இலங்கையில் சர்வதேச பல்கலைக்கழகங்கள் ….!
சந்தர்ப்பங்களும்….. சவால்களும்…..!!
— அழகு குணசீலன் —
இலங்கையின் உயர்கல்வி சந்தையை சர்வதேச பல்கலைக்கழகங்களின் வருகைக்காக திறந்துவிடவேண்டுமா? இல்லையா? என்ற வாதப்பிரதிவாதங்கள் கேட்கத்தொடங்கியுள்ளன. அண்மையில் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன வெளியிட்டுள்ள கருத்து கல்வியாளர்களினதும், பொருளியலாளர்களினதும், அரசியல்வாதிகளினதும் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.
இன்றைய போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன இலங்கையின் தலைசிறந்த பொருளியலாளர்களுள் குறிப்பிடக்கூடிய ஒருவர். பொருளியல் விரிவுரையாளராக இருந்து அரசியலுக்கு வந்தவர். பொருளாதாரத்திற்கும், அரசியலுக்கும், பல்கலைக்கழக கல்விக்கும் முடிச்சுப் போடக்கூடியவர். இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு ஒரு நீண்ட கால தீர்வாக, வெளிநாட்டு செலாவாணியைச் சம்பாதிக்கும் வழியாக மட்டுமன்றி, இலங்கையின் ஏட்டுச்சுரக்காயை கறிச்சுரக்காயாக்க இந்த ஆலோசனையை அவர் வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார பந்தில் ஏற்படுத்தப்பட்ட ஓட்டைகளால் அது காற்றுப் போய்க் கொண்டிருக்கிறது. அதை அடைப்பதற்கான வெறும் தற்காலிக முயற்சிகளையே அரசாங்கம் செய்கிறது. இது நீண்ட காலத்தீர்வாகாது. சர்வதேச பல்கலைக்கழகங்களை இலங்கையில் அனுமதிப்பதுபோன்ற மரபுரீதியற்ற, புதிய, நீண்டகால மாற்று திட்டங்களின் மூலமே பொருளாதாரத்தின் ஓட்டைகளை நிரந்தரமாக அல்லது நீண்டகாலத்திற்கு அடைக்கமுடியும்.
காலனித்துவம், முதலாளித்துவம் ஊடான பரிமாண வளர்ச்சி மாற்றம்தான் உலகமயமாக்கம். உலகமயமாக்கம் இரு துருவங்களாக இருந்த இருவேறு சமூக, பொருளாதார, அரசியல் அபிவிருத்தி மாதிரிகளான முதலாளித்துவத்திற்கும், சோஷலிசத்திற்கும் இடையிலான தூய இடைவெளியை குறைத்திருக்கிறது.
முதலாளித்துவ நாடுகள் மட்டுமன்றி ரஷ்யா, சீனா, கியூபா, வியட்னாம் போன்ற நாடுகளும் உலகமயமாக்கல் மாதிரியை உள்வாங்கி உள்ளன.
இவை சமூக முலீட்டுடன், தனியார், மற்றும் சர்வதேச முதலீடுகளையும் அங்கீகரித்துள்ளன. இதனை இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான ஒரு பொருத்தமான மாதிரியாகக் கொள்ளமுடியும்.
இந்த வகையில் இலங்கையின் உயர்கல்வியில் அரச பொது முதலீடு மட்டுமன்றி, தனியார் வெளிநாட்டு முதலீடுகளும் ஊக்குவிக்கப்படவேண்டிய தேவை உள்ளது. அதாவது தேசிய பல்கலைக்கழகங்களுடன், சர்வதேச பல்கலைக்கழகங்களும், அரச முதலீட்டுடன் தனியார் முதலீடும் பொருளாதாரத்தில் சமாந்தரமாக செயற்படுகின்ற வாய்ப்பு ஏற்படுத்தப்படவேண்டும்.
