காலிமுகத்திடலில் “கறுப்பு ஆடுகள்”  ஊடுருவல்? (காலக்கண்ணாடி 97) 

காலிமுகத்திடலில் “கறுப்பு ஆடுகள்”  ஊடுருவல்? (காலக்கண்ணாடி 97) 

     — அழகு குணசீலன் —  

எண்சாஸ்த்திர ஒன்பதுகளில் போராட்டத்திற்கு நாள் குறித்த காலிமுகத்திடல் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்களம் மெல்ல மெல்ல சூடு ஆறிக்கொண்டிருக்கிறது.‌ கொதிநிலை உச்சக்கட்டத்தை தாண்டிய உறைநிலை நோக்கிய நகர்வு. இது போராட்டத்தின் தேக்க நிலையும், முறிவும். 

போராட்டக்களம் மாறும்,போராட்ட முறைமைமாறும், போராட்டம் தொடரும் என்றெல்லாம் போராட்டக்காரர்கள் தம்மைத் தேற்றிக் கொள்ள   சொல்வது இலகு. ஆனால் அதைச் செய்வது அவ்வளவு இலகுவானது அல்ல. களநிலவரம் அதற்கு சாதகமாகவும் இல்லை. 

ஆகஸ்ட் 9 இல் அரச எதிர்ப்பு பிசுபிசுத்துப் போய்யுள்ளது. போராட்டக்காரர்கள் காலிமுகத்திடலில் இருந்து விலகிக்கொள்ள முடிவு செய்துள்ளனர். மக்கள் ஆதரவு குறைவடைந்துள்ளது. அதாவது வேறு வகையில் சொன்னால் உற்சாகப்படுத்த வந்த பார்வையாளர்கள் தொகை குறைந்துவிட்டது. பார்வையாளர்களை போராட்டத்தின் பங்காளர்களாக காட்டும் ஒரு மாயை ஊடகங்களால் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இது இப்போது வெளிப்பட்டுள்ளது. 

 இந்த அரச எதிர்ப்பு மூன்று மாதங்களில் ஊனமுற்றதற்கான காரணங்கள் எவை? அதற்கு யார் பொறுப்பு? அதற்கு பங்களிப்பு செய்தவர்கள், பின்னணியில் நின்றவர்கள் யார்?முதுகுக்குப் பின்னால் இருந்த மறைகரங்கள் யாருக்கு சொந்தமானவை? 

இந்தப் போராட்டம் ஒரு களியாட்டப் பாணியைக் கொண்டது என்றும், தெளிவான இலக்குகளையும், அதை அடைவதற்கான வழிமுறைகளையும் கொண்டிருக்கவில்லை என்றும் ஆரம்பத்தில் இருந்தே அரங்கம் -காலக்கண்ணாடி காட்சிப்படுத்தி வந்துள்ளது. 

இதற்கு மாறாக காலிமுகத்திடலை ஒரு வர்க்கப் போராட்டமாகவும், புரட்சியாகவும், மக்கள் எழுச்சியாகவும், இன, மத, பேதமற்ற சமூகநீதிக்கான போராட்டமாகவும் பல ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் விற்றுப்பிழைத்தனர். இப்போது போராட்டத்தின் பலம், பலவீனம், பொய்முகம், உண்மைமுகம் என்பன வெளிப்பட்டுள்ளன. முகத்திரைகள் கிழிக்கப்பட்டுள்ளன. ரணிலின் அடக்குமுறை மட்டுமா இப் பின்னடைவுக்கு காரணம்? 

தேவாரம் பாடிக்கொண்டு சிவன் கோயிலை இடித்த கதைதான் இந்தப் போராட்டக்களத்தின் ஐந்தொகை கணக்கு.  

தமிழில் தேசிய கீதம் பாடினார்கள். அதே திடலில் அதற்கு எதிரான குரல் பௌத்த துறவியினால் எழுப்பப்பட்டது. 

அகிம்சை வழிப்போராட்டம் என்றார்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அடித்து படுகொலை செய்தார்கள். காலிமுகத்திடலுக்கு சென்ற சஜீத் பிரேமதாசாவைத் தாக்கினார்கள். 

