‘என்னுள் நானாக நீ’ (சிறுகதை) 

‘என்னுள் நானாக நீ’ (சிறுகதை) 

             — சபீனா சோமசுந்தரம் — 

ஒரு வழியா முடிச்சாச்சு…’ என்று ஒரு பெருமூச்சோடு நிமிர்ந்து உட்கார்ந்தாள் அவள். கை விரல்களால் கழுத்தை அழுத்தியபடி எதிரில் சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தாள் அது 1.30 ஐ காட்டியது.  

அவள் எழுதும் முதலாவது நீண்ட கதை அது. க்ரைம் தொடர் ஒன்றிற்காக வாராவாரம் அவள் எழுதிக் கொண்டிருக்கும் நெடுங்கதையில் அடுத்த வாரத்திற்கான பகுதியை எழுதி முடித்து மெயிலில் அனுப்ப நள்ளிரவு 1.30 ஆகி விட்டிருந்தது.  

வேலையை முடித்த திருப்தியோடு எழுந்து சென்று ஸோபாவில் விழுந்து படுத்தாள். அலுவலக வேலையுடன் இந்த எழுத்து வேலை என்று நாள் முழுவதும் ஏற்பட்ட களைப்பில் கண்கள் சொருகியது அவளுக்கு. 

மெல்ல இமைகள் மூடியது. ஒரு கடினமான கை ஆனால் மென்மையான ஸ்பரிஸத்தோடு அவளது கால்களை அழுத்தியது. வீட்டில் யாரும் இல்லை. அப்படி இருக்கையில் யார் எனது காலை பிடிப்பது என்று திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள்.  

எதிரில் அவன் அமர்ந்திருந்தான் அழகான மெல்லிய புன்னகையோடு. பின்னால் திரும்பி கதவை பார்த்தாள் அது பூட்டியிருந்தது. ஜன்னல்கள்அவையும் பூட்டி இருந்தது.  

அப்படியென்றால் யார் இவன்? எப்படி உள்ளே வந்தான்?  

பயத்தில் இதயம் நின்றுவிடும் போல் இருந்தது. வியர்த்துக்கொட்டியது.  

எதிரில் அமர்ந்திருப்பவனை பார்த்தாள். 

ஐந்தரை அடிக்கும் சற்று கூடிய உயரம் நேர்த்தியாக கத்தரித்து விடப்பட்ட மீசையும் அளவாக கொஞ்சமாக ஸேவ் செய்யப்பட்ட தாடியும் அவனுக்கு அத்தனை அம்சமாக இருந்தது. கறுப்பு நிற ஸேட் அணிந்திருந்தான். கழுத்திற்கு கீழே ஒரு பட்டனை மாத்திரம் திறந்து விட்டிருந்தான்.  

ச்சேக்… யாருன்னே தெரியல.. இப்பிடி வழிஞ்சிட்டு ரசிச்சட்டு இருக்கனே… என்ன மானெங்கெட்ட மனசு நமக்கு… என்று தன்னைத்தானே மனதிற்குள் திட்டியபடி. ‘க்க்கும்;ம்ம்…‘ என தொண்டையை செருமிக்கொண்டு 

யார் நீங்க..‘ என்றாள். பயம் வேறு வந்து மனதிற்குள் ஒட்டிக்கொண்டது.  

அவன் ஒன்றும் சொல்லவில்லை. புன்னகையோடு அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.  

யார் இவன் கதைக்க வராதோ…‘ என்று மனதிற்குள் யோசித்தபடி அப்பொழுது தான் கவனித்தாள், அவன் இன்னும் அவளுடைய கால்களை பற்றியபடியே அமர்ந்திருந்தது.  

பயம் அதிகரித்தது. காலை விடுவிக்க முயன்று மெல்ல இழுத்தாள். அவன் இன்னும் மென்மையாக பற்றிப்பிடித்தான். அவளுக்கு இதயம் வேகமாக அடிக்கத்தொடங்கியது. 

ஒரு வேளை பேயாக இருக்குமோ‘ என்ற நினைப்பு வர குப்பென வேர்த்தது அவளுக்கு. இதயத்துடிப்பின் வேகம் இன்னும் அதிகமானது. மீண்டும் அவன் யாரென்று கேட்கலாம் என்றால் தொண்டை வரண்டு பேச்சு வரவில்லை பயத்தில்.  

ஐயோ… கடவுளே.. பிள்ளையாரப்பா… முருகா… என்னை நீங்கதான் காப்பத்தனும்…‘ என்று மனதிற்குள் ஓலமிட்டாள்.  

