ஜெனிவாவுக்குப்போன ஜெமீந்தாரு (சிறுகதை) 

ஜெனிவாவுக்குப்போன ஜெமீந்தாரு (சிறுகதை) 

           — இரண்டாம் விசுவாமித்திரன் — 

ஹலோ… நான் எழுத்தாளர் சிவகாந்தன் கதைக்கிறன். ‘எழுத்து நிலா’ சஞ்சிகை ஆசிரியரோட ஒருக்காக் கதைக்கேலுமோ?  

ஆசிரியர் இல்லயோ? உதவி ஆசிரியர் ரவிசங்கரோ கதைக்கிறிங்கள். நான் சிவகாந்தன் கதைக்கிறன். உங்களின்ர சஞ்சிகையில நான் எழுதின சிறுகதை தொடர்பா வாசகர்கள் கொஞ்சம் சூடா இருந்ததா கேள்விப்பட்டனான். அதுதான் ஆசிரியரோடக் கதைக்க எடுத்தனான்;.  

நீங்கள் உதவியாசிரியல்லோ.. உங்களுக்கும் வாசகர்களின்ர ‘ரியக்சன்’ தெரிஞ்சுதானே இருக்கும். அந்தக் கதையில அரசியல் இருந்ததாகச் சொன்னவங்களாம். கதையில அரசியல் எங்க இருந்ததெண்டு எனக்கெண்டால் விளங்க இல்ல.   

சஞ்சிகை நடத்தும் உங்களுக்கு விளங்கும்தானே. கதை வாசிக்கத் துவங்கின உடனேயே அது எதனைச் சொல்ல வர்ரதெண்டு  

ரவி நான் அந்தக் கதையில என்ன சொல்லியிருக்கிறன்;. தன்னுடைய ‘ஜெமீந்தாரு’ என்ற நாவலை வெளியிட ஒரு எழுத்தாளன் ஜெனிவாவுக்குப் போனவர். ஜெனிவாவில அவர் பட்ட கஸ்டங்கள் வேதனைகள் சோதனைகள் சாதி மறிப்புகள் குழிபறிப்புகள் யார் பேசனும். யார் பேசக்கூடா என்பன பற்றியெல்லாம் பேசுகின்ற கதை. அதில எங்க இருக்குது அரசியல்.? கதைக்குள்ள அரசியலே கிடையாதுங்கிறன். என்னுடைய கதையில வந்த ஜெமீந்தாரையும் ஜெனிவாவையும் முடிச்சுப் போட்டு அரசியலாக்க முயற்சிக்கிறாங்கள். உதுகளக் கதைகளெண்டு ஏன் பிரசுரிக்கிறியளெண்டு சில கூஜா தூக்கிகள் ரெலிபோனில உங்களக் கேட்டிருப்பினம். என்ன அப்பிடித்தானே?. 

ரவி கேளுங்கோ. எஸ்.பீ.துரை என்பவர் ஜெமீந்தாரு என்ற நாவல் நூல் வெளியீட்டு விழாவில பேசினதா கதையில வந்தது உண்ம. அவர எழுத்தாளர் என்ற முறையில பேசக் கூப்பிட்டவங்களெண்டுதான் கதையில இருக்கு. குத்தலும் கிண்டலுமாய்ப் பேசுறவர்தானே எஸ்.பீ. அவர் வந்தா சனங்களும் வருமெண்டு நினைச்சுக் கூப்பிட்டிருப்பினம். இதிலென்ன அரசியல் இருக்குது சொல்லுங்கோ.? 

