— ஜஸ்ரின் —
உலக வரலாற்றில் ஆகஸ்ட் மாதம் முக்கியமானதொரு மாதம். 77 ஆண்டுகளுக்கு முன்னர், 1945 ஆகஸ்ட் மாதம் 6ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் அமெரிக்கா மனித வரலாற்றில் முதன் முறையாக அணுவாயுதத்தை யுத்த முனையில் பயன்படுத்தியது. விமானத்திலிருந்து ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது வீசப்பட்ட அணுகுண்டுகள் இரண்டினாலும் மொத்தமாக 140,000 ஜப்பானிய மக்கள் இறந்தனர். இறக்காமல் தப்பிய மக்கள் ஏராளமானோர் கதிர்வீச்சின் விளைவான புற்றுநோய் உட்பட்ட பல ஆரோக்கியச் சவால்களை எதிர்கொண்டனர். இந்த வரலாற்று நிகழ்வின் தொடர்ச்சியாக, உலகம் அணுவாயுதப் போட்டி உட்பட இன்றும் தொடரும் பூகோளஅரசியல் விளைவுகளை எதிர்கொண்டது. இந்த வரலாற்று நிகழ்வை மீட்டுப்பார்க்கிறது கட்டுரை..
அணுசக்தி – மனித வரலாற்றின் திருப்பு முனை
முதன் முறையாக அணுவைப் பிளந்து உருவான சக்தி மனித அழிவிற்குப் பயன்பட்டது கசப்பான ஒரு உண்மை. இந்தக் கசப்பான உண்மையைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், அணுசக்தி மனித வரலாற்றின் ஒரு விஞ்ஞான மைல்கல். அல்பர்ட் ஐன்ஸ்ரைன் சடப்பொருட்களை ஆக்கும் அணுவினுள் இருக்கும் சக்தியை E=MC2 எனும் சமன்பாட்டினால் வெளிப்படுத்தினார். ஆனால், இந்த மாபெரும் சக்தியை அணுவைப் பிளப்பதால் வெளிக்கொண்டு வர முடியும் என்ற யோசனை லியோசிலார்ட் என்ற ஹங்கேரியபௌதீகவியல் விஞ்ஞானிக்குத்தான் முதலில் தோன்றியது. நாசி ஜேர்மனியில் இருந்து தப்பிவந்து லண்டன் நகரில் வசித்து வந்த சிலார்ட், வீதியைக் கடப்பதற்காக ஒரு தெருச் சந்தியில் காத்திருந்தபோதுதான் இப்படியான ஒருயோசனை உதித்ததாகப் பதிவுசெய்திருக்கிறார்.
இயற்கையில் இருக்கும் யுரேனியம் என்ற மூலகத்தின் 1% இற்கும் குறைவான ஒரு உப வகை யுரேனியம் 235 (U235) எனப்படுகிறது. இந்த யுரேனியம் 235 தொடர்ச்சியாக அழிவடைந்து செல்வதால் நியூட்ரோன்களை வெளிவிடும். இவ்வாறு யுரேனிய அழிவினால் வெளியாகும் நியூட்ரோன்கள் அருகிலிருக்கும் ஏனைய யுரேனியம் 235 அணுக்களைத் தாக்குவதால் ஒரு சங்கிலித் தொடர் தாக்கம் (chain reaction) நடக்கும். இத்தகைய சங்கிலித்தொடர் தாக்கம் ஒரு குறிப்பிட்ட மட்டத்தை (Criticality) அடையும்போது பெருமளவிலான சக்தி வெப்பமாகவும், ஒளியாகவும், அணுக்கதிர் வீச்சாகவும் வெளிப்படும். அடிப்படையில், இந்த மூன்று சக்தி வெளிப்பாடுகளையும் கடிவாளமிட்டுப் பயன்படுத்திய ஆயுதம்தான் அணுகுண்டு.
