சாணக்கியனின் தமிழ்த்தேசிய “விதி”. (மௌன உடைவுகள்…! – 02) 

சாணக்கியனின் தமிழ்த்தேசிய “விதி”. (மௌன உடைவுகள்…! – 02) 

                  — அழகு குணசீலன் — 

எழுபத்தைந்து ஆண்டுகால தமிழ்தேசிய அகிம்சை அரசியலிலும், முப்பதாண்டுகால ஆயுதப்போராட்ட அரசியல் வரலாற்றிலும் மிக, மிக பிந்தி அரசியலுக்கு வந்தவர் சாணக்கியன். தமிழ்த்தேசிய அரசியலில் அவருக்கு வயது இரண்டு மட்டுமே. 

அண்மையில் கனடாவில் இடம்பெற்ற வீதித் திருவிழாவில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரையின் ஒருபகுதி “விதி” பற்றியது. விதி பற்றிய  அவரது விளக்கமும், ஒப்பீடும்  “சாது” ஒருவரின் மதநம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருந்தது. தனது விதியை வெற்றியின் பக்கம் மட்டும் நிரூபித்த அவர், கோத்தபாயவை தோல்வியின் பக்கம் நிரூபித்தார். தனது தோல்விப் பக்கத்தை வசதி கருதி மறைத்துவிட்டார். 

விதி பற்றிய கருத்து வெறுமனே அவரது தனிநபர் நம்பிக்கை சார்ந்ததல்ல. இலங்கை -தமிழ்த்தேசிய அரசியல் சார்ந்தது, சமூக விஞ்ஞான அரசியல் கோட்பாடுகள், கொள்கைகள் சார்ந்தது.  

சாணக்கியன் சொன்னது என்ன…..

“இலங்கையைப் பொறுத்தவரையில் நான் அடிக்கடி சொல்லுகின்ற ஒரு விடயம் எல்லாம் விதி. நான் நாடாளுமன்ற உறுப்பினராக வரவேண்டும் என்பது விதி. இன்று நான் கனடாவில் பேசுகின்றதும் விதி. ” 

“கோத்தபாயாவுக்கு வாக்களித்த அதே மக்கள் நாட்டைவிட்டு அவரை விரட்டியடித்திருக்கிறார்கள் அதுவும் விதி” என்று பேசியுள்ளார் சாணக்கியன். 

உலகின் அனைத்து மதங்களும் விதியின் அடித்தளத்தில் கட்டிஎழுப்பப்பட்டுள்ளன. மதங்களில் விதியானது மனிதன் தனது வாழ்நாளில் செய்கின்ற கர்ம வினையின் படி அதற்கான நன்மையையோ, தீமையையோ பெறுவான் என்று கூறுகிறது. அல்லது அவன் ஊழ்வினைப் பயனின்படி பிறக்கிறான் என்று கூறுகிறது. அதை அனுபவித்து மரணிப்பதே விதியின் அடிப்படை நியதி. 

இப்படி நினைக்கின்ற சமூகம் தனக்கு எதிராக விதியின் பெயரினால் செய்யப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவதில்லை. மாறாக அது என் விதி, என் தலைஎழுத்து, நான் செய்த கர்ம வினையின் பயன் என்று போராட்ட உணர்வை மழுங்கடித்துவிடும். இந்த நிலைப்பாடானது சகலவகையான சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக போராடுவதைத் தவிர்த்து அடங்கிப்போவதை குறிக்கும் அடிமைச்சாசனம். 

இந்த வகையில் தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை சாணக்கியன் எப்படிப் பார்க்கிறார்? தமிழ் மக்கள் தாம் செய்த கர்மவினைக்கான தண்டனையை அனுபவிக்கிறார்கள் என்று சொல்ல வருகின்றாரா? அப்படியானால் சாணக்கியனின் தமிழ்த்தேசிய அரசியலில் ஒரு பெரும் முரண்பாடு மட்டுமல்ல, வெறுமையும் இருக்கிறது. வெளிப்படைத்தன்மை அற்ற பொய்மை இருக்கிறது. விதியானது நிர்ணயிக்கப்பட்டது அதை ஆண்டவன் மட்டுமே மாற்றமுடியும், அதுவரை மக்கள் அதை அனுபவிக்க வேண்டும் என்பதே மதங்களின் நிலைப்பாடு. 

