— அழகு குணசீலன் —
உலக வரலாறு பேசப்போகின்ற உலகத் தலைவர்களுள் நிச்சயமாக மிக்கைல் கோர்பச்சேவ் ஒருவராக இருப்பார். உலக வரைபடம் இரண்டாகப் பிரித்து நோக்கப்பட்ட போது ஒரு பகுதிக்கு அமெரிக்காவும், மறுபகுதிக்கு சோவியத் யூனியனும் தலைமை தாங்கிக் கொண்டன. மூன்றாம் உலக நாடுகள் என்று வரையறுக்கப்பட்ட அபிவிருத்தி அடைந்து வரும் 120 நாடுகள் அணிசேரா அணியாக செயற்பட்டபோதும் அவை பெருமளவுக்கு மொஸ்கோ சார்பு சமூக, பொருளாதார, அரசியலை அனுசரித்தன.
அணிசேரா அணியின் ஆரம்பகர்த்தாக்களான ரீட்டோ (யூகோசிலாவியா), ஜவகர்கலால் நேரு (இந்தியா), சுகாட்டோ (இந்தோனேசியா), நாஸர் (எகிப்து), கவாமேகுருமா (கானா) ஆகியோர் மூன்றாம் உலகின் பெருந்தலைவர்கள். சோவியத்தின் சிதைவு அணிசேரா நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியதுடன் மொஸ்கோவின் தலைமைத்துவத்தை கேள்விக்குட்படுத்துவதாகவும் இருந்தது. சிதைந்த சோவியத்தின் பலவீனம் வெளிப்பட அமெரிக்கா உலகின் தலைமைத்துவத்தை ஓரளவுக்கு தனியுரிமை ஆக்கிக்கொண்டது.
அமெரிக்காவுக்கும், மேற்குலகிற்கும் சிம்மசொற்பனமாக இருந்த சோவியத் யூனியனை கோர்பச்சேவ் தனது சீர்திருத்தங்களின் மூலம் பலவீனப்படுத்தினார். சோவியத்மக்களுக்கும், கம்யூனிஷ்ட்களுக்கும் ஒரு புரியாத புதிர். அரச நடவடிக்கைக்குழு என்று தமக்கு தாமே பெயர் சூட்டிக் கொண்ட ஒரு குழுவினர் கிளர்ச்சி செய்தனர். கோர்பச்சோவ் அவரது விடுமுறைக்கால வாசஸ்தலத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். எனினும் இராணுவத்தின் ஒத்துழைப்பு இல்லாமையாலும், கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த ஜெல் சிங்கின் அதிகாரத்தினாலும் மூன்று நாட்களில் கிளர்ச்சி தோல்வியில் முடிந்தது . கிளர்ச்சியாளர்கள் பின் வாங்கினர்.
சோவியத்மீது உலகம் கொண்டிருந்த பெரும் நம்பிக்கையை, எதிர்பார்ப்பை சிதைத்த பெருமை கோர்பச்சேவுக்கு உரியது. வேறுவகையில் சொன்னால் சோவியத் மீதிருந்த மாயையை தோலுரித்து அம்மணமாக்கியவர் கோர்பச்சேவ் என்று குற்றம்சாட்டப்படுகிறது. கோர்பச்சோவ் ஒரு சோவியத்து துரோகி என்றும், மேற்குலகின் கைக்கூலி என்றும், சோவியத் யூனியனை காட்டிக் கொடுத்தவர் என்றும் கூறுகின்றார்கள், மூத்த கம்யூனிஸ்ட் பரம்பரையினர். அதிபர் விளாடிமிர் புட்டின் கூட இந்த கருத்துடன் உடன்படுகிறார். இதனால்தான் சோவியத் சமூகம் புட்டினை சோவியத்தை மீட்க வந்த இரட்சகர் என்று இன்னும் கருதுகிறார்கள்.
30 ஆகஸ்ட் 2022இல் மரணித்த முன்னாள் சோவியத் யூனியன் தலைவர் கோர்பச்சேவ், சோவியத் யூனியன் என்ற உலக வல்லரசின் இறுதித் தலைவர். 1931 மார்ச் 2ம் திகதி பிறந்த இவர், தனது 91 வது வயதில் மரணித்துள்ளார். கோர்பச்சேவ் சோவியத் யூனியனில் மேற்கொண்ட மறுசீரமைப்புக்களுக்காக மேற்குலகம் அவரை அளவுக்கு அதிகமாக தட்டிக்கொடுத்தது. பெரும் வரவேற்பைப் பெற்றார். மறுபக்கத்தில் சோவியத் யூனியனில் மறுசீரமைப்புக்கு எதிரான கருத்துக்களையே அவர் விட்டுச்சென்றுள்ளார். அதுவும் இன்றைய ரஷ்யாவின் சமூக, பொருளாதார, அரசியல் நிலையில் அது மேலும் நியாயப்படுத்தப்படுகிறது.