இயற்கையில், மிக ஐதாகப் பரவிக் காணப்படும் யுரேனியம் 235 நியூட்ரோன்களை வெளியேற்றி அழிவடைந்தாலும், போதிய யுரேனியம் 235 இல்லாமையால் அணுகுண்டுக்கு இணையான வெடிப்பை உருவாக்குவதில்லை. எனவே அணுகுண்டை முதலில்உருவாக்கிய விஞ்ஞானிகள் இரு முக்கிய சாதனைகளைச் செய்தார்கள்: முதலாவதாக -இயற்கையில் இருக்கும் 1%இற்கும் குறைவான யுரேனியம் 235 இனை 90% ஆக ஆய்வுகூடத்தில் செறிவாக்கினார்கள். இரண்டாவதாக – இந்த செறிவான யுரேனியம் 235 சுயமாக அணுசக்தி வெடிப்பை ஏற்படுத்திவிடாமல் தடுக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டறிந்தார்கள். சாதனை என்று கருதப்படும் இந்த விஞ்ஞானப் பயணத்தில் நூற்றுக் கணக்கான விஞ்ஞானிகளும் தொழில்நுட்பவியலாளர்களும் பங்களித்தார்கள். இந்த விஞ்ஞானப் பயணத்தின் பெரும் பகுதி அமெரிக்க அரசின் இரகசியத் திட்டமான Manhattan Project (1942- 47) மூலம்தான் நிறைவேறியது.
அமெரிக்காவுக்கு அகதிகளின் பரிசு
நாசி ஜேர்மனியின் பிடியிலிருந்து தப்புவதற்காக, பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் அகதிகளாகத் தஞ்சம் தேடிவந்த பல பௌதீகவியல் விஞ்ஞானிகள் அமெரிக்காவின் முதல் அணுகுண்டைத் தயாரிக்கப் பங்களித்தார்கள். தனது நாச வேலைகளுக்கு ஏற்கனவே விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் பயன்படத்துவதில் ஆர்வம் காட்டிய நாசி ஜேர்மனி, அணுவாயுதத்தையும் தயாரித்துவிடுமோ என்ற அச்சமே இந்த அகதி விஞ்ஞானிகள் அமெரிக்காவிற்கு உதவப் பிரதான காரணமாக இருந்தது. ஐன்ஸ்ரைன், சிலார்ட் போன்ற பல விஞ்ஞானிகள் ஜேர்மனியை விட்டு வெளியேறி விட்டிருந்தாலும், நாசிகளோடு ஒட்டி உறவாடிய பல ஜேர்மன் விஞ்ஞானிகள் அணுவாயுதத் தொழில்நுட்பத்தை ஜேர்மனியின் போராயுதமாக மாற்ற உழைத்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பின்னணியில்தான், சிலார்ட் போன்ற அகதி விஞ்ஞானிகள் சிலர், அமெரிக்காவில் வசித்து வந்த பிரபல பௌதீகவியலாளரான ஐன்ஸ்ரைன் மூலம் அமெரிக்க அரசை அணுகி அணுவாயுதத் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபடும்படி வலியுறுத்தினார்கள்.
1943இல், நியூ மெக்சிகோ மாநிலத்தின் லொஸ் அலமொஸ் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்ட இரகசிய அணுசக்தி ஆய்வுகூடத்தில் அமெரிக்க இராணுவத்தின் மேற்பார்வையில் விஞ்ஞானி றொபர்ட் ஒபன்ஹைமரின் தலைமையில் அமெரிக்காவின் அணுகுண்டுத் தயாரிப்பு வேலைகள் தொடங்கின. ஜூலை 16, 1945 இல் முதல் அணுகுண்டு நியூ மெக்சிகோப் பாலைவனத்தில் பரீட்சிக்கப்பட்டபோது ஐரோப்பாவில் முசோலினியும் ஹிட்லரும் இறந்து நாசி ஜேர்மனியும் தோற்கடிக்கப்பட்டிருந்தது. ஆனால், பசுபிக் பிராந்தியத்தில், கிழக்காசியாவில் ஜப்பான் சரணடைவதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை- எனவே இரண்டாம் உலகப்போர் இன்னும் தொடர்ந்தது.
வளங்களுக்காக ஆக்கிரமிப்புப் போர் செய்த ஜப்பான்
நீண்ட வரலாற்றைக் கொண்ட ஜப்பான் பேரரசின் பேரரசர் நடைமுறையில் அந்த நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பின் ஒரு சிறைக் கைதி. ஜப்பான் சக்கரவர்த்தி சூரியக் கடவுளின் வழி வந்தவராகத் துதிக்கப்பட்டாலும், இம்பீரியல் ஏஜென்சி (Imperial Household Agency) என்ற அமைப்பினைத் தாண்டி எதுவும் பேசவோ செய்யவோ முடியாத நிலை -இது இன்றும் இருக்கும் நிலை.