மதம் சார்ந்த விதி குறித்த மிகவும் இலகுவாக விளங்கக்கூடிய வரைவிலக்கணம் ஒன்றை நாம் தேடினால்…..! 

“விதி என்பது ஒரு தனி மனிதனின் அல்லது ஒரு தொகுதி மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு தடவையோ அல்லது பல தடவையோ அவர்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பது. இது ஒரு தற்செயல் நிகழ்வல்ல. அதற்கு எதிரானது மட்டுமன்றி தவிர்க்க முடியாததும் கூட. விதி முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட தீர்ப்பு. கடவுளின் வழங்கல். ஆண்டவனின் குற்றவியல் தண்டனைச் சட்டம்.” 

அன்றைய பொத்துவில் பாராளுமன்ற உறுப்பினர் கனகரெத்தினம் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்தபோது  “உனக்கு இடிவிழும்” என்று பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கம் சாபமிட்டார். சாணக்கியனின் நம்பிக்கையின்படி பிரபாகரனும், உமாமகேஸ்வரனும் கனகரெத்தினத்தைச் சுட்டார்கள். அமிர்தலிங்கத்தின் சாபம் நிறைவேறியது. 

முஸ்லீம் மக்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து இனச்சுத்திகரிப்பு செய்து புலிகளால் வெளியேற்றப்பட்டபோது “அல்லாஹ் உங்களைச் சும்மா விடமாட்டார்” என்று பாராளுமன்றத்தில் அஷ்ரப் கண்ணீர்மல்க சாபமிட்டார். முள்ளிவாய்க்காலில் நந்திக்கடலில் முஸ்லீம்களின் கண்ணீருக்கு பதில் கிடைத்தது “துவ்ஆ” நிறைவேறியது என்று முஸ்லீம்கள்  நம்பினார்கள். இதுதான் சாணக்கியனின் விதி. 

அநுராதபுர தாக்குதலின் பின்னர் சரியாக முப்பதாவது நாள் அந்தியேட்டியின் போது தாக்குதலுக்கு தலைமை தாங்கிய விக்டர் சிறிலங்கா படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டார். சிங்கள மக்களின் சாபம் நிறைவேறியதாக லலித் அத்துலத்முதலி பாராளுமன்றத்தில் பேசினார். 

இந்தக் கருத்துக்கள் அந்த அரசியல்வாதிகளின் மத நம்பிக்கையின் அடிப்படையிலானவை. அவர்கள் தமது நேர்த்திக்கடனை /துவ்ஆவை கடவுளிடம் ஒப்படைக்கிறார்கள். இந்த மத, விதி நம்பிக்கைகள் எல்லாவற்றையும்  நிராகரித்து, கடந்து வந்து தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் பல தசாப்தங்கள் கடந்துவிட்டன.  

 விதியை நம்புகின்ற ஒரு தேசிய இனம் விடுதலைக்கு போராடமுடியுமா? நடப்பதெல்லாம் விதி, என் தலையெழுத்து, கர்மவினைப்பயன் என்று அடிமைத்தனத்தை ஆண்டவனின் பெயரால் ஏற்றுக்கொள்ளும் சமூகமாகவே அது இருக்கும். சமூக, பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறை இறை நம்பிக்கையின் தண்டனை விதிக்கு உட்பட்டதல்ல, என்று நிராகரிக்கின்ற ஒரு தேசிய இனமே விடுதலைக்கு போராடும் தகுதியைப் பெறுகிறது. இது வரலாற்று நியதி. 

சாணக்கியனின் தமிழ்த்தேசிய விதியின் படி கோத்தபாய ஒடியதும், ராஜபக்சாக்களின் வீழ்ச்சியும் விதி என்றால்….. 

