பின்னடைவு குறித்த மறுபரிசீலனை இல்லாத மந்தைச் சமூகம் 

பின்னடைவு குறித்த மறுபரிசீலனை இல்லாத மந்தைச் சமூகம் 

    — கருணாகரன் — 

அரசியல், பொருளாதாரம், பண்பாடு எல்லாவற்றிலும் ஈழத் தமிழர்கள் மிகப் பின்னடைந்து கொண்டே செல்கின்றனர். இது மிக அபாயகரமான ஒரு நிலையாகும். தொடரும் இந்த நிலையானது, எதிர்காலத்தில் மிகப் பெரிய சிக்கல்களையும் நெருக்கடிகளையும் உருவாக்கப் போகிறது. என்பதால்தான் இது மிகப் பெரிய அபாகரமான நிலை என்று எச்சரிக்க வேண்டியுள்ளது. 

இதேவேளை எப்படித்தான் நாம் எச்சரிக்கை செய்தாலும் -உண்மை நிலவரத்தை எப்படித்தான் எடுத்துச் சொன்னாலும் அதைப் புரிந்து கொள்ளக் கூடிய உள நிலையும் அறிதிறனும் தமிழர்களிடம் இல்லை. ஏனென்றால், இதைப் பலர் ஏற்கனவே முன்னுணர்ந்து செய்திருக்கின்றனர். மாற்றுப் பாதையைக் குறித்து, மாற்று அரசியல் வழிமுறையைக் குறித்துச் சிந்திக்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றனர். மிகப் பெறுமதியான கருத்துகளையும் மாற்றுத் தெரிவுகளையும் முன்வைத்துள்ளனர். இருந்தபோதும் அவை ஒன்றும் கவனத்திற் கொள்ளப்படவில்லை. மதிக்கப்படவில்லை. சரியாகச் சொன்னால் பிடிவாதமாக அந்தக் கருத்துகள் –உண்மைகள் – நியாயங்கள் மறுக்கப்பட்டுள்ளன; புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்தும் தமிழ்ச் சமூகம் பலவீனப்படுவதே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் கொண்டிருந்த அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கட்டமைப்பு இன்றில்லை. அன்று எந்த ஊரிலும் இராணுவ முகாம்கள் இருந்ததில்லை. இப்போதுள்ளதைப்போல கணவரைப் போரில் அல்லது படை நடவடிக்கையில் இழந்த குடும்பங்களில்லை. கை, கால்களை இழந்த மனிதர்களில்லை. காணாமலாக்கப்பட்டோரைப் பற்றிய கவலைகள் இருக்கவில்லை. உற்றமும் சுற்றமும் திக்கொன்றாகச் சிதறிக் கிடந்ததில்லை. ஊரை,வாழ்வை, இளமையை இழந்த அலைந்த வாழ்க்கை இருந்ததில்லை. ஆகவே, அன்றிருந்த நெருக்கடிகளை விடவும் அன்றிருந்த பிரச்சினைகளை விடவும் இன்றைய நெருக்கடிகளும் பிரச்சினைகளும் அதிகம். பாதிப்புகளும் அதிகம். சிறிய உதாரணம், அன்று வடக்குக் கிழக்கில் ஐந்து ஆறு இராணுவ முகாம்களே இருந்தன. அதுவும் ஒதுக்குப் புறமாக. ஆனால், ஊருக்கு ஒன்று அல்லது அதற்கும் மேல் என்ற அளவில் வடக்குக் கிழக்கு எங்கும் படை முகாம்கள் விளைந்து போயுள்ளன. இடப்பெயர்வுகள் உண்டாக்கிய சமூகப் பிறழ்வுகள் தொடக்கம் உளவியல், பண்பாட்டுச் சிக்கல்கள் வரை எல்லாவற்றிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள். இதை விட காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், சிறைப்படுத்தப்பட்ட அரசியலாளர்களின் பிரச்சினை, உடல் உறுப்புகளை இழந்தோர், உறவுகளைப் போரில் பறிகொடுத்தோர் சிரமங்கள் என பல நூறு துயரச் சங்கிலிகள். 

