கடன்வாங்கி கல்யாணம் செய்யும் காலமல்ல 

கடன்வாங்கி கல்யாணம் செய்யும் காலமல்ல 

      — கருணாகரன் — 

நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஐ.எம்.எவ்வின் நிதி உதவி உதவும். இதற்கு ஐ.எம்.எவ் உத்தியோகத்தர் மட்டத்தில் இணக்கம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆறு மாதத்தில் முதற்கட்டமாக கடனுதவி – நிதி கிடைத்து விடும். நான்கு ஆண்டுகளுக்கு இந்த நிதி உதவி தொடரும். ஆகவே இனிப் பிரச்சினை இல்லை என்ற எண்ணத்தோடுதான் பெரும்பாலானவர்கள் உள்ளனர். 

இதுவரையிலும் நாடுகளிடம் கடன் பட்டு வாழ்ந்து பழக்கப்பட்டவர்களுக்கு இன்னொரு கடனைப்படுவதில் எந்தப் பிரச்சினையுமில்லை. கடன் வாங்கிக் கலகலப்பாகக் கல்யாணம் செய்வதைப்போலவே நாம் வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டோம். இதனால் எந்தக் கடனும் நமக்குப் பிரச்சினையாகப் படுவதில்லை. 

ஆனால், இந்தக் கடன் சாதாரணமானதல்ல. நாடுகளின் கடனிலாவது, அந்த நாடுகளின் அரசியல் தலைமைகள், ஆட்சிக் கொள்கைகளுக்கு அமைய விலக்களிப்பதாகவோ வட்டிக் குறைப்புச் செய்வதாகவோ இருக்க வாய்ப்புண்டு. இது நிதி நிறுவனக் கடன். ஆகவேதான் கடனைத் தருவதற்கு முன்பே நிபந்தனை விதிக்கப்படுகிறது. நிபந்தனைக்குக் கட்டுப்பட்டால்தான் கடன். அதுவும் தவணை அடிப்படையில். ஆகவே இந்தக் கடனோடு விளையாட முடியாது. கழுத்தில் சுருக்குத்தான் விழும். 

அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும்? என்று நீங்கள் கேட்கிறீர்கள். 

ஆம், அந்தக் கேள்வி உங்களுக்கானதே. 

முதலில் இப்போது ஏற்பட்டிருப்பது ஒரு மிகப் பெரிய தேசிய நெருக்கடி என்பதை நாம் புரிந்து (உணர்ந்து) கொள்ள வேண்டும். இலங்கையின் வரலாற்றில் முன்னெப்போதும் நிகழ்ந்திருக்காத ஒன்று. “நாம் இப்பொழுது வங்குரோத்து நிலையில் இருக்கிறோம்”என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாகவே கூறியுள்ளதை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும். உண்மையும் அதுதான். ஆகவேதான் உலகம் முழுவதிலும் நாம் பிச்சைப் பாத்திரத்தை ஏந்த வேண்டியேற்பட்டுள்ளது. 

ஆனால், இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் மிகச்செழிப்பாக இருந்த நாடு. அதனுடைய அந்நியச் செலாவணி பிற நாடுகளுக்கு உதவும் நிலையில் தாராளமாக இருந்தது. குறிப்பாக ஜப்பான், ஜேர்மனி போன்ற நாடுகளின் பொருளாதார நிலையை விட இலங்கை பல படிகளில் மேலே நின்றது. இவ்வளவுக்கும் அது 400 ஆண்டுகளுக்கும் அதிககாலம் அந்நியரின் பிடியின் கீழிந்த காலமாகும். அப்படியிருந்தும் பொருளாதார வளம் மேலோங்கியிருந்தது. 

அதற்குப் பின்னர் இலங்கையை ஆட்சி செய்த நம்மவர்கள்  இன்றைய வங்குரோத்து நிலைக்கு நாட்டைக் கொண்டு வந்து விட்டுள்ளார்கள். கடன் சுமையில் நாடு திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு இன்னும் கடன்பொறிக்குள்ளேதான் நாட்டைக் கொண்டு போவதற்கு முயற்சிக்கிறார்கள். கேட்டால், வேறு வழியில்லை என்று ஒற்றைச்சொல்லில் கதையை முடித்து விடப்பார்க்கிறார்கள். 

ஆனால், நாடு மிகப் பெரிய தேசிய நெருக்கடிகளால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. முக்கியமாக இரண்டு நெருக்கடிகளால் (பிரச்சினைகளால்). ஒன்று பொருளாதார நெருக்கடி. அடுத்தது இனப்பிரச்சினை. 

