசார் கல்வி முறை என அழைக்கப்பட முடியுமென நான் கருதுகிறேன். இந்தக் கோணத்தில் யோசிக்கும்போது இலங்கையில் காலனித்துவம் அறிமுகம் செய்த கல்வி முறை தான் முறைசார் கல்வி மூலம் சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் தம் தனிப்பட்ட வாழ்க்கை நோக்கங்களை அடைய வழிவகுத்திருக்கிறது.
இலங்கையில் முறைசார் கல்வியின் சுருக்க வரலாறு
காலனித்துவம் என்பது நிறுவனமயப்படுத்தப் பட்ட ஒரு அடிமையாக்குதல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், காலனித்துவம் எனும் தீமையிலிருந்து விளைந்த ஒரு நன்மையாக இலங்கையின் கல்வி முறையைத்தான் முதன்மையாகக் குறிப்பிடமுடியும் (காலனித்துவத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட ஏனைய சில நன்மைகளும் இருக்கின்றன – கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டவை அவை). மூன்று ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள் இலங்கையை அடுத்தடுத்து ஆக்கிரமித்தனர். அவர்களது ஆக்கிரமிப்பிற்கு முற்பட்ட கால இலங்கையில் இருந்த கல்விமுறை தமிழ் /சிங்கள சமூகங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே எட்டக்கூடியதாக இருந்தது. சமூகத்தின் அரைவாசிப் பேராக இருந்த பெண்களுக்கு கல்வி என்பது மிகப் பெரும்பான்மையாக மறுக்கப்பட்டிருந்தது. மதம் பரப்புவதில் பெரும்பாலும் குறியாக இருந்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் சில முறைசார் கல்வி முன்னெடுப்புகளை இலங்கையில் மேற்கொண்டிருந்தலும், 1836இல் கோல்புறுக் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் பின்னர்தான் ஆங்கிலேயர்கள் இலங்கையின் அரச பொறுப்பில் செயல்படும் முறைசார் கல்விமுறைக்கு மூலைக் கல் வைத்தனர். ஆங்கிலேயர்கள் ஆரம்பித்துவைத்த அரச பாடசாலைகளை மூல அமைப்பாகக் கொண்ட இலங்கைக் கல்விமுறை அப்படியே காலனித்துவத்தின் எச்சமாக உறைந்துவிடவில்லை (அப்படி உறைந்திருந்தால் இன்றும் ஆங்கில மூலத்தில்தான் இலங்கை மாணவர்கள் தமது அடிப்படைக் கல்வியைப் பெற்றுக்கொண்டிருந்திருப்பர்!). 1938 முதல் 1997 வரை தொடர்ச்சியாக இலங்கையின் கல்விக் கொள்கை, கல்வியை சகலருக்கும் கிடைக்கச் செய்யவேண்டுமென்ற இலக்கோடு புதுப்பிக்கப்பட்டுக் கொண்டேயிருந்திருக்கிறது. இத்தகைய முன்னோக்கு இயங்கு நிலை கொண்ட முறைசார் கல்வி முறையால் இலங்கை முன்னேறியதா?