மரபுரீதியான பெருந்தோட்ட ஏற்றுமதியில் இருந்து மரபுரீதியற்ற மாற்றுப் பயிர்களுக்கு மாறுதல், அல்லது ஆடை ஏற்றுமதிக்கு மாறுதல் என்பவை எல்லாம் ஐம்பது ஆண்டுகள் கடந்ந பொருளாதார மாதிரி. இன்றைய உலகயமமாக்க கட்டமைப்பில் இந்தப் பொருளாதார அணுகுமுறை செயலிழந்து விட்டது. இதையே அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் இன்றைய நெருக்கடிகள் வெளிப்படுத்துகின்றன.
இலங்கைக்கு இருக்கக்கூடிய வாய்ப்புக்கள்… !
(*) ஒப்பீட்டளவில் இலங்கையில் மற்றைய ஆசிய, கிழக்கு ஐரோப்பிய நாடுகளை விடவும் வாழ்க்கைச்செலவு குறைவாக உள்ளது. (இன்றைய அசாதாரண சூழ்நிலையை இது குறிக்காது) வசிப்பிட வாடகையாக மாணவர்கள் நாள் ஒன்றுக்கு 1200 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை செலுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது சாதாரண சூழலில் சர்வதேச மாணவர்களுக்கு 5 முதல் 15 அமெரிக்க டொலருக்கும் குறைவாவே அமையும். உணவின் விலையையும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மலிவானது. புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து கோடை விடுமுறைக்கு இலங்கை சென்ற நம்மவர்களின் தகவல்கள் அனுபவரீதியாக இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
(*) இலங்கையின் கல்வித்தரம் மற்றைய அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவானதாக இல்லை. எழுத வாசிக்க தெரிந்த கல்வியறிவு சதவீதம் பல ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது 90 வீதத்திற்கும் அதிகமானது. சர்வதேச கல்வித்தர பட்டியலில் உலகநாடுகளில் இலங்கை 66வது இடத்தில் இடம்பிடித்திருப்பது குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல. உலக நாடுகளின் பட்டியலில் இலங்கை 2/3 பகுதி நாடுகளுக்கு முன்னால் இடம்பிடித்துள்ளது.
(*) குடியேற்றகால ஆங்கிலக்கல்வி அத்திவாரமும், அதைத்தொடர்ந்தும் இலங்கைக் கல்விமுறைமை பேணிவருவதும் சர்வதேச உயர்கல்விப் போட்டிப் சந்தையில் இலங்கைக்கு சாதகமாக அமையும். இலங்கை இப்போதும் மூளைசாலிகளின் வெளியேற்றத்தினூடான “அறிவு ஏற்றுமதி” நாடாக இருப்பது இதற்கு சான்றாக அமைகிறது.
(*) சர்வதேச மாணவர்கள் எந்த அடிப்படையில் ஒரு நாட்டைத் தேர்வு செய்கிறார்கள் என்ற ஆய்வில் அவர்கள் வெறுமனே கல்வித்தரம், வசதியான ஆடம்பர வாழ்க்கை என்பன வற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிடவும் வேறு அம்சங்களும் உள்ளன. நாடொன்றின் வரலாறு, கலாச்சார பாரம்பரியம், மதம் சார்ந்த நெறிமுறைகள், மக்கள் வாழ்வியல், எழிமைத்தன்மை, மற்றும் முக்கியமாக உல்லாசப் பிரயாண கவர்ச்சிகர நாடுகளை விரும்புகின்றனர். உக்ரைன் சர்வதேச மாணவர்கள் மத்தியில் நடாத்திய ஆய்வில் இந்த விபரங்கள் வெளிவந்துள்ளன. இவை இலங்கைக்கு பெரும் சாதகமாக அமையும்.
(*) பல்கலாச்சார வாழ்வியலும், இலங்கையின் ஐவகை நிலவமைப்பும், அதற்கே உரித்தான இயற்கை வள புவியியல் அமைவிடமும், பன்மைத்தன்மை பொழுதுபோக்கு வசதிகளும் இலங்கைக்கு மேலும் வாய்ப்பை அளிக்கிறது.