பேசாம கண்ணை இறுக்கி மூடிட்டு அப்பிடியே படுத்து தூங்கிடுவமா..?’ என்று நினைத்தாள்.  

அந்நேரம் அவள் காதுகளில் விழுந்தது அவன் குரல்.  

என்னை தெரியலயா..‘ என்ற அந்த கரிசனையான கம்பீரமான குரலில் அவள் நெஞ்சில் நிறைந்திருந்த பயம் காணாமல் போனது.  

ஆனாலும் அவன் யாரென்று தெரியவில்லை. யோசித்து பார்த்தாள். ஹீம்ம்ம் தெரியவேயில்லை ஞாபகமேயில்லை.  

சொறி… தெரியலயே… சொன்னீங்கன்னா.. கண்டுபிடிச்சிடுவன்…‘ என்றாள் அவள். 

அவன் சிரித்தான் பதிலுக்கு உன்னையல்லால் என்னை யாரறிவார்…‘ என்றான் ஒரு ராகத்தோடு. 

ஸ்ஸ்ஸப்பா.. சொல்லி தொலைடா…‘ என்றிருந்தது அவளுக்கு 

ப்ளீஸ் எனக்கு தெரியல.. நீங்க சொல்லுங்களன்… அதவிட நீங்க இங்க எப்பிடி வந்தீங்கன்னு சொல்லுங்க முதல்ல…‘ என்றாள் அவள். 

என்னை யாரென்று நீ கேட்பது வேடிக்கையாக இருக்கிறது… என்று சொல்லி சிரித்துவிட்டு மெல்ல அவள் முகத்தினருகே குனிந்தான்.  

அவனுடைய சுவாசத்தின் வெப்பம் அவள் நாசியில் அடித்தது. சரெலென பின்னால் நகர்ந்து உட்கார்ந்தாள்.  

அவள் கால்களை பற்றியிருந்த அவனது கைகளில் ஒன்று அவள் நகர்ந்த அதே வேகத்தில் அவள் இடையை வளைத்து அணைத்து பிடித்தது.  

அவளால் நகரவும் முடியவில்லை அவனது நெருக்கத்தை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.  

நிமிர்ந்து அவனது கண்களை பார்த்தாள். அதில் காதலும் ஆசையும் நிறைந்திருந்தது.  

நீ… நீங்க… யாரு…ன்னு.. சொல்லுங்களேன்…‘ என்றாள் தடுமாறிபடி. 

உன் காதலன்.. அணுவணுவாய் நீ ரசித்து கொண்டாடும் உன் நாயகன்… என்றான் அவன். 

இது என்னடா புது கதையா இருக்கு… நமக்கு அப்பிடி யாரும் சரி வராதே.. ம்ம்ம்…‘ என்று யோசித்தாள். 

அவன் தன்னுடைய ஒற்றை விரலால் அவள் தாடையை தொட்டு நிமிர்த்தி 

புது கதை எல்லாம் இல்லை.. நீண்ட கதை இது..‘ என்றான். 

ஐயோ… இவன் மைண்ட் றீட் பண்ணுறானே…‘ என்று திகைத்தாள்.  

உன்னை என்றும் நானறிவேன்…‘ என்றான் அவன். 

ஐயோ எனக்கு விசர்தான் வருது.. யார் நீங்க…‘ என்று சற்று குரலை உயர்த்தி கோபமாக கத்தினாள் அவள்.  

அதற்கும் பதிலுக்கு புன்னகைத்துவிட்டு அவன் அழகன் அவன் பேச்சு அப்படி அவன் நடை அப்படி இப்படி என்றெல்லாம் உவமை கொட்டி, ரசனை சொட்டச் சொட்ட எழுதி என்னை படைத்தவள் நீதானே… அப்போ இந்த கதாநாயகனின் நாயகி இல்லையா..?’ என்றான் கண்களில் காதலோடு. 

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்கிறான் இவன்நான் யாரை ரசித்தேன். கூட வேலை செய்பவர்கள், உறவினர்கள், தினந்தோறும் போக்குவரத்தில் சந்திப்பவர்கள், மாமா அத்தை மகன்கள் என்று தனக்கு தெரிந்த எல்லா ஆண்களையும் பற்றி யோசித்தாள். 

ஹீம்ம்ம்.. யாரையுமே ரசிக்கல. பின்ன வேற யாரு…‘ என்று யோசிக்க எங்கோ அவள் நினைவில் ஓர் பொறி தட்டியது. 