தென்னாசியாவில் இலங்கையின் தனித்துவம்
இந்தக் கேள்விக்கான பதிலை இலங்கையின் பல்வேறு சமூக அபிவிருத்தியை அளவிடும் சுட்டிகள் காலப் போக்கில் எவ்வாறு மாறியிருக்கின்றன என்று அவதானிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக: இலங்கையின் சிறந்த சுகாதார மருத்துவ சேவைகளின் தரம், மிகக்குறைந்த சிசு மரண வீதத்தில் வெளிப்படுகிறது. 1950இல் 10%ஆக இருந்த சிசு மரண வீதம், 2020இல் 0.8% ஆகக் குறைந்திருக்கிறது. இத்தகைய பல குறிகாட்டிகளை உள்ளடக்கிய மனித அபிவிருத்திச் சுட்டி (Human Development Index), தென்னாசியாவின் வல்லரசான இந்தியாவை விட இலங்கையில் அதிகம் (இலங்கைக்கு உலக ரீதியில் 72ஆவது இடம், இந்தியாவுக்கு 132ஆவது இடம்!). இலங்கை, இந்தியா -பின்னர் உருவான பாகிஸ்தான் – இவை மூன்றுமே தென்னாசியாவில் ஐரோப்பியக் காலனித்துவத்தின் பக்கவிளைவான முறைசார் கல்வி முறையைப் பெற்றுக் கொண்ட நாடுகளே. இந்த மூன்று நாடுகளும் அரசியல் பிணக்குகள், ஊழல், மனித உரிமைச் சவால்கள் எனப் பல பொதுப் பிரச்சினைகளைக் கொண்ட நாடுகள். அப்படியிருந்தும் இலங்கையின் ஒப்பீட்டு ரீதியில் முன்னேற்றகரமான நிலைக்கு என்ன காரணம்? 90% இற்கும் உயர்வான இலங்கையின் எழுத்தறிவு வீதமே (literacy rate) காரணமென நான் கருதுகிறேன். மிகக் குறைந்தபட்ச எழுத்து/கணக்கு அறிவு மட்டத்தை வைத்துக் கொண்டு எழுத்தறிவு வீதம் கணிக்கப்பட்டாலும், அந்த எழுத்தறிவு ஒரு மனிதனின் வாழ்வில் ஏற்படுத்தும் விழிப்புணர்வு அவனது ஆரோக்கியத்திலும் பொருளாதாரத்திலும் கணிசமான விளைவை ஏற்படுத்தக் கூடியது. காலனித்துவம் கல்விமுறையை உருவாக்கியிருக்கா விட்டாலோ அல்லது அந்தக் கல்வி முறையை அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள் சிறிது சிறிதாக சுதேச மயப்படுத்தியிருக்கா விட்டாலோ, இத்தகைய ஒரு உயர் எழுத்தறிவு வீதத்தையும் அதன் பலன்களையும் இலங்கை அடைந்திருக்க முடியுமா என்பது முக்கியமான ஒரு கேள்வி.
சவால்கள் எவை?
இனி வரலாற்றைக் கடந்து தற்போதைய நிலையைநோக்குவோம். பத்தாயிரத்திற்கு மேற்பட்ட அரச பாடசாலைகள், 15 பல்கலைக் கழகங்கள், வேறுசில தொழில் நுட்ப/தொழில்திறன் பயிலகங்கள் என்பனவே இன்றைய இலங்கையின் கல்வி உட்கட்டமைப்புகள். வருடந்தோறும் பல்கலைத் தேர்விற்குத் தோற்றும் இலட்சக் கணக்கான மாணவர்களில் 60% பேர் வரை சித்தியெய்தினாலும், 15% வரையானோருக்கு மட்டுமே 15 அரச பல்கலைக் கழகங்களில் நுழைவு அனுமதி கிடைக்கிறது. தென்கொரியா போன்ற வசதிபடைத்த நாடுகளில் பொதுப் பரீட்சையில் சித்தியெய்தும் 60% பேரும் பல்கலைக் கழகம் நுழையும் வசதி இருக்கிறது. ஆனால், இலங்கை போல தென்கொரியாவில் முழுவதும் இலவசமான கல்வி முறைகிடையாது. இலவசமாகக்கிடைக்கிற உயர் கல்வி வாய்ப்பிற்கான போட்டியே இலங்கையில் திறமையைக் கணிக்கும் ஒரு அளவீடாகப் பரீட்சையை பயன்படுத்தும் தேவையை ஏற்படுத்துகிறது. அவ்வாறு நாடு தழுவிய ஒரு பொதுப் பரீட்சையை நடத்தாமல், வேறு அளவீடுகளைப் பயன்படுத்த முடியுமா என்றால், இலங்கை போன்ற ஊழல் நிறைந்த ஒரு நாட்டில் அது ஆபத்தாகவே முடியும்.