இப்படிப் பல விதமான பிரச்சினைகளால் சூழப்பட்டிருக்கும்போதும் தாம் முன்னெடுக்கின்ற அரசியல், பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகள் எந்தளவுக்கு தமிழ்ச் சமூகத்தை முன்கொண்டு சென்றது – செல்கிறது என்ற ஆய்வோ, மறுபரிசீலனையோ, மதிப்பீடோ இல்லாமலே மந்தைத் தனமாக இருக்கிறது தமிழ்ச்சமூகம். 

உண்மையில் இது மிகப் பெரிய மந்தைத் தனமே. 

தாம் ஆதரிக்கின்ற அரசியல் தலைமைகளும் கட்சிகளும் எந்தளவுக்கு நெருக்கடிகளைக் குறைக்கக் கூடிய செயற்றிட்டங்களோடும் சிரத்தையோடும் உள்ளன என்று ஒருத்தர் கூடச் சிந்திப்பதாகக் காணோம். ஏன், இதை நேரடியாகவே கேட்டு விடலாம். தமிழ்த்தேசியக் கட்சிகள் என்ற அடையாளத்தை வலிந்து சூடிக் கொண்டுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த்தேசியக் கூட்டணி, தமிழ்த்தேசிய பசுமை இயக்கம், தமிழ் மக்கள் தேசியக் கட்சி என்று இருக்கின்ற பல கட்சிகளில் ஏதொன்றாவது ஆக்கபூர்வமாக தமிழ் மக்களின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இதுவரையில் பங்களித்துள்ளதா? 

அப்படியென்றால் அத்தகையை பங்களிப்பைச் செய்த கட்சி எது? அதனுடைய பங்களிப்பு என்ன? அதன் பெறுபேறு என்ன? என்று யாராவது சொல்ல வேண்டும். அல்லது குறித்த கட்சியினர் இங்கே அவற்றைப் பற்றி தாராளமாக அறிக்கை இடலாம். அப்படி ஏதாவது அதிசயம் நடந்தால் மகிழ்ச்சியே, நன்மையே! 

ஆனால், என்னுடைய அவதானிப்பில் இவை எவையும் எந்தப் பெறுமதிகளையும் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை. இவற்றின் அரசியல் முன்னெடுப்புகளால் எந்தச் சிறிய நன்மைகளையும் தமிழ்ச்சமூகம் பெற்றுக்கொள்ளவும் இல்லை. அனுபவிக்கவும் இல்லை. பதிலாக மேலும் மேலும் நெருக்கடிகளையே இந்தக் கட்சிகளும் இவற்றின் தலைமைகளும் உண்டாக்கியுள்ளன. அதாவது தமிழ் மக்களைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக இவை மேலும் மேலும் பலவீனப்படுத்தியுள்ளன; பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றன. எதிர்மறை அரசியலை சொந்த மக்களுக்கே செய்கின்ற தலைமைகளாகவும் கட்சிகளாகவும் உள்ளன. இதற்குச் சரியான பெயர், இந்தக் கட்சிகளே பிற தரப்புளைப் பார்த்துச் சொல்வதைப்போல “இது படு துரோகமாகும்”. கொடுமை என்னவென்றால் இவை பிற தரப்புகளைப் பார்த்து துரோகத் தரப்புகள் என்கின்றன. காகம் காகத்தைப் பார்த்துக் கறுப்பு என்ற மாதிரித்தான். 

தமிழரசுக்கட்சியின் பொறுப்பு? 