மக்களும், கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத்தவர்களும் கோர்பச்சேவின் மறுசீரமைப்புக்களை ஏற்க மறுத்தனர். 1991 ஆகஸ்ட் 20அன்று கைச்சாத்திடப்படவிருந்த பால்டிக் நாடுகளின் சுதந்திர அங்கீகாரத்தை தடுக்கும் வகையில் கோர்பச்சேவுக்கு எதிரானவர்கள் அவரை 1991ஆகஸ்ட் 19ம் திகதி தடுத்து வைத்தனர். இந்த நிலையில் போரிஷ் ஜெல்சிங் முக்கிய பொறுப்புகளை ஏற்றுச் செயற்பட்டு கோர்பச்சேவுக்கு ஒத்துழைப்பு வழங்கினார். சோவியத் யூனியன் சிதைக்கப்பட்டபின் ரஷ்யாவின் முதல் ஜனாதிபதியானார் ஜெல்சிங்.
கோர்பச்சேவ் முக்கியமாக இரு சீர்திருத்தங்களை முன்மொழிந்தார்.
1. PERESTROIKA: இதன் அர்த்தம் மறுசீரமைப்பு.
2. GLASNOST : இதன் அர்த்தம் வெளிப்படைத்தன்மை.
இதன் அடிப்படையில் சந்தைப் பொருளாதாரமயமாக்கம், ஜனநாயகமயமாக்கம் என்பனவற்றை கோர்பச்சேவ் விரும்பினார். மொத்தத்தில் சோவியத் யூனியனை நவீனமயப்படுத்துவது அவரின் திட்டமாக இருந்தது. 1990 மார்ச் 15இல் சோவியத் தலைமையை ஏற்றுக்கொண்ட கோர்பச்சேவ் ஆக 1991 டிசம்பர் 25ம் திகதி வரையே அப்பதவியில் இருந்தார். இந்த குறுகிய காலத்தில் சோவியத் யூனியனில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒரு நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும் சமமானவை. இதை சோவியத் யூனியன் தன்னைத்தானே அழித்துக்கொண்ட அரசியல் தற்கொலை என்று கூறுகின்ற ஆய்வாளர்களும் இல்லாமல் இல்லை.
அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றீகனும், மிக்கேல் கோர்பச்சேவும் பல விடயங்களில் உடன்பாடு கண்டனர். மத்திய தூர அணுவாயத ஏவுகணைகளை முற்றாக அழித்தல் அவற்றில் முக்கியமான ஒன்று. மற்றையது சோவியத் யூனியனின் கிழக்கைரோப்பிய இராணுவ கூட்டமைப்பை கலைத்தல். இவை இரண்டும் சோவியத் யூனியனை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்துவதாக அமைந்தன. ஒருவகையில் சோவியத்தின் சுய பாதுகாப்பு அரணை றேகன் கோர்பச்சேவைக் கொண்டே தகர்த்தார். இன்று நேட்டோவின் கிழக்கு விரிவாக்கத்துடன் ஒப்பிடுகையில் கோர்பச்சேவின் செயல் தீர்க்கதரிசனம் அற்றது.
அப்போது சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து இருந்தது. அங்கு சோவியத் படைகளின் நிலை கொண்டிருந்தன. 1986இல் தொடங்கி கட்டம் கட்டமாக ஆப்கானிஸ்தானில் இருந்து1988 வரை சோவியத் துருப்புக்கள் வெளியேற்றப்பட்டனர். இவ்வாறான உடன்பாடுகளின் மூலம் கோர்பச்சேவ் சோவியத் யூனியனை பலவீனப்படுத்தினார் என்பதே ரஷ்யாவின் மூத்த பிரஜைகளின் இன்றைய நிலைப்பாடாகும். சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற கோர்பச்சேவை பயன்படுத்திய அமெரிக்கா பின்னர் அணியாக அங்கு வாடியடித்தது. இதனால் தான் இன்றைய உக்ரைன் மீதான இராணுவத்தலையீட்டுக்கும் மூத்த தலைமுறையிடம் இருந்தே புட்டின் அதிக கைதட்டல்களைப் பெறுகிறார்.
1989இல் பேர்ளின் சுவர் தகர்க்கப்பட்டது. மேற்கு, கிழக்கு ஜேர்மனிகள் இணைந்து கொண்டன. பனிப்போர் முடிவுக்கு வந்தது. சோவியத் கூட்டமைப்பில் இருந்து 15 யூனியன் குடியரசுகள் பிரிந்து சென்றன. இவை தம்மை சுதந்திர நாடுகளாக பிரகடனம் செய்தன. பால்டிக்கன் குடியரசுகளில் தொடங்கி கிழக்கு, மத்திய ஆசியாவரை இது விரிந்தது. இறுதியாக ரஷ்யா, பெலாருஷ், உக்ரைன் நாடுகள் உருவாகின. ஒட்டுமொத்தத்தில் கோர்பச்சேவின் சீர்திருத்தங்கள் சோவியத் யூனியனை 15 துண்டுகளாக்கி சிதறச்செய்தது. இதனால்தான் சிதறிய சோவியத் யூனியனின் நினைவுச்சின்னமாகிறார் கோர்பச்சேவ்.