அவனேதான். அவள் கதையில் வரும் அவளுடைய கதாநாயகன். அப்படியென்றால் இவன்ஆனால் எப்படிஅது வெறும் கதை. அது கதையில் வரும் கதாபாத்திரம்.  

அவள் விழிகள் ஆச்சரியமும் பயமும் ஒன்று சேர விரிந்தது. நிமிர்ந்து அவனை பார்த்தாள். கண்களால் அவனை அளந்தாள். ஆம் அவனேதான். அந்த உயரம் அந்த அழகான தாடி மீசை கம்பீரமான குரல் எல்லாம் அவள் உருவாக்கியவைதான்.  

அது எப்படி சாத்தியம். எழுத்தில் உருவாக்கிய ஒரு உருவம் உயிர் பெற்று வருவது எப்படி சாத்தியம்ஒரே குழப்பம்.  

ஆனாலும் அவன் யாரென்று தெரிந்த பிறகு அவனுடைய மூச்சின் வெப்பமும் இடையை வளைத்திருந்த கையின் அழுத்தமும் என்றும் தொடர்ந்தால் என்னவென்றிருந்தது அவளுக்கு. 

ஆனால்… எப்பிடி இதெல்லாம்…?’ நான் ஜஸ்ட் எழுதின ஒரு விசயம் எப்பிடி உயிரோடு வர முடியும்… என்றாள் குழப்பமாக.  

எனக்கு தெரியாது… ஆனால் நீ தினமும் பல ஆண்களை கடந்து வருகிறாய்… பல ஆண்களோடு நட்பு பாராட்டுகிறாய்.. ஆனால் உன்  நினைவுகள் மட்டும் எப்போதும் என்னையே சுற்றி இருக்கிறதே…அது ஏன்…?’ என்றான் அவன் புருவங்களை உயர்த்தி கேள்வியாய் அவளை பார்த்தபடி. 

ஆ… அ… அது வந்து… நீங்க நான் எழுதுற கதைட ஹீரோ… ஸோ.. அதனால எப்பவும் எப்பிடியெல்லாம் எழுதலாம்னு… உங்கள பத்தியே நினைச்சிட்டு இருக்கன்… இது ஒரு பிழையா…இதில என்ன இருக்கு…?’ என்றாள் அவள். 

இல்லை.. உனக்கு என் மீது காதல்…‘ என்றான் அவன் 

லவ்வா… நல்லா ஜோக் பண்ணுறீங்க.. நீங்க…‘ என்று சொல்லி சிரித்தாள் அவள். 

அப்படியென்றால் எனக்கு உன் மீது காதல்… நான் உன்னை நேசிக்கிறேன்…‘ என்றான் அவன்.  

அவளுடைய சிரிப்பு மறைந்தது. முகத்தில் கவலை குடிகொண்டது.  

நீங்க… என்ன சொல்லுறீங்க… என்றவள் நான் நினைக்கிறன்… இது கனவு என்டு…‘ என்றாள் உதட்டை சுழித்து யோசித்தபடி. 

கனவோ நிஜமோ.. உன் நாயகன் நான்தான்… என்றான். 

அவள் இயலாமையோடு அவனை பார்த்தாள்.  

மீண்டும் மெல்ல புன்னகைத்தான். இப்போது கூட எத்தனை அழகு அவன் புன்னகை.  

கண்ணை மூடு…‘ என்றான். 

அவள் ஏன்என்பது போல் பாத்தாள்.  

மூடு…‘ என்றான் 

அவள் கண்களை மூடினாள். 

நீ உடைந்து போகையில் எல்லாம்.. நான் கூட இருப்பேன்… நீண்ட நேரம் தூங்காமல் இருந்து உடம்பை கெடுத்துக் கொள்ளாதே… என்று அவன் குரல் அவள் காதுகளில் ரகசியமாய் கேட்டது. 

அவள் நாசியில் அடித்த வெப்பம் மெல்ல மெல்ல தணிந்தது. அவள் இடையில் இருந்த அழுத்தம் குறைந்தது. அவளது கால்கள் காற்றுபட்டு குளிரை உணர்ந்தது.  

கண்ணை திறக்க மனமில்லை. எதிரில் அவன் இல்லை என்பதை உணர்ந்தபோது. அப்படியே கண்களை மூடியபடியே ஸோபாவில் விழுந்தாள். மூடியிருந்த கண்களினுள் இருந்து வழிந்த ஈரம் அவள் கன்னங்களில் பரவி காய்ந்தது. அப்படியே அசதியில் அயர்ந்து உறங்கிப் போனாள் அவள்.