கோட்டாபயவின் வருகையும் ராஜபக்சாக்களின் எதிர்கால அரசியலும்

கோட்டாபயவின் வருகையும் ராஜபக்சாக்களின் எதிர்கால அரசியலும்

       —- ஸ்பார்ட்டகஸ் —-

 இலங்கையின் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் கடந்த ஜூலை 13 நாட்டைவிட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சரியாக 50 நாட்களுக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை (செப்.2) இரவு திரும்பிவந்திருக்கிறார். தவறான ஆட்சியைச் செய்த அவரை மக்கள் ‘வீட்டுக்கு போ’ என்றுதான் கேட்டார்கள்; நாட்டைவிட்டு போகுமாறு கேட்கவில்லை. ஆனால், போருக்கு முடிவுகட்டி மக்களை பாதுகாப்பாக வாழ வழிவகுத்ததாக எப்போதும் பெருமையுடன் உரிமை கோரும் அவர் நாட்டில் இருப்பது தனக்கு பாதுகாப்பு இல்லையென்று உணர்ந்து நாட்டில் இருந்து வெளியேறினார்.

 முதலில் மாலைதீவுக்கும் பிறகு சிங்கப்பூருக்கும் சென்ற அவர் அங்கிருந்து தனது பதவிவிலகலை அறிவித்தார். இலங்கையின் அரசியல் வரலாற்றில் பதவிக்காலத்தின் இடைநடுவில் அதுவும் மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் பதவிவிலகிய (பதவியில் இருந்து விரட்டப்பட்ட) முதல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி கோட்டாபயவே. சிங்கப்பூரில் இருந்து ஆகஸ்ட் முற்பகுதியில் தாய்லாந்து சென்ற அவருக்கு அங்கு 90 நாட்கள் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டபோதிலும், அந்த நாட்டு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பெரும் அசௌகரியத்தை கொடுத்ததால் நாடு திரும்புவதே உகந்தது என்று தீர்மானித்து வந்துசேர்ந்திருக்கிறார்.

 மனைவியுடனும் இரு பாதுகாப்பு அதிகாரிகளுடனும் சந்தடியில்லாமல் விமானப்படை விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய திரும்பிவந்தபோது அமைச்சர்கள் மற்றும்  நெருக்கமானவர்களினால் வரவேற்கப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. முன்னதாக விமான நிலையத்துக்கு வெளியே அவருக்கு பெரிய வரவேற்பை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அரசாங்கம் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அனுமதிக்க மறுத்ததால் அது கைவிடப்பட்டது.

 அவர் வெளியேறியபோதும் சரி  திரும்பிவந்தபோதும் சரி மக்கள் காணமுடியாத முறையில் இருளிலேயே எல்லாம் நடந்து முடிந்தது. தலைநகரில் பொலிசாரினதும் இராணுவ கமாண்டோக்களினதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய அரசாங்க பங்களா ஒன்றை அவருக்காக அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது.

 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சிறப்புரிமைகளுடன் கூடிய வாசஸ்தல வசதிகளையும் பாதுகாப்பையும் வழங்குவதற்கு சட்டரீதியாக கடமைப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றபோதிலும், முழுமையாக பதவிக்காலத்தைப் பூர்த்திசெய்து கௌரவமான முறையில் ஓய்வுபெறுகின்ற ஜனாதிபதிகளுக்கே அத்தகைய வசதிகளை அரசாங்கம் செய்யவேண்டும் ; இடைநடுவில் பதவியை விட்டு விலகிய ஒரு  ஜனாதிபதிக்கு அவ்வாறு செய்யவேண்டியதில்லை என்ற குரலெழுப்பியவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர் ஒரு காலத்தில் ராஜபக்சாக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவரான முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா.