கதை எழுதினது நானல்லோ. அப்ப கேளுங்கோவன். என்னுடைய கதையில எஸ்.பீ.துரை என்ற கதாபாத்திரத்தை அறிமுகம் செய்கிறபோது அவர் ஒரு காலத்தில அரசியல் மேடைகளில வீட்டுக்காரங்களை வெச்சி வாங்கினவர் என்று ஒரு வசனம் இருக்குது. அதுவொரு பாத்திரக் குறிப்புத்தானே தவிர வீட்டுக்காரங்கள் பற்றி எஸ்.பீ பேசினதா கதையில எதுவும் இல்ல. எஸ்.பீ.துரை என்ற பாத்திரம் இலக்கிய விசயங்களைத்தான் பொடி வைத்துப் பேசினது. அதில எங்க வருகுது அரசியல்?   

ரவி நீங்கள் சொல்லுறது சரி. எஸ்.பீ ஒரு காலத்தில அரசியல் மேடைகளில வீட்டுக்காரங்களை வெச்சி வாங்கினவர் என்று கதையில வாற அந்த ஒரு வசனத்தை துரும்பாக எடுத்து ஜெனிவாவோடு முடிச்சுப் போட்டு அவங்கள் வேறொரு கதை சொல்லுறாங்கள்.   

தம்பி ரவி கொஞ்சம் கேளுங்கோ. கதைய வாசிக்கிற ஒருசிலவங்கள் எஸ்.பீ.துரை என்ற கதாபாத்திரத்தை அரசியலுக்குள் கொண்டு வந்து அவங்களாகக் கற்பனை பண்ணுவதை நாங்கள் தடுக்க ஏலாதுதானே. என்ன சொல்லுறியள்?. 

நீங்கள் சஞ்சிகையாளன். நான் எழுத்தாளன். நமக்குள் சில அநுபவங்கள் இருக்கும்தானே. ஒரு கதைய வாசிக்கும் வாசகன் சும்மா எழுந்தமானமாகப் பேசலாமோ?. கதையில எஸ்.பீ என்ன பேசினார். அதில் சொல்ல வருகின்ற செய்தி என்ன? அதுதானே முக்கியம். பேந்தென்ன அரசியல்பற்றிக் கதைக்கினம்.? 

ஆசிரியர் இன்னும் வர இல்லியோ?. இந்த விசயத்தோட முடிக்கிறன் கேளுங்கோ. பல்கலைக்கழகங்களில இருந்து கொண்டு தமிழ்ப் பரிபாலனம் என்ற பெயரில சுளைசுளையாகச் சம்பளம் வாங்கிக் கொண்டு சிலர் தங்களின்ர ஆக்கள் யாராவது ஒருத்தருடைய புனைகதை நூலை பேசித் திரியினம். இதுவா தமிழ்ப் பணி என்றுதானே எஸ்.பீ கேட்டவர். அப்படித்தானே கதையில வருகுது. 

என்ன ஆசிரியர் வந்திட்டாரோ?; போண்ல சிவகாந்தன் நிக்கிறதாச் சொல்லுங்கோ.  

ஹலோ… எழுத்தாளர் சிவகாந்தன் பேசுறன். நீங்கள் வருவிங்களெண்டு சொன்னவங்கள். அதுதான் கொஞ்சம் கதைச்சுக் கொண்டிருந்தனான். 

‘என்ர சிறுகதை பற்றி வாசகர்கள் என்ன சொல்லிச்சினம். பேந்துமொரு கதையும் அனுப்பினனான். அது எப்ப பிரசுரமாகும்? இதுகளின்ர விசாரிப்புக்குத்தான் கோள் எடுத்தனான். மற்றது கதையில அரசியல் இருந்ததாம் பிரச்சினைப் பட்டதாமென்றும் சொன்னவங்கள் 

யாரு சொன்னதென்று கேட்கிறியளோ? உங்களின்ர உதவி ஆசிரியரும் சொன்னவர். வேற ஆக்களும் சொன்னவங்கள். 

பெரிசா எதுவுமில்லையோ? கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்கோவன்.  

கதாசிரியன் என்ற முறையில் நானும் சஞ்சிகை ஆசிரியர் என்ற முறையில் நீங்களும் வாசகனுக்கு எதையும் சொல்லும் உரிமை இருக்கிறதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால் இவங்களுக்குப் பயந்து கொண்டு சஞ்சிகை நடத்தலாமோ?   

