‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-27) 

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-27) 

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

இலங்கையின் வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் பொதுவெளியில் (தமிழ்த் தேசியப் பரப்பு என்றும் அழைக்கப்படுகிறது) ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ எனக் குறி சுட்டுக் கொண்டு மூன்று பிரதான அணிகள் உலா வருகின்றன. 

ஒன்று, பழம்பெரும் தமிழ்க் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தலைமைக் கட்சியாக அல்லது பிரதான பங்காளிக் கட்சியாகக் கொண்டு உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதை போல (‘கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய’ கதை போலவென்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும்) தற்போது தமிழரசுக் கட்சியையும். ‘ரெலோ’ வையும், ‘புளொட்’ டையும் மட்டுமே பங்காளிக் கட்சிகளாகக் கொண்டதும் இதுவரை அதாவது 2001 இல் தோற்றம் பெற்று 21 ஆண்டுகளைக் கடந்தும் தேர்தல்கள் திணைக்களத்தில் இதுவரை பதிவு செய்யப்படாது இயங்கிக் கொண்டிருக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலானதுமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. 

இன்னொன்று, தமிழரசுக் கட்சியைப் ‘பழம் பெரும்’ என அடைமொழி கொடுத்தால் அதனைவிடப் பழம்பெருமை மிக்கதும் ‘தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி’ என்றொரு செல்லப் பெயரையும் தன்னகத்தே கொண்டு பழம் பெரும் சின்னமான ‘சைக்கிள்’ சின்னத்தையே இன்னமும் வைத்திருப்பதுமான- ‘எவரோடும் சேரேன்’ என்ற தாரக மந்திரத்தைத் தலை மேல் தாங்கித் தனிக்காட்டு ராஜாவாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (தமிழ் தேசிய மக்கள் முன்னணி). 

மற்றையது, தன்னை வடமாகாண முதலமைச்சராக்கிய தமிழரசுக் கட்சிக்குப் போட்டியாகத் ‘தமிழ் மக்கள் பேரவை’ என்னும் கடையைத் திறந்து பின்னர் அதனைத் ‘தமிழ் மக்கள் கூட்டணி’ எனப் பெயர்ப் பலகையை மாற்றி அதனைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு, முன்னாள் ஈ பி ஆர் எல் எப்பின் செயலாளர் நாயகம் சுரேஷ பிரேமச்சந்திரனின் தோளில் கை போட்டு-ஈ பி ஆர் எல் எப்பின் பெயரையும்  ‘பூ’ ச்சின்னத்தையும் மாற்றி அதனை மறு பிறவி எடுக்க வைத்து உருவான ‘தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி’ யின் தலைமைத்துவத்தையும் கைப்பற்றி (ஈ பி ஆர் எல் எப்பின் தலையைத் தடவி ஈற்றில் அதன் கண்களைப் பிடுங்கியது போல) அதனுடன் ‘ரெலோ’ விலிருந்து பிரிந்து வந்து தமிழ்த் தேசியக் கட்சி எனும் பதிவு செய்யப்படாத கட்சியை வைத்திருந்த சிறீகாந்தாவையும் சிவாஜிலிங்கத்தையும் மற்றும் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் பதிவு செய்யப்படாத வேறொரு கட்சியை வைத்திருந்த அனந்தி சசிதரனையும் சேர்த்துக்கொண்டு 2020 தேர்தலில் பெயர் மாற்றம் பெற்ற முன்னாள் ஈ பி ஆர் எல் எப்பின் (தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்) புதிய சின்னமான ‘மீன்’ சின்னத்தில் போட்டியிட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கவ்விக் கொண்ட சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி. முன்னர் தலைமை வகித்த தனது ‘தாயதி’க் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியும் தற்போது தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டும் விட்டது. சின்னம் ‘பொங்கல் பானை’. (வழமையான தேர்தல் விதிகளை மீறி இக்கட்சி எவ்வாறு பதிவு செய்யப்பட்டது என்ற கேள்வியும் தமிழ் அரசியல் பொதுவெளியில் உண்டு. அதாவது 20.01.2019 இல் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணி நான்கு வருடங்கள் முடியுமுன்னர் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டது எப்படி என்பதே அக்கேள்வி) 