இதில் முக்கியமான பொறுப்பை ஏற்க வேண்டியது தமிழரசு கட்சியாகும். எஸ்.ஜே.வி. செல்வநாயகம் காலத்திலிருந்தே தமிழரசுக் கட்சி பிரதான கட்சியாக செல்வாக்குச் செலுத்தி வந்திருக்கிறது. மக்களும் தமிழரசுக் கட்சிக்குத் தொடர்ச்சியாக தமது ஆதரவையும் பங்களிப்பையும் செய்திருக்கிறார்கள். மக்கள் அதை ஆதரித்த அளவுக்கும் அதற்கு பங்களிப்பைச் செலுத்திய அளவுக்கும் மக்களுக்கு தமிழரசுக் கட்சி எந்த நன்மைகளையும் செய்ததே இல்லை. குறைந்த பட்சம், ஒரு நல்ல அரசியல் நெறிமுறையையோ முன்னேற்றகரமான அரசியல் விளைவுகளையோ கூட உண்டாக்கவில்லை. தேர்தல் மேடைகள் தொடக்கம், பாராளுமன்றம் வரையில் மக்கள் அரங்குகள் எங்குமே பிறரை வசைபாடுவதிலும் ஏமாற்றுக் கதைகளைச் சொல்வதிலுமே அதனுடைய வரலாறு கழிந்திருக்கிறது. வேண்டுமென்றால் சுதந்திரன் பத்திரிகையிலிருந்து இன்றைய தினக்குரல், உதயன், வலம்புரி, ஈழநாடு,காலைக்கதிர் வரையில் ஒரு சிறிய அவதானிப்பைச் செய்தால், காறி உமிழ்வீர்கள். எந்த முன்னேற்றமும் இல்லாமல் 50 ஆண்டுக்கு முன்பு வந்த அதே அறிவிப்புகள், செய்திகள். இந்தச் சமூகம் வளரவேயில்லை. தேய்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? 

இன்று பிரதேச சபைகள், நகரசபைகளையே சரியான முறையில் இயக்க முடியாத அளவுக்குத்தான் தமிழரசுக் கட்சியின் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்) நிலைமை உள்ளது. அதன் தலைமைத்துவம் ஏறக்குறைய செயலற்று விட்டது. (இதைப்பற்றி அடுத்த வாரம் விரிவாகப் பார்க்கலாம்). மாவை சேனாதிராஜாதான் தமிழ் மக்களின் தலைமை என்றால்…. தமிழ் மக்களின் கதியை, கதையைப் பற்றி சொல்லத் தேவையில்லை. இன்றைய உலக ஒழுங்கு, பிராந்திய அரசியல் பொருளாதார நிலைமைகள், உள்நாட்டு அரசியல் சூழல், சமூகங்களுக்கிடையிலான உறவு நிலைகள், மக்களின் உளநிலைப் போக்கு, ஜனநாயக அடிப்படைகள் என எதைப் பற்றிய சிற்றறிவும் இல்லாமல் 1970களின் மனப்பதிவோடு அரசியலைப் பேசிக் கொண்டிருக்கிறார் மாவை. 1970 க்குப்பிறகு என்ன நடந்தது என்றே அவருக்குத் தெரியாது. மாவை மட்டுமல்ல, ஏனையவர்களின் நிலையும் ஏறக்குறைய அதே மாதிரித்தான். 

தமிழரசுக் கட்சிக்கு எந்த வகையிலும் குறையாத அளவில்தான் ஏனைய கட்சிகளும் தலைமைகளும் உள்ளன. விடுதலை இயக்கங்களில் இருந்து வந்த தலைவர்களும் முயல் பிடிக்கும் நாயை முகத்தில் தெரியும் என்பார்கள். நம் தமிழ் அரசியல் தலைமைகளைப் பார்த்தாலே தெரியும், அவற்றால் என்ன செய்ய முடியும்? என்று. 

ஆக மொத்தத்தில் இங்கே உள்ள துயரமான நிலை என்ன என்றால், இதுவரையில் இந்தத் தலைமைகளும் கட்சிகளும் எத்தகைய நன்மைகளைப் பெற்றுத் தந்துள்ளன? எவ்வளவுக்குப் பாதுகாப்பாக இருந்துள்ளன? என்பதைக்குறித்தும் யாரும் (மக்கள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், மதத்தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்….) சிந்திக்கவில்லை என்பதேயாகும். 