 கோட்டாபயவை மீண்டும் அரசியலில் ஈடுபடவைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில தரப்பினர் நாட்டம் காட்டுகின்ற போதிலும், அவர் இதுகாலவரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்தவர்களில் நாட்டு மக்களினால் மிகவும் மோசமாக வெறுக்கப்பட்டவர் என்ற அனுபவத்துக்குப் பிறகு அரசியலில் மீண்டும் இறங்குவதற்கு தயங்கக்கூடும். இதுவரையில் அவர் அது பற்றி அவர் எதுவும் வெளிப்படையாக கூறவில்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மூன்று வருடங்களுக்கு முன்னர் துறந்த அமெரிக்க குடியுரிமையை மீளப்பெறுவதற்கான விண்ணப்பத்தை செய்யும் பொறுப்பை அவர் அமெரிக்காவில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்திருப்பதாக குடும்ப வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியிருக்கிறது.

 முன்னாள் ஜனாதிபதி வெளிநாட்டில் இருந்த நாட்களில் அவரை நாட்டுக்கு திரும்ப அழைத்து பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கு உத்தேசிக்கப்படுவதாகவும் அவர் பாராளுமன்றம் வருவதற்கு வசதியாக ஆளும் கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவர் பதவிவிலக முன்வருவதாகவும் கூறப்பட்டது. அந்த நேரத்திலும் வெளிநாட்டில் இருந்த வண்ணம் கோட்டாபய எதுவும் கூறவில்லை. அவர் தனது விருப்பத்தின் பிரகாரம் அமெரிக்கா செல்வதா அல்லது அரசியலில் மீண்டும் ஈடுபடுவதா என்பதை  உண்மையில் ராஜபக்ச குடும்பம் மாத்திரமே தீர்மானிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுவே அந்த அரசியல் குடும்பத்தின் நியதி.

 அதேவேளை, அரசியலமைப்பு திருத்தம் ஒன்றின் ஊடாக முன்னைய சகல ஜனாதிபதிகளையும் விட  மிகவும் கூடுதல் அதிகாரங்களை தன்வசமாக்கிக்கொண்ட கோட்டாபய கடந்த இரண்டரை வருட காலத்தில் நடத்திய ஆட்சியின் இலட்சணத்தை நோக்கும்போது மீண்டும் அரசியலுக்கு வந்து எதைச் சாதிக்கப்போகிறார் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. அவரை பிரதமராக நியமிக்கப்படுவதை காண்பதற்கு விரும்புகின்ற சக்திகள் கூட பொதுஜன பெரமுனவுக்குள் இருக்கின்றன.

 மகிந்த ராஜபக்ச மே 9 பிரதமர் பதவியில் இருந்து  விலகிய பிறகு பாராளுமன்றத்தில் ஒரு தடவை உரையாற்றிய அவரின் மூத்த சகோதரர் சமால் ராஜபக்ச ஜனாதிபதியாக இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில் மகிந்த அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ராஜபக்சாக்களின் ஆட்சிக்கு  எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து அவர்கள் சகலரும் அரசாங்க பதவிகளில் இருந்து விலக நிர்ப்பந்திக்கப்பட்ட நிலைவரத்துக்கு பின்னராவது மகிந்த அரசியலில் இருந்து ஓய்வுபெறட்டும் என்ற எதிர்பார்ப்பில் குடும்பத்தின் மூத்தவர் என்ற முறையில் சமால் அவ்வாறு கூறியிருக்கக்கூடும்.

 ஆனால், மகிந்த தொடர்ந்தும் அரசியலில் இருக்கப்போவதாகவும் பொருத்தமான தருணம் வரும்போது அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகவும் அண்மையில் ‘சண்டே ரைம்ஸ்’ பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் கூறினார். அறகலய மக்கள் கிளர்ச்சி தணிந்து விட்ட தற்போதைய சூழ்நிலையில் ராஜபக்சாக்கள் தங்களை மீண்டும் அணிதிரட்டிக்கொண்டு தீவிரமாக அரசியல் செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்கான திட்டங்களை தீட்டுகிறார்கள் என்று தெரிகிறது.

 இத்தகைய பின்புலத்தில் தனது இன்னொரு இளைய சகோதரர் கோட்டாபயவுக்கு சமால் ராஜபக்ச என்ன அறிவுரை கூறப்போகிறாரோ? 