இந்த இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டவை. ஒன்றை விட்டு ஒன்றைச் சீர் செய்ய முடியாது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கு போரும் அதற்கான செலவும் ஒரு காரணம் என்றால், நாட்டில் பிளவுண்ட சமூக நிலை தொடர்வது இன்னொரு காரணம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது எளிய உண்மை. ஆனால், இந்த எளிய உண்மை இனவாதத்தினால் புறக்கணிக்கப்பட்டு, நான்காகத் துண்டுபட்டால் உண்டு வாழ்வு என்று செயற்பட்டதன் விளைவே இன்றைய நெருக்கடியாகும். 

தேசிய நெருக்கடி என்பது அனைவரையும் பாதிக்கும் ஒன்றாகும். இனம், மதம், பிரதேசம், சாதி, பால், வயது என எந்த வேறுபாடுகளையும் அது பார்க்காது. ஆகவே அவ்வாறான தேசிய நெருக்கடியை எதிர்கொள்வதற்கு அனைத்துத் தரப்பினரின் பங்கேற்பும் அவசியமானது. இல்லையென்றால் அந்த நெருக்கடியைக் கடக்கவோ முறியடிக்கவோ முடியாது. 

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, மிகப் பாரிய சிக்கலை உண்டாக்கியுள்ள ஒன்று. நாளாந்த உணவுப் பொருட்களுக்கே பல லட்சக்கணக்கான மக்களைச் சிரமப்பட வைத்துள்ளது. பல தொழில்துறைகள் படுத்து விட்டன. விலை வாசியும் மின்சாரம், நீர் போன்றவற்றின் பாவனைக் கட்டணங்களும் மிக உச்சத்துக்கு ஏறியுள்ளன. மருந்துப் பொருட்களுக்கு மிகப் பெரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நலத்திட்டங்கள் அனைத்தும் படுத்துக் கொண்டிருக்கின்றன. அபிவிருத்தி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றாகி விட்டது. வசதிகளைக் குறைக்குமாறு அரசு மக்களுக்கு ஆணையிடும் அளவுக்கு நிலைமை வந்துள்ளது. தேவையற்ற செலவீனங்களைக் குறையுங்கள் என்று ஜனாதிபதி கெஞ்சுகிறார். அடுத்த ஆண்டைக் கடப்பது கடினமானது என்று அரசாங்கம் மக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளது. 

இப்படியெல்லாம் இருந்தாலும் சனங்கள் இன்னும் வழமையைப் போலவே வாழ முற்படுகிறார்கள். பொருட்களை வாங்கிச் சேகரிக்க முற்படுகிறார்களே தவிர, புதிய சூழலை உருவாக்க முயற்சிக்கவில்லை. எந்தச் செலவீனத்தையும் குறைத்ததாகக் காணவில்லை. நிலைமையைக் கருத்திற் கொண்டு வாழ்க்கை முறையில் மாற்றத்தைச் செய்வதற்கான எந்த அடையாளமும் தெரியவேயில்லை. வருமானத்தைக் கூட்டுவதற்கான வழிகளையும் காணவில்லை. இதுதான் ஆகப் பெரிய பிரச்சினை. செலவு வரவரக் கூடிச் செல்கிறது. அதேவேளை வருமானமோ வரவரக் குறைந்து கொண்டு போகிறது. அதிலும் விவசாயம், மீன்பிடி போன்ற தொழிலில் ஈடுபடுகின்றவர்களின் பாடு மிகச் சிக்கலானது. அவர்கள் தொழிலைச் செய்வதற்கான அடிப்படை ஆதாரங்களே இல்லை என்ற நிலையில் அவர்களால் எப்படித் தொழிலைச் செய்ய முடியும்?ஆகவே அவ்வாறான குடும்பங்களின் பொருளாதாரம் படு நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. ஒருவேளை உணவுக்கே சிரமப்படுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைக் கடந்து விட்டது என்கிறது ஒரு புள்ளி விவரம். 

இந்த நிலையில் நாம் நிச்சயமாக ஒரு மாற்றுப் பொருளாதார முறைமைக்கும் மாற்று வாழ்க்கை முறைக்கும் செல்ல வேண்டும். இது ஒரு பண்பாடாக வளர்த்தெடுக்கப்படுவது அவசியம். எதுவும் பழக்கப்பட்டால் சரியாகி விடும் என்பார்கள். மனிதனே ஒரு பழக்கத்திற்கு இசைவான பிராணிதான். இதுவரையான வாழ்க்கை முறையை விட்டு புதிய வாழ்க்கை முறைக்குப் பழகினோம் என்றால் பாதிப்பிரச்சினையை எளிதாகக் கடந்து விட முடியும். 