இதில் மிகக் கவலையளிப்பது இதைக்குறித்து தமிழ்ப் புத்திஜீவிகளும் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினரும் அரசியல் ஆய்வாளப் பெருந்தகைகளும் கேள்வி எழுப்பாமல், சிந்திக்காமல் இருப்பதாகும். மேலும் சொல்வதாக இருந்தால் தமிழ் ஊடகங்கள், ஆய்வாளர்கள், கருத்துருவாக்கிகள் போன்றோரும் இதைப்பற்றிய சிரத்தையோ, சிந்தனையோ இல்லாமல் என்னவோ, ஏதோ என்று இருக்கிறார்கள். பழைய வாய்பாட்டையே திரும்பத்திரும்பத் திரும்பத்திரும்பத் திரும்பத்திரும்பத் திரும்பத்திரும்பப் பாடிக்கொண்டிருக்கின்றனர்.  அல்லது இந்தப் பழைய வாய்பாட்டைக் கையில் எடுத்துக் கொண்டு ஸ்ரீராம ஜெயம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது தேவன் வருவார் என்கிற மாதிரி தீபாவளிக்கு, தைப்பொங்கலுக்கு, ஆடிப்பிறப்புக்கு, சித்திரா பௌர்ணமிக்குத் தீர்வு கிட்டும், மாற்றம் நிகழும், ஐ.நா வரும், ஜெனிவாத் தீர்மானம் எழும் என்று அல்லேலாயோய பாடுகிறார்கள். 

மக்களின் இத்தகைய மந்தைத் தனமான நிலையானது, மேற்குறித்த தலைமைகளுக்கும் கட்சிகளுக்கும் வாய்ப்பாகி விடுகிறது. இதனால் அவர்கள் தாராளமாகக் “கயிறு விடலாம்” என்ற நம்பிக்கையில் பழைய புருடாக் கதைகளையே தொடர்ந்தும் விட்டுக் கொண்டிருக்கின்றனர். 

இதற்குக் காரணம், தமிழ் மக்களில் பெரும்பாலானோர் ஒரு விதமான அதீதக் கற்பிதங்களில் வாழ்ந்து பழகியமையாகும். எதையும் கேள்வி கேட்காமல், எத்தகைய விமர்சனங்களையும்  எழுப்பாமல் வழிபாட்டு மனநிலையில் கட்டுண்டு கிடப்பதே தமிழ்ச்சமூகத்தின் பண்பாகிவிட்டது. போதாக்குறைக்கு எதிரியை முறியடிக்க வேண்டும் என்றால் அரசுக்கு எதிராக நிற்க வேண்டும். அரசைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற விதமாக நடந்து கொள்கிறது. இதற்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து அதனிடம் தெளிவான விளக்கமில்லை. வெறும் வாய்ச்சவாடல்களின் மூலமாக அசாங்கத்தைப் பலவீனப்படுத்தவோ, பணிய வைக்கவோ முடியுமா?  என்பதைக்குறித்து அது சிந்திக்கவில்லை. 

எதிர்ப்புக் கோஷ அரசியல், மிகப் பெரிய ஆயுதப் போராட்ட அரசியல் ஆகியவற்றின் மூலமாக எதையுமே பெற முடிந்ததில்லை என்பது கடந்த கால அனுபவம் – உண்மை. இந்த அரசியல் பெற்றுத் தந்தது, இன்னுமின்னும் நெருக்கடிகளையே.   

ஆகவே இனிமேல் தமிழ் மக்கள் முற்றிலும் புதிய முறையிலான அரசியலையே முன்னெடுக்க வேண்டும். புதிய தந்திரோபயமும் உச்சமான அர்ப்பணிப்பும் புதிய சிந்தனையும் ஜனநாயக விரிவும் கொண்ட அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதாவது இதுவரையிலும் மக்கள் பலவீனப்பட்டனர். தலைமைகளும் கட்சிகளும் வளர்ந்தன. இது தவறானது. இனிமேல், தலைமைகளையும் கட்சிகளையும் விட மக்கள் வளர்ச்சியடைய வேண்டும். பலமடைய வேண்டும். அதற்கான மாற்று அரசியலே தேவை. 

இதற்கான உள்ளடக்கத்தைக் கொண்ட கட்டமைப்பு  அவசியம். 