அதுசரி. நீங்கள் பனங்காட்டு நரியென்று தெரிஞ்சுதானே அந்தக் கதைய உங்களின்ர சஞ்சிகைக்கு அனுப்பினனான். 

நல்ல கதையெண்டு நீங்கள் சொல்லுறதக் கேட்க எனக்குச் சந்தோசமாயிருக்கு. அது சரி எஸ்.பீ பேசினதா கதையில வர்ர ஒரு முக்கியமான விசயத்த நல்லாக் கவனிச்சனீங்களோ. இப்ப ஸ்ரீலங்காவில இருந்து வெளிவருகின்ற சஞ்சிகைகளில ‘வானம்’ சஞ்சிகை முன்வரிசையில் இருக்கிறதெண்டல்லோ சொல்லியிருக்கார். அது ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி ஒரு நிமிசம்கூடத் தாமதியாமல் உரிய வேளைக்கு வர்ரது லேசுப்பட்ட விசயமோ? நீங்களும் உங்களின்ர எழுத்து நிலா சஞ்சிகைய அப்பிடி உரிய வேளைக்குக் கொண்டுவரப் பாருங்கோ. ‘நீலநதி’ சஞ்சிகையும் முன்வரிசையில இருந்து கொண்டு இலக்கியத்துக்கு நல்ல பங்களிப்புச் செய்யுதெண்டும் சொன்னவர். 2008 இல கிழக்கில இருந்து வெளிவந்த ‘விண்கதிர்’ சஞ்சிகை அஞ்சு வருசம் மாசம் தவறாம தொடரா வந்தது. ‘விண்கதிரோன்’ ஆசிரியரா இருந்தவர். தரமான இலக்கியச் சஞ்சிகை அது. அது நின்று போனது தமிழ் இலக்கிய உலகுக்கு பெருத்த நட்டம் என்றும் பேசி இருக்கிறார். கதைய திருப்பிச் சொல்லுறனெண்டு நினையாதிங்கோ. உங்களின்ர சஞசிகையிலும் அதுகள நடைமுறைப்படுத்துங்களெண்டு சொல்லுறன். இன்னமொன்றும் சொல்லியிருக்கிறாறல்லோ. ‘இளந்தீரன்’ ஆசிரியராக இருந்து அறுபதுகளில் வெளிவந்த ‘நவரதம்’ என்ற தரமான சஞ்சிகை நான்கு இதழ்களோடு நின்று போனதற்கும் ‘எம்.ஏ.ரகுராமின்’ ‘வளர்பிறை’ சஞ்சிகையின் பெரும் இலக்கியப் பங்களிப்பு திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டதற்கும் காரணம் யார் என்றும் சொன்னவர். அக்காலத்தைய உண்மையான இலக்கிய வரலாற்றை அவர்கள் குழி தோண்டிப் புதைத்தவங்கள் என்றும் பேசினவரல்லோ. உண்மையான வரலாறு தற்போது நமக்குத் தேவையென்றும் இதையெல்லாம் விசாரிக்க ஒரு .இலக்கிய ஆணைக்குழு நியமிக்க வேண்டுமென்றும் கேட்டிருந்தார். கவனிச்சனீங்களோ?   

நீங்களும் உங்களின்ர ‘எழுத்து நிலா’ சஞ்சிகையில உதுமாதிரி விசயங்களக் குறிப்பிட்டு 1960 -1985 வரையான ஸ்ரீலங்காவின்ர கால்நூற்றாண்டு தமிழிலக்கிய வரலாற்ற திருப்பியும் திருத்தியும் எழுதப்பட வேண்டுமென்று ஒரு தலையங்கம் எழுதுங்கோவன்.   

கனநேரம் பேசிட்டன். பேந்தொரு நாளைக்கி கோள் எடுக்கிறன். சரியோ சரி. வைக்கிறன்.  

;. 

;