முக்கியமாக சுய உற்பத்தி சார்ந்த உணவு தொடக்கம் பாவனைப்பொருட்கள் வரையில் நாமே தயாரிக்க வேண்டும், உற்பத்தி செய்ய வேண்டும் என்ற உணர்வோடு அனைவரும் வேலை செய்ய வேண்டும். இதற்கும் பிரச்சினை உண்டென்பது உண்மை. குறிப்பாக “உற்பத்தித்துக்குத் தேவையான மின்சாரம்,எரிபொருள் போன்றவை சீரில்லாதிருக்கும்போது எப்படி உற்பத்தியில் ஈடுபட முடியும்?” என்று யாரும் கேட்கலாம். 

நெருக்கடி என்றாலே அப்படித்தான். சிக்கலும் சிரமங்களும் அதிகமாக இருக்கும். அதற்குத்தான் இப்பொழுது பெறப்படுகின்ற கடனை எப்படி முகாமைத்துவம் செய்வது என்பதைக் குறித்த கரிசனை வேண்டும் என்கிறோம். உற்பத்தித்துறைக்கும் சுற்றுலா போன்ற வருவாய்த்துறைக்கும் கூடுதல் முக்கியத்துவத்தை அளிப்பதன் மூலமாக இதைச் சரிசெய்து கொள்ள முடியும். 

இளைய தலைமுறையினர் இதில் அதிகமான பங்களிப்பைச் செய்வது அவசியம். அவர்கள் புதிதாக –வித்தியாசமாகச் சிந்திக்கக் கூடியவர்கள். இலகு தன்மைகளை உண்டாக்கும் ஆற்றலுடையவர்கள். ஆகவே “நாட்டை நாம் மீட்டெடுப்போம். ஒரு புதிய யுகத்தைப் படைப்போம்” என்று அவர்கள்செயலில் இறங்க வேண்டும். இதற்கு இளைய தலைமுறையை ஊக்கப்படுத்தும் வேலைத்திட்டம் அவசியம். தீர்மானங்களை எடுக்கின்ற இடங்களிலும் அவர்களுக்கான இடம் அளிக்கப்படுவது அவசியம். 

அவர்களுக்கான வாய்ப்புகளை– வசதிகளை தாராளமாக அளிக்க வேண்டும். அவர்கள் நினைத்தால் இந்த நாட்டை மிகக் குறுகிய காலத்தில், மிகச் சிறப்பான முறையில் மீட்டெடுப்பார்கள். அத்தகைய ஆற்றல் இளைய தலைமுறையினரிடத்தில் உண்டு. உலகிலே உற்பத்தித் துறையில் ஈடுபடுகின்றவர்களில் 80 வீதமானோர் இளையோரே. ஆகவே இந்த உலகத்தை இயங்க வைப்பது இளைய தலைமுறையினரே. அவர்களை நாம் சரியாக ஏற்றுக் கொண்டால் அவர்கள் நாட்டை வளர்த்தெடுப்பார்கள். 

இப்பொழுது 25 வயதுக்குட்பட்ட இளைஞர் – யுவதிகளில் பெரும்பாலானோர் எந்தத் தொழிலும் இல்லாமல், உயர் கல்வியைத் தொடராமல் சும்மாவே உள்ளனர். அவர்களுடைய கைகளில் செல்ஃபோனும் தலைக்குள்ளே யூரியுப் காட்சிகளுமே நிறைந்துள்ளன. இதற்கு அவர்களைக் குறை சொல்லிப் பயனில்லை. அவர்கள் படிக்கின்ற காலத்திலேயே வேலையைச் செய்யக் கூடிய ஏற்பாடு நாட்டில் இருக்க வேண்டும். 

இன்று பல லட்சம் பேருக்கு வேலையே இல்லை. வேலையில்லாத பட்டதாரிகளை வைத்திருக்கும் நாடு அல்லவா நமது! வேலையில்லாத இளையோரையும் அப்படித்தான் வைத்திருக்க முயற்சிக்கும். பழக்க தோசம் அப்படி. 

