— கருணாகரன் —
“தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையைப் பற்றி கடந்த வாரம் ரெலோ, ஜனாதிபதி ரணிலுடன் பேசியிருந்தது. இது தொடர்பாக தாம் கவனமெடுப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ரணிலும் உருவாக்கியிருந்தார். ஆனால், இந்த வாரம் கைதிகள் தமது விடுதலையைக் குறித்த கவன ஈர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இது ஜனாதிபதியின் நடவடிக்கைகளின் மீது நம்பிக்கையீனத்தையே உருவாக்கியுள்ளது. ஆகவே மறுபடியும் பழைய கதைதான். அதாவது அரசியற் பம்மாத்துத் தொடரும் என்பதாக. இதற்கு மேலும் ஒரு உதாரணம், பழைய அரசாங்கத்தைப்போலவே புதிய அரசாங்கமும் என்பதற்குச் சான்றாக 37 ராஜாங்க அமைச்சர்களின் நியமனம். ஆகவே ரணில் –மைத்திரி – மகிந்த –கோத்தபாய எல்லாமே ஒன்றுதான். இந்த நிலையில் அரசியற் கைதிகள் விடயத்தில் ஒன்றும் புதிதாக நிகழும் என்று எதிர்பார்க்க முடியவில்லை.
அரசியற் கைதிகளின் வழக்கு விசாரணைகளும் விடுதலையும் காலவலையறையற்று நீடிக்கிறது. இதனால் அரசியற் கைதிகளின் அடிப்படை உரிமைகளும் அவர்களுடைய குடும்பத்தினரின் வாழ்வும் பல ஆண்டுகளாக மோசமாகச் சிதைக்கப்படுகின்றன. இது அரசியல் உள்நோக்கமுடைய அநீதியான செயற்பாடாகும்.
யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகள் கடந்த பிறகும் யுத்தகால வன்முறை அரசியற் சூழலுக்கான காரணங்கள் இல்லாதொழிந்த பின்பும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரசாங்கம் நீக்காமல் நீடிப்பது மக்களின் மீதும் சுதந்திரமான அரசியல் உணர்வின் மீதும் விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலாகும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் அரசியல் கைதிகள் நீதியற்ற முறையில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இது கண்டனத்துக்குரிய நீதிமறுப்புச் செயற்பாடாகும்” என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமார். இதே கருத்தை ஏனைய தமிழ் அரசியற் தரப்புகளும் மனித உரிமைகள் அமைப்புகளும் வெளிப்படுத்தியுள்ளன. இந்த விடயங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் வணக்கத்துக்குரிய சக்திவேல் அடிகளின் அறிவிப்பும் இவ்வாறானதே.
இதில் சந்திரகுமாரின் கருத்துச் சற்று ஊன்றிக் கவனிக்கத்தக்கது. “அரசியற் கைதிகள் அரசியற் பிரச்சினைகளாலேயே கைதிகளாக்கப்பட்டவர்கள். அரசியற் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தினாலும் அதனுடைய நீதித்துறையினாலும் சர்வதேச சமூகத்தினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. ஆகவே, அந்த அரசியற் பிரச்சினைகள் நியாயமான முறையில் தீர்க்கப்படுவது எவ்வளவு அவசியமானதோ அதே அளவுக்கு அந்த நோக்கில் அரசியற் கைதிகளின் விடுதலையும் அரசியல் ரீதியாக அணுகப்பட வேண்டும். ஆனால், இங்கே அவ்வாறு நடைபெறாமல் அரசியல் கைதிகளின் விடயம் வெறும் சட்டப் பிரச்சினையாக நோக்கப்படுகிறது. இதுவே அரசியல் கைதிகளின் விடுதலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடையாகும். இது தவறானதாகும். எனவே இனியும் தாமதிக்காமல் இதை அரசியல் தீர்மானத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பது நமது கவனத்திற்குரியது” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இது முக்கியமான ஒன்றாகும். இந்தப் பிரச்சினையை சட்டப்பிரச்சினையாகப் பார்த்தால் இப்போதைக்கு முடிவில்லை. இதை ஒரு அரசியல் விவகாரமாகவே அணுக வேண்டும். அப்பொழுதுதான் தீர்வு கிட்டும். இதையே ரெலோவும் கேட்டுள்ளது.