காலிமுகத்திடலில் புதிய புரட்சியாளர்களாக பசாங்கு செய்து  நூலகம் அமைத்தார்கள். ரணில் விக்கிரமசிங்கவின் நூலகத்தை தீயிட்டுக் கொழுத்தினார்கள். 

அகிம்சைப் போராட்டத்தின் பெயரில் படையினரின் துப்பாக்கிகளைப் பறித்துக்கொண்டு ஓடினார்கள். அகிம்சைப் போராளிக்கு துப்பாக்கி எதற்கு?.  

இப்போது இந்திய இராணுவ கால ஜே.வி.பி. வன்முறையை ஒத்த படுகொலைகள் தொடர்கின்றன. சடலங்கள் கடலில் கரை ஒதுங்குகின்றன. இதுதான் மாற்றுப் போராட்ட வழியோ…? 

சுமார் 70 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும், மற்றும் அவர்களின் தனியார் உடமைகளுக்கும் அழிவுகளை ஏற்படுத்தினார்கள். 

பொதுச் சட்டம், ஒழுங்கு விதிகளை மீறியதுடன் அத்துமீறி அரச வசிப்பிடங்கள், நிர்வாக அலுவலகங்களுக்குள் வன்முறையைப் பிரயோகித்து உள்ளே புகுந்தார்கள். 

அரச உடைமைகளுக்கு தீயிட்டுக் கொழுத்தினார்கள், சேதம் விளைவித்தார்கள். 

அரச, தனியார் இடங்களில் இருந்து பொருட்களை திருடி/ கொள்ளையிட்டு கள்ளச் சந்தையில் விற்பனை செய்தார்கள், வீடுகளுக்கு எடுத்துச் சென்றார்கள்.  

நீர் கொழும்பில் உடைக்கப்பட்ட ஹோட்டல், மற்றும் கடைகளில் 1983  இனக்கலவரத்துக்கு சமமான கொள்ளையடிப்பு இடம்பெற்றது. 

அரச தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் அனுமதியின்றிப் புகுந்து தங்களுக்கு விளம்பரம் வேண்டும் என்று பலாத்காரம் செய்தார்கள். 

சிறுபான்மைத் தேசிய இனங்களை ஏமாற்ற பௌத்த பேரினவாதப் பாணியில் கறுப்பு யூலை மற்றும் நினைவேந்தல்களை போலியாகச் செய்தார்கள். 

ஜனநாயகம், மனித உரிமைககள், ஊழல்,  இலஞ்சம், நிர்வாக துஷ்பிரயோகம் என்றெல்லாம் பேசி அவர்களும் அவற்றையே மீறியிருக்கிறார்கள், செய்திருக்கிறார்கள். 

கோத்தபாய நாட்டைவிட்டு ஓடிவிட்டார் என்றவர்கள், தாங்களும் நாட்டைவிட்டு ஓடித்தப்ப முயற்சித்தார்கள். 

மக்களின் பசி, பட்டினி, வறுமையைக்காட்டி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் அதை நிவர்த்தி செய்வதற்கான நிர்வாக நடைமுறைகளுக்கு தடையாக இருந்தது. சில தொழிற்சங்கங்கள் கட்சி அரசியலுக்காக சேவை மறுப்பைச் செய்து போராட்டம் என்ற பெயரில் மக்களை மேலும் வதைத்தன.  

கட்டமைப்பு மாற்றங்கள் வேண்டும், முறைமையில் மாற்றங்கள் வேண்டும் என்றவர்கள் சிறுபிள்ளைத்தனமாக, அரசியல் முதிர்ச்சி அற்று அமைச்சரவையை நியமித்தார்கள்.  

இந்தப் போராட்டம் பலர் குறிப்பிடுவது போன்று மக்கள் போராட்டம் அல்ல. சமூகத்தின் பெரும்பகுதியினரான விவசாயிகள், மீனவர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், அன்றாட கூலிகள், பல தொழிற்சங்கங்கள் இப் போராட்டத்தில் இருந்து விலகியே இருந்தார்கள். அல்லது திட்டமிட்டு ஆரம்பத்தில் இருந்தே கொழும்பு மேலாதிக்கம் அவர்களை விலக்கியே வைத்திருந்தது. 

இது போன்ற இன்னோரன்ன முரண்பாடுகள். இதனால்தான் இந்த போராட்டம் ஒரு புரட்சி அல்ல எதிர்ப்புரட்சி என்று இப்பத்தி அன்று முதல் இன்று வரை எடுத்துச் சொல்லி வருகிறது. 

