‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-32) 

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-32) 

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

இலங்கையில் 1979 ஆம் ஆண்டிலிருந்து அமுலிலிருந்துவரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கக்கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாகச் சென்று கையெழுத்துத் திரட்டும் செயற்பாடு 10.09.2022 அன்று வடக்கே யாழ்ப்பாணத்தில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. இந்த ஊர்தி வழிப் போராட்டம் இலங்கையின் இருபத்தைந்து மாவட்டங்களுக்கும் சென்று இறுதியில் தெற்கே அம்பாந்தோட்டை நகரைச் சென்றடையவுள்ளது. 

இப்போராட்டத்தின் பிரதான ஏற்பாட்டாளர்களாக இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிப முன்னணியினர் இருந்து செயல்படுகின்றனர். 

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இலங்கையின் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட வேண்டுமென்பதில் நியாயமாகச் சிந்திக்கின்ற எவருக்கும் முரண்பட்ட கருத்துகளெதுவும் எழமாட்டாது. இச்சட்டத்தை நீக்கக் கோரும் நாடளாவிய ரீதியிலான ஊர்தி வழிப் போராட்டத்திலும் கையெழுத்து வேட்டையிலும் தவறேதுமில்லை. 

ஆனால், இச்சந்தர்ப்பத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதைப் பற்றி மட்டும் சிந்திக்காது அச்சட்டம் 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டதற்கான காரணத்திலும் கவனத்தையும் கருத்தையும் செலுத்த வேண்டியுள்ளது. 

சுதந்திரத்திற்கு முன்பும் சுதந்திர இலங்கையிலும் இலங்கைத் தமிழர்கள் தமது சமூக பொருளாதார அரசியல் இருப்பிற்காகவும் மேம்பாட்டுக்காகவும் விடுத்த கோரிக்கைகள்- அதற்காக மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள்- ஜனநாயக அரசியல் வழிமுறைகளுக்கூடாக எடுத்த முயற்சிகள்- சாத்வீக வழிமுறைகளுக்கூடான போராட்டங்கள் என்று அத்தனை செயற்பாடுகளும் பயனளிக்காத கட்டத்தில்தான் தமிழீழத் தனி நாடு நோக்கிய ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களிடையே முளைவிட்டது. 

தமிழ்த் தேசிய அரசியலிலும் ஆயுதப் போராட்டத்திலும் தத்துவார்த்தப் பலவீனங்களும், அறவிழுமியங்கள் சார்ந்த தவறுகளும் இருக்கலாம். ஆனால், தமிழர்கள் மேற்கொண்ட அகிம்சைப் போராட்டத்திலும் சரி ஆயுதப் போராட்டத்திலும் சரி அதன் சரி பிழைகளுக்கப்பால் போராட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்த நியாயங்களை மறுப்பதற்கில்லை. 

இலங்கையின் அதிகார வர்க்கமான பௌத்த சிங்களப் பேரினவாதத்திலிருந்து தமது இருப்பைத் தற்காத்துக் கொள்வதற்காகவே இலங்கைத் தமிழர்கள் தனி நாடு கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். (1977ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலுக்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இந்த யதார்த்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது) அதன் விளைவுதான் ஆயுதப்போராட்டம். 

அந்த ஆயுதப்போராட்டத்தை முளையிலேயே கிள்ளியெறிவதற்காகத்தான் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கம் (‘தர்மிஸ்ட்’ அரசாங்கம் என அழைக்கப்பட்டது) 1979 இல் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. 

ஆனால், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தையும் மீறித் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் வளர்ந்ததும் அது பின்னர் 2009 இல் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்ததும் (முறியடிக்கப்பட்டதும்) வரலாறு. 