முதலில் “அரசியற் கைதிகள்” என்று குறிப்பிடப்படுவதை நாம் நிறுத்த வேண்டும். ஏனென்றால், இவர்கள் உண்மையிலேயே கைதிகள் இல்லை. குற்றவாளிகளும் இல்லை. அரசாங்கமும் அதனுடைய சட்டத்துறையும் இவர்களைக் குற்றவாளிகளாகவும் கைதிகளாகவும் அடையாளப்படுத்துகின்றனவே தவிர இவர்கள் மக்களின் விடுதலையை நோக்கிய செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள். அதற்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்து உழைத்தவர்கள். (இதில் மாற்றுப் பார்வைகள், மறுநிலைப்பாடுகள் இருக்கலாம்).
மக்களுடைய விடுதலைக்கான அரசியலை முன்னெடுப்போரை பொதுவாகவே எந்த அரசும் உவப்போடு பார்ப்பதில்லை. அதிலும் ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் அரசுகள் இவர்களை எதிரிகளாகவே கருதும். இதுவே இங்கும் நடந்துள்ளது. தமது மக்களின் விடுதலைக்காக காந்தி எப்படிச் சிறையில் அடைக்கப்பட்டாரோ, எப்படி மண்டேலா சிறையில் தள்ளப்பட்டாரோ, எவ்வாறு ஃபிடலுக்குச் சிறை விதிக்கப்பட்டதோ அவ்வாறே இவர்களுக்கும் சிறை விதிக்கப்பட்டது. அவர்கள் எல்லாம் எப்படி குற்றவாளிகள் இல்லையோ அவ்வாறே இவர்களும் குற்றவாளிகளில்லை. அவர்களெல்லாம் எப்படி விடுதலையாளராகக் கொள்ளப்படுகின்றனரோ அவ்வாறே இவர்களும் விடுதலையாளர்கள்.
ஆகவே இவர்கள் உண்மையான அர்த்தத்தில் ஒடுக்குமுறைக்கும் அதிகாரத்துக்கும் எதிரானவர்கள். மக்களுக்கான விடுதலையாளர்கள். தமது வாழ்வைப் பற்றிச் சிந்திக்காமல், தமது குடும்பத்தின் நலனைப் பற்றிப் பொருட்படுத்தாது, மக்களின் நலனைப் பற்றியும் சனங்களின் வாழ்வைப் பற்றியும் சிந்தித்தவர்கள். எனவே விடுதலையை நோக்கிய சமூகம் இவர்களைக் கைதிகள் என்று கருதவோ குறிப்பிடவோ கூடாது. விடுதலையாளர்கள் என்றே உணர்ந்திருக்க வேண்டும்.
அடுத்தது, இவர்களைக் குற்றவாளிகளாகவும் கைதிகளாகவும் அடையாளப்படுத்தித் தொடர்ந்து – காலவரையற்றுத் – தடுத்து வைத்திருக்கும் அரசு இவர்களை மட்டும் தண்டிக்கவில்லை. இவர்களைச் சேர்ந்தவர்களையும் தண்டிக்கிறது. இவர்களைத் தடுத்து வைத்திருப்பதன் மூலம் இவர்களைத் தனிமைப்படுத்துகிறது. குடும்பத்தை இவர்களிடமிருந்தும் குடும்பத்திலிருந்து இவர்களையும் பிரித்துத் தனிமைப்படுத்துகிறது.
அவ்வாறே சமூகத்திலிருந்தும் இவர்களையும் இவர்களிலிருந்து சமூகத்தையும் பிரித்து வைத்திருக்கிறது. இதன்மூலம் இவர்களுடைய அரசியல் உணர்வையும் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தித் தனக்கான நெருக்கடிகளைத் தணித்துக் கொள்ளப்பார்க்கிறது. கூடவே விடுதலையை நோக்கிய ஏனைய செயற்பாட்டாளர்களுக்கும் கூட்டு அச்சுறுத்தலை விடுக்கிறது. ஒடுக்குமுறைக்கு எதிரான – விடுதலையை நோக்கிய – அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் இவ்வாறு சிறைப்படுத்தப்படுவர். காலவரையறையற்றுத் தடுத்து வைக்கப்படுவர் என்ற அச்சுறுத்தலை அரசு மறைமுகமாக ஏற்படுத்துகிறது. இதற்கு நல்லதொரு உதாரணம், அரகலய என்ற அண்மைய காலிமுகத்திடல் (Gota Go Gama) போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவதும் தடுத்து வைக்கப்படுவதுமாகும்.