கோர்பச்சேவின் சீர்திருத்தங்கள் குறித்து பலபக்க நோக்குகள் உண்டு. ஆனால் ரஷ்யாவின் இன்றைய ஆட்சியாளர்களும், மூத்த கம்யூனிஸ்ட் பரம்பரைச் சமூகமும் அதைப் பார்ப்பதற்கும், ரஷ்யாவுக்கு வெளியே மேற்குலகம் அதைப் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஒருவகையில் 1980களின் நடுப்பகுதியில் கருத்தரித்து 1990களில் பிறந்த உலகமயமாக்கம் என்ற குழந்தையின் தாக்கம் தான் இந்த சீர்திருத்தங்கள் என்று சொல்லமுடியும். அதேபோன்று தான் அரசியல் ரீதியாக ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை, கருத்துச் சுதந்திரம் என்பனவும் இந்த சீர்திருத்தங்களின் விளைவாகின. சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் ஆட்சியில் பொருளாதாரத்திலும், அரசியலிலும் போடப்பட்டிருந்த கடிவாளங்களை கழற்றி வீசுவதாக இந்த சீர்திருத்தங்கள் அமைந்தன.
100க்கும் அதிகமான மொழிகளைப் பேசிய பரந்து, விரிந்த சோவியத் யூனியனை கம்யூனிச சிந்தனை ஒரு சமூகமாக கட்டிப்போட்டு இருந்தது. கோர்பச்சேவின் சீர்திருத்தங்கள் சமுக, பொருளாதார, அரசியல் சிந்தனைகளில் லிபரல் நோக்கு உள்வாங்கப்பட்டபோது தடைகளைத் தகர்த்து தேசியங்கள் குறித்த சிந்தனைகள் வலுப்பெற்றன. கோர்பச்சேவின் சிந்தனைகள் தேசிய சிந்தனைகளை- தேசியவாதத்தை துரிதப்படுத்தியபோது பல தேசங்களின் பிறப்பை சோவியத் யூனியனால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சோவியத் யூனியன் ஒரு மாபெரும் தேசம் என்ற மாயை, மட்டுமல்ல கனவும் சிதறிப்போனது. கோர்பச்சேவுக்கு 1990இல் சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. ஆனால் மக்களுக்கு சமாதானம்தான் கிடைக்கவில்லை.
கோர்பச்சேவ் மீது வேறுபட்ட விமர்சனங்கள் உண்டு. ஒன்று வலது கண்ணாடியை அணிந்த முதலாளித்துவ நோக்கு, மற்றையது இடது கண்ணாடியை அணிந்த சோஷலிச நோக்கு. கோர்பச்சேவின் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று தசாப்தங்களை கடந்த இன்றைய நிலையில், உலகமயமாக்கம் முழு உலகையும் ஆக்கிரமித்துள்ள நிலையில் சீர்திருத்தங்களை தவிர்த்து சோவியத் யூனியன் தனித்து தனது ஆயுளை நீடித்திருக்கமுடியுமா என்ற கேள்வியை எழுப்பவேண்டிய தேவை ஏற்படுகிறது.
சர்வதேச சமுக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை காலத்திற்கு ஏற்ப படிப்படியாக உள்வாங்கிய மெதுவான சீர்திருத்தமாக அது அமைந்திருந்தால் சோவியத் யூனியனின் தற்கொலை உடனடியாக ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அதைப் பின்போட்டிருக்க முடியும். சோவியத் யூனியனில் இருந்து சீனா கற்றுக்கொண்ட பாடமே அதன் இன்றைய சமூக, பொருளாதார, அரசியல்.
ஆக, எவ்வாறு கார்ள் மார்க்சின் சிந்தனைகளை உள்வாங்கி தன்னை சீர்திருத்தி முதலாளித்துவம் தனது ஆயுளை நீடித்துக் கொண்டுள்ளதோ, அவ்வாறே கம்யூனிசம் சீனாவில் கோர்பச்சேவின் சிந்தனைகளை உள்வாங்கி தன்னை சீர்திருத்திக்கொண்டுள்ளது. சோவியத் யூனியனின் அன்றைய இடத்தை பிடித்து ஒரு வல்லரசாக தக்கவைத்துள்ளது. சோவியத்தை சிதறடித்த அமெரிக்காவின் அடுத்த கனவு சீனாவைச் சிதைப்பதே.
சீனாவில் ஒரு கோர்பச்சேவை தேடுகிறது அமெரிக்கா…! அதற்காக தைவானைப் பலி கொடுக்கவும் அது தயார்….!!