உதாரணமாக, ஊழல் மிகக் குறைந்த தேசமான பின்லாந்தில் நாடு தழுவிய பரீட்சைகளைத் தவிர்த்து, பாடசாலை மட்ட அல்லது மாவட்ட மட்ட மதிப்பீடுகளையே பல்கலைக்கழக அனுமதிக்குப் பயன்படுத்துகிறார்கள். இப்படியொரு அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட்ட மதிப்பீட்டுத் (de-centralized evaluation) திட்டத்தை, இலங்கை போன்ற ஒரு நாட்டின் ஊழல் கலாச்சாரம் மாறும் வரை நினைத்துப் பார்க்கவே முடியாது என நான் நம்புகிறேன். அவ்வாறு ஒரு திட்டத்தை அமல்படுத்தினால், சமூகத்தில் அடிமட்டத்தில் இருக்கும் மக்களே மேலும் பாதிக்கப்படுவர். செல்வந்தர்கள், அரசியல் பிரமுகர்களின் வாரிசுகள் உயர்கல்விக் கூடங்களில் அதிகம் சேர்ந்து நாட்டை 80 வருடங்கள் பின் தள்ளிவிடும் நிலை வரும் என நான் அஞ்சுகிறேன்.
எனவே, பொதுப் பரீட்சைகளை ஒரு ஒற்றை அளவு கோலாகப் பயன்படுத்தக் கூடாது என்போர் வேறொரு அதை விடச் சிறந்த அளவு கோலை, மதிப்பீட்டு முறையைப் பரிந்துரைக்க வேண்டும் – அது இலங்கைக்கு உகந்ததாகவும் இருக்கவேண்டும். அப்படியொரு சிறந்த மதிப்பீட்டு முறை வரும் வரை, இருக்கிற மதிப்பீட்டு முறையை “சக்கை” வைத்துத் தகர்ப்பதைத் தள்ளிப்போட வேண்டும்.
இலங்கையின், காலனித்துவம் தந்த கல்வி முறையின் நிராகரிக்க முடியாத அனுகூலங்களோடு, குறைபாடுகளும் இருக்கின்றன. ஆனால், அந்தக் குறைபாடுகள் காலனித்துவம் தந்த முறைசார் கல்விமுறையோடு சேர்ந்து வந்தவையல்ல. மாறாக, அந்த முறையை உள்வாங்கிக் கொண்ட சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளால் உருவாக்கப்பட்ட சமனற்ற வளப்பங்கீடுதான் பிரதான குறைபாடு எனக் கருதுகிறேன். நகர, கிராம பிரதேசங்களுக்கிடையேயான ஏற்றத் தாழ்வு, மாகாணங்களிடையேயான (இது இனப் பாகுபாட்டின் ஒரு வடிவமாகவும் இருக்கிறது) வள அசம நிலை என எல்லா அரச பாடசாலைகளும் ஒரேயளவு கவனிப்பைப் பெறுவதில்லை என்பது வெள்ளிடை மலை. இதற்கான தீர்வு ஒட்டுமொத்தமாக இலங்கை போன்றநாடுகளில் இருக்கும் நிர்வாகத்திறன் குறைவைப்போக்குவதேயல்லாமல், கொஞ்சமாவது செயல்படும் நிலையிலிருக்கும் முறைசார் கல்வி முறையை புரட்டிப் போட்டுவிடும் ஆக்ரோஷச் செயல்பாடாக இருத்தலாகாது.
சுருக்கமாக, முற்றிலும் சிறந்த முறைமையாக இல்லாவிட்டாலும் இருக்கும் தெரிவுகளில் சிறந்த தெரிவாக இருப்பது இலங்கையின் தற்போதைய முறைசார் கல்விமுறை. குறைபாடுகளை, அவற்றின் சரியான தோற்றுவாயைக் கண்டறிந்து தீர்ப்பதே அவசியம்.