சல்மான் ருஷ்டி.! எனக்கு விடுதலை உனக்கு துரோகம்! (காலக்கண்ணாடி- 96) 

சல்மான் ருஷ்டி.! எனக்கு விடுதலை உனக்கு துரோகம்! (காலக்கண்ணாடி- 96) 

      — அழகு குணசீலன் — 

” I HEREBY INFORM THE PROUD MUSLIMS OF THE WORLD THAT THE AUTHOR OF THE BOOK ‘SATANIC VERSES’ WHICH IS DIRECTED AGAINST ISLAM, THE PROPHET AND THE QUR’AN, AND ALL THOSE INVOLVED IN ITS PUBLICATION ARESENTENCED TO DEATH. I CALL ON ALL MUSLIMS TO EXECUTE THEM ” 

                               —– AYATOLLA KHOMEINI —-14.02.1989 . 

(*) முருகன் தமிழ்க் கடவுள் என்றால், முடியுமானால் தமிழில் பூசை செய்து காட்டுங்கள் என்று தமிழ் நாட்டில் கேள்வி எழுப்புகிறார்கள். ஆறறிவுள்ள மனிதன் ஐந்தறிவுள்ள மாட்டையும், குரங்கையும், பாம்பையும் எப்படி வணங்கமுடியும் என்று கேட்கிறார்கள். 

(*) மரியா டிசம்பர் எட்டாம் திகதி கருவுற்று இருப்பதாக அறிவிக்கப்படுகிறது. டிசம்பர் இருபத்தைந்தில், 17 நாட்களில் யேசு பிறக்கிறார்    இது எப்படிச் சாத்தியம் என்று கேட்கிறார்கள் இளையதலைமுறையினர். 

(*) யேசு ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் கொடுங்கள் என்றார். அவர் பிறந்த மண்ணில் இஸ்ரேல் ஏன்? பாலஸ்தீனத்தை அழிக்கிறது? என்று மற்றொரு கேள்வி எழுகிறது. 

(*) புத்தரா? ஆ… அவரைத்தெரியாதா மனைவியையும், பிள்ளையையும் நடு வீதியில் தவிக்கவிட்டு சாமியாய் போனவர்தானே என்றும் குற்றம் சுமத்தப்படுகிறது. 

இந்த கேள்விகளை, சந்தேகங்களை இருபத்தியோராம் நூற்றாண்டின் ஒரு பகுதி சமூகம் எழுப்புகிறது என்பதற்காக அந்த சமூகத்தில் உள்ளவர்களுக்கு மரணதண்டனையை விதித்துவிடமுடியுமா? இங்கும் பைபிள், பகவத்கீதை, வேதங்கள், ஆகமங்கள் அனைத்தும் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன. 

எல்லா மதங்களும் நன்மைக்கு சொர்க்கமும், தீமைக்கு நரகமும் இருப்பதாகவே பேசுகின்றன. அப்படியானால் மதங்களை, கடவுளை நிந்திப்பவர்கள் கடவுளால் தண்டிக்கப்படுவார்கள் – நரகம் கிடைக்கும் என்பதுதானே பொருள். அதற்கு மனிதன் (?) மனிதனுக்கு மரண தண்டனை விதிப்பது ஏன்?   

அதுமட்டுமா நிந்தித்தவனை கொன்றால் கொன்றவன் கொலைகாரன். ஆனால் அவன் சுவர்க்கத்திற்குப் போவான், அவன் மாவீரன் எனப் போற்றப்படுவான் என்று பேசுவது மதம் பிடித்தவர்களின் மதவெறியில்லையா? 

சல்மான் ருஷ்டி…..! 

சல்மான் ருஷ்டி என்ற பெயர் உலகுக்கு நன்கு பரிச்சயமானது. அந்தப் பெயரைப் பிரபல்யப்படுத்தியதில் புரட்சிக்குப் பின்னரான ஈரானுக்கு பெரும் பங்குண்டு. ருஷ்டி ஒரு சர்வதேச தரத்திலான ஒரு படைப்பாளி என்பதை விடவும் அவருக்கு ஈரான் அரசால் வழங்கப்பட்ட மரணதண்டனை  உத்தரவு மூலம்  ருஷ்டி உலகிற்கு அதிகம் பிரபலமானவர்.  