எதிர்ப்பரசியல் என்பது அரச எதிர்ப்பு என்பதற்குப் பதிலாக மக்களுக்கு எதிரான அரசியலாக மாறியுள்ளது. அதுவே இப்பொழுது நடந்து கொண்டிருப்பது. 

ஆனால் இதைக்குறித்து யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. எல்லோரும் லாபநட்டக் கணக்கைப் பார்க்காமலே (தனிப்பட்ட வாழ்க்கையில் மிகத் திறமையாக லாப நட்டக்கணக்கை ஒவ்வொருவரும் பார்த்து விடுகிறார்கள்) கண்மூடித்தமாக இந்தப் பயனற்ற தலைமைகளுக்குத் தங்களின் பலத்தையும் வளத்தையும் தாரை வார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

இதனால், தாங்கள் நம்புகின்ற, தங்களுக்கு விரும்பமானவற்றிலிருந்து (இந்தக் கட்சிகளையும் தலைமைகளையும் விட்டு) இலகுவில் வெளியே வரமுடியாமலிருக்கிறது. இதனால்தான் மக்களுடைய எந்தப் பிரச்சினைகளும் தீர்வைப் பெறாமல் தொடர்கின்றன. மக்களுடைய அனைத்துக் குறைபாடுகளும் அப்படியே உள்ளன. போதாக்குறைக்கு மேலும் பல பிரச்சினைகளும் குறைபாடுகளும் பெருகிக் கிடக்கின்றன. 

அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு அப்பால். தன்னுடைய சமூகச் சூழலில் மிகச் சாதாரணமான சமூகப் பிரச்சினைகளைக் கூடத் தீர்க்க முடியாமல் சீரழிந்து கிடக்கிறது தமிழ்ச்சமூகம். பாடசாலைகளில் கூட பாலியல் துஸ்பிரயோகங்கள் நடக்கின்ற அளவுக்கு எல்லாமே கெட்டுவிட்டன. மணல் அகழ்வு, காடழிப்பு – கள்ள மரம் வெட்டுதல் தொடக்கம் போதைப் பழக்கம், போதைப் பொருள் வியாபாரம் என அனைத்து நிலைகளிலும் சீரழிந்து கிடக்கக் காண்கிறோம். 

ஆனால், தங்களைச் சுற்றிய நெருக்கடிகளிலிருந்து விடுபட வேண்டும். ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையடைய வேண்டும் என்றே கடந்த ஐம்பது வருடங்களாக தமிழர்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர். இதற்குப் பதிலாக இன்று பெற்றிருப்பது…ஆளுமையற்ற தலைமைகளும் அக்கறையற்ற கட்சிகளும் சீரழிந்த சமூக நிலையும் நெருக்கடியான வாழ்க்கையுமே. பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கைக் கையில் ஏந்திய கதை. 

இதை மாற்றியமைக்க வேண்டும் என்றால்….. 

அதிகமாகச் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை. முதலில் தமிழ்ச் சமூகத்துக்கு விரோதமாகச் செயற்படுகின்ற தலைமைகளிலிருந்தும் கட்சிகளிடமிருந்தும் விடுதலையாக வேண்டும். அதாவது மக்களை ஏமாற்றும் கயமைக் கூட்டத்திலிருந்து விடுதலையாக வேண்டும். இது 1970 களின் இறுதியில் இளைஞர் இயக்கங்கள் எடுத்த தீர்மானத்துக்கு நிகரானது. வரலாறு அதையே திரும்பவும் நிர்ப்பந்திக்கிறது. அதேவேளை கடந்த கால வரலாற்றுப் படிப்பினைகளிலிருந்து நாம் பாடங்களைப் படித்துக் கொள்ள வேண்டும். மீண்டும் சறுக்கும் அரசியலைத் தெரிவு செய்யாமல், வெற்றியைப் பெறுவதற்கான சமத்துவ அரசியலை, ஜனநாயக அரசியலை, அறிவு பூர்வமான அரசியலை, விடுதலைக்கான அரசியலைச் மேற்கொள்ள வேண்டும். 

அது ஒன்றே வழி.