இதை விடுதலையை நோக்கிய சமூகத்தினர் தமது கவனத்திற்கொண்டு இதற்கு எதிரான தமது எதிர்ப்பை வலுப்படுத்த வேண்டும். இதற்கான போராட்டங்கள் மேற்குறித்த விடுதலையாளர்களால் ஏற்கனவே சிறைக்கொட்டடிகளில் நடத்தப்படுகின்றன. இதற்கு ஆதரவாக பல்வேறு இடங்களிலும் சில தரப்பினர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இலங்கையில் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் அரசியல் கைதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட விடுதலையாளர்கள் அரசியல் தீர்மானங்களின் மூலம் விடுவிக்கப்பட்ட முன்னுதாரணங்கள் பலவுண்டு. விடுதலை இயக்கங்களுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுகளின்போதெல்லாம் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த விடுதலையாளர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இலங்கை– இந்திய உடன்படிக்கையின்போதும் இந்த விடயம் முதன்மைக் கரிசனையில் எடுக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான விடுதலையாளர்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்குப் பிறகு பிரேமதாஸவின் ஆட்சிக்காலத்திலும் இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டிருந்த விடுதலையாளர்கள் ஈரோஸ் இயக்கத்தின் முயற்சியினால் விடுவிக்கப்பட்டதுண்டு.
ஆகவே இந்த விடயம் அரசியல் தீர்மானத்தின் அடிப்படையிலேயே கையாளப்பட வேண்டும். ஒரு போதும் சட்டரீதியில் சாத்தியப்படுத்த முடியாதது. சட்டரீதியில் அணுகமுற்பட்டால் இவர்கள் மீட்சியற்றுக் கடுமையான தண்டனைக்குள்ளாக வேண்டியிருக்கும். இதை ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஏற்றுக் கொண்டால் அந்தச் சமூகம் விடுதலைக்காகப் போராடுவதாக கருத முடியாது. அதற்கு விடுதலை சாத்தியமாகப் போவதுமில்லை.
யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்பொழுது பகை மறப்பு, மீளிணக்கம், அமைதித்தீர்வு நோக்கிய செயற்பாட்டுக் காலம் என பிரகடனப்படுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் முக்கியமானது, பகைமறப்பிற்கும் மீளிணக்கத்துக்குமான நடவடிக்கைகளாகும். இதற்கு அடிப்படையானது பாதிக்கப்பட்ட மக்களின் உளநிலையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே. அந்த நம்பிக்கையைக் கட்டியெழுப்புதில் ஒரு முதன்மைப் புள்ளி, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலையாளர்களை விடுதலை செய்தலாகும். இதற்கான அரசியல் தீர்மானத்தை எடுத்தலாகும்.
ஆனால், இதை அரசாங்கம் செய்யவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் தம்மைப் பிணைத்திருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் இதைப் பொறுப்பேற்கவில்லை. அந்த அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்த விடயமும் உள்ளடக்கப்பட்டிருந்தது என்பதைச் சம்மந்தன் மறந்து போய்விட்டார். மைத்திரியும் ரணிலும் கூட மறந்து விட்டனர். இப்பொழுது தாராள ஜனநாயகவாதி என்ற அடையாளத்தைக் கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியும் செய்யவில்லை. செய்யக் கூடிய நிலை தெரிவதாகவும் இல்லை.