நபரொருவர் ஏக காலத்தில் இரண்டு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்குத் தலைமை தாங்குவதற்கு அதாவது சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கும் தமிழ் மக்கள் கூட்டணிக்கும் ஏக காலத்தில் தலைவராகப் பதவி வகிப்பதற்குத் தேர்தல் விதிகள் இடம் கொடுக்குமா என்பது இளைப்பாறிய நீதியரசரான சட்டம் தெரிந்த சி.வி.விக்கினேஸ்வரனுக்குத் தெரியாமலா இருக்கப்போகிறது? 

 மேற்கூறப்பெற்ற இந்த மூன்று அணிகளையுமே (தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி) ‘தமிழ்த் தேசியவாதி’ களும் அவர்களுக்கு வால் பிடிக்கின்ற-வக்காலத்து வாங்குகின்ற தமிழ் ஊடகங்களும் ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ எனக் குறிசுட்டு வைத்துள்ளன. இந்த மூன்று அணிகளும் உலாவரும் தமிழ் அரசியல் பொதுவெளியே ‘தமிழ்த் தேசியப் பரப்பு’ என வர்ணிக்கப்படுகிறது. 

மேலும். இந்த மூன்று அணிகளும் தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு நான் முந்தி நீ முந்தி என (தேர்தல் வெற்றியை மட்டுமே நோக்காகக் கொண்டு) தம்மைப் புலிகளின் முகவர்களாகவே அடையாளப்படுத்தியுள்ளன. சரி பிழைகளுக்கு அப்பால் ‘புலி சார்’ உளவியலில் மூழ்கிப்போயுள்ள தமிழ் வாக்காளர் சமூகத்தைத் தம்வசப்படுத்துதலே இந்தப் ‘புலி’ அடையாளத்தின் நோக்கமாகும். மற்றவர்களும் அதாவது சிங்கள சமூகமும் இந்தியாவும் சர்வதேச சமூகமும் இவர்களைப் புலிகளின் முகவர்களாகவே அடையாளம் காண்கின்றனர். இந்த மூன்று அணிகளிலும் அரசியல் ரீதியாக ஒப்பீட்டளவில் சற்றுப் பலமாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிலவேளைகளில் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் புலிகளுக்கும் சம்பந்தமோ-தொடர்போ இல்லையென ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல் கூறினாலும் அதனை எவரும் நம்பத் தயாரில்லை. உண்மையிலேயே இவர்கள் தருணத்திற்கேற்ப புலிச்சாயம் பூசிய சந்தர்ப்பவாதிகளே. 

இந்தப் பின்னணியில், மேற்கூறப்பெற்ற மூன்று ‘தமிழ்த் தேசிய'(?) அணிகளின் அண்மைக்கால அரசியல் செயற்பாடுகளை முதலில் எடுத்து நோக்குவோம். அதாவது இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அதன் விளைவாக கொழும்பு காலி முகத்திடலில் ‘கோத்தா கோ ஹோம்’ போராட்டம் ஆரம்பித்த தினத்திலிருந்து இன்று வரையான காலத்தில் மூன்று அணிகளும் எவ்வாறு நடந்து கொண்டுள்ளன என்பதைப் பார்ப்போம். 

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சி) 

