ஆட்ட நாயகன் –ரணிலின் காய்கள் – ரணிலின் வழி, ஜே. ஆரின் வழி 

ஆட்ட நாயகன் –ரணிலின் காய்கள் – ரணிலின் வழி, ஜே. ஆரின் வழி 

— கருணாகரன் — 

இலங்கை அரசியல் களம் கொந்தளித்துக் கொண்டேயிருக்கிறது. எதிர்பாராத திருப்பங்கள், அதிரடிகள், மாற்றங்கள், சறுக்கல்கள், எழுச்சிகள் என ஒரே அமர்க்களக் காட்சிகள். அடுத்து என்ன நடக்கும் என்ற பதிலற்ற கேள்விகள் எல்லாப் பக்கத்திலுமிருந்தும் எழுந்து கொண்டிருக்கிறது. 

முன்பெல்லாம் அரசியல் போட்டிகள், மாற்றங்கள், திருப்பங்கள் நடந்தாலும் அதற்கு அப்பால் வெகு தொலைவில் சனங்களின் வாழ்க்கை அதிக சேதாரமில்லாமல் இயல்பு நிலையில் இருக்கும். இப்பொழுது சனங்களின் வாழ்க்கைதான் அதிகமாகக் கொதித்துக் கொண்டும் கொந்தளித்துக் கொண்டுமிருக்கிறது. அதன் மீதுதானே பொருளாதாரக் குண்டு விழுந்து வெடித்துள்ளது. 

இந்தப் பொருளாதாரக் குண்டு வெடிப்பினால் (Economic explosion) மண்ணெண்ணெய்க்கும் பெற்றோலுக்கும் எரிவாயுவுக்குமாக நாட்கணக்கில் தெருவில் நிற்க வேண்டியிருக்கிறது. போதாக்குறைக்கு எந்த நேரம் மின்வெட்டு வரும் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்க வேண்டும். இது போதாதென்று அடுத்த ஆறு மாதங்களுக்குக் கடினமான காலமாக இருக்கும். விரும்பியோ விரும்பாமலோ இதைக் கடந்துதானாக வேண்டும் என்று மத்திய வங்கி ஆளுநரும் ஜனாதிபதியும் எச்சரித்திருக்கின்றனர். அப்படியென்றால் அரிசி, பருப்பு, சீனிக்கும் அடுத்த க்யூ முளைக்கப்போகிறது! இப்படி நாடிருக்கும்போது உச்சி குளிருமா? உள்ளம் கொதிக்குமா?  

இந்தக் கொதிப்பும் கொந்தளிப்புமே அரசியற் களத்தையும் கொந்தளிக்களிக்க வைத்தது. 

சனங்களின் கொதிப்பைச் சமாளிக்க முடியாமல் திணறிய ராஜபக்ஸவினரைக் காப்பாற்ற ஓடோடி வந்தான் இந்த நவீன ராதா கிருஸ்ணன் மன்னிக்கவும் ரணில் கிருஸ்ணன். அப்படி வந்தவர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்தினார். ஒரு மாங்காயை அவர் தனக்கென எடுத்துக்கொண்டார். அதுதான் அவருடைய ஜனாதிபதி பதவியும் ஆட்சித் தலைவர் என்ற அதிகாரமும். 

அடுத்த மாங்காய், ராஜபக்ஸவினரைப் பாதுகாத்து ஓரத்தில் வைத்திருப்பதாகும். ராஜபக்ஸவினரைப் பாதுகாப்பதென்பது ஒரு வகையில் ரணில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதுதான். அவர்களைப் பாதுகாக்கவில்லை என்றால் ரணிலுக்கும் பாதுகாப்பில்லை. ஏனென்றால் தலைமைப் பொறுப்புகள், பதவிகள் என்ற வெளி அரங்கிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தாலும் பாராளுமன்றத்திலும் அரசியல் தீர்மானங்களிலும் இன்னும் ராஜபக்ஸவினரின் கைகளே ஓங்கியுள்ளன. ‘பொதுஜன பெரமுன’ என்ற ராஜபக்ஸவினரின் கட்சியே பாராளுமன்றத்தில் செல்வாக்கையும் பலத்தையும் கொண்டுள்ளது. இப்படியிருக்கும் வரை அதை ரணிலும் அனுசரித்தேயாக வேண்டும். ரணிலை அனுசரித்துப் போனால்தான் ராஜபக்ஸவினருடைய தலைகளும் தப்பும். ஆக மொத்தத்தில் நடந்து கொண்டிருப்பது ஆளை ஆள் பாதுகாத்துக் கொள்ளும் அரசியலாட்டமாகும். 

