— அழகு குணசீலன் —
கைன்ஸ் ஜில்லி HEINZ GILLI
பிறப்பு:1943
இறப்பு : 2021
நினைவுச்சின்னம்: 2016
அந்த மாநகர நாற்சந்தி வளைவில் (ROUND ABOUT) தொழிலில் இருந்து ஓய்வு பெறும் வரை 15 ஆண்டுகள் தெரு துப்பரவு பணியில் ஈடுபட்டவர் அவர்.
மழையோ வெள்ளமோ, கடுமையான பனிவீழ்ச்சியோ, மற்றும் திடீர் வானிலை மாற்றமோ வாருவக்கட்டோடும், சவளோடும், தள்ளுவண்டியுடன் சந்திக்கு வந்து விடுவார் கைன்ஸ்.
சிலவேளைகளில் அதிகாலை இரண்டு மணிக்கு அவரதுபணி ஆரம்பமாகும். இரவிரவாக கொட்டும் பனி அவரை கடமைக்காக வீதியில் இறக்கிவிடும்.
கைன்ஸ்சின் வேலை.
நம்மவர் வாயில் “றோட்டுக்கூட்டி”.
கோழி மேய்ப்பது என்றாலும் கவர்ன்மெந்தில் மேய்க்க வேண்டும் என்பதும் நம்மவர் வாய்தான்.
அந்த மாநகர சபையின் தொடர் தொழிலாளர் வாசஸ்தலம் மூன்று அச்சந்தியில் இருக்கிறது. அதில் ஒன்றில் அவர் குடும்பத்தோடு வாழ்ந்தார். நம்மவர் வாயில் எம்சி குவாட்டஸ் (MUNICIPAL COUNSIL QUARTERS)
வசிப்பிடம் றோட்டருகில். வேலையும் றோட்டில். வீட்டு வாசற்படியை கடந்தால் வேலைத்தளம்.
அந்த மனிதனின் தொழிலுக்கு மதிப்பளித்து -கௌரவித்து அவருக்கு சிலை வடித்து திகைக்க வைத்திருக்கிறது அந்த மாநகரசபை.
இது எந்த நாட்டில் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது.
என்ன நினைக்கிறீர்கள்? எந்த நாடாக இருக்கலாம்.
தொழிலாளர் தினம் பற்றி பேசுவதால்………
ரஷ்யா…? கியூபா…? சீனா….? வியட்நாம்…?
மே தினத்தின் பிறப்பிடம் அமெரிக்க சிக்காக்கோ…..?
இடதுசாரி சிந்தனையை -அரசியலைக் கொண்ட தென்னமெரிக்க, ஆபிரிக்க, ஆசிய நாடோன்றின் நகராக இருக்குமோ ….?
தேசிய விடுதலைப்போராட்டங்கள் – வர்க்கப் போராட்டங்கள் இடம்பெறுகின்ற அல்லது தோற்றுப்போனாலும் அதன் எச்சங்கள் இன்னும் உள்ள தேசம் ஒன்றா….?
இவை எதுவுமேயில்லை.
பச்சை முதலாளித்துவ, உலகின் பணக்கார நாடுகளுள் ஒன்றான சுவிட்சர்லாந்து நாட்டில் (சுவிஸ்) இது நடந்திருக்கிறது.
இங்கு வீதிப் போக்குவரத்து இடது கையோட்டம். முன்னொரு காலத்தில் இலங்கையிலும் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக இடது கையோட்ட கார்களை வீதியில் காணலாம்.
முன்னால் கொட்டை எழுத்துக்களில் ஒரு அறிவிப்பு இருக்கும்.
“கவனம் இடது கையோட்டம்”. “கடிநாய் கவனம்” என்ற அறிவிப்பை நினைவுபடுத்தும். புரியும் என்று நினைக்கிறேன். கரணம் தப்பினால் மரணம்.
லுர்ற்ச்சேன் என்ற நகரத்தின் முதலாவது. போக்குவரத்து வளைவு இது. இதற்கு அருகில் ஒரு சிலுவை சரிந்து கிடக்கும். இதனால் இச்சந்திக்குப்பெயர் “KREUZSTUZT” சாய்ந்த சிலுவை.
நாளொன்றுக்கு 25,000 க்கும் அதிகமான வாகனங்ள் இந்த வளைவை சுற்றிவரும் அங்குதான் கைன்ஸின் நாள் பொழுது மட்டும் அல்ல இராப் பொழுதும் சிலவேளைகளில் கழியும்.
இந்தச் சந்தி ஜனநாயக எதிர்ப்பு போராட்டங்களுக்கு மட்டும் அல்ல குடியேற்றவாசிகள் ஓய்வு நேரத்தில் ஒன்று கூடும் இடமும் கூட.
வெளிநாட்டு தொழிலாளர்களாக இத்தாலியர்கள், ஐரோப்பியர்கள், கிழக்கு ஐரோப்பிய, யூகோஸ்லாவியா, துருக்கி, வியட்னாம் காரர்கள், இலங்கையர்கள், ஆபிரிகர்கள், ஆப்கானிஸ்தான் அகதிகள், உக்ரைன், பாலஸ்தீனம் என்று 70 க்கும் மேற்பட்ட தேசிய இனங்களைக் கொண்ட ஒரு பகுதி.
1972 இல் பனிப்பொழியும் ஒரு இரவில் இரண்டு இளம்பெண்கள் வாகன நெரிசலால் ஏற்படும் காற்று மாசடைதல் கவனத்தை ஈர்க்க “VATER, HIER STINKT” என்று சிலுவையோடு சரிந்து கிடந்த இயேசுவிடம் முறையிட்டிருந்தனர்.