 ராஜபக்சாக்களை பொறுத்தவரை, அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை கொண்டவர்களாக விளங்கினார்கள். 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் தனது மூன்றாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைக் கேட்ட மகிந்த அதில் தோல்வி கண்ட பிறகு மீண்டும் 2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவினதும் 2020 பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவினதும் வெற்றியை அடுத்து ராஜபக்சாக்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வந்தார்கள். அப்போது அவர்கள் நாட்டை குறைந்த பட்சம் ஒரு இருபது வருடங்களுக்காவது  ஆட்சி செய்வதை எவரும் தடுக்கமுடியாது என்று கூறிய பல அரசியல் ‘அவதானிகள்’ இருக்கிறார்கள். ராஜபக்ச குடும்பமும் கோட்டாபயவுக்கு பிறகு பசில், அவருக்குப் பிறகு நாமல் என்று எதிர்கால ஜனாதிபதிகளின் வரிசையொன்றை மனதிற் கொண்டிருந்தது என்பது ஒன்றும் இரகசியமல்ல.

 ஆனால், இரண்டரை வருடங்களுக்குள்ளாக மக்கள் கிளர்ந்தெழுந்து தங்களை ஆட்சியதிகாரத்தில் இருந்து விரட்டுவார்கள் என்றும் முன்னைய ஆட்சியாளர்கள் எவரும் சந்தித்திராத அவமதிப்பை தாங்கள் சந்திக்கவேண்டிவரும் என்றோ ராஜபக்சாக்கள் கனவிலும் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள். அதனால் அவர்கள் தங்களது வீழ்ச்சியை இலகுவாக ஜீரணித்துக்கொள்ளமாட்டார்கள். மீண்டும் அரசியல் ஆதிக்கத்தை நோக்கிய தங்கள் பயணத்தை ஆரம்பிக்கவே அவர்கள் கங்கணம் கட்டிநிற்கிறார்கள்.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை இப்போது ‘பணயம்’ வைத்துக்கொண்டு தங்கள் காரியத்தை சாதிக்கும் முயற்சிகளில் ராஜபக்சாக்கள் இறங்கியிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பல பிரிவினர் சுயாதீனமாக செயற்படவும் எதிரணி வரிசையில் இருக்கவும் தீர்மானித்த பிறகு ஆளும் கட்சியின் பலம் சபையில் 103 ஆக குறைந்துவிட்டது.

 தற்போது மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட ராஜபக்சாக்களுடன் தொடர்ந்தும் இணைந்திருப்பதால் தங்களது எதிர்கால அரசியல் வாய்ப்புக்களுக்கு ஆபத்து வந்துவிடும் என்று அஞ்சக்கூடிய உறுப்பினர்கள் வெளியேறும் பட்சத்தில் சபையில் அரசாங்கத்தின் பலம் மேலும் குறையக்கூடிய சாத்தியம் இருக்கிறது.இது ராஜபக்சாக்களை காப்பாற்றும் பொறுப்பை நிறைவேற்றுவதாக பரவலான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.

 பொதுஜன பெரமுனவைப் பொறுத்தவரை, அதற்கு தங்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினரைத் தவிர வேறு எவரும் தலைமைப்பதவிக்கு வருவதற்கு ராஜபக்சாக்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. அந்த கட்சி ராஜபக்சாக்களுக்காக ராஜபக்சாக்களினால் உருவாக்கப்பட்டது. அதில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் தங்கள் சொந்தத்தில் பெருமளவு செல்வாக்கு இல்லாதவர்கள். அவர்கள் ராஜபக்சாக்களை முன்னிறுத்திய ஒரு அரசியலுக்கு பழக்கப்பட்டவர்கள். அத்தகையவர்களிலும் சில பிரிவினர் ராஜபக்சாக்களிடம் இருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். எஞ்சிய பிரிவினர் தான் ‘ராஜபக்சாக்களுடன் சேர்ந்து மீண்டெழுவோம்’ என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