ஆயத்துல்லா கொமேனி என்ற ஈரானிய இஸ்லாமிய அரச மத தலைவர், அதே மதத்தைச் சேர்ந்த புத்திஜீவியான இன்னொரு இஸ்லாமியருக்கு, ஆங்கிலோ- இந்தியருக்கு, இஸ்லாமிய மதத்தையும், நபிகள் நாயகத்தையும் நிந்தித்ததற்காக 14.02. 1989இல் வழங்கப்பட்ட மரணதண்டனை உத்தரவு இது. ‌

மதநெறிமுறைகள் மனித வாழ்வியலை நெறிப்படுத்த வகுக்கப்பட்டவை என்றே சகல மதங்களும் கூறுகின்றன. மனித வாழ்வியலின் ஒரு அங்கம் அந்த மனிதனின் சுதந்திரம் என்றால், அதுவும் கருத்து வெளிப்பாட்டு, சிந்தனைச் சுதந்திரம் என்றால், பகுத்தறிவு சார்ந்த பார்வை என்றால் அந்த மனித ஆற்றலை மதங்கள் தடைசெய்வது ஏன்?  

கல்தோன்றி மண் தோன்றாக் காலம் என்றாலும் சரி, இரண்டாயிரத்து நாநூறு ஆண்டுகள் என்றாலும் சரி, இரண்டாயிரம் ஆண்டுகளானாலும் சரி, ஆயிரத்து நாநூறு ஆண்டுகளானாலும் சரி இந்த நெறிமுறைகள் எக்காலத்திற்கும் பொருத்தமானவையாக, மாற்றங்களுக்கு உட்படுத்த முடியாத நெகிழ்ச்சியற்றவையாக இருந்தால் அந்த மதநெறியானது மக்களிடம் இருந்து அந்நியப்படுவது தவிர்க்க முடியாதது. மக்களின் சமகால வாழ்வியலை பிரதிபலிக்கும் தகுதியை இழந்துவிடுகிறது. 

தனிமனிதனதும், சமூகத்தினதும், தேசத்தினதும், சர்வதேசத்தினதும் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வியல் மாற்றமடைகிறது. இங்கு மதம்சார் நிலைப்பாடு மட்டும் மாற்றமடையாதிருப்பது சாத்தியமானதா? இயங்குநிலை சமூகச் செயற்பாட்டில் மதம் மட்டும் நின்ற இடத்திலேயே நிற்க முடியுமா? நிற்க வேண்டுமா?புத்தரும், யேசுவும், நபிகள் நாயகமும், காந்தியும் அசையாது அந்த இடத்திலேயே நின்றிருப்பார்களா? 

அகமது சல்மான் ருஷ்டி 1947 யூன் 19ம்திகதி இந்தியாவின் பம்பாயில் பிறந்தவர். இந்திய -இஸ்லாமிய குடியேறிகளின் இங்கிலாந்து வாழ்வியல் பற்றிய தனது “STANIC VERSES ” (சாத்தானின் வசனங்கள்) நாவலில் ஒருபகுதி முகமது நபிகள் நாயகத்தின் வாழ்க்கையோடு தொடர்புடையதாக மறுவாசிப்பு செய்யப்படுகிறது. இங்கு ஆசிரியரும், ஈரான் மதத்தலைமையும் இஸ்லாம் குறித்த முரண்பட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர். இந்த மாற்றுக்கருத்துச் சுதந்திரத்தை ஒருவர் மற்றவருக்கு மறுதலிப்பது கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிப்பது. 

சல்மான் ருஷ்டி சுமார் இருபத்தி ஐந்துக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் பலவும் சர்வதேச இலக்கிய உலகில் மிகவும் பிரபல்யமானவை, பேசப்படுபவை. “நள்ளிரவு சிறார்கள்”, “வெட்கம்”, “தங்க இல்லம்”, “உண்மையின் மொழிகள்”, “ஜோசப் அன்ரன்”, “அமெரிக்க சிறுகதைகள்”, “ஹருணும் கடலும்” போன்ற பலவற்றை குறிப்பிட முடியும். இவர் யேர்மனியின் குன்தர் கிறாஸ், இந்திய வம்சாவளியைக் கொண்ட திரினிடாட் வி.எஸ் நய்ப்போல் ஆகியோருக்கு சமமாக மதிக்கப்படுகின்ற ஒரு சர்வதேச படைப்பாளி. 

