—- தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பா.உ. யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து 19.08.2022 அன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது,
பெரும் கடன் பொறிக்குள் விழுந்திருக்கும் இலங்கை தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரே வழி தமிழ் மக்களுடன் தமிழ் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை எட்டுவதுதான். என்று கூறியுள்ளார்.
கேட்கவும் படிக்கவும் காதும் குளிர்கிறது; கண்ணும் மிளிர்கிறது; மனமும் குதூகலிக்கிறது.
அவர் எப்போதும் இலங்கையானது தமிழ்த் தேசம், சிங்களதேசம் அதாவது முறையே தமிழீழம், சிங்கள ஸ்ரீலங்கா ஆகிய இரு தேசங்களை உள்ளடக்கிய ஒரு நாடு என்ற அடிப்படையில்தான் இனப் பிரச்சனைக்கான நிரந்தரமான அரசியல் தீர்வு குறித்துப் பேசி வருகிறார். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை வரலாற்றின் அடிப்படையிலும் அரசியல் கோட்பாட்டு அடிப்படையிலும் இக் கோரிக்கையைத் தவறென்று கூறுவதற்கில்லை.
ஆனால், நடைமுறையில் என்ன நடந்தது? என்ன நடக்கின்றது?
அரசியல் ரீதியாக 1949 இல் இருந்து 1972 வரையிலான காலப்பகுதியில் தமிழரசுக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த ‘சமஸ்டி’யை மறுதலித்த இலங்கை அரசாங்கங்கள் – பின் தமிழீழத் தனிநாட்டை உருவாக்கும் ஆயுதப் போராட்டத்தை அங்கீகரிக்காது அதனை மூர்க்கமாக எதிர்த்து இறுதியில் முறியடித்த இலங்கை அரசாங்கங்கள் – இடையில் இந்தியத் தலையீட்டினால் கொண்டுவரப்பட்ட 13 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தையே கடந்த 35 வருடங்களாக அதனை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்யாது அதனை இழுத்தடித்து வரும் இலங்கை அரசாங்கங்கள் இன்று பொருளாதார நெருக்கடிப் பொறிக்குள் விழுந்துவிட்டதன் காரணமாக இரவோடு இரவாக மனம் மாறி அல்லது மனம் திருந்தி தமிழ் மக்களுடன் தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை எட்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதிர்பார்க்கின்றாரா?
அப்படித்தானென்றாலும், அவர் எதிர்பார்க்கும் அத்தகையதொரு தீர்வை இலங்கை அரசாங்கத்தின் அதாவது கோட்பாட்டின் அடிப்படையில் சிங்கள தேசத்தின் கையில் விடாமல் அத்தகைய தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கின்ற தீர்வுத் திட்டத்தை எழுத்தில் அரசியல் பொதுவெளியில் தமிழ்த் தேசத்தின் சார்பில் தானே முன்வைப்பாரா?
அப்படிச் செய்யாமல் சும்மா ‘இரு தேசம்; ஒரு நாடு’ என வாய் மெல்லுவதில் எந்தப் பயனும் இல்லை.
அப்படியொரு தீர்வுத் திட்டத்தை எழுத்தில் அவர் முன் வைத்தாலும் கூட பாராளுமன்ற அரசியல் மூலம் அதனைச் சாதிக்கலாமா? ஆயின் எப்படிச் சாதிக்கப் போகிறார்?
தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள வேறு எந்தத் தமிழ்க் கட்சிகளுடனும் இணங்கிப் போகாமல் தனியே நின்று அவரால் எதனையும் சாதிக்க முடியுமா?
தமிழ்த் தேசியப் பரப்பில் கீரை முளைத்தது போல் பல கட்சிகளும் பல அரசியல் அமைப்புகளும் இருக்கும் நிலையில் – மட்டுமல்ல ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு திட்டத்தை முன்வைக்கும் நிலையில் சிங்களத்தரப்பு அல்லது மூன்றாம் தரப்பொன்று எந்தத் திட்டத்தைப் பற்றி யாரோடு (எந்தக் கட்சியோடு) பேசுவது?
மேலும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரது கட்சியும் எப்போதும் இந்திய எதிர்ப்பு வாதத்தைக் கொண்டிருக்கும் நிலையில், இனப்பிரச்சினைக்கான எந்த நியாயமான தீர்வும் இந்தியாவின் அனுசரணை அல்லது அழுத்தமில்லாமல், 2500 வருடங்களாகப் பௌத்த சிங்களப் பேரினவாதத்தால் கட்டமைக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட இலங்கை அதிகார வர்க்கத்துடன்-சிங்கள தேசத்துடன் இனப் பிரச்சனைக்கான தீர்வாக அவர் எதிர்பார்க்கும் அல்லது முன்மொழியும் தீர்வுத் திட்டத்தை எட்ட முடியுமா?அப்படித்தான் என்றாலும் கூட தன்னோடுள்ள தனது கட்சியின் செயலாளரான கஜேந்திரனையும் தன்னோடு சேர்த்து இரு பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே வைத்துள்ள அவரால் பாராளுமன்ற அரசியல் நடைமுறைகளுக்கூடாக அவர் கூறியுள்ளபடி தமிழ்த்தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை எட்டத்தான் முடியுமா?
நிறைவாக அவரிடம் ஒரு கேள்வி
‘தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி’ என்று உங்கள் கட்சிக்குப் பெயர் வைத்திருந்தாலும் கூட இலங்கையின் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ‘சைக்கிள்’ சின்னத்தையுடைய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் கீழ்த்தானே இன்னமும் செயல்படுகிறீர்கள்.
உங்கள் கட்சியின் யாப்பில் (அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ்) ‘இரு தேசம்; ஒரு நாடு’ கோட்பாடும், இக் கோட்பாட்டின் அடிப்படையிலமைந்த தீர்வும் உள்ளடக்கப்பட்டுள்ளதா?
இக் கேள்விகளுக்கு நீங்கள் தெளிவான-உறுதியான பதில்களைத் தரவில்லையென்றால் உங்கள் கூற்றுகள் யாவும் தேர்தல் அரசியலை மையமாக வைத்து தமிழ் மக்களையும்- முழு இலங்கையையும்-சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுகிற வேலையென்று கொள்ளுதலே தகும்.