இதற்குப் பின்னணியில் வெளிச்சக்திகளின் கைகளே வலுவாக உள்ளன. இலங்கை அரசியற் சீரழிவும் தலைமைகளின் தவறுகளும் நாட்டின் இறைமையை இல்லாதொழித்துள்ளன. அந்த வெளிச்சக்திகளே இப்படியானதொரு நிலைமையையும் உருவாக்கியுள்ளன. 

இதுதான் இலங்கை அரசியலில் தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிறது. வழமையான அதிகாரத் தரப்புகளைத் தவிர, புதிய சக்திகள் எதுவும் அதிகாரத்துக்கு வரக் கூடாது. மறந்தும் மக்களாட்சியோ மக்களுக்கான ஆட்சியோ நடந்து விடக் கூடாது. மக்களை வைத்துப் பிழைக்கும் கொம்பனிகளின் ஆட்சியே நீடிக்க வேண்டும் என்பதாக. 

இதற்காக உள்ளுரின் அதிகாரச் சக்திகளும் வெளியாதிக்கத்தரப்புகளும் ஒரே புள்ளியில் இணைகின்றன. 2019இல் சிறிலங்கா சுதந்திரக் கட்சி + ஐக்கிய தேசியக் கட்சி = கூட்டாட்சி (நல்லாட்சி) நடந்ததும் இந்த அடிப்படையில்தான். இதற்காக இந்த அதிகாரத் தரப்புகள் எல்லாமே தமக்குள் சமரசங்களைச் செய்து கொள்கின்றன. இப்படி ஒன்றை ஒன்று தாங்கிப் பிடிக்கின்ற, தாங்கிப் பிடிக்க வேண்டிய, அரசியல் யதார்த்தத்தில்தான் இலங்கை நசிந்து, நலிந்து கொண்டிருக்கிறது. 

‘நாடு நசிகிறதோ நலிகிறதோ எப்படியாவது போகட்டும். நாம் இதற்குள் நம்முடைய அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வோம்’ என்றிருக்கும் ரணில் – ராஜபக்ஸவினரின் கூட்டு அரசியலில் இப்பொழுது ஆட்ட நாயகனாக ரணிலே இருக்கிறார். இதுவரையிலும் ராஜபக்ஸவினரின் ஆட்டக்களமாக இருந்த அரசியல் அரங்கை, அப்படியே அலாக்காகத் தூக்கித் தன்னுடைய கக்கத்தில் வைத்திருக்கிறார் ரணில். 

ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகியதைப் போல திடீர் அரசியல் அதிர்ஸ்டக்காரன் ஆகியிருக்கிறார் விக்கிரமசிங்க. இப்பொழுது அவர் “சிங்கமொன்று புறப்பட்டது..” என்று ஹாயாகப் பாடிக் கொண்டு தனக்கு எதிரேயிருக்கும் ஒவ்வொரு காய்களையும் ‘ஹாயாக’ வெட்டிக் கொண்டிருக்கிறார். இதில் யாருடைய தலைகள் உருளும்? யாருடைய தலைகள் தப்பும் என்று விக்கிரமாண்டேஸ்வரனுக்குத்தான் வெளிச்சம். 

ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் முதலில் செய்த களையெடுப்பு, காலிமுகத்திடல் போராட்டக்காரரை – தான் ஜனாதிபதியாகுவதற்கான வாய்ப்புகளை மறைமுகமாக உருவாக்கிக் கொடுத்த புண்ணியவான்களை – தேடிப் பிடித்துச் சிறையில் தள்ளிக் கொண்டிருப்பதேயாகும். அடுத்த கட்டமாக அந்தப் போராட்டக்களத்தையே –காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த Gota go Gama கிராமத்தையே – துடைத்து அழித்து விட்டார். ‘வேண்டுமென்றால், அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் இடத்தில் போய்க் குந்தியிருந்து கொண்டு போராடுங்கள்’ என்று பெருமனதோடு சொல்லியிருக்கிறார் பெருமானார். 