காலிமுகத்திடல் போராட்டத்தில் வடக்குக் கிழக்குத் தமிழர்களும் பங்கேற்க வேண்டுமென்று சுமந்திரன் கேட்டுக்கொண்டார். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. சுமந்திரனும் சாணக்கியனும் போராட்டக்காரர்களைச் சந்தித்தார்கள். இப்போராட்டத்தின் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் பிரேம்குமார் குணரட்ணத்துடனான சந்திப்பு சுமந்திரனின் வீட்டிலேயே சாணக்கியன் சகிதம் கொழும்பில் நடைபெற்றது. போராட்டம் ஆரம்பித்த காலத்தில் சர்வ கட்சி அரசாங்கக் கோரிக்கை எழுந்தபோது சுமந்திரன் முந்திக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை ஆதரிக்குமென்றார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமித்த போது அதனை எதிர்த்தது மட்டுமல்லாமல் சுமந்திரனும் சாணக்கியனும் ரணில் விக்ரமசிங்கவைப் பாராளுமன்றத்தில் பல தடவைகள் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் வைதார்கள். அதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நியமனத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்றிருந்தார். சுமந்திரனின் பிரதான குற்றச்சாட்டு ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றதன் மூலம் சர்வகட்சி அரசாங்கம் அமைவதைக் குழப்பிவிட்டார் என்பதாக இருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவும் இக்குற்றச்சாட்டையே கூறியிருந்தார். 

நிலைமையைப் பார்க்கும் போது, சஜித் பிரேமதாசா பிரதமராகி அவர் தலைமையிலான சர்வ கட்சி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைய வைத்துத் தானும் ஒரு அமைச்சராகும் கனவை ரணில் விக்கிரமசிங்க அப்போது பிரதமர் நியமனத்தை ஏற்றுக்கொண்டமை கலைத்து விட்டது என்ற மனவேக்காட்டில்தான் சுமந்திரன் சாணக்கியனையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அப்போது திட்டித் தீர்த்தார் போலும். 

 ஆனால். இப்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகி சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கும் முனைப்புகளில் ஈடுபட்டிருக்கும் போது கூடச் சுமந்திரன் ரணில் விக்கிரமசிங்கவைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூடி எந்தத் தீர்மானமும் எடுக்காமல், சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர்என்ற ‘லேபலை’ ஒட்டிக்கொண்டு தன்னிச்சையாகச் செயற்படுவது தமிழ் மக்களுக்கு எந்தச் சமூக பொருளாதார அரசியல் நன்மைகளையும் கொண்டு வந்ததும் இல்லை; கொண்டு வரப் போவதும் இல்லை. மாறாகத் தீங்கையே ஏற்படுத்தும். 

 இப்படியிருக்கையில், 20.07.2022 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்றக் குழு டலஸ் அழகப்பெருமவை (சஜித் பிரேமதாச தரப்பை) ஆதரிக்க எடுத்த தீர்மானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே உட்பூசல்களைக் கிளப்பியிருக்கிறது. 

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இத் தீர்மானத்தைத் தவறென்று கண்டித்திருக்கிறார். சுமந்திரனும் ‘புளொட்’ தலைவர் சித்தார்த்தனும் ஒருத்தரையொருத்தர் பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாகத் தாக்கிக் கொண்டுள்ளனர். ‘ரெலோ’த் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பெயர் குறிப்பிடாமல் இரு கறுப்பாடுகளைத் (அது சுமந்திரனும் சாணக்கியனும்தான் என்பது சொல்லாமலே விளங்கும்) தேடுகிறார். 

 இப்படி, ஒரு சிறு விடயத்தில் கூட ஒற்றுமையாகச் செயல்பட முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – தங்களுக்குள்ளேயே தெளிவும் உறுதிப்பாடுமில்லாமல் அடிபட்டுக் கொள்ளும் – ஒருத்தர் மேல் ஒருத்தர் சேறு அள்ளி வீசும் பங்காளிக் கட்சிகளைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வாக உத்தேச புதிய அரசியலமைப்பின் ஊடாக வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்த ‘சமஸ்டி’யைப் பெற்றுத் தரும் என்று மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதும் மக்கள் அதனை நம்பித் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெருவாரியாக வாக்களிப்பதும் தமிழ்த் தேசிய அரசியலில் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்ற அரசியல் பலவீனமாகும். 

 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிரான போராட்டம் ஆரம்பித்த காலத்தில் அரசாங்கத்திற்கெதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வரவிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் செயலாளர் கஜேந்திரனும் ஓடிச் சென்று கையெழுத்திட்டனர். நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறினால் இந்நாடு இரண்டு தேசங்களாகிவிடும் என நினைத்துக் கொண்டார்கள் போலும். 