 1979 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களை மட்டுமே குறிவைத்துப் பிரயோகிக்கப்பட்ட இக்கொடூர பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தை நீக்கக் கோரி நாடளாவிய ரீதியில் எதிர்ப்புணர்வுகள் ஏற்படாதிருந்த நிலையில், இப்போது மட்டும் அவ்வாறான எதிர்ப்பு எழக் காரணமென்ன? 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தலைமையிலான அரசாங்கத்திற்கெதிராக 2022 ஏப்ரல் 9 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான ‘அறகலய’ போராட்டமும் கோட்டாபய பதவி விலகித்தற்போது ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்குமெதிரான போராட்டததின் தொடர் நிகழ்வுகளும் அப்போராட்டத்திலும் அதன் தொடர் நிகழ்வுகளிலும் பிரதானமாகப் பங்கேற்றவர்கள் பெரும்பான்மைச் சங்களவர்களாக இருப்பதும் அச்சிங்களவர்கள் மீது இப்போது இப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பாய்வதும்தான் இச்சட்டத்திற்கெதிரான நாடளாவிய எதிர்ப்புக்குக் காரணமாகும். 

 2019 ஏப்ரல் 21ஆம் திகதி, நாட்டில் நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறன்றைய குண்டுத் தாக்குதல்களுக்குக் காரணம் முஸ்லிம் அடிப்படை வாதமே என்று கருதிய அரசாங்கம் அதனோடு சம்பந்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட முஸ்லிம்களையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழேயே கைது செய்தது. அப்போதும் இச்சட்டத்திற்கெதிராக நாடளாவிய ரீதியில் எதிர்ப்புக் கிளம்பவில்லை. 

ஆனால், இப்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்நாட்டின் பெரும்பான்மையின பௌத்த சிங்களவர்கள் பெரும்பான்மையாகக் கைதாகும் போது மட்டுமே இச்சட்டத்திற்கெதிரான நாடளாவிய எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆம்! ‘தனக்கு வந்தால் இரத்தம் பிறருக்கு வந்தால் அது தக்காளிச் சட்டினி’ என்று சும்மா வாளாவியிருந்தவர்களுக்குக் காலம் கொடுத்த பாடம்தான் இது. 

இச்சந்தர்ப்பத்தில் சில உண்மைகளையும் மூடிமறைப்பதற்கில்லை. 

*1979இல் இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது அப்போதிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்கவில்லை. (தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் இந்நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் இந்நாள் தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியும் அப்பாராளுமன்ற உறுப்பினர்களுள் அடங்குவர்.) 

 * இச்சட்டமூலம் அமுலாக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் யாழ்குடா நாட்டில் படுகொலை செய்யப்பட்ட பல தமிழ் இளைஞர்களின் உடலங்கள் மரண விசாரணைகளின்றியும் அடக்கம் செய்யப்பட்டன. அப்போதும் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு எழவில்லை. 

 * இச்சட்டத்தின் கீழ் சந்தேக நபரொருவரைப் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுடன் 90 நாட்கள் தொடர்ந்து தடுத்துவைக்கும் ஏற்பாடுகளும் உண்டு. பிணை வழங்குவதிலும் பல சட்ட இறுக்கங்கள் இருந்தன. அதனால் தமிழ் இளைஞர்கள் பலர் 90 நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். மட்டுமல்ல, விசாரணைகளின்றியும் பிணை வழங்கப்படாமலும் விளக்க மறியல் கைதிகளாகப் பல வருடங்கள் சிறை வாசமும் அனுபவித்தனர். அது இன்றும் தொடர்கிறது. ஆனால், அண்மையில் நடைபெற்ற ‘அறகலய’ப் போராட்டக்காரர்களைப் பொறுத்தவரை அவர்கள் பெரும்பான்மைச் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களாகவிருப்பதால் போலும் எவருக்கும் 90 நாள் தடுப்புக் காவல் வழங்கப்பட்டதாகவுமில்லை. கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் சில நாட்களுக்குள்ளேயே- வாரங்களுக்குள்ளேயே பிணையில் வெளிவந்தும்விட்டனர். சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் கோட்பாடு -இயற்கை நீதி இங்கு பேணப்படவில்லை.  