காலிமுகத்திடலை போராட்டக்களம், வர்கப்புரட்சி மையம், இனங்களுக்கிடையிலான சமத்துவக்களம் என்றவர்கள் இப்போது ரணிலின் நிர்வாகம் மீது பாய்கிறார்கள். அதற்கான வாய்ப்பை ரணிலுக்கு வழங்கியவர்கள் யார்? ஆதரவளித்த மக்களின் நம்பிக்கையில் மண்ணைப் போட்டவர்கள் யார்? 

இந்தப் அரச எதிர்ப்பானது ஒன்றிணைக்கப்பட்டு நெறிப்படுத்தப்படவில்லை. பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகளும், தன்னார்வ அமைப்புக்களும், பிராந்திய, மேற்குலக சக்திகளும் விலைக்கு வாங்கி களத்தில் இறக்கி இருந்தன. இவர்களுக்கு இடையே சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கான பொது வேலைத் திட்டம், அணுகுமுறை எதுவும் இருக்கவில்லை. 

இருந்த ஒரேயொரு குறிக்கோள் மகிந்தவையும், கோத்தபாயாவையும் வீட்டுக்கு அனுப்புவதுதான். அதுவும் வன்முறையின் ஊடாகவே அதைச் செய்தார்கள். அவர்கள் இருவரும் போனபின் வந்த ரணிலையும் போகச் சொன்னபோது மக்கள் விழித்துக் கொண்டார்கள். அரச எதிர்ப்புக்கு மக்கள் ஆதரவு குறைந்தது. புதிய தலைமைக்கு கால அவகாசம் தேவை என்பது மக்களால் உணரப்பட்டது. 

மரபு ரீதியான இடதுசாரிகள், மதவாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், கொழும்பு சாய்மனைக் கதிரை முதலாளிகள், உலகமயமாக்கத்தின் மூலம் உருவாகிய புதிய, பெருநுகர்வு மத்தியதரை வர்க்கம், தரகு முதலாளித்துவ அரசியல் கட்சிகள், வல்லரசுகளின் மேலாண்மை என்பனவற்றின் கூட்டில் ஒரு போராட்டத்தை சரியான இலக்கில் நெறிப்படுத்தமுடியுமா? இதுவே இப்போராட்டத்தின் மிகப்பெரிய பலவீனம். 

காலிமுகத்திடலில் இருபதுக்கு மேற்பட்ட ஒன்றுக்கொன்று முரண்பட்ட அமைப்புக்கள் செயற்பட்டன. அதில், சிவலற்றின் உறுப்பினர்களுக்கு இப்போது உயர் பதவிகள் கிடைப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இவை உண்மையாயின், இப் போராட்டங்கள் தோற்கடிக்கப்படுவதற்கு ஊடுருவியவர்களால் உள்ளிருந்தே குழிகள் தோண்டப்பட்டுள்ளன என்பதை இவை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இது போன்று தோப்பிகள் மட்டுமல்ல முகமூடிகள், முக்காடுகள் எல்லாம் விலைபோய் இருக்கிறார்கள். 

அமெரிக்க இராஜதந்திரி சஜீத்துடனும் பேசுகிறார், அநுரகுமாரவுடனும் பேசுகிறார் என்றால் இவர்களின் இலங்கைச் சமூகங்கள் குறித்த பார்வை என்ன? யார் குத்தினாலும் சரி தங்களுக்கு தேவை அரிசி. இதுதான் மேலாண்மைகளின் இலக்கு. அதற்கு முரண்பட்ட சக்திகளை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடைந்திருக்கிறார்கள். அதுதான் மகிந்த, கோத்தா ஆகியோரின் கதிரைகளை வெறுமையாக்குவது. இதற்கு சகல அரசியல் கட்சிகளும், போராட்டக்கார்களும் ஏதோ ஒருவகையில் துணைபோய் உள்ளனர். 

ரணிலை பதவியில் அமர்த்தியவுடன் அநுரகுமாரவை கைகழுவி விட்டார் அமெரிக்க அம்மையார். அநுர தனித்துவிடப்பட்டுள்ளார்.  

