— அழகு குணசீலன் —
அன்பார்ந்த அரங்கம் வாசகர்களே! வணக்கம்!!
மௌனம் எப்போதும் சம்மதம் அல்ல. எந்த ஒரு விடயத்திலும் எந்த ஒரு மனிதனுக்கும் ஒரு கருத்து இருக்கும். அப்போதுதான் அவன் மனிதன். அக்கருத்து எல்லோருக்கும் உடன்பாடுடையதா?அல்லது உடன்பாடற்றதா? என்பது அல்ல பிரச்சினை. அது எதுவாக இருந்தாலும் பேசப்பட வேண்டும். விவாதப் பொருளாக வேண்டும். அப்போதுதான் சமூக, பொருளாதார, அரசியல் சார்ந்த பேசாப் பொருள்களை பேசுபொருளாக்க முடியும். பொத்திப்பொத்தி வைக்கின்ற கட்டுப்பெட்டி ஆமைத்தனத்தை கட்டுடைப்பு செய்ய முடியும்.
சமூகத்தில் பெரியமனிதர்கள்/ கனவான்கள் என்று தமக்கு தாமே சால்வை போட்டுக்கொண்டு இவை பற்றி ஊமைகளாக இருப்பவர்கள் சமூக விரோதிகளுக்கு சமமானவர்கள். சமூகத்தில் கனவான்களாக, தமக்கு இருக்கின்ற தலைமைத்துவ, வழிகாட்டல், முன்மாதிரி, சமூக அக்கறை பொறுப்பை பாம்புக்கும், கம்புக்கும் நோகாமல் தட்டிக்கழிப்பவர்கள் உண்மை என்றால் ஊமைகளாவர். இவர்களைப்போன்ற கருத்து இருந்தும் இல்லாதவர்களாக, இருக்கிற கருத்தைச் சொல்ல திராணியற்ற குரல் அற்றவர்களாக சமூகத்தில் நடமாடும் கனவான்களையும், சமகால சமூகத்தில் பேசத்தகாத விடயங்களாக மழுப்பப்படுகின்ற “துடக்கு” விடயங்களையும் சந்திக்கு இழுத்து, சுத்தியலாக அவற்றை உடைத்து அம்பலமாக்க வருகிறது இப்புதிய பத்தித்தொடர். இதற்குப் பெயர் ” மௌன உடைவுகள்…!”
சோதனை: சாதனைகளும்..! வேதனைகளும்…!!
இலங்கையில் பல்கலைக்கழக புகுமுகப்பரீட்சை (க.பொ.த உயர்தர சோதனை) முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் சோதனையில் சாதனை படைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. ஒப்பீட்டளவில் சாதனை படைத்தவர்களையும் விடவும் வேதனை அடைந்தவர்கள் தான் அதிகமானவர்கள். பல இலட்சக்கணக்கான மாணவர்கள் சோதனை எடுத்து சில ஆயிரக்கணக்கானவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் நிலையில் சாதனையையும், வேதனையையும் சொல்ல புள்ளிவிபரங்கள் தேவையில்லை.
கிழக்கு மாகாணத்தில் கல்வியில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம் குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல என்பதில் இரு கருத்துக்கள் இருக்கமுடியாது. ஆனால் இந்த சாதனைக் கொண்டாட்டமானது அருகருகேயுள்ள இரு வீடுகளில் ஒன்றில் பிறந்தநாளும், மற்றதில் மரணவீடும் நடைபெறுவதற்கு சமமாக நிகழ்கிறது. பிள்ளையின் சாதனை குறித்து அதன் பெற்றோர்கள், உறவினர்கள், படித்த பாடசாலை, படிப்பித்த ஆசிரியர்கள், தனியார் கல்லூரிகள் மகிழ்ச்சி கொள்வது இயல்பானது. ஆனால் இந்தத் தரப்பினர் அனைவரும் மறுபக்கத்தில் ஒரு பெரும்பான்மை வேதனையில் இருப்பதை மறந்து விடுகிறார்கள். அந்தப் பெரும்பான்மையும் அந்தப் பாடசாலையில், அந்த ஆசிரியர்களிடம், அந்த தனியார் கல்லூரியில், அதே வகுப்புக்களில் அருகருகே அமர்ந்து பல ஆண்டுகள் கல்வி பயின்றவர்கள். இந்த நிலையில், இந்த சோதனையில் சிலர் சாதனையையும் பலர் வேதனையையும் அடையகாரணம் என்ன?
