— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டதோர் அரசியல் கூட்டணி (Political Alliance) ஆகும். ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முன்னாள் தமிழர் விடுதலை கூட்டணி, முன்னாள் ஈபிஆர்எல்எப், ரெலோ, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்திருந்தன. பின்னர் வீ.ஆனந்தசங்கரியின் செல்வாக்கிலிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியேற்றப்பட்டு மாவை சேனாதிராசாவைச் செயலாளராகக் கொண்ட தமிழரசுக் கட்சி இட்டு நிரப்பப்பட்டது.
2004 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் (அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈ பி ஆர் எல் எப் மற்றும் ரெலோ ஆகிய நான்கு கட்சிகளும் பங்காளிக் கட்சிகளாகவிருந்தன) வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வடக்கு கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் பின்வரும் கேள்விகளைப் பகிரங்கமாக இப்பத்தி முன்வைக்கிறது.
* தமிழர்களைப் பேரழிவுக்குள்ளாக்கிய 2009 முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின்போது யுத்தத்தில் சம்பந்தப்படாத அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற யுத்த நிறுத்தம் கோரி ஒரு சிறு துரும்பைத்தானும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூக்கிப் போடவில்லையே ஏன்? அப்போது 22 ‘எம்.பி.’ க்களை வைத்து நீங்கள் சாதித்தது என்ன?
* 2009 மே 18இல் முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்த பின்பு 2010ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களில் ஒருவராகப் போட்டியிட்ட, முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தை இராணுவத் தலைமையேற்று நடாத்திய இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை தமிழர்கள் ஆதரிக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்தமைக்குக் காரணமென்ன?
* 2009 மே 18 முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்த பின்பு 2010 இல்நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சி)- இத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வெளியேற்றப்பட்டிருந்தது – வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில், இறுதி யுத்தத்தின்போது இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்த பாரபட்சமற்ற விசாரணையைக் கோரும் (குறைந்தபட்சம் உள்ளூர் விசாரணைப் பொறிமுறையையாவது கோரும்) ஒரு வசனம் கூட இடம் பெறவில்லையே? அது ஏன்?
* 2001 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானமை குறித்து வெளியிடப்பெற்ற 22.10.2001 திகதியிட்ட ஊடக அறிக்கையில் முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாகக் கையெழுத்திட்ட நீங்கள், ஏன் ஒரு கட்டத்தில் யுத்தம் முடிந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கவில்லையென்று முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்கும் பொய்யொன்றைச் சொன்னீர்கள்?
* 2009 முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்புகளிலொன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்; மற்றது இலங்கைப் பாதுகாப்புப் படைகள். யுத்தத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் என இரு தரப்புமே மனித உரிமை மீறல்கள்- போர்க் குற்றங்களை இழைத்திருக்கின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்டத்தில் கூறியிருந்தது. அப்படியானால் இவற்றிற்கு பொறுப்புக் கூற வேண்டிய கடமைப்பாடு அன்று யுத்தத்திற்கு அரச ஆணை வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது போல, யுத்தத்தில் ஈடுபட்ட மறுதரப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை,
“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை தமிழ் மக்களின் தேசிய தலைமையாகவும் விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களின் உண்மையான ஏகப்பிரதிநிதிகளாகவும் ஏற்று, தமிழ் தேசிய இனத்தின் சார்பிலான விடுதலைப் புலிகளின் போராட்ட இலட்சியத்திற்கு நேர்மையாகவும் உறுதியாகவும் முழு ஒத்துழைப்பையும் நல்குவோம்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2004 பொதுத் தேர்தல் அறிக்கையில் (பக்கம் 10) கூறி மக்கள் ஆணை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பொறுப்புக்கூறும் தார்மீகக் கடமைப்பாடு உண்டல்லவா? அதனை இதுவரை நிறைவேற்றத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகிய நீங்கள் எடுத்த நேர்மையான நடவடிக்கைகள் என்ன?
* 2010 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் (தமிழரசு கட்சிக்குக்) கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தைத் தமிழ்த் தேசிய அரசியலில் முன்னம் ஒருபோதும் கேள்விப்பட்டிராத சட்டத்தரணி சுமந்திரனுக்குத் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் வழங்கியதன் மூலம் இதுவரை கடந்த 12 ஆண்டு காலமாகத் தமிழ் மக்களுக்குச் சுமந்திரனால் கிடைத்த சமூக பொருளாதார அரசியல் நன்மைகள் யாவை?
* 2013இல் நடைபெற்ற வட மாகாண சபைக்கான மாகாண சபைத் தேர்தலின்போது, முன்னம் ஒருபோதும் தமிழ்த் தேசிய அரசியலுடன் சம்பந்தப்படாமல் தனது நீதித்துறை சார்ந்த அரச சேவையில் தானும் தன் பாடுமாய்க் காலம் தள்ளிய சி.வி.விக்னேஸ்வரனை அவர் ஓய்வு பெற்ற நீதியரசர் (சட்டத்தரணி) என்ற ஒரே காரணத்திற்காக அவரைத் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் இழுத்துவந்து முதலமைச்சர் வேட்பாளராக ஆக்கி வெற்றியடையச் செய்ததன் மூலம் இதுவரை கடந்த 9 ஆண்டுகாலமாக சி.வி.விக்னேஸ்வரனால் தமிழ் மக்களுக்குக் கிடைத்த சமூக பொருளாதார அரசியல் நன்மைகள் என்ன?
