சிவப்புக் கட்சியெல்லாம் தமிழர் ஆதரவானவை அல்ல (வாக்குமூலம்-29) 

சிவப்புக் கட்சியெல்லாம் தமிழர் ஆதரவானவை அல்ல (வாக்குமூலம்-29) 

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலில் சர்ச்சையைக் கிளப்பிக்கொண்டு இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நோக்கி வந்துகொண்டிருப்பதாகக் கூறப்பட்ட சீனாவின் இராணுவ ஆய்வுக்கப்பலான ‘யுவான்வாங்-5’ (Yuan Wang- 5) 16.08.2022 அன்று அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வந்தடைந்து 22.08.2922 அன்று திரும்பிப் புறப்பட்டும்விட்டது. 

 ‘ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன’ கூட்டிலிருந்து வெளியேறிச் சுயாதீனமாக இயங்கிவரும் விமல்வீரவன்ச -வாசுதேவநாணயக்கார- உதயகமன்வில ஆகியோரை உள்ளடக்கிய (இடதுசாரிக்) கட்சிகள் இக்கப்பலின் வருகையை இலங்கை அனுமதிக்க வேண்டுமென்று அரசாங்கத்தைக் கேட்டிருந்தன. ‘தனக்கு (இலங்கைக்கு) மூக்குப் போனாலும் பறவாயில்லை எதிரிக்குச் (இந்தியாவிற்கு) சகுனப் பிழையானால் போதும்’ என்பதே இதன் அரசியல் பின்னணியாகும். இந்த நுண்ணரசியலை, இந்திய எதிர்ப்புவாதிகளை இன்னும் ஆதரித்து நிற்கும் தமிழர் தரப்பிலுள்ள ‘முன்பள்ளி’ அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளுமளவிற்கு அவர்களிடம் அரசியல் ஞானம் இல்லையென்பது இலங்கைத் தமிழர்களின் துரதிஷ்டமே.  

இந்த விடயம், சிங்கள இடதுசாரிக் கட்சிகளைத் தற்காலத்தில் ஆதரித்து நிற்கின்ற தமிழ் அரசியல் கட்சிகளினதும் தமிழ் அரசியல்வாதிகளினதும் ஆர்வலர்களினதும் கண்களைத் திறக்க வேண்டும். 

 ஏனெனில், உலகளாவிய இடதுசாரித்துவம் வேறு; இலங்கையில் தற்போது நிலவும் இடதுசாரித்துவம் வேறு. இலங்கையைப் பொறுத்தவரை 1948/49 இல் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட போதும் 1956 இல் அரச கரும மொழிச் சட்டம் (தனிச் சிங்களச் சட்டமூலம்) கொண்டுவரப்பட்ட போதும் இலங்கையின் இடதுசாரிகள் இன -மத-மொழி- பிரதேச- வர்க்க வேறுபாடுகளுக்கப்பால் நியாயத்தின் பக்கம் நின்று இச்சட்டமூலங்களை எதிர்த்த அந்தக் காலத்தின்போதுதான் உலகளாவிய இடதுசாரித்துவம் இலங்கையிலும் நிலவியது. 

ஆனால், 1960 களின் பின்னர் இலங்கையில் இடதுசாரித்துவம் என்பது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பௌத்த சிங்களப் பேரினவாதமாகவே இடதுசாரித்துவம் தன்னைக் கட்டமைத்துக் கொண்டது. இலங்கையின் இடதுசாரித்துவ வரலாறு இந்த உண்மையைப் பதிவு செய்திருக்கிறது. 

இதற்கு இரு உதாரணங்களைக் காட்டலாம். 

ஒன்று, 1965 இல் நடைபெற்ற இலங்கையின் ஆறாவது பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து பிரதமர் டட்லி சேனநாயக்கா தலைமையிலான அரசாங்கத்தில் தமிழரசுக்கட்சியும், தமிழ்க் காங்கிரசும் இணைந்த கூட்டரசாங்கம் நிறுவப்பட்டது. அவ் அரசாங்க காலத்தில் தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது -வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிர்வாக மொழியாகத் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்கான (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது – வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிர்வாக மொழியாகத் தமிழ் மொழியை பயன்படுத்துவதற்கான விசேட ஏற்பாடுகளை இச்சட்டமூலம் கொண்டிருந்தது – அதனை எதிர்த்து  சமஜமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரிக்கட்சிகளே ஆர்ப்பாட்டம் நடத்தின. இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 08.01.1966 அன்று கொழும்பில் நடந்த இவ் ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போது ரத்தினசார தேரோ என்னும் பௌத்த பிக்கு துப்பாக்கி சூட்டினால் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மற்றது, 1970 இல் ஆட்சிக்கு வந்த திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்கா தலைமையில் இலங்கையின் இடதுசாரிக் கட்சிகளும் இணைந்திருந்த அந்த அரசாங்கத்தில் பழம் பெரும் இடதுசாரித் தலைவரான சமாஜமாஜிக் கட்சித் தலைவரான கொல்வின் ஆர்.டி.சில்வாவே அரசியலமைப்பு விவகார அமைச்சராகவிருந்தார். அவரினால் இலங்கைத் தமிழினத்தின் ‘மரண சாசனம்’ என வர்ணிக்கப்பெற்ற இலங்கையின் குடியரசு அரசியலமைப்பு 1972 இல் பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. 