ஆனால், அதற்கு இனிச் சாத்தியமே இல்லை. இனி ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். முன்பை விட இரண்டு மடங்கு, பல மடங்கு உழைக்க வேண்டும். வருவாயைப் பெருக்க வேண்டும். இதை ஒரு அவசரகால நிலையாக அரசாங்கம் பிரகடனப்படுத்துவது அவசியம். அரச உத்தியோகத்தர்களின் பணித் தன்மை தொடர்பாகவும் பணி நேரம் தொடர்பாகவும் புதிய முறையில் சிந்திக்க வேண்டும். அனைவரும் ஒரு குறுகிய காலத்திற்காவது பொருளாதார மேம்பாட்டுக்குப் பங்களிக்க வேண்டும் என்ற கட்டாய நிலை கொண்டுவரப்படுவது அவசியம். சில நாடுகளில் இருக்குமே, கட்டாய இராணுவப் பயிற்சி. அதைப்போல, இங்கே கட்டாயப் பொருளாதார மீட்சித்திட்டத்தில் பங்கேற்பு என்ற திட்டத்தைக் கொண்டு வருவது அவசியம். 

ஏனென்றால் ஏற்கனவே நாம் வாங்கியது கடன். வாங்கிக் கொண்டிருப்பதும் கடன். வாங்கப் போவதும் கடன். ஆகவே இந்தக் கடன்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். கொடுத்தே ஆக வேண்டும். தப்ப முடியாது. இல்லையென்றால் தேவையில்லாத பிரச்சினைகள் எல்லாம் வரும். மேலும் பல தடைகளையும் இறுக்கங்களையும் நாம் சந்திக்க வேண்டியிருக்கும். அது நம்முடைய எதிர்காலத்தையே இல்லாதொழித்து விடும். இப்போதைய நிலையை விட மோசமான நிலையை உண்டாக்கும் என்ற புரிதல் –எச்சரிக்கை வேண்டும். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியொரு ஆளாக நின்று பதவிகளை எடுத்துக் கொண்டவர், ஏற்றிருப்பவர். இன்று அரசியற் சவால்கள், நெருக்கடிகளுக்கு மத்தியில் நின்று நாட்டை நிர்வகிக்கிறார். இந்த இடத்தில் அவர் மேலும் சில விடயங்களைக் குறித்துத் துணிவாகவும் சரியாகவும் சிந்திக்க வேண்டும். அது காலத்தின், களத்தின் அவசியமாகும். அப்படிச் செய்தால் உண்மையில் அவர் வரலாற்றுத் தலைவராக காலத்தினால் நினைவு கொள்ளப்படுவார். 

தேசிய பொருளாதாரக் கொள்கையை அவர் சிறப்பான முறையில் உருவாக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கின்ற ஊழல், இனமுரண், அரசியல் முரண்பாடுகள், பொருத்தமற்ற பொருளாதாரத் திட்டங்கள் போன்றவற்றைக் கடக்கக் கூடிய அடிப்படைகளை உருவாக்க வேண்டும். அவரால் இவற்றைச் செய்ய முடியும். அதைச் செய்யக் கூடிய காலமும் இதுதான். இந்த நெருக்கடியின்போதுதான் ஏனைய பிரச்சினைகளுக்கான மருத்துவத்தையும் செய்யக் கூடியதாக இருக்கும். 

இளைய தலைமுறையினரை அவர் அரவணைத்துக் கொள்வது அவசியம். அவர்களுக்கான அங்கீகாரத்தையும் இடத்தையும் அவர் சரியாக வழங்கினால் மாற்றங்களை இலகுவாக எட்ட முடியும். 

இப்பொழுது பாராளுமன்றத்தைப் பார்த்தீர்கள் என்றால் புரியும். அத்தனை தலைகளும் கிழடு தட்டியவை. ஊழல், இனவாதம், பொறுப்பின்மை போன்றவற்றின் திரண்ட வடிவமாக இருப்பவை. ஆனால், இதைப்பற்றிப் பொருட்படுத்தாமல், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசுப்பணிகளில் இருந்து ஓய்வு என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்புச் சரியானதே. அதே அறிவிப்பு நம்முடைய அரசியல் தலைமைகளுக்கும் பொருந்தக் கூடியதாக இருந்தால் சிறப்பு. கழிவுகளைக் கையில் வைத்துக்கொண்டு, உருப்படியாக எந்தப் புதிய நன்மைகளையும் செய்ய முடியாது. 

தேசிய நெருக்கடிக்கு தேசிய இடர் நீக்க வேலைத்திட்டம் அவசியம். அதையே நாடும் நாமும் வேண்டி நிற்கிறோம். எல்லோரும் திடமாக எண்ணிக் கொண்டால், ஐந்து ஆண்டுகளில் இலங்கையை மிகப் பெரிய பொருளாதார வளமுடைய நாடாக வளர்த்தெடுத்து விட முடியும். அதை நோக்கிப் பயணிப்பதைப்பற்றிச் சிந்திப்போம்.