 ராஜபக்சாக்களின் நோக்கங்களும் திட்டங்களும் எவையாக இருந்தாலும், அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் மக்கள் அவர்களது கட்சிக்கு பெரிதாக வாக்களிக்கமாட்டார்கள். அறகலய போராட்டக்காரர்களுக்கு எதிராக ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அரசாங்கம் நடத்துகின்ற வேட்டை இனிமேல் அத்தகையதொரு மக்கள் கிளர்ச்சி தலைதூக்காமல் இருப்பதை உறுதிசெய்யும் நோக்குடனானது. அவ்வாறு செய்யப்பட்டால் தாங்கள் மீண்டும் அரசியலில் செல்வாக்கைச் செலுத்தக்கூடிய சூழ்நிலை தோன்றும் என்று அல்லது இப்போதே படிப்படியாக தோன்றுகிறது என்று ராஜபக்சாக்கள் நினைக்கிறார்கள் போலும்.

 மகிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரை, தனது மூத்த புதல்வன் நாமலின் எதிர்கால அரசியல் வாய்ப்புக்களை உறுதிசெய்யும்வரை அவர் அரசியலில் தொடரவே விரும்புவார். பிலிப்பைன்ஸில் சர்வாதிகாரி பேர்டினண்ட் மார்கோஸ் மக்கள் கிளர்ச்சியை அடுத்து நாட்டை விட்டு குடும்பத்துடன் அமெரிக்காவின் உதவியுடன் தப்பியோடி 36 வருடங்கள் கடந்த பிறகு கடந்த மே மாதம் அவரது புதல்வன் பொங்பொங் மார்கோஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்துக்கு வந்திருக்கிறார். அவரின் வருகை இலங்கையில் நாமலையும் அவரது தந்தையாரையும் தவிர வேறு எவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் என்று கூறமுடியாது. ஆனால் இவர்களால் மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் பொறுத்திருக்க முடியுமா?

 எது எவ்வாறிருந்தாலும், ஆட்சிமுறையின் கெடுதியான போக்குகள் எல்லாவற்றுக்கும் பொறுப்பானவர்களான ராஜபக்சாக்கள் மீண்டும் அரசியலில் செல்வாக்குப் பெறக்கூடிய சூழ்நிலை தோன்றாதிருப்பதை உறுதிசெய்யவேண்டியது ஜனநாயக சக்கிகள் சகலதினதும் கடமையாகும்.

 அவர்கள் தங்களது மீட்சிக்காக மீண்டும் பேரினவாத அரசியலையே முன்னரையும் விட தீவிரமாக முன்னெடுப்பார்கள். ராஜபக்சாக்களை சிங்கள மக்கள் வெறுப்பதை கடும்போக்கு சிங்கள பௌத்த அமைப்புக்களினால் ஜீரணிக்கமுடியாமல் இருக்கிறது. மக்கள் கிளர்ச்சி இடம்பெற்ற நான்கு மாதங்களும் இந்த அமைப்புக்கள் வெளியில் தலைகாட்டவில்லை. சகல இன மக்களும் சேர்ந்து  ராஜபக்சாக்களுக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியலுக்கு ஒரு பின்னடைவாக அமைந்துவிடுமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அந்த அரசியலை மீண்டும் தீவரமாக முன்னெடுக்க இந்த அமைப்புக்களுக்கு ராஜபக்சாக்களே கதி.

 ராஜபக்சாக்களின் வீழ்ச்சிக்கு பின்னர் இலங்கை அரசியலில் எதுவுமே முன்னரைப் போன்று இருக்கப்போவதில்லை. நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்த அவர்கள் அதற்கான பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிச்செல்ல அனுமதிக்கக்கூடாது. இலங்கையின் வரலாற்றில் முன்னர் ஒருபோதுமே ராஜபக்சாக்களைப் போன்று வேறு எந்த ஆட்சியாளருமே நாட்டு மக்களுக்கு மிகவும் குறுகிய காலத்திற்கும் பெருமளவு அனர்த்தத்தை ஏற்படுத்தியதில்லை. அந்த வரலாற்று உண்மையே இலங்கையின் எதிர்கால அரசியலின் திசைமார்க்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கவேண்டும்.