 1960 களின் பின்னர் இலங்கையில் இடதுசாரித்துவம் என்பது தமிழர்களுக்கும் தமிழர்களுக்காதரவான இந்தியாவுக்கும் எதிரானதாக வளர்ந்து வந்துள்ளதென்பதைத் தமிழர்கள் குறிப்பாக இடதுசாரி ஆதரவுத் தமிழர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா செயற்பட்ட வேளைகளிலெல்லாம் சிங்கள இடதுசாரிக் கட்சிகள் அதனை ‘இந்திய விஸ்தரிப்பு வாதம்’ என வர்ணித்து எதிர்த்தே வந்துள்ளன. இடதுசாரித்துவம் சார்ந்த சில தமிழ் கட்சிகளும் அதற்குத் துணை போயின என்பதும் துரதிஷ்டவசமானதே. 

 அண்மையில் நடைபெற்ற கொழும்பு காலிமுகத்திடல் ‘அறகலய’ போராட்டத்தின் உட்கிடக்கையாக – நீறு பூத்த நெருப்பாக – இந்திய எதிர்ப்புவாதமும் இருந்தது. போராட்டத்தின் பின்னணியிலிருந்த முன்னிலை சோசலிச கட்சியும் ஜேவிபியும் இந்திய எதிர்ப்புவாதத்தைத் தமது கொள்கையாகக் கொண்டிருப்பவை. இவை எல்லாவற்றையும் நுணுகி நோக்காது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (தமிழரசுக் கட்சியின்) பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரனும் சாணக்கியனும் இப்போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல்கொடுத்தமையும் – போராட்டக்காரர்களுடன் சந்திப்பு நிகழ்த்தியமையும் -முன்னிலை சோசலிசக் கட்சியின் குமார் குணரட்ணம் கொழும்பில் சுமந்திரன் வீட்டில் வைத்துச் சுமந்திரனையும் சாணக்கியனையும் சந்தித்தமையும் – 20.07.2022 அன்று பாராளுமன்றத்தில் நடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னம் இவர்களிருவரும் (சுமந்திரனும் சாணக்கியனும்) இலங்கையிலுள்ள சீனத் தூதுவரை இரகசியமாகச் சந்தித்தமையும் தமிழர்களுக்குச் சாதகமானவையல்ல. இவை நிச்சயம் இந்தியாவை எரிச்சலூட்டுவனமாக இருந்திருக்கும். சுமந்திரனும் சாணக்கியனும் அண்மைக்காலமாக இப்படியான அரசியல் முதிர்ச்சியற்ற செயற்பாடுகளில் தன்னிச்சையாக ஈடுபட்டுவருவதை அவர்கள் சார்ந்திருக்கும் தமிழரசுக்கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சில ஒழுக்காற்று நடவடிக்கைகளின் ஊடாகவாவது கட்டுப்படுத்தவில்லையாயின் இவ்வாறான மதிகெட்டோர் வழித்தடத்தில் பயணிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிர்காலத்தில் தீமைகளும் அழிவுகளுமே விளையும். 

 வரலாற்று ரீதியாக – சுமார் 2500 வருடங்களுக்கும் மேலாக – மகாவம்சக் காலத்திலிருந்தே இலங்கையில் கட்டமைக்கப்பட்டு வளர்ந்துவிட்ட பௌத்த சிங்களப் பேரினவாதம், அண்மையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அதன் விளைவான ‘அறகலய’ போராட்டத்தில் இலங்கையின் மூவின மக்களும் பங்கேற்றிருந்தார்கள் என்பதால், (ஒப்பீட்டளவில் மிகக்குறைந்த தமிழ் முஸ்லிம் மக்களே பங்கேற்றிருந்தனர். அவர்களும் நடுத்தர மற்றும் மேல் தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அதிலும் ஜூலை 09 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழர்களில் கணிசமான தொகையினர் யாழ்ப்பாணத்திலிருந்தும் மட்டக்களப்பிலிருந்தும் முறையே சுமந்திரன் மற்றும் சாணக்கியனின் ஏற்பாட்டில் ஏற்றி இறக்கப்பட்டவர்கள் எனத் தகவல்கள் கசிந்தன) அல்லது போராட்டக் களத்தில் (காலிமுகத்திடலில்) தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட காரணத்தால் அல்லது 2009 முள்ளிவாய்க்கால் மற்றும் 1983 கறுப்பு ஜூலை நினைவுகூரப்பட்ட காரணத்தால் இரவோடிரவாக மாறிவிட்டதென எண்ணக்கூடாது. இதனைத் தமிழர் அரசியல் தரப்பு உணர்ந்து கொள்ள வேண்டும். 