“இதெல்லாம் தப்பு. போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை. அவர்களுடைய போராட்டத்துக்கு இடமளிக்க வேண்டும்” என்று சொன்ன அமெரிக்கத் தூதரைக் கூப்பிட்டு, “உங்களுடைய வெள்ளை மாளிகைக்கு முன்னால் இப்படி யாராவது நின்று சத்தம் போட்டால் அவர்களுக்கு கேக்கும் ஐஸ்கிறீமுமா கொடுப்பீர்கள்?” என்று கேட்டிருக்கிறார். (இதொரு அரசியல் நாடகம் என்பது பிந்திய நாட்களில் நடந்த காட்சிகள் நிரூபிக்கின்றன. இப்பொழுது அமெரிக்கத் தூதுவரும் ஜனாதிபதியும் மிக அந்நியோன்னியமாக உரையாடிக் கொண்டிருக்கின்றனர்). 

பிரதமராக இருந்தபோது “போராடுவது மக்களின் உரிமை. எவரும் தாராளமாகப் போராடலாம்” என்று ஒரு மாதத்துக்கு முன்பு திருவாய் மலர்ந்த இந்த லிபரல் ஜனநாயகவாதி, ஜனாதிபதியானவுடன் ஜனநாயக வழிப்போராடிகளுக்குச் சிறைக்கதவுகளை அல்லவா திறந்து விட்டிருக்கிறார்! மட்டுமல்ல, அநாமதேயக் கொலைகள் வேறு நடக்கின்றன –நடத்தப்படுகின்றன. 

கடந்த ஒரு மாதத்துள் மட்டும் 21 கொலைகள் நடந்துள்ளன என்று பொலிஸ் விவரங்கள் சொல்கின்றன. இந்தக் கொலைகளை நடத்தியவர்களில் யாருமே கைது செய்யப்படவும் இல்லை. அடையாளம் காணப்படவும் இல்லை. எல்லாமே இனந்தெரியாதவர்களால் நடத்தப்பட்டவை என்பதுதான் சிக்கலுக்குரியது. இப்படியான கொலைகள்தான் முன்பும் நடந்தன – நடத்தப்பட்டன. இது போராடுவோருக்கு எச்சரிக்கை விடுக்கும் அரச வழிமுறையாகும். இனி வரும் காலத்தில் இது பெரிய விபரீதங்களையெல்லாம் உண்டாக்கப் போகிறது என்று தெரிகிறது. 

இதேவேளை ‘அரகலய’ போராட்டக்காரர்களை 06.08.2022இல் அழைத்து நல்லுபதேசத்தை வழங்கியிருக்கிறார் விக்கிரமாண்டேஸ்வரப் பெருமான். இந்தச் சந்திப்பில் “இளைய தலைமுறையினரின் எண்ணங்களைப் பரிசீலிக்கிறோம். எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு அரசியலில் உரிய இடமளிக்கப்படும் என்றிருக்கிறார். இது அரகலயவினரின் கோபத்தைத் தணிப்பதற்கான உத்தி. இந்த உத்தியில் அவர் கணிசமான அளவுக்கு வெற்றியும் அடைந்துள்ளன. இதற்கொரு சிறந்த உதாரணம், ஓகஸ்ற் 09இல் அடுத்த எழுச்சி நடக்கும் என்றிருந்த நிலையை அப்படியே உறங்கு நிலைக்குத் தள்ளி விட்டார் விக்கிரமசிங்க. 

இதொன்றும் புதியதல்ல. 1977இல் மாமனார் ஜே.ஆர். ஜெயவர்த்தனா செய்தவைதான். அந்த வழியை மருமகன் ரணில் வெற்றிகரமாகத் தொடர்கிறார். அவ்வளவுதான். 