* 2015 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவைத் தமிழ் மக்கள் ஆதரிக்கச் செய்து அவரை வெற்றியீட்டச் செய்து ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன + பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சியுடன் சுமார் நான்கரை ஆண்டுகள் (2015-2019) தேனிலவு கொண்டாடியதினூடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த சமூக பொருளாதார அரசியல் நன்மைகள் என்ன?
* 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்குத் தமிழர்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற்றுக் கொடுத்ததன் மூலம் (அவர் வெல்லவில்லை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த சமூக பொருளாதார அரசியல் நன்மைகள் யாவை?
* இறுதியாக, 14.07.2022 அன்று கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்குப் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் அரசியலமைப்பு விதிகளுக்கமையப் பாராளுமன்றத்தில் 20.07.2022 அன்று நடைபெற்ற வேளை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்மொழியப்பட்டுப் பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி எல் பீரிஸினால் வழிமொழியப்பட்ட பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த டலஸ் அழகப்பெருமவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டுமென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்தின் மூலம் தமிழ் மக்களடையவிருந்த சமூக பொருளாதார அரசியல் நன்மைகள் யாவை?
* முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே 12.05.2022 அன்று ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமித்த போது (முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 09.05.2022 அன்று பதவி விலகியதையடுத்து) அதனை வரவேற்று, ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் மக்களின் பிரச்சனைகளைக் கையாள்வது இலகுவானது என நம்பிக்கை வெளியிட்ட நீங்கள் 20.07.2022 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற புதிய ஜனாதிபதியை (முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 14.05.2022 அன்று பதவி விலகிய வெற்றிடத்திற்கு) தெரிவு செய்யும் விடயத்தில் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்துப் போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்கத் தீர்மானித்தது ஏன்? மிகக் குறுகிய காலத்திலேயே உங்கள் நிலைப்பாட்டை இவ்வாறு முரண் நிலைக்குக் கொண்டு சென்ற காரணி என்ன? பிரதமராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க தங்கள் நம்பிக்கைக்குரியவராகவும் அதனிலும் கூடிய அதிகாரம் படைத்த ஜனாதிபதியாக வரவுள்ள ரணில் விக்கிரமசிங்க தங்களுக்கு நம்பிக்கையற்றவராகவும் திடீரென மாறிய மர்மம் என்ன?
* சீனாவின் இராணுவ ஆய்வுக்கப்பல் (யுவான்வாங்-5 கப்பல்) இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நோக்கி (ஆகஸ்ட் 11இல் அது அம்பாந்தோட்டையில் நங்கூரமிடுமென எதிர்பார்க்கப்படுகிறது) வருவது குறித்து கூட்டமைப்பு விடுத்துள்ள உத்தியோகபூர்வ ‘டுவிட்டர்’ பக்கப் பதிவில்.
“சீனக் கப்பல் எதிர்வரும் 11ஆம் தேதி அம்பாந்தோட்டத் துறைமுகத்திற்கு வருகை தர இருப்பது பிராந்தியத்தில் பதட்டத்தை அதிகரிக்க செய்திருக்கிறது. மற்றைய நாடுகளின் அதிகார போட்டிகளில் நாம் பக்கம் சார்ந்து நடந்து கொள்வதில்லை. ஆனால், இந்து சமுத்திரத்தில் சீனாவின் பிரசன்னம் இந்தியா நியாயபூர்வமான பாதுகாப்பு அக்கறைகளை வெளிப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று நாம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். சீன இராணுவ பிரசன்னத்திற்கு இடமளித்து நிலைவரத்தை இலங்கை பாரதூரமாக்கிவிடக்கூடாது.’ என்று குறிப்பிட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருக்கின்ற நிலையில்தான் சீனாவின் மேற்படி இராணுவ ஆய்வுக் கப்பலின் வருகை நிகழவிருக்கிறது. இதே ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக முட்டுக் கொடுத்ததுமான கடந்த ‘நல்லாட்சி’ க் காலத்தில்தானே (2015-2019) அம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்திற்கு 99 வருட குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது. அப்போது கூட்டமைப்பு இது குறித்து மௌனம் சாதித்தது ஏன்? ஏன் இந்த இரட்டை வேட அரசியல். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் மற்றும் பூகோள அரசியல் விவகாரங்கள் குறித்துத் தமிழ் மக்களின் நலன் சார்ந்த ஒரு தெளிவான கொள்கை இல்லையென்பதை இப்போதாவது அதன் தலைவராகிய நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?
இரா.சம்பந்தன் அவர்களே!
தங்களிடம் நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் இருந்தால் தயவு செய்து இப்பத்தி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு ஊடகங்கள் வாயிலாகப் பகிரங்கமாகப் பதிலளியுங்கள். இல்லையெனில், (அரசியல்) தொழில் விடுங்கள்! அதுவும் நன்றே!!