எனவே இந்த நாட்டிலே நல்லெண்ணத்தை உருவாக்கும் வகையிலான செயற்பாட்டை அரசாங்கமும் எதிர்க்கட்சியிலிருக்கும் பங்காளிகளான கூட்டமைப்பும் ஐக்கிய மக்கள் சக்தியும் தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் முஸ்லிம் கட்சிகளும் முன்னெடுக்கவில்லை என்பது தெளிவு. ஏற்கனவே அரசியல் தீர்வுக்கோ அமைதிச் சூழலுக்கோ பகை மறப்பிற்கோ ஏற்ற சூழலை உருவாக்குவதில் கரிசனையற்றிருக்கும் அரசாங்கமும் இந்தக் கூட்டும் இதில் மட்டும் எப்படிச் சரியாக –நியாயமாக நடந்து கொள்ளும் என யாரும் கேட்கலாம்.
ஆனால், அரசாங்கமும் இந்தக் கூட்டினரும் இவற்றைச் செய்யாமல் தவிர்க்கவோ தப்பவோ முடியாது. அப்படித் தவிர்த்தால், தப்பினால் அது தொடர்ந்து செய்யப்படும் தவறு என்றே அமையும். அப்படி ஒரு அரசாங்கம் தவறு செய்யுமாக இருந்தால் அது முழுமையாக நாட்டையே பாதிக்கும். நாட்டைப் பாதிப்படையச் செய்வதென்றால், அதன் அர்த்தம் மக்களைப் பாதிப்படையச் செய்கிறது என்பதன்றி வேறென்ன?
எனவே இதில் உள்ள அபாய நிலைமையைக் கவனத்திற் கொண்டு அனைத்து மக்களும் தமது கூட்டுக் குரலை இந்த விடுதலையாளர்களின் விடுதலைக்காக ஓங்கி ஒலிக்க வேண்டும்.
மண்டேலாவின் விடுதலையே தென்னாபிரிக்காவில் நீடித்துக் கொண்டிருந்த அரசியல் முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்தது. அங்கே நிலையான அமைதி திரும்புவதற்குக் காரணமாகியது. காந்தியின் விடுதலையே இந்திய சுதந்திரத்துக்கான ஏது நிலைகளைத் தந்தன. உலகம் முழுவதிலும் இதுவே நடைமுறை. இதுவே அனுபவம்.
இன்று இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கும் பகை மறப்பிற்கும் நல்லிணக்கத்துக்கும் தென்னாபிரிக்க முன்னுதாரணங்களை ஜனாதிபதியும் அரசாங்கத்தின் பிற தலைவர்களும் அடிக்கடி வலியுறுத்துகிறார்கள். ஆனால், தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலாவின் விடுதலையே அங்கே அமைதிக்கான – பகை மறப்பிற்கான –நல்லிணக்கத்துக்கான வாசல்களைத் திறந்து விட்டது. மண்டேலாவைத் தடுத்து வைத்திருந்த சிறைக்கதவுகள் திறக்கப்பட்டபோது, தென்னாபிரிக்காவின் சமாதானக் கதவுகளும் திறந்தன. ஆகவே அமைதிக்கான தொடக்கப்புள்ளியாக சிறைப்படுத்தப்பட்ட அரசியல் விடுதலையாளர்களின் விடுதலை இருந்தது என்பதைச் சுலபமாக மறந்துவிடுகிறார்கள். இதைப் புரிந்து கொள்ளாமல் அமைதியைப் பற்றிப் பேச முடியாது. தீர்வைப்பற்றிச் சிந்திக்க முடியாது.
எனவே சிறைப்படுத்தப்பட்டிருக்கும் விடுதலையாளர்களின் விடுதலையே இலங்கையின் அமைதித் தீர்வுக்கான வாசலைத் திறக்கும் எனப் புரிந்து கொண்டு இவர்களுடைய விடுதலையைச் சாத்தியப்படுத்த வேண்டும். இதன் மூலம் பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கான ஆறுதலை வழங்கி, பகை மறப்புக்கும் புரிந்துணர்வுக்குமான ஏதுநிலைகளை உருவாக்க வேண்டும்.
இனியும் காலத்தை இழுத்தடித்து, முரண்நிலைகளையும் பகை வளர்ப்பையும் செய்து, நாட்டின் எதிர்காலத்தைப் பாழடிக்க முடியாது.