 20.07.2022 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கலந்து கொள்ளாது அதனைப் பகிஸ்க்கரித்தனர். இவர்கள் இருவரும் பாராளுமன்றத்திற்கு வருகை தரவுமில்லை; வாக்களிப்பில் கலந்துகொள்ளவுமில்லை. 

ஆனால், இப்போது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவான பின்பும் அவரைத் தொடர்ந்து எதிர்க்கப் போவதாகக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகிறார். அப்படியாயின் பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பங்குபற்றி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்திருக்கலாமே? இக்கட்சியின் அரசியலும் தமிழ்த் தேசிய அரசியலின் இன்னொரு பகுதிப் பலவீனமாகும். 

 தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (பெயர் மாற்றம் பெற்ற முன்னாள் ஈ பி ஆர் எல் எப்) 

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் ஆரம்பித்து அரசியல் அரங்கிலே சர்வகட்சி அரசாங்கம் பேசுபொருளானபோது அதனை ஆதரித்தது மட்டுமல்ல அத்தகையதோர் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைப் பெறுவதற்கும் கூட பச்சைக்கொடி காட்டியிருந்தார் இந்த அணியின் தலைவரான சி.வி.விக்னேஸ்வரன். தனது கட்சியில் பங்காளராகவிருந்த தமிழ்த் தேசியக் கட்சியின் (பதிவு செய்யப்படாதது) சிறிகாந்தா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவுடன் சற்று அடங்கிப் போனவர், புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதில் முனைப்புக் காட்டத் தொடங்கியதும் முன்பு உள்ளே இழுத்துக் கொண்ட ‘அமைச்சர் பதவி’த் தலையை மீண்டும் சற்று வெளியே நீட்டினார். உடனே அவரது கட்சியின் பேச்சாளர் அருந்தவபாலன் ஊடகச் சந்திப்பொன்றை நிகழ்த்தி விக்னேஸ்வரனின் ‘அமைச்சர் பதவி’ நிலைப்பாட்டிற்கு எதிராகக் கருத்துக்களை முன்வைத்ததும் இப்போது சி.வி.விக்னேஸ்வரன் ‘சீ!…சீ! இந்தப்பழம் புளிக்கும்’ என்கிறார். சிலவேளை நாளை நிலைமை மாறினால் ‘அமைச்சர் பதவிப்பழம்’ மீண்டும் இவருக்கு இனித்தாலும் இனிக்கும். சி.வி.விக்னேஸ்வரனின் அரசியல் தமிழ்த் தேசிய அரசியலின் மிகப்பெரிய பலவீனமாகும். தமிழ்த் தேசிய அரசியலைப் பீடித்துள்ள பிரமுகர் அரசியலைப் பிரதிபலிக்கும் குறியீடாகவே சி.வி.விக்னேஸ்வரனின் அரசியல் செல்நெறி இருக்கிறது. 

இத்தகையதொரு பின்னணியில், இப்பத்தி இலங்கைத் தமிழ்ச் சமூகத்தை நோக்கி எழுப்பும் கேள்வி இதுதான். பலவீனங்களைக் கொண்ட – திருத்தவே முடியாத இந்தத் தமிழ்த் தேசியக் கட்சி (?)களையே மீண்டும் மீண்டும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அங்கீகரிக்கப் போகிறீர்களா? அல்லது இவற்றிற்கு மாற்றீடான அரசியல் அணியொன்றினை அடையாளம் கண்டு அதற்கு அரசியல் அங்கீகாரத்தையும் – பலத்தையும் வழங்கப் போகிறீர்களா? இது பற்றிய வாதப்பிரதிவாதங்களையும் உரையாடல்களையும் மேறகொள்ள இதுவே தக்க தருணமும் ஆகும். தமிழர்களிடையேயுள்ள சிவில் அமைப்புகள் இதில் நிறுவனமயப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இப்பத்தி பணிவன்புடன் வேண்டிநிற்கிறது.