தனது பெரும்பாலான வளங்களையும் மூலப்பொருட்களையும் வெளியேயிருந்து இறக்குமதி செய்துகொள்ளும் வளங்களற்ற தீவுக்கூட்டமான ஜப்பான், அந்த நிலையை மாற்றுவதற்குத் தேர்ந்துகொண்ட வழி அண்டைநாடுகளை இராணுவம் மூலம் ஆக்கிரமித்துக் கையகப்படுத்தும் வன்முறை வழி. இத்தகைய ஆக்கிரமிப்பை ஜப்பானின் பாதுகாப்புப் படைகள் தென்கிழக்காசியாவில் மூர்க்கமாக இரண்டாம் உலகப் போரின்போது அமல்படுத்தியபோது அமெரிக்கா அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. இது ஜப்பானின் போர் இயந்திரத்தை முடக்கும் என்று எதிர்பார்த்த அமெரிக்காவிற்கு அதிர்ச்சி வைத்தியமாக, 1941 டிசம்பரில் பசுபிக் சமுத்திரத்தின் மத்தியில் இருக்கும் அமெரிக்கப் பிராந்தியமான ஹவாய் தீவுகளில், பேர்ள் துறைமுகத் தளம் மீது ஜப்பான் படைகள் தாக்குதல் நடத்தி, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கப் படையினரைக் கொன்றன. இதன் பின்னர், அமெரிக்கா ஜப்பான் மீதும் போர்பிரகடனம் செய்து பசுபிக்போர் அரங்கில் ஜப்பானுக்கெதிராகக் கால்வைத்தது.
மரணம் வரை போர்
1941 முதல் 1945 வரை, பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்த அமெரிக்கத் தளங்களைப் பின்தளமாகப் பயன்படுத்தி, ஒவ்வொரு தீவாகக் கைப்பற்றிய படியே அமெரிக்கா உட்பட்ட நேச நாட்டுப் படைகள் ஜப்பானை நோக்கி முன்னேறின. 1945 ஆரம்பத்தில் ஜப்பானுக்கு தென் கிழக்காக இருந்த இவோ ஜிமா தீவு அமெரிக்கப் படைகளிடம் வீழந்தபோது, ஜப்பானின் தோல்வி சுவரில் எழுதிய செய்தியாகிவிட்டது. ஆனால், “மக்களும் படைகளும் பூரணமாக அழிந்தாலும் கூட சரணடைவதேயில்லை” என்ற ஜப்பானியப் படைத் தலைமையின் முடிவை சக்கரவர்த்தி ஹிரோஹிற்றோதன் மௌனத்தால் அங்கீகரித்தார்.
1945 யூலையில் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் கூட்டாக பொற்ஸ்டாம் பிரகடனம் மூலம் விடுத்த எச்சரிக்கையில், “சரணடையா விட்டால், ஜப்பான் பேரழிவை எதிர்கொள்ள வேண்டிவரும்” எனக் குறிப்பிடப்பட்டது. இந்தப் பேரழிவு அணுவாயுதப் பாவனை மூலம் ஏற்படுத்தப்படுவதற்கான முடிவை அமெரிக்கத் தலைமை ஏற்கனவே எடுத்திருந்ததா என்பதில் தெளிவில்லை. ஆனால், அமெரிக்கப் படைகளின் பசுபிக் பிராந்தியக் கட்டளைத் தளபதியாக இருந்த ஜெனரல் டக்ளஸ் மக் ஆர்தர், ஐரோப்பாவின் நோர்மண்டியில் நிகழ்ந்த பாரிய தரையிறக்கம் போலவே, ஜப்பானின் பிரதான தீவையும் தரையிறக்கம் மூலம் கைப்பற்றும் ஒரு பாரிய திட்டத்தைச் செயல்படுத்தி வந்தார் என ஆவண ஆதாரங்கள் காட்டுகின்றன. இந்தத் தரையிறக்கத்தில் 1 மில்லியன் வரையான உயிரிழப்புகள் அமெரிக்கப் படைத் தரப்பில் ஏற்படும் என்ற கணிப்பீடு இருந்தபோதிலும், புகழ் விரும்பியான மக் ஆர்தர் தரையிறக்கத் தாக்குதலைத் தயார்படுத்திய படி இருந்திருக்கிறார். ஆனால், “இழக்க எதுவும் இல்லாதவன்தான் மிகவும் ஆபத்தானவன்” என்ற கருத்தைக் கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன், அணு ஆயுதத்தை ஜப்பான் மீது பயன்படுத்தும் முடிவை எடுத்தார்.