(*) இன்றைய சர்வதேச அரசியலில் இலங்கை பேசுபொருளாகி இருக்கிறது. அதன் கேந்திர முக்கியத்துவம் அதற்காக அமெரிக்கா, சீனா, இந்தியா என்பனவற்றின் அளவுக்கதிகமான அக்கறையும் அதற்காக அவை கொடுக்கவுள்ள விலையும் உலகில் இன்று பேசு பொருள்கள். இந்த சூழல் சர்வதேச மாணவர்களுக்கு ஒரு சமூக, பொருளாதார, அரசியல் ஆய்வுகூடத்தை வழங்குவதாக உள்ளது.
(*) இலங்கையின் கணனி – இலத்திரனியல் – டிஜிட்டல் கல்வி அறிவு மட்டம் சர்வதேச பல்கலைக்கழகங்களின் வருகைக்கு தடையாக அமைய வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. ஏனெனில் குறைந்த முதலீட்டில் பல்கலைக்கழகங்கள் விரைவாக தமக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப மட்டத்தை எட்டமுடியும்.
(*) இலங்கையின் பல்கலைக்கழக கல்வியானது சர்வதேச மட்டத்தில் நன்மதிப்பைப்பெற்றுள்ளது. இலங்கையின் 15 அரச பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரத்தை எட்டியுள்ளதுடன், சர்வதேசதரத்திலும் செயற்படுகின்றன. இதுவும் சர்வதேச பல்கலைக்கழகங்களின் வருகைக்கு உந்துசக்தியாக அமையமுடியும்.
(*) இன்று இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்கின்ற சர்வதேச மாணவர்கள் வருடாந்தம் 3000 முதல் 12,000 வரையான அமெரிக்க டொலர்வரை பல்கலைக்கழக கட்டணமாகச் செலுத்துகின்றனர். இந்த வேறுபாடு அவர்களின் கற்கை நெறியைப் பொறுத்து அமைகிறது. மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மாணவர்களுக்கு மலிவானது.
(*) புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் இலங்கை மாணவர்களுக்கு சர்வதேச பல்கலைக்கழகங்கள் ஒரு ஈர்ப்புச் சக்தியாக அமைய முடியும்.
பட்டப் பின் படிப்பபிற்கும் இது ஒரு வாய்ப்பைக் கொடுக்கும்.
(*) உள்நாட்டு தொழில்சந்தைக்கு மட்டுமன்றி, வெளிநாட்டுச் சந்தைக்கும் தேவையான, பொருத்தமான தகுதியான மனிதவளத்தை இலங்கையினால் வழங்கமுடியும்.
இலங்கையில் சர்வதேச பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்படும் பட்சத்தில் – அந்த சைகை சர்வதேசத்தை எட்டும்போது அவை தங்கள் பார்வையை இலங்கைத்தீவை நோக்கி திருப்புவதற்கு அதிக வாய்ப்புண்டு. சர்வதேச பல்கலைக்கழகங்களின் KNOW-HOW மற்றும் இருதரப்பு WIN -WIN சூழ்நிலையும் இருதரப்புக்கும் ஒரு பெரும் வாய்ப்பாக அமையும். இந்த போட்டியானது இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்துவதற்கு வழிவகுக்கும்.
எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்….!
அரசதரப்பு பிரேரிக்கின்ற எல்லா விடயங்களையும் எதிர்ப்பது தான் எதிர்க்கட்சிகளின் கடமை என்று வியாக்கியானம் கற்பிக்கின்ற இலங்கை அரசியல் ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிவரும்.
அதுவும் மரபுவழி இடதுசாரிகள் காலாவதியான முதலாளித்துவ கோட்பாட்டு தீமைகளை அவை இன்றைய உலகப்பொருளாதாரக் கட்டமைப்புக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தாத போதும் “கொள்கை ரீதியாக” எதிர்ப்பார்கள். இந்த எதிர்ப்பு சமகால சர்வதேச அரசியலுக்கும், சமூக பொருளாதார இயக்கத்திற்கும் குறுக்காக நிற்பதாக அமையும். இன்று சீனா, இந்தியா தொடர்பாக எழுப்பப்படுகின்ற சந்தேகங்கள் இதற்கு சிறந்த உதாரணம்.