“ஜோசப் அன்ரன்” என்ற நூல் அவரின் சுய வாழ்க்கை வரலாற்றைப் பேசுகிறது. சல்மான் ருஷ்டி மரணதண்டனை அறிவிப்பு வெளியான பின்னர் தலைமறைவு வாழ்க்கையே வாழ்ந்தார். அப்போது அவர் பெயர் ஜோசப் அன்ரன் அந்தப் பெயரிலேயே அவரின் வாழ்க்கை வரலாறு வெளியாகியுள்ளது.  “ஹருணும் கடலும்” மகனைப் பிரிந்து வாழும் ருஷ்டியின் உள்ளக் குமுறலைப் பேசும் நாவல். “நள்ளிரவு சிறார்கள்” நாவலை திரைப்படமாக்கும் செயலிலேயே அவர் தற்போது ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக அறியப்படுகிறது. “வெட்கம்” பாகிஸ்தான் பற்றி பேசுகிறது. 

இது போன்ற மரணதண்டனைகள் ருஷ்டிக்கு மட்டுமல்ல பலருக்கு இஸ்லாமிய அரசுகளால் விதிக்கப்படுகின்ற கொடூரமான போக்கு நிலவுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் இருந்து தப்பித்து இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தார் மலாலா. வங்காளதேசத்தில் இருந்து தப்பி யேர்மனியில் அரசியல் தஞ்சம் புகுந்தார் தலீஸ்மா நஸ்றீன். தலீஸ்மா “LAIJJA” வெட்கம் என்ற நாவலை எழுதியதற்காக குற்றம் சாட்டப்பட்டார். ருஷ்டிக்கு சமமான குற்றமே தஸ்லீமா மீதும் சுமத்தப்பட்டது. 

இஸ்லாம் மதத்தின் பெயரால் செய்யப்படுகின்ற இந்த செயற்பாடுகளில் எல்லா இஸ்லாமிய நாடுகளும், அமைப்புக்களும் உடன்பாடுள்ளனவா என்றால் அதுவும் இல்லை. இதற்கு குரான் குறித்த புரிதல் – வியாக்கியானம் காரணமாக இருக்கலாம். சர்ச்சைக்குரிய இந்த நாவலை மொழிபெயர்ப்பு செய்த ஜப்பானியர், இத்தாலியர் கத்திக்குத்துக்கு இலக்காகி உள்ளனர். ஜப்பானியர் கொலை செய்யப்பட்டார். 

சில இஸ்லாமிய நாடுகளின் அணுகுமுறையில் மற்றைய இஸ்லாமிய நாடுகள் முரண்படுகின்ற போக்கு இஸ்லாம் குறித்த பல கேள்விகளை எழுப்புகிறது. சவூதி அரேபியா மத அதிகாரபீடம் மற்றும் எகிப்து அஸார் மசூதி மதத்தலைப்பீடம் என்பன ருஷ்டியின் மரணதண்டனை விதிப்பை வெளிப்படையாக கண்டித்துள்ளன. இந்த வகையான  தண்டனை விதிப்பு சட்டரீதியற்றது என்றும், நீதிமன்ற நடைமுறைகளுக்கு ஒவ்வாதது என்றும் தெரிவித்துள்ளன. அத்துடன் ஷரியா சட்ட நடைமுறையற்ற ஒரு நாட்டில் வாழும் ஒருவருக்கு எப்படி இந்த தண்டனையை விதிக்கமுடியும் என்றும் அவை கேள்வி எழுப்பி உள்ளன. 

1989இல் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பின் (ஈரானைத் தவிர்த்து) அனைத்து அங்கத்துவ நாடுகளும் ருஷ்டி மீதான இந்த தண்டனையை மறுதலித்திருந்தன. ஆயத்துல்லா கொமேனி 1989 யூன் 3ம் திகதி மரணமடைந்த பின்னரும் ருஷ்டி மீதான தண்டனை மீளப்பெறப்படவில்லை. இஸ்லாமிய நாடுகள் உட்பட்ட பல சர்வதேச நாடுகள் விடுத்த கோரிக்கையை ஈரான் நிராகரித்துவிட்டது. அந்த நாடுகளுக்கு ஈரானின் வழங்கிய பதில் இது. 

“வழங்கப்பட்ட தீர்ப்பை (?) மீளப்பெற முடியாது. தண்டனை விதிக்கப்பட்டவரின் மரணத்தின் மூலமே அது முடிவுக்கு வரும்”. இந்தச் சூழலில் 2012இல் ஜெய்ப்பூரில் இடம்பெற்ற இந்திய இலக்கிய விழாவில் பாதுகாப்புக் காரணங்களால் ருஷ்டியால் கலந்து கொள்ளமுடியவில்லை. 

மறுபக்கத்தில் சாத்தானின் வசனங்களை முதலில் தடை செய்த நாடு இந்தியா என்பதும் குறிப்பிடத்தக்கது. 