ஜே.ஆர். 1977இல் ஆட்சியதிகாரத்துக்கு வந்தவுடன் செய்தது ஜனநாயக அரங்கை முடியதேயாகும். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தையும் அவருடைய அணியையும் நாட்டை விட்டுக் கலைத்தார். சிறிமா பண்டாரநாயக்கவின் குடியுரிமையைப் பறித்தார். ஜனநாயக வழியில் போராடிய தமிழ் இளைஞர்களை வகை தொகையின்றிக் கைது செய்து சிறையிலடைத்தார். பிறகு சிறைச்சாலைக் கலவரத்தை உருவாக்கி அவர்களைக் கொன்றார். ஊர்களை படைகளைக் கொண்டு எரித்தார். படை நடவடிக்கைகளின் மூலம் படுகொலை அரங்குகளைத் திறந்தார். ஊடக சுதந்திரத்தை தணிக்கையின் மூலம் அச்சுறுத்தினார். அவசரகாலச்சட்டம், ஊரடங்குச் சட்டம், பயங்கரவாதச் சட்டம், புலித்தடைச் சட்டம் எனப் பல சட்டப் பூட்டுகளால் சமூகத்தை முடக்கினார். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி என்றால் அடக்குமுறை அதிகாரத்தை உச்சமாகப் பயன்படுத்துவதே. இதன் ஒரு அம்சமாக அமைச்சர்களின் ராஜினாமாக் கடிதத்தை வாங்கித் தன்னுடைய சட்டைப் பைக்குள் வைத்திருப்பது என்பது வரையில் எதையும் எப்படியும் செய்ய  முடியும் என்று வில்லங்கமான காரியங்களையெல்லாம் செய்து அந்தப் பதவியை –அதிகாரத்தைப் பரிசோதித்துப் பார்த்தார். 

இப்பொழுது ரணில் விக்கிரமசிங்கவும் இதே வழியில், ஜே.ஆரைப் போலச் சில பரிசோதனைகளைச் செய்ய முயற்சிக்கிறார் என்றே தெரிகிறது. தன்னுடைய அதிகாரத்துக்கு முன்னே எதிர்த்தரப்பு என்று எதுவுமே இருக்கக் கூடாது என்ற விதமாகச் சிங்க செயற்படுகிறார். இதற்காக அவர் வகுத்திருக்கும் பத்மவியூகமே சர்வகட்சி ஆட்சியாகும். இந்தப் பொறியில் யாரும் சிக்காதிருக்க முடியாது. அப்படிச் சிக்காதவர்கள் மக்கள் விரோதிகள். மக்கள் துயர் தீர்ப்பதில் அக்கறையில்லாதவர் என்றொரு படத்தைக் காட்டுவதற்கு ரணிலுக்கு வாய்ப்பாகி விட்டது. பொருளாதார நெருக்கடி என்ற தேசியச் சிக்கலைத் தீர்ப்பதற்கு வராதவர்கள், ஒத்துழைக்காதவர்கள் எல்லாம் கறுப்பாடுகள் என்று மக்களுக்குக் காட்டுவதற்கு ரணிலுக்கு  வாய்ப்புக் கிட்டியுள்ளது. 

இதனால்தான் சஜித் பிரேமதாசா தொடக்கம் சம்மந்தன் வரையில் விருப்பமில்லாமலே கொடி காட்ட வேண்டி வந்திருக்கிறது. (இவர்களுடைய களுத்தில் நுகத்தடியை பிராந்திய சக்தியும் மேற்குலகும் ஏற்றி வைத்துள்ளன) ஏற்கனவே தங்கள் விருப்பத்துக்கு அப்பால் நின்றே ரணிலை ஆதரித்து, அனுசரித்துப் போக வேண்டி வந்தது ராஜபக்ஸக்களுக்கு. இப்பொழுது அந்த நிலை வந்திருக்கிறது மற்ற ஆட்களுக்கும். ஆகவே கொஞ்சக் காலத்துக்கு இலங்கையில் எதிர்க்கட்சியோ எதிரணிகளோ இல்லை என்ற நிலையே நீடிக்கப்போகிறது. ஜே.ஆர். பெற்ற வெற்றியைப் போல ரணிலும் இதில் வெற்றியடைய முயற்சிக்கிறார். அதாவது எதிர்த்தரப்பு இல்லாத ஆட்சியொன்றை ரணில் நிறுவப்போகிறார். 