ஆகஸ்ட் 6, 1945
ஹிரோஷிமா – ஜப்பான் தலைநகர் ரோக்கியோவிலிருந்து 500 மைல்கள் தொலைவில் இருந்த தொழிற்சாலைகள் நிறைந்த நகரம். ஜப்பானின் போர் இயந்திரத்திற்கு அவசியமான பல இராணுவத் தொழிலகங்கள் அங்கே இருந்தன. சுமார் மூன்றரை இலட்சம் மக்களும் இருந்தனர். 9000 இறாத்தல்கள் நிறை கொண்ட முதல் அணுகுண்டு அமெரிக்காவின் பி- 29 விமானத்திலிருந்து பரசூட் மூலம் இந்த நகரத்தின் மீது தான் இறக்கப்பட்டது. சாதாரண குண்டுகள் போல இலக்குடன் மோதும் போது வெடிக்கும் வகையில் அணுகுண்டுகளை வடிவமைப்பதில்லை – இது விபத்துக்களின் போது அணுவெடிப்புகள் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்குமென்பதால் இந்த ஏற்பாடு. ஹிரோஷிமா மீது பரசூட் மூலம் மிதக்க விடப் பட்ட அணுகுண்டு தரையிலிருந்து 2000 அடிகள் உயரத்தில் ஒரு சிறு வெடிப்பு (trigger) மூலம் இரு யுரேனியம் 235 திணிவுகள் ஒன்றாக இணைக்கப்பட்டன. இப்படி ஒன்றாக இணைந்த யுரேனியம் 235 திணிவு சங்கிலித் தொடர்த் தாக்கத்திற்கு உரிய நிலையை (criticality) உருவாக்கியதால் பெரும் வெடிப்புடன் ஒளி- வெப்பம்-கதிர்வீச்சு என்பன வெளிப்பட்டன. ஆய்வு நோக்கங்களுக்காக அணுகுண்டுடன் சேர்த்தே வீசப்பட்ட உபகரணங்களின் கணிப்பீட்டின்படி, குறைந்தது 12,000 தொன் நிறை கொண்ட ரி.என்.ரி வெடி மருந்துக்குச் சமனான வெடிப்பு இந்த ஹிரோஷிமா அணுகுண்டினால் சில மில்லி செக்கன்களின் நிகழ்ந்ததாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
Little Boy எனப் பெயரிடப்பட்ட இந்த முதல் அணுகுண்டைபோல் ரிப்பெற்ஸ் என்ற விமானி தனது பி- 29 விமானத்தில் காவிச் சென்று ஒரு லட்சம் வரையான ஜப்பானிய மக்களைக் கொன்றிருக்கிறார். தனது அணுகுண்டு தாங்கிய பி 29 விமானத்திற்கு அவர் இட்டபெயர் “எனொலா கே” – இது அவரின் தாயாருடைய பெயர். ஆனால், இது பற்றி அந்த விமானிக்கு எந்தக் குற்றவுணர்வும் ஏற்பட்டிருக்கவில்லை. பின்னர் இந்த விமானியை நேரில் சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் இந்த மனிதப் பேரழிவிற்கான பொறுப்புதான் மட்டுமே என்று கூறியதாக அறியக் கிடைக்கிறது.
ஆகஸ்ட் 9, 1945
முதலாவது அணுகுண்டு ஜப்பானிடமிருந்து அமெரிக்கா எதிர்பார்த்த துலங்கலைத் தரவில்லை – சரணடைதல் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இரண்டாவது அணுகுண்டை மூன்று நாட்கள் கழித்து கொகுரா (Kokura) என்ற இன்னொரு தொழில்துறை செறிந்த ஜப்பானிய நகரம் மீது வீச அமெரிக்காவின் இன்னொரு பி 29 விமானம் அனுப்பப்படுகிறது. நகரின் ஒரு குறிப்பிட்ட நில அடையாளத்தின் மீது Fat Boy என்ற பெயர் கொண்ட (முன்னையதை விட அதிக வெடிப்பு சக்தி கொண்ட) அணுகுண்டை பரசூட் மூலம் இறக்க வேண்டுமென்பதே திட்டம். கொகுரா நகர மக்களின் அதிர்ஷ்டம், முகில் மூட்டங்கள் இலக்கினை மறைத்ததால், இந்த இரண்டாவது குண்டு நாகசாகி நகரம் மீது வீசப்படுகிறது. இந்த புழூட்டோனியம் அணுகுண்டின் சக்தி வாய்ந்த வெடிப்பினால் 40,000 பேர் வரை உடனடியாக உயிரிழந்தார்கள். அணுகுண்டு முன்னையதைவிட சக்தி கூடியதாக இருந்த போதும், ஒரு பக்கத்தில் மலைகளால் சூழப்பட்டிந்ததால், நாகசாகியின் உயிர்ச் சேதம் ஹிரோஷிமாவினதை விடக்குறைவாக இருந்தது.