 சிவப்புச் சட்டை அணிந்தவர்களெல்லாம் உண்மையான – உலகளாவிய இடதுசாரிகள் எனத் தமிழர் தரப்பு இடது சாரிகள் மயங்கக் கூடாது. கொழும்பு காலி முகத்திடல் ‘அறகலய’ போராட்டத்திற்கு ஆதரவாக வடக்கில் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் கிழக்கில் சிறிதளவு மட்டக்களப்பிலும் நடத்தப் பெற்ற ஆர்ப்பாட்டங்கள் அறிவு பூர்வமானதல்ல. ஜே வி பி யின் உயர்மட்ட உறுப்பினர் சந்திரசேகரனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட கொழும்பு ‘அறகலய’ போராட்டத்திற்காதரவான ஊடக மகாநாட்டிலும் ஆர்ப்பாட்டத்திலும் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளிலும் தமிழர் தரப்பிலிருந்து வட மாகாணத்தைத் தளமாகக் கொண்ட சில தமிழ் இடதுசாரி கட்சிகள் கலந்து கொண்டமை தவறானதொரு தீர்மானமாகும். 

 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல்படுத்தும் முனைப்புகளில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஈடுபட்டிருக்கும் அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் (Movement for Devolution of Power) பங்காளிக் கட்சிகளிலொன்றான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி –  SDPT- இவ்வாறான தவறான தீர்மானங்களை மேற்கொள்ளுவதால் அவை அக்கட்சி பற்றிய தவறான சமிக்ஞைகளையே அரசியல் பொதுவெளியில் காவிச்செல்லுமென்பதை அக்கட்சியின் தலைமை உணரவேண்டும். ஏனெனில், ஜே வி பி யும் முன்னிலை சோசலிசக் கட்சியும் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்திற்கும் அதன் விளைவான பதிமூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கும் எதிரானவை. 

  அதேபோன்றே, ஈ பி ஆர் எல் எப் இன் இணையத்தளமான ‘ஈழச் செய்தி’ யின் ஏற்பாட்டில் 26.06.2022 அன்று நடைபெற்ற இணையவழி நிகழ்ச்சியில் (Zoom Meeting) முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் குமார் குணரட்ணம் முக்கிய பேச்சாளராகக் கலந்து கொண்டமையும் ஈ பி ஆர் எல் எப் பற்றிய தவறான சமிக்ஞைகளையே வெளியிலே காவிச்செல்லும். 

தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் அபிலாசைகளையும் அவர்கள் தம் நியாயமான கோரிக்கைகளையும் மதிக்கின்ற முற்போக்குச் சக்திகள் சிங்கள சமூகத்தினரிடையே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அத்தகைய முற்போக்குச் சக்திகளுடன் தமிழர்கள் கைகோர்த்துக் கொள்வது வேறு; அதனை விடுத்து வெளியே தம்மை இடதுசாரிகளாகக் காட்டிக் கொண்டு உள்ளே தமிழின விரோதத்தையும் இந்திய எதிர்ப்பு வாதத்தையும் கொண்டிருப்பவர்களுடன் கைகோர்த்துக் கொள்வது வேறு. இரண்டும் ஒன்றல்ல. முன்னையது மக்களுக்கானது பின்னையது தேர்தல் அரசியலுக்கானது. 

 எனவே, ‘அறகலய’ போராட்டக்காரர்களுக்கு ஆதரவளிக்கின்ற – அவர்களுடன் கைகோர்த்துக் கொள்கின்ற -அவர்களுக்காகக் குரல் கொடுக்கின்ற தமிழர் தரப்பு அரசியற் சக்திகள் சற்று அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். மட்டுமல்லாமல் ‘அறகலய’ போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதற்கு ஆதரவான மேற்குலக சக்திகளும் இருந்தன என்பதையும் தமிழர் தரப்பு அரசியற் சக்திகள் கவனத்திற்கொள்ள வேண்டும். இடதுசாரித்துவம் என்பது வெறும் சிவப்பு நிறத்தில் மட்டுமல்ல அதன் கொள்கைகள் – கோட்பாடுகள் – நடைமுறைகளிலும் வெளிப்பட வேண்டும். 

இந்து சமுத்திரப் பிராந்தியப் புவிசார் அரசியலில் இந்தியாவின் செல்வாக்கே இலங்கைத் தமிழர்களுக்கு எப்போதும் அனுகூலமானது என்கின்ற மற்றும் இலங்கையின் இனப் பிரச்சனைக்கான எந்த நியாயமான தீர்வும் இந்தியாவின் அனுசரணை அல்லது அழுத்தம் இல்லாமல் நடைமுறைச் சாத்தியமில்லை என்கின்ற யதார்த்தத்தையும் இடதுசாரிகள் உட்பட இலங்கைத் தமிழர்தம் அரசியல்தரப்புகள் நன்கு உணர்ந்துகொண்டு செயற்படவேண்டும். மேலும், சீனக் கப்பலை வரவேற்க அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்குச் சென்ற முன்னாள் அரசாங்க அமைச்சர்களான விமல் வீர வன்ச, சரத்வீரசேகர ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான -அதிகாரப் பகிர்வுக்கு எதிரான – தமிழர்களுக்கு எதிரான இனவாதிகளுமாவர் என்பதும் தமிழர் தரப்பு கவனத்திற்கொள்ள வேண்டியதாகும்.