முறைப்பாடு இதுதான்: “தந்தையே, இங்கு நாறுகிறது”. (வாகனங்கள் வெளியிடும் காபனீரோக்சைட் துர்நாற்றம்).
இத்தனைக்கும் கார்ள் மார்க்ஸின் மூலதனம் நூலை தலைமாட்டில் கூட ஒரு சிலர்தான் வைத்திருக்கக்கூடும். ஏனெனில் சோஷலிச சிந்தனை என்பது. இங்கு அரசியல் அலர்ஜி.
கொலஸ்கோஸ்ட் கால யூதர்களின் தங்கம்……
இரகசிய வங்கிக்கணக்கு…..
வலதுசாரிகளின் கையில் அதிகளவு அரசியல் அதிகாரம்….
என்றாலும் ,
உலகில் தலைசிறந்த சமஷ்டி அமைப்பு.
ஏழு அமைச்சர்களை மட்டும் கொண்ட அமைச்சரவை.
அமைச்சரவையில் விகிதாசார அடிப்படையில் அதிக வாக்குகளை பெறுகின்ற நான்கு கட்சிகளின் கூட்டாட்சி. கூட்டுப் பொறுப்பு.
எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லை. அதற்காக எதிர்ப்பற்ற அரசியல் அல்ல. விடயத்தை பொறுத்து அந்த விடயத்தை மட்டும் எதிர்ப்பதா ? ஆதரிப்பதா என்று தீர்மானிக்கும் முறை.
நம்மூரில் எதிர்க்கட்சி என்றால் பாராளுமன்றம் தொடங்கிய நாள் முதல் கலைக்கப்படும் நாள் வரை எதிர்ப்பதே தொழில்.
சர்வதேச அரசியலில் நடுநிலை. உலகின் தலைசிறந்த சமாதானத்தூதர்.
ஜனநாயகம், மனித உரிமைகள், மனிதாபிமான உதவி வரலாற்று பாரம்பரியம்.
சமூக, பொருளாதார, அரசியல் ஸ்த்திரத்தன்மையுடன் கூடிய 26 மொழி அடிப்படையிலான மற்றும் மத அடிப்படையிலான மாநிலங்கள்.
ஆனால் அரசுக்கு மதம் இல்லை. இதனால் தான் என்னவோ அது “மதம்கொண்டு” அரசியல் செய்வதில்லை.
மாநிலங்கள் ஒவ்வொன்றும் ஒரு நாட்டின் அளவிற்கு அதிகாரங்களை கொண்டவை.
இராணுவம், தபால் தொலைத்தொடர்பு, ரயில்வே, மத்திய வங்கி, இவைகளே சமஷ்டி மத்திய அரசின் கீழ் உள்ளவை.
மற்றைய அனைத்திலும் மாநிலங்களுக்கு அதிகாரம்.
நான்கு தேசிய மொழிகள். நான்கு மொழி பேசும் இனக்குழுமங்கள்.
தொழிலாளர் நலன்களை பேசுகின்ற மரபு ரீதியான சோஷலிச சமூக, பொருளாதார, அரசியலைக்கொண்ட நாடுகளில் கூட இல்லாத அளவுக்கு சமூக நீதி, தொழிலாளர் நலன் பேணப்படுகிறது.
நீதி, நிர்வாகம், சட்டவாக்கத்துறைகள் தனித்தும், சுதந்திரமாகவும் இயங்குகின்றன.
இன, நிற, மத, பால் வேறுபாட்டின் அடிப்படையிலான புறக்கணிப்புக்கள், ஊழல், இலஞ்சம் மிக,மிக,மிக குறைவு. இருப்பின் சட்டம் அதன் கடமையைச் செய்யும்.
பாராளுமன்றத்தில் அல்லது அமைச்சரவையில் வலதுசாரிகளினதும், தாராள பொருளாதார முதலாளித்துவ சக்திகளினதும் பலம் அதிகமாக இருப்பினும்…..
சமூக ஜனநாயகக் கட்சியினரும், பசுமைக் கட்சியினரும் தங்கள் இடதுசாரிகொள்கை இலக்குகளை அடைவதற்கு நேரடி ஜனநாயகம் உதவுகிறது .
சர்வஜனவாக்கெடுப்பில் மக்கள் சரியான முடிவுகளை எடுப்பதால் இடதுசாரிகள் சாதிக்கக்கூடியதாக உள்ளது.
அரசாங்கம் மட்டும் அல்ல, எதிர் நிலையில் உள்ளவர்களும் மக்கள் தீர்ப்பை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும்.
சர்வதேசம் கொண்டாடுகின்ற மேதினத்திற்கு இங்கு வேலைகுறைவு.
சுவிஸில் மேதினம் தேசிய விடுமுறை தினமல்ல.
சில மாநிலங்கள் மட்டுமே விடுமுறை தினமாக அறிவித்துள்ளன.
வெறும் மேதின ஊர்வலங்கள் -அரசியல் கர்ச்சனைகள் -அர்ச்சனைகள் எதுவும் இன்றி சமூக நீதியும், சமாதான வாழ்வும் உயிர்ப்புடன் இருக்கும் போது…….
வருடம் முழுவதும் சுரண்டிக்கொண்டு ஒரு நாள் மட்டும் பூக்கொடுப்பதால் – விடுமுறை விடுவதால் … ?
ஆவது ஒன்றுமில்லை.
என்றாலும் இங்கும்…..!
கார்ள் மார்க்ஸ் இன்னும் வாழ்கிறார்….
வாயில் அல்ல…. செயலில்….!