ஜப்பான் சரணடைந்தது
ஆகஸ்ட் 15 (1945)இல் ஜப்பானிய சக்கரவர்த்தி ஹிரோஹிற்றோ ஜப்பான் நிபந்தனையின்றிச் சரணடைவதாக நாட்டு மக்களுக்கு வானொலி உரை மூலம் அறிவித்தார். செப்ரெம்பர் மாதம் ஜெனரல் மக் ஆர்தரிடம் உத்தியோக பூர்வமாக ரோக்கியோவில் ஜப்பான் சரணடைந்தது. ஐரோப்பாவில் நியூரம்பேர்க் வழக்கு மூலம் நாசி ஜேர்மனியின் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டது போல, ஜப்பானின் பாதுகாப்புக் கட்டமைப்பின் பலர் ரோக்கியோ யுத்தக் குற்ற விசாரணை ஆணையத்தால் (Tokyo War Crimes Tribunal) தண்டிக்கப்பட்டார்கள்.
ஜப்பானிய சக்கரவர்த்தி ஹிரோஹிற்றோவை யுத்தக் குற்ற விசாரணைகளோடு தொடர்புபடுத்த அமெரிக்கா விரும்பவோ முயற்சிக்கவோ இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான ஜப்பானிய முடியாட்சி, ஜப்பான் ஒரு தேசமாக மீண்டும் துளிர்க்க அவசியமென அமெரிக்கத் தரப்பினர் நம்பியதே இதன் காரணம் எனக் கருதப்படுகிறது. தற்கால ஜப்பானில் கூட, இரண்டாம் உலகப் போரின்போது தென் கிழக்காசியாவில் ஜப்பானிய படைகள் செய்த போர்க்குற்றங்களை ஏற்றுக்கொள்ளாத வலது சாரிகள் அரசிலும், சமூகத்திலும் இருக்கிறார்கள். சில போர்க்குற்றவாளிகள் ஜப்பானிய மரபின் படி இன்றும் நினைவாலயங்களில் விம்பங்களாக வீற்றிருக்கிறார்கள்.
பூகோள மாற்றங்கள்
இரண்டு உலகப் போர்களிலும் ஆரம்பத்தில் இராணுவ ரீதியில் தலையிடாமல் விலகியிருந்த அமெரிக்கா இறுதியில் அந்த இரு போர்களினதும் முடிவினைத் தீர்மானிக்கும் பிரதான காரணியாகத் திகழ்ந்தது. இந்த இரண்டாம் உலகப் போரில் அதியுச்ச ஆயுதமான அணுவாயுதத்தைப் பயனபடுத்தியதால், அமெரிக்காவிற்கு சில நன்மைகளும் தீமைகளும் சேர்ந்தே கிடைத்தன. இராணுவ மேலாண்மை மூலம் உலகப் பொலிஸ்காரனாகவும், நேட்டோ என்ற இராணுவக் கூட்டமைப்பின் பிரதான தலைமை நாடாகவும் வரக் கிடைத்தமை நன்மைகள். மறுபக்கம், இலட்சக் கணக்கான போர்வீரர்களல்லாத ஜப்பானிய மக்களை சில வினாடிகளில் கொன்று குவித்த மனிதாபிமானக் கறை, இதன் காரணமாக உலகில் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஏனைய மனிதப் படுகொலைகளைக் கண்டிக்கும் தகுதியை இழந்தமை என்பன அமெரிக்காவிற்கு ஏற்பட்ட தீமைகள். ஆனால், ஜப்பானும் அமெரிக்காவும் இந்தப் பேரழிவைக் கடந்து சுமூகமான உறவுடன் முன்னகர்ந்து விட்டன.
1945 இற்குப் பின்னரான அடுத்த இரு தசாப்தங்களில் உலகின் அணுவாயுதப் போராயுதங்களின் எண்ணிக்கையும், சக்தியும், இவ்வாயுதங்களைக் காவிச் செல்லும் ஏவுகணைகளின் பரிசோதனைகளும் அதிகரித்தன. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், முழு உலகமும் அணுவாயுதங்களால் தோல்வியையே சந்தித்தது என்பதே வரலாற்று உண்மை.
உசாத்துணை ஆதாரங்கள்:
- Einstein: His Life and Universe by Walter Isaacson (2008).
- Killing the Rising Sun: How America Vanquished World War II Japan, by Bill O’ Reilly & Martin Dugard (2016).
- The Los Alamos Laboratory –archives: “1663” Online Publications.
.