பந்துல குணவர்த்தனவின் இந்த ஆலோசனையானது இரவோடிரவாக செய்யக்கூடிய ஒன்றல்ல. சட்டம் இயற்றல் உட்பட பல முன் ஏற்பாடுகளையும், அடிப்படை கட்டமைப்பு வேலைகளையும் செய்யவேண்டி உள்ளது. இலங்கையின் இன்றைய நெருக்கடிச் சூழலில் இவற்றை செய்வது எதற்கு முன்னுரிமை வழங்குவது என்ற கேள்வியை எழுப்பாமல் இருக்காது.
அரசாங்க பொதுப்பல்கலைக்கழகங்களின் மாணவர்களும், கணிசமான அளவு ஆசிரியர்களும் இன்னும் மரபு ரீதியான இடதுசாரி அரசியலில் இருந்து விடுபடவில்லை. அதே நிலைதான் சில தொழிற்சங்கங்களிலும் உள்ளது. தனியுரிமை, வெளிநாட்டு முதலீடு என்ற வார்த்தைகள் இவர்களுக்கு ஒவ்வாமை நோயை ஏற்படுத்தக்கூடியவை .
சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இலங்கையை திறந்துவிடுவது வசதிபடைத்த வர்கத்திற்குரியது என்றும், வசதிகுறைந்தவர்கள் இதன்மூலம் நன்மைபெறமுடியாது என்ற வாதம் முன்வைக்கப்படும். ஒருவகையில் இதில் உண்மை இருப்பினும் வசதியான மாணவர்கள் சர்வதேச பல்கலைக்கழகங்களில் அனுமதிபெற்றால் வசதிகுறைந்த வறியமாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் குறைந்த வெட்டுப்புள்ளியில் அனுமதி கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
இப்போதுள்ள வெட்டுப்புள்ளி முறையானது வசதிபடைத்த மாணவர்களுக்கே சேவகம் செய்கிறது. இந்த மாணவர்கள் வசதியான பாடசாலைகளில் கல்வி கற்கிறார்கள், தனியார் வகுப்புக்களுக்கும் மேலதிகமாக செல்கிறார்கள் இதன்மூலம் கூடிய புள்ளிகளைப் பெறுகிறார்கள். இந்த வாய்ப்பு வசதிகுறைந்த மாணவர்களுக்கு இல்லை. பாடசாலைகளில் வளப்பங்கீடு சமனாக இல்லாதவரை இந்த நிலை தொடரவே செய்யும். எனவே நாட்டின் தேசிய வளத்தை வசதியான மாணவர்களை பட்டதாரிகளாக்குவதற்கு பயன்படுத்துவது சமூக அநீதியானது. சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு வசதிபடைத்த மாணவர்கள் சென்றால் நாட்டின் யாருக்கு தேவையோ அவர்களின் வளர்ச்சிக்கு பயன்படுவதாக இருக்கும். இங்கு உயர்கல்வியில் சமூகநீதி வேண்டப்படுகிறது.
இன்றைய நிலையில் 3,50,000 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிப்பரீட்சைக்கு தோன்றுகிறார்கள். இவர்களில் 10 முதல்15 வீதமானவர்களுக்கே பல்கலைக்கழக அனுமதி கிடைக்கிறது. பரீட்சையில் சித்தியடைந்தும் பெரும்பாலான மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இவர்கள் வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள். இவர்கள் இரு தடவைகள் தண்டிக்கப் படுகிறார்கள். முதலில் வளங்கள் பாடசாவைகளுக்கு சமமாக பங்கிடப்படாததால், பின்னர் வெட்டுப்புள்ளியினால். இதைச் சரிசெய்வதற்கு மேற்கொள்ளப்படுகின்ற சலுகைமுறையானது பிரச்சினையைத் தீர்ப்பதற்கு போதுமானதல்ல.