ஆயுதப் போராட்டத்தில் பலியான அனைத்து இயக்க போராளிகளின் மரணமும் அவர்களின் விதி…. 

மாற்றுக்கருத்தாளர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்களின் மரணங்கள் அனைத்தும் அவர்களின் விதி… 

சிறையில் வாடும் அரசியல்கைதிகள், அது அவர்களின் தலைவிதி…. 

காணாமல் போனவர்கள், அவர்களின் தலைவிதி…. 

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் அந்த மக்களின் விதி… 

வெள்ளைக்கொடியும்…. மே18உம் விதியேதான் என்ற முடிவுக்கு வரமுடியும். 

அப்படியானால் நீங்கள் நம்புகின்ற விதியின்படி நடந்தவற்றை எதிர்த்து பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பது தமிழ்த்தேசிய அரசியலின் முரண்பாடு இல்லையா…? ஏனெனில் நடந்தவை அனைத்தும் கர்மவினைப்பயன். 

பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழ் மக்களின் தலைவிதி என்றால் கையொப்ப ஊர்வலம் எதற்கு….? 

இவை எல்லாம் விதி என்றால் ஜெனிவாவில் உங்களுக்கு என்ன வேலை இருக்கிறது…..? 

 சர்வதேச பொறிமுறைக்கும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் என்ன வேலை இருக்கிறது…..?  

விதியை நம்பும் நீங்கள் யாரை குற்றக்கூண்டில் ஏற்றப்போகிறீர்கள்…? 

கோத்தபாயாவையா..? இல்லை ஆண்டவனையா….?  

விதி குறித்த மிக இலகுவான உளவியல் ஆய்வு இவ்வாறு கூறுகிறது….! 

“விதி கடவுளால் நிர்ணயிக்கப்படுவதில்லை. இது தண்டனையோ, தண்டனை விலக்கோ அல்ல. இது வாழ்க்கைப் பரீட்சைக்கு சமமானது. அந்தப் பரீட்சையில் உள்ள வினாக்கள் ஒரு தடைபோன்றவை. அதை நாம் எவ்வாறு தாண்டுகிறோம் என்பதுதான் அந்தப் பரீட்சை”. 

இதை மறுவாசிப்பு செய்தால் சவால்களை வாழ்க்கையில் எதிர்கொள்வது. திட்டமிட்டு, சிந்தனை, இலக்கு நோக்கி செயற்படுவது. விவகாரங்களை சரியாகக் கையாளுதல். சவால்களை கையில் எடுத்து எதிர்காலத்தை சுயவிருப்பத்திற்கு ஏற்ப நெறிப்படுத்தல். 

இதை இன்னும் இலகுபடுத்தினால் நாம் பேசுகின்ற “விதியை மதியால் வெல்லமுடியும்” என்பதுதான் அது. இதுதான் மதத்தின் பேரிலான மக்களின் அடிமைச்சானத்தை தகர்க்கின்ற போராட்டங்களின், புரட்சிகளின் வடிவமாக அமைகிறது. உலகின் சகல வகையான போராட்டங்களுக்கும், புரட்சிகளுக்கும்  இந்த சிந்தனை அடிப்படையானது. இந்தச் சிந்தனை அற்ற, அடக்குமுறை ஆண்டவனால் நிர்ணயிக்கப்பட்டது என்று நினைக்கின்ற சமூகத்தில் மக்கள் புரட்சி ஒன்று ஏற்பட வாய்ப்பில்லை.  

இதனால் தமிழ்த்தேசிய போராட்டம் விதி பற்றிய பாரம்பரிய, மதம்சார்ந்த கருத்தியலை நிராகரித்ததன் விளைவு. சாணக்கியன் கூறுவது போன்று எல்லாம் விதி என்பது, விதியை மதியால் வெல்ல முடியும் என்ற மனித சமூகத்தின் மகத்தான ஆற்றலை நிராகரிக்கிறது. போராட்ட உணர்வையும், புரட்சிகர அணுகுமுறைகளையும், சிந்தனைகளையும் நிராகரிக்கிறது.  