தங்களுக்கு பொருத்தமான அரசியல் தலைமை கதிரைக்கு வந்தவுடன் பிராந்திய, சர்வதேச இராஜதந்திரிகள் பாட்டை மாற்றிப் பாடத் தொடங்கினார்கள். ரணிலை பதவியில் இரண்டரை வருடங்களுக்கு பாதுகாப்பதே அவர்களின் இன்றைய நோக்கம் அதற்காக அவர்கள் எதையும் செய்வார்கள். 

காலிமுகத்திடல் இளைஞர்கள் அவலை நினைத்து உரலில் இடித்து புரட்சி என்று எண்ணி எதிர்ப்புரட்சிக்கு பல்வேறு சக்திகளாலும் தவறாக வழிநடாத்தப்பட்டு விட்டார்கள். போராட்டம் மழுங்கடிக்கப்பட்டுவிட்டது. காரணம் அரசியல் மயப்படுத்தப்படாத வெறும் கட்சி, வாக்கு அரசியலுக்கு பழக்கப்பட்டவர்கள் இவர்கள்.? 

வெற்றிடமாகிய இரு கதிரைகளும் நிரப்பப் பட்டுவிட்டன. கொழும்பு தரகு முதலாளிகள் தங்கள் இலக்கை அடைந்துவிட்டார்கள். சர்வதேசிய தன்னார்வ முகவர் அமைப்புகள் தேசிய தன்னார்வ, சிவில் அமைப்புக்களை விலைக்கு வாங்கிவிட்டன. டொலர் யாரைத்தான் விட்டது? எல்லோரும் மேற்குலக தாளத்திற்கு ஆடுகிறார்கள். கூலி டொலரில் கிடைக்கிறது. 

இந்த சூதாட்டத்தில் வென்றது யார்? தோற்றது யார்? யாரை வெளியேற்ற நினைத்தார்களோ அவர் பிரதமராக மட்டுமல்ல ஜனாதிபதியாகவும் ஆனார்.   போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிதான் ஜனாதிபதி மாற்றம் என்று சிலர் நிறுவ முற்படுகின்றனர். அப்படி அல்ல போராட்டத்தின்  முதல் தோல்விதான் ரணில் விக்கிரமசிங்கவும், தினேஷ் குணவர்தனவும், புதிய அமைச்சரவையும். போராட்டத்தின் அடுத்த தோல்வி பொதுஜன பெரமுனவின் மீள் உயிர்ப்பும், கோத்தபாயாவின் மீள் வருகையுமாக அமையும். 

அரசாங்கத்தில் அங்கம் பெறவும், அமைச்சுப்பதவிகளைப் பெறவும் பல கட்சிகள் முண்டியடிக்கின்றன. இல்லையேல் கட்சிகள் துண்டு, துண்டாகச் சிதறும் நிலையுள்ளது. தமது சுயநல அரசியலுக்கு போராட்டக்கார்களைப் பயன்படுத்தியும், ஏமாற்றியும்விட்டு இப்போது ஆட்சியில் அமரப்போகின்றன இந்தக் கட்சிகள். இது போராட்டக்காரர்களுக்கு மற்றொரு தோல்வி. 

ராஜபக்சாக்கள் இதுவரை காட்டியது போன்று தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் தமது பலத்தை காட்டுவார்கள். பொதுஜன பெரமுனயில் இருந்து பிரிந்து சென்றவர்களால் உருவாக்கப்படவுள்ள கூட்டணி, சஜீத்தின் S.J.B. யும், ரணிலின் U.N.P யும் இணைதல் என்ற செய்திகள் எல்லாம் போராட்டம் ஏற்படுத்தியுள்ள எதிர்விளைவுகள். எந்த அரசியல் முறையை, கட்டமைப்பை சிதைக்கப்போவதாக போராட்டம் பிரகடனம் செய்ததோ அதே முறைமையை, கட்டமைப்பை அது உயிர்ப்பித்துள்ளது, பலப்படுத்தியுள்ளது. 

மக்களின் கோரிக்கைகள், அபிலாஷைகள் இன்னும் வெறுமையாகவே உள்ளன. 

ஆக….., 

காலிமுகத்திடல் போராட்டம் யாருக்கு சேவகம் செய்துள்ளது….? 

யாரை அரியணையில் ஏற்றியுள்ளது…?