காரணம் மிகவும் இலகுவானது. ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில், ஒரே ஆசிரியர்களிடம் கல்வி கற்றபோதும் சாதனையும், வேதனையும் சமமாக இல்லை. இதற்கு யார் பொறுப்பு?மாணவர்களா? பெற்றோரா?ஆசிரியர்களா? சமூகமா? அரசியலா? ஆட்சியாளர்களா?
எப்படி வெற்றிக்கு உரிமை கோருகின்றோமோ அவ்வாறே தோல்விக்கும் உரிமைகோருகின்ற உன்னத பொறுப்பு சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் உண்டு. இது மானிட நேயம், சமூக நீதி, பொருளாதார நேர்மை, அரசியல் அறம். இவ்வாண்டில் கிழக்கின் சாதனையில் அரசியல்வாதிகள் முதல் முன்னாள், இந்நாள் ஆளுநர்கள் வரை போட்டி போட்டு கௌரவிப்புக்களைச் செய்திருப்பது சமூகத்திற்கு தவறான முன்மாதிரியாக அமைந்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாதனை படைத்த மாணவர்களின் குடும்பப் பின்னணி, அவர்களின் பொருளாதார வசதி, அவர்கள் கல்விகற்ற சகல வளங்களும் குவிந்த பாடசாலைகள், தனியார் கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய வசதி என்பனவற்றின் அடிப்படையில் இந்தப் பெறுபேறுகள் நோக்கப்படுவது எதிர்கால கல்வி அபிவிருத்க்கு முக்கியமானது. நாம் ஒன்றைச் சிந்திக்கவேண்டும் சகல வசதிகளுடனும் படைத்த சாதனை பாராட்டப்படவேண்டியதா? வசதிகள் பற்றாக்குறையான நிலையில் அடைந்த குறைந்தபட்ச வெற்றி பாராட்டப்படவேண்டியதா? சமூக நீதியின்பால், பொருளாதார நேர்மையின்பால் பாராட்டைப் பெறவேண்டிய மாணவ சமூகம் எது? என்ற கேள்வியை எழுப்பவேண்டிய தேவையை இவ்வாண்டு பரீட்சைப் பெறுபேறுகள் ஏற்படுத்தி உள்ளன.
கல்வியில் ஐந்து அடிப்படைக்கோட்பாடுகள் கவனத்தில் கொள்ளத்தக்கவை. வளங்கள், சமத்துவம், பங்குபற்றல்வாய்ப்பு, பன்மைத்தன்மை, மனித உரிமைகள். எங்கள் கல்விச் சூழலில் இந்த கோட்பாடுகள் எந்தளவுக்கு பின்பற்றப்பட்டுள்ளன? என்ற கேள்விக்கு பதில் எங்கள் எல்லோருக்கும் தெரிந்தே. இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தாத வரை எமது சாதனைகள் தனியொருவர் அல்லது குடும்பம் சார்ந்தே அன்றி சமூகம் சார்ந்ததாக நாம் மதிப்பிடமுடியாது. இலங்கைச் சமூகங்களில் உளவியல் கற்கைநெறி மிகமிக குறைவானது. எனினும் உளவியல் பற்றி ஓரளவுக்காவது அறிவூட்டப்பட்டவர்கள் இருப்பின் அவர்கள் கல்விசார் ஆசிரியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே. அவர்களே பல சந்தர்ப்பங்களில் முரண்பாடான நிலையில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் சாதனை படைத்த மாணவர்களுக்கு பணப் பாராட்டுக்களை வழங்கியுள்ளார். இந்த வகைப்பாராட்டு மாதிரியை எவ்வாறு விளங்கிக்கொள்வது. ஒரு அரசாங்க பிரதிநிதி என்ற வகையில் அவரால் வழங்கப்பட்ட அந்த நிதியானது ஒரு கூட்டுப் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அந்த மாணவர்கள் கல்விகற்ற பாடசாலையில் ஒரு பொதுத்தேவைக்கு வழங்கப்பட்டிருந்தால் அந்தப் பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் அது கூட்டுப் பயன்பாடு உடையதாக அமைந்திருக்கும். அல்லது அந்த மாணவர்களின் கிராமியப் பாடசாலைக்கு அந்ந மாணவர்களின் பெயரில் ஒரு செயற்திட்டத்திற்கு பயன்படுத்தியிருக்க முடியும். அது எதிர்வரும் காலங்களில் ஒரு சமூக நீதிக்கான, பொருளாதார நேர்மைக்கான முன்மாதிரியாக அமைந்திருக்கும்.