* ‘அறகலய’ ப் போராட்டக்காரர்களைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசாங்கம் கைது செய்ததை அமெரிக்காவும் அதனைச் சார்ந்த மேற்குலகச் சக்திகளும் கண்டித்தன. அவர்களை விடுதலை செய்யுமாறும் கோரிக்கைகளை விடுக்கின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் இவ்விடயம் பேசுபொருளாகியுள்ளது. ‘அறகலய’ ப் போராட்டக்காரர்கள் மீது அமெரிக்காவும் அதனைச் சார்ந்த மேற்குலக சக்திகளும் அம்மேற்குல சக்திகளின் செல்வாக்குக்குட்பட்ட ஐநா மனித உரிமைகள் பேரவையும் காட்டும் அக்கறையின் மிகக் குறைந்தளவு பின்னமே தமிழ் இளைஞர்கள் மீது காண்பிக்கப்பட்டன. அதற்குக் காரணம், ‘அறகலய’ ப் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவும் அதற்குச் சார்பான மேற்குலக சக்திகளும் இருந்தன என்பதே. இந்த நுண்ணரசியலையும் மக்கள் குறிப்பாகத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

எது எப்படியிருப்பினும், இப்போதாவது இச்சட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள் எழுந்துள்ளமை நல்லதேயெனும் அடிப்படையில் 10.09.2022 அன்று வடக்கே யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ள போராட்ட நடவடிக்கைக்கு நாடளாவிய ரீதியில் அனைத்து மக்களும் ஆதரவளிக்க வேண்டுமென்பதும் இதனை வைத்தாவது இன- மத பேதங்களைக் கடந்து இலங்கையின் அனைத்துச் சமூகங்களும் ஒன்றிணைய வேண்டுமென்பதும் இந்நாட்டை உளத் தூய்மையோடு நேசிக்கும் ஒவ்வொருத்தரினதும் எதிர்பார்ப்பாகும். 

அதே வேளை, 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் போது அதற்குக் காரணமாகவிருந்த இனப்பிரச்சனைக்கான தீர்வு இன்னும் எட்டப்படவில்லையே என்பதையும் போராட்டக்காரர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். 

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைச் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கிவிட்டால் அச்சட்டம் கொண்டுவரப்படுவதற்கான காரணியாகவிருந்த இனப்பிரச்சனையும் தீர்ந்து விடுமா? இல்லையல்லவா. 

இதுதான் இப்பத்தி சுட்டிக்காட்டுகின்ற விடயம். 

 அதி குறைந்தபட்சம் இனப் பிரச்சனைக்குத் தீர்வாக அல்லது தீர்வுக்கான ஆரம்பப்படியாக இந்திய -இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கீழ் பாராளுமன்றத்தில் 1987இல் நிறைவேற்றப்பெற்ற 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்கூட கடந்த முப்பத்தைந்து ஆண்டுகள் கடந்தும் அரசியல் விருப்புடன் இன்னும் முழுமையாகவும் முறையாகவும் நிறைவேற்றப்படவில்லை. 

எனவே, இது குறித்த நாடளாவிய உணர்வும் பேரெழுச்சியும் சமகாலத்தில் எழ வேண்டும். அப்படியானால்தான் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரும் நாடளாவிய நடவடிக்கை அர்த்தமுள்ளதாக அமையும். இல்லையேல் அது தேர்தல் அரசியல்வாதிகளின் வழமையான தேர்தல் ‘ஸ்ரண்ட்’ ஆகத்தான் போய் முடியும். 

 எனவே, போராட்ட ஏற்பாட்டாளர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரும் தமது நிகழ்ச்சி நிரலில் அப்பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுவதற்குக் காரணமாகவிருந்த இனப் பிரச்சனைக்கான அதி குறைந்தபட்சத் தீர்வான 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்வதற்கான கோரிக்கையையும் அதற்கான கையெழுத்து வேட்டையையும் இணைத்து அதனையும் நாடளாவிய ரீதியில் சமாந்தரமாக முன்னெடுக்கவேண்டுமென்று இப்பத்தி இச் சந்தர்ப்பத்தில் வலியுறுத்திக் கூற விரும்புகிறது.