தற்போதைய பொருளாதார நெருக்கடி, அமைதியின்மை, வன்முறைகள், ஜனநாயகப் பற்றாக்குறை என்பனவும் தடைக்கற்களாக அமைகின்றன.
ஆகவே அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும் சமூக,பொருளாதார, அரசியல் ஸ்த்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலமே இச் சவால்களை வெற்றி கொள்ள முடியும்.
உக்ரைன் உதாரணம்…!
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் மாணவர்கள் அமெரிக்க, பிரித்தானிய, அவுஸ்திரேலிய, ஐரோப்பிய ஒன்றிய பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் நிலையில் இல்லை. ஏனெனில் அந்த நாடுகளில் செலவு அதிகம். அதனால் தான் அவர்கள் உக்ரைன் போன்ற நாடுகளை நாடுகின்றனர்.
உக்ரைனில் யுத்தம் ஆரம்பித்தபோது 60,000 வெளிநாட்டு மாணவர்கள் கல்விகற்றனர். இவர்கள் இந்தியா, மொறக்கோ, அஜர்பட்ஜான், நைஜீரியாமற்றும் தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இந்திய மாணவர்கள் 20,000 பேரில் தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டும் 2,000 என்று தெரியவருகிறது. உக்ரைன் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு வருடத்திற்கு 7,500 அமெரிக்க டொலர்கள் செலவாகிறது. இது அருகேயுள்ள ஜேர்மனியில் 10,300 யூரோவாக உள்ளது. இதைவிடவும் ஜேர்மனியில் தவணைக்கட்டணமாக 200 தொடக்கம் 300 யூரோக்களை செலுத்த வேண்டியும் உள்ளது.
உக்ரைன் யுத்தத்தின் பின்னர், அவ்வளவு இலகுவாக பழைய நிலைக்கு திரும்ப முடியாது. இதனால் உக்ரைன் சந்தையைப்பிடிப்பதற்கான வாய்ப்பு இலங்கைக்கு உண்டு. உலகில் மிக வேகமாக வளரும் பிராந்தியமாக ஆசியப்பிராந்தியம் இருப்பதனால் அது இலங்கைக்கு சாதகமாக அமையும்.
உலகின் 70 மில்லியன் மாணவர்களில் மூன்று பேருக்கு ஒருவர் தனியார் பல்கலைக்கழகங்களில் கற்கிறார்கள். ஆசியாவில் இது 35 வீதமாக உள்ளது. சீனா, வியட்நாம் நாடுகள் கூட 2008இல் இருந்து தனியார் துறையை உயர்கல்வியில் ஒருங்கிணைத்துள்ளன. வியட்னாமில் அரச பல்கலைக்கழத்திற்கான வருடாந்த கட்டணம் 200 அமெரிக்க டொலர்களாக இருக்க தனியார் துறையில் 2000 டொலர் முதல் 10,000 டொலர் வரை உள்ளது.
தென் ஆசியாவில் உயர் மானிட வளர்ச்சியைக் கொண்ட நாடுகளில் இலங்கை முன்னணியானது. இந்த நிலையில் உக்ரைனின் இடத்தை அதிக போட்டி இன்றி இலங்கை பெறமுடியும். ஜப்பான், சீனா, கொங்கொங், தென்கொரியா, தைவான், மலேஷியா, சிங்கப்பூர், இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், மாலைதீவு போன்ற நாடுகளில் இருந்தும், ஆபிரிக்காவில் இருந்தும் அதிக மாணவர்களை இலங்கை கவரமுடியும்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டபோது உலகச்சந்தையில் இந்தியா இலகுவாக அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. அதுபோன்று இலங்கை உக்ரைன் யுத்தத்தை சர்வதேச பல்கலைக்களுக்கு பயன்படுத்துமா?
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மாதிரி மாற்றங்களை வேண்டிநிற்கிறது. இதை இலங்கை அரசியல் தட்டிக் கழிக்க முடியாது.
தட்டிக்கழித்தால் அது இலங்கையின் பொருளாதாரத்திற்கு அடிக்கப்படுகின்ற சாவு மணியாக அமையும்.