இதன்படி சாணக்கியன் எம்.பி ஆனது விதியல்ல. அவர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து அடைந்த தோல்வியில், சவால்களை, சந்தர்ப்ப சூழ்நிலையை சந்தர்ப்பத்திற்கு ஏற்ப சரியாகப்பயன்படுத்தி எம்.பி. ஆனதுதான் உண்மை. இதை அவர் தனது மதியினால் சாதித்தாரே அன்றி விதியினால் அல்ல.  

இதைத்தான் கார்ள்மார்க்ஸ் மதம் அபின் என்றார். பெரியார் மதம் மனிதனின் அடிமைச்சங்கிலி என்றார். சமூக விஞ்ஞானம் சார்ந்த சமூக, பொருளாதார, அரசியல் அணுகுமுறைகளின் மூலம் சமூகக் கட்டமைப்பில் அவர்களால் மாற்றங்களைச் செய்யமுடிந்தது. மகாத்மா காந்தி ஒரு உறுதியான இந்துவாக இருந்தும் அவர் எல்லாம் எங்கள் கர்மவினை என்று நம்பியிருந்தால் சமூக அநீதிகளுக்கு எதிராக போராடி இருக்கமுடியாது. அம்பேத்கர் போராடி இருக்கமுடியாது. உமர் முக்தார் போராடியிருக்கமாட்டார். கறுப்பின மக்களின் விடுதலை குறித்து நெல்சன் மண்டேலாவும், மார்ட்டின் லூதர் கிங்கும் கனவுகண்டிருக்க வாய்ப்பில்லை. 

ரஷ்யப் புரட்சி, நவசீனப் புரட்சி, வியட்நாமியப் புரட்சி, கியூபாப் புரட்சிகள் உலகவரலாற்றில் இடம்பெற்றிருக்கமுடியாது. லெனின், மாவோ, ஹோசுமின், பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா எல்லோரும் இந்த விதிக்கோட்பாட்டை நிராகரித்த புரட்சியாளர்கள். உலகில் சாதனை படைத்தவர்கள். அடிமைச் சமூகக் கட்டமைப்பு பாறையை நெம்புகோல் என்ற மதி கொண்டு புரட்டிப்போட்டவர்கள். 

இந்தியர்கள் மாட்டையும், குரங்கையும், பாம்பையும் வணங்கும் வரை இந்தியாவுக்கு விடுதலை இல்லை என்றார் மாக்ஸ். உலகின் ஒரே இந்து இராச்சியத்தின் மன்னர் ஆட்சியை இரவோடிரவாக முடிவுக்கு கொண்டுவந்தார்கள் நேபாள மார்க்ஸ்ஸிட்டுக்கள். இதை அவர்கள் தம் மதியினால் சாதித்தார்கள். நேபாள மக்கள் தமது மத நம்பிக்கையின்படி நடப்பவை எல்லாம் விதி என்று நம்பியிருந்தால் இது சாத்தியமாகி இருக்குமா? எல்லாம் விதிதான் என்றால் காலிமுகத்திடல் போராட்டம் ஏன் உருவாகியது? 

இந்த விதியை மறுதலிக்கின்ற உலக வரலாற்றுப் பயணத்தின் ஒரு துளியாகவே தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது. அது விதியை நிராகரித்த போராட்டம். உமாமகேஸ்வரன், பத்மநாபா, பாலகுமாரன் ஆகியோரின் வர்க்கப் போராட்டம் தழுவிய மதங்களை முதன்மைப்படுத்தாத மாக்ஸிஸ அணுகுமுறையில் பிரபாகரன், சிறி.சபாரெட்டணம் மத நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தபோதும் ஆயுதப் போராட்ட புரட்சியாளர்களாக அவர்கள் விதியை நிராகரித்து மதியால் போராடினார்கள்.   

ஆனால்…! இவர்கள் அனைவரும் தோற்றுப் போனார்கள் இது விதியின் விளையாட்டா…? அல்லது மதியை தவறாகப் பயன்படுத்திய சுத்து மாத்து, குத்து வெட்டு, தந்திரோபாயங்களின் சூதாட்ட விளைவா….?