2000ம் ஆண்டில் இருந்து தனது அதிக காலத்தை நியூயோர்க்கில் கழித்து வரும் சல்மான் ருஷ்டி, மேடை நிகழ்வொன்றில் பேசிக்கொண்டிருக்கும் போது மேடைக்கு வந்த மர்ம மனிதர் ஒருவரால் பல தடவைகள் குத்தப்பட்டுள்ளார். அவர் ஒரு கண்ணை இழக்கக் கூடும் எனவும், ஈரலில் கத்தி பாய்ந்திருப்பதாகவும் வைத்திய அறிக்கைகள் கூறுகின்றன. 

அரபுலகில் மட்டுமன்றி பொதுவாக மற்றைய உலகப்பரப்பிலும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பெருமளவுக்கு பரவிவருகிறது. இந்த நிலை ஈரானிய புரட்சிக்குப் பின்னரே ஏற்பட்ட ஒன்றாகும். அதற்கு முன்னர் இஸ்லாமியர்கள் தாங்கள் வாழ்கின்ற ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அந்தக் கண்டங்களின் -நாடுகளின் புவியியல் சூழ்நிலைக்கேற்றதும், அங்கு வாழும் பல்மத மக்களின் வாழ்வியல் பண்பாடுகளுடன் ஒருங்கிணைந்த வாழ்வைப் பேணினர். மதத்தால் வேறுபட்டு நின்றபோதும் வாழ்வியல் பொதுப்பண்பு பல விடயங்களில் பாலமாக அமைந்தது. இன்று இந்த பிணைப்பு மெல்ல மெல்ல விடுபட்டுப் போவதையும், சமூகங்கள் மதத்தின் பெயரால் பிளவுபட்டு நிற்பதையும் காணமுடிகிறது.  

இதற்கு தனியே இஸ்லாமியர்களை மட்டும் தனித்து சுட்டுவிரலை நீட்டமுடியாது. மற்றைய மதங்களிலும் கடும்போக்கு பரவி உள்ளது. இன்றைய கிறிஸ்தவ, பௌத்த, யூத அடிப்படைவாதங்களும் இதற்குக் காரணம். யார் பெரும்பான்மையினராக உள்ளனர் என்பதைப் பொறுத்து இந்த ஆதிக்கம் நிர்ணயிக்கப்படுகிறது.  

இந்த ஆதிக்கத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள அல்லது தற்காத்துக்கொள்ள சிறுபான்மை மதப்பிரிவினர் முயற்சிக்கின்றனர். இது அவர்களை பல சந்தர்ப்பங்களில் அடிப்படை மதவாதிகளிடம் சிக்கவைத்துவிடுகிறது. கிறிஸ்த்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிலிப்பைன்ஸ், இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியா, பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மார், சிறிலங்கா, முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாகிஸ்தான், வங்காளதேசம், மற்றும் இஸ்ரேல் என்பன இதற்கு உதாரணமாக உள்ளன. 

மேற்குலகின், குறிப்பாக அமெரிக்காவின் முஸ்லீம் -அரபுதேசங்கள் குறித்த பார்வையும் ஒரு காரணம். பெரும்பாலான முஸ்லீம் நாடுகளை பயங்கரவாதத்தின் விளை நிலங்களாகவே அமெரிக்கா பிரகடனம் செய்துள்ளது. இந்த அமெரிக்க மேலாதிக்க மேற்கு அணுகுமுறையை தம்மீதான அடக்குமுறையாகவே முஸ்லீம் மக்கள் கருதுகின்றனர், உளவியல் ரீதியில் அனுபவிக்கின்றனர். மேற்குலக சுயலாப இரட்டைத்தன்மை கொள்கையானது இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதாகவும் அமைகிறது. 

மொத்தத்தில் இது விடயத்தில் இரு முரண்பட்ட விடயங்கள் மோதுகின்றன. ஒன்று இஸ்லாமிய கருத்தியலை மறுதலிக்கும் மேற்குலகின் தற்கால சிலுவை யுத்தம். இது இஸ்லாமிய உலகில் துரோகமாகிறது. 

மற்றையது ஜனநாயகம் சார்ந்த பேச்சு, எழுத்து, கருத்துச் சுதந்திர ஈர்ப்பு. இந்த மேற்கின் அரசியல் கருத்தியல் சிந்தாந்தமானது மரபுவழியான காலத்திற் கொவ்வாத மத நெறிமுறைகளில் இருந்து விடுபட விளைகிறது. இது மறுக்கப்பட்ட ஜனநாயகத்திற்கான விடுதலையாகிறது.