38 வயதினை உடைய விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் சிறையில் இருந்து பரீட்சை எழுதி சித்தியடைந்துள்ளார்.
48 வயதுடைய மற்றொரு சிங்களக் கைதி சிறையில் இருந்து சோதனை எழுதி சித்தியடைந்துள்ளார்.
இரண்டு கைகளும் இல்லாத ஒரு மாணவி காலால் பரீட்சை எழுதி சித்தியடைந்துள்ளார்.
கல்முனைப் பிராந்தியத்தில் சமூர்த்தி உதவித்திட்டத்தில் புலமைப் பரிசில் பெற்ற ஒரு மாணவனும், ஒரு மாணவியும் சித்தியடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு இராமக்கிருஷ்ணமிஷன் இல்லத்தில் வளரும் மாணவர்கள் ஆறுபேர் இச்சோதனையில் தேறியுள்ளனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட மண்முனை மேற்கு, தம்பிலுவில் பின்தங்கிய கல்வி வலையங்களில் இருந்து கணிசமான மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர் .
இதேபோல் கிழக்கு மாகாணம் முழுக்க பல்வேறு கிராமிய பாடசாலைகளில் சமவளப் பங்கீடின்றி, போதுமான வசதிகள் இன்றி, ரியூஷன் வகுப்புக்கு செல்ல வழியின்றி, சாதாரண விவசாயியினதும், மீனவனதும், தொழிலாளியினதும் பிள்ளைகள் சித்தியடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு மாணவியின் பேட்டியின்படி தற்துணிவில் கலைத்துறையை தெரிவு செய்து சித்தியடைந்துள்ளார். Arts பிரிவில் படிக்கவேண்டாம் என்ற சமூகம், நடத்தை கெட்டவள் என்று ஆசிரியரால் வன்முறைக்கு உள்ளான அந்த மாணவி சித்தியடைந்தபின் ஆ…..! ஆர்ட்ஸ்தானே என்று இழக்காரப் பாராட்டு பாடுகிறது சமூகம். இப்படி ஒன்றல்ல, பத்தல்ல, ஆயிரக்கணக்கான மாணவர்கள் உள்ளனர்.
இந்த இத்தனை ஏற்றத்தாழ்வான சமூக, பொருளாதார, அரசியல் சூழலில் வெளிவந்த பரீட்சைப் பெறுபேற்றின் படி பாராட்டப்படவேண்டியவர்கள் யார்?
இவர்களை கனவான்களும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், ஆளுநரும் கண்டு கொள்ளாதது ஏன்?
இன்று சாதனை படைத்த மாணவர்களும், சாதாரணமாக சித்தியடைந்து குறைந்தமட்ட வெட்டுப்புள்ளியில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு பெறும் மாணவர்களும் அவர்கள் தேர்வு செய்யும் துறையைப் பொறுத்து பல்கலைக்கழகத்தில் ஒரே வகுப்பில்தான் கல்வி கற்கப்போகிறார்கள். ஒரே பரீட்சையைத்தான் எழுதப்போகிறார்கள். வெளியேறும்போது ஒரே பட்டங்களோடுதான் வெளிவரப் போகிறார்கள்.
திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்படுபவர்களும், மாவட்ட அடிப்படையில் தெரிவு செய்யப்படுபவர்களும் ஒரே துறையில் ஒரே பட்டத்துடன்தான் வெளியேறுகிறார்கள்.
பொன்னாடைகளுடன் அலையும் அரசியல்வாதிகளுக்கு இது புரியாதுதான். ஆனால் இதைப் பேசவேண்டியது கனவான்களினதும், கல்விமான்களதும் கடமை இல்லையா?