ஆக மொத்தத்தில் எல்லோராலும் தோற்கடிக்கப்பட்ட விக்கிரமசிங்க, இப்பொழுது எல்லோரையும் தோற்கடித்துக் கொண்டிருக்கிறார் என்றே கூற வேண்டும். இதுதான் தலைகீழ் மாற்றம் என்று சொல்வது. இலங்கையில் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம், பிரச்சினைகளில் மாற்றம் (தீர்வு) எல்லாம் வந்திருக்கிறதோ இல்லையோ, தலைகீழ் மாற்றம் மட்டும் தப்பாமல் நிகழ்ந்திருக்கிறது. அப்படியான ஒன்றுதான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி விரட்டப்பட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஜனாதிபதியாக்கப்பட்டிருக்கிறார். (அரசியலமைப்பின்படிதான் தான் தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன் என்று ரணில் சொன்னாலும் நிஜ உண்மை என்னவென்று அனைவருக்கும் தெரியும்). 

வாய்ப்புகளை தமக்கென உருவாக்கி அவற்றைப் பயன்படுத்துவது ஒரு வகையான திறமை. அதேவேளை அபூர்வமாகக் கிடைக்கின்ற வாய்ப்புகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அவற்றைச் சரியாக பயன்படுத்துவது இன்னொரு வகையான திறன். நெருக்கடிக்கு முகம் கொடுப்பது, அவற்றைத் திறமையாகக் கையாள்வது, அவற்றின் ஊடே வெற்றி இலக்கைச் சென்றடைவது இன்னொரு திறமை. 

மிகச் சிலரே தமக்கு வாய்ப்பான சூழலை உருவாக்குகின்றனர். அவர்களே பெரிய வெற்றியாளர்களாக, பெருந்தலைவர்களாக மாறுகின்றனர். சிலர் கிடைக்கின்ற வாய்ப்பைப் புத்திபூர்வமாகப் பயன்படுத்தி வெற்றியடைகின்றனர். பலரும் இவை இரண்டையும் தவற விடுகின்றனர். 

இப்பொழுது ரணில் விக்கிரமசிங்க இந்த இரண்டாவது, மூன்றாவது வழிமுறைகளுக்குச் சிறந்த உதாரணமாக மாறியுள்ளார். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் அரங்கில் வாய்ப்புகள் அனைத்தையும் இழந்த –தோற்றுப்போன –ஒருவராகவே விக்கிரமசிங்க இருந்தார். அவருடைய ஐ.தே.க இரண்டாக உடைந்தது. ஒரு கட்டத்தில் கட்சித் தலைவர் பதவியைக் கூட இழக்கக் கூடிய நிலை வந்தது. மிஞ்சிய கட்சியில் ஒருவர் கூட வெற்றியடையவில்லை. “ஐம்பது வருட கால அரசியல் அனுபவங்களும் தலைமைத்துவ வாய்ப்புகளும் எந்த வகையிலும் அவருக்குக் கை கொடுக்கவில்லை. ரணிலின் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது. அவர் ஒரு தோல்வியின் நாயகன்” என்ற விமர்சனங்கள் ரணிலை நோக்கி வைக்கப்பட்டன. 

இன்று இவை எல்லாவற்றுக்குமான பதிலை ரணில் அளித்துக் கொண்டிருக்கிறார். சொல்லில் அல்ல, தன்னுடைய வெற்றிகரமான செயல்களின் மூலமாக. சிக்ஸருக்கு மேல் சிக்ஸராக. 

ஆம், ரணில் இப்பொழுது அதிசயமான வெற்றியாளரே. இந்த வெற்றியை அவர் இரண்டு வகையில் அறுவடை செய்ய முயற்சிக்கிறார். ஒன்று, மற்றவர்களின் பலவீனத்தைத் தன்னுடைய பலமாக மாற்றுவதன் மூலம். இரண்டாவது, தன்னுடைய மிக நுட்பமான அரசியல் ராஜதந்திர நடடிவடிக்கைகளின் மூலமாகவும். 

ஆனால், தமிழ் அரசியல் தலைமைகள் தமக்குக் கிடைக்கின்ற வெற்றிக்கான சந்தர்ப்பங்களை எல்லாம் கை நழுவ விட்டன என்பதுடன் வீண் பிடிவாதங்களாலும் புத்தியற்ற தன்மையினாலும் நாசமாக்கின. இன்னும் இதிலிருந்து மீள முடியாத நிலையிலேயே உள்ளன.