இலங்கை – இந்திய ஒப்பந்த நலன்கள் கிடைக்காமைக்கு புலிகளே காரணம் (வாக்குமூலம் 24) 

இலங்கை – இந்திய ஒப்பந்த நலன்கள் கிடைக்காமைக்கு புலிகளே காரணம் (வாக்குமூலம் 24) 

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

இப்பத்தியை நான் எழுதும் இன்றைய தினம் 29.07.2022 ஆகும். இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தம் 29.07.1987இல் கைச்சாத்தாகி 35 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன-கடந்துவிட்டன. 

இலங்கையின் சார்பில் இலங்கையின் முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனாவிற்கும் (இலங்கைத் தமிழர்கள் சார்பில்) இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்குமிடையில் கைச்சாத்தான இவ் ஒப்பந்தம் ஒரு சர்வதேச ஆவணமாகும். இதனை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. 

இவ் ஒப்பந்தம் பிரசவித்ததே இலங்கையின் அரசியல்அமைப்பிற்கான 13வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தமும் அதன் கீழமைந்த அதிகாரப் பகிர்வு அலகுகளான மாகாண சபைகள் முறைமையும். இவற்றின் முழுமையான பலனை இலங்கைத் தமிழர்கள் இதுவரை அனுபவிக்கவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மைதான். ஆனால் அதற்குக் காரணம் என்ன? 

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கம் உட்பட அதற்குப் பின்னர் வந்த எந்த இலங்கை அரசாங்கமும் இவ் ஒப்பந்தத்தை- 13 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாக அரசியல் விருப்புடன் அமுல் செய்யவில்லை என்பதே இதற்கு நேரடிக் காரணம். 

ஆனாலும், இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கங்களை மட்டும் குறை சொல்ல முடியாது. இந்த ஒப்பந்தம் அமுல் செய்யப்படுவதை இலங்கைத் தமிழர் தரப்பே (தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்) குழப்பியமையும் மற்றும் இலங்கைத் தமிழர் தரப்பின் அரசியல் அங்கீகாரம் பெற்ற தமிழர் விடுதலைக்கூட்டணி- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) என்பன இதன் முழுமையான- முறையான அமுலாக்கலுக்கு அழுத்தங்கள் கொடுக்காமையும் இந்த ஒப்பந்தத்தை முழுமையாக அமுல் செய்வதைத் தள்ளிப் போடுவதற்கு அல்லது தவிர்ப்பதற்கு இலங்கை அரசாங்கங்களுக்கு வாய்ப்பையும் வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்தன. 

ஆனால், இலங்கைத் தமிழர் தரப்பு இதனை இன்றும்கூட உணர்ந்து ஏற்றுக்கொள்வதாயில்லை. இன்றும்கூட இந்த ஒப்பந்தத்தைக் குழப்பிய தமிழீழ விடுதலைப் புலிகளை நியாயப்படுத்திக்கொண்டும் அல்லது விடுதலைப் புலிகள் விட்ட தவறைக் ‘கழுவல் நழுவல்’ போக்கில் வெளிப்படையாகக் கூறுவதைத் தவிர்த்தும் அவ்வப்போது சந்தர்ப்பங்களுக்கேற்ப இலங்கை அரசாங்கத்தையும் இந்திய அரசாங்கத்தையும் மட்டும் குறை கூறிக்கொண்டும்தான் தமிழ்த் தேசிய(தேர்தல்) அரசியலை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலைமை நீடிக்கும் வரை இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பின்னடைவுகள் தொடருமே தவிர வேறு எந்த நன்மைகளும் விளையமாட்டாது. தமிழ்த்தேசிய அரசியல் ‘சாண் ஏறி முழம் சறுக்கிய’ கதையாகவே தொடரும்.  

இலங்கைத் தமிழர்களுக்கு முதலில் அவசரத் தேவை என்னவெனில்- அது நிலத்தில் உள்ள தமிழர்களாய் இருந்தாலும் சரிதான் அல்லது புலத்தில் உள்ள தமிழர்களாய் இருந்தாலும் சரிதான்- ‘புலிசார்’ உளவியலிலிருந்து முற்றாக விடுபடுவதாகும். இது சற்றுக் கசப்பான மருந்துதான். ஆனாலும் நோய் குணமாக வேண்டுமானால் பல்லைக் கடித்துக் கொண்டு இதனைப் பருகித்தான் ஆகவேண்டும். 

இதனை இவ் அரசியல் பத்தித் தொடரில் ஏற்கெனவே பல தடவைகள் வலியுறுத்தி வந்துள்ளேன். எனினும் ‘கூறியது கூறல்’ என்ற குற்றத்திற்குட்பட்டாலும்கூட இதனை மீண்டும் மீண்டும் கூறித்தான்ஆகவேண்டியுள்ளது. 

1949 இலிருந்து 1972 வரை தமிழரசுக் கட்சியாலும்-பின் 1972 இலிருந்து 1976 வரை தமிழர் கூட்டணியாலும் -1976 இலிருந்து 2001 வரை தமிழர் விடுதலைக் கூட்டணியாலும் -2001 இலிருந்து இன்று வரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினாலும் -ஆயுதப் போராட்ட காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினராலும் உணர்ச்சியூட்டப்பட்டு- உசுப்பேற்றப்பட்டு- மூளைச் சலவை செய்யப் பெற்றுக் குறுந்தமிழ்த் தேசியவாதப் போதையூட்டப் பெற்றுக் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக அப்போதையில் மூழ்கிக்கிடக்கும் தமிழ்ச் சமூகத்தைத்தட்டி எழுப்பி அறிவுபூர்வமான ஒரு மாற்று அரசியலை நோக்கித் திசை திருப்புவது இலேசுப்பட்ட காரியமல்ல. அதனால் ‘அடி மேல் அடி அடித்தால்தான் அம்மியும் நகரும்’ என்பதற்கிணங்க மீண்டும் மீண்டும் சில விடயங்களைக் கூறவேண்டியதாகி விடுகிறது. இப்பத்தித் தொடரைத் தொடர்ந்து கிரமமாகப் படித்து வருபவர்களுக்கு மட்டுமல்லாமல் இடைக்கிடை விட்டுவிட்டு வாசிப்பவர்களையும் புதிதாக வாசிக்கத் தொடங்குபவர்களையும் மனம்கொண்டு எழுதவேண்டியுமுள்ளது. அதனால் கூறியது கூறல் நிர்ப்பந்தம்-குற்றம் ஏற்பட்டு விடுகிறது. 

இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றில் 1987 இல் கைச்சாத்தான இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்ததும்- முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் அரசாங்கத்திடமிருந்து பணமும் ஆயுதங்களும் பெற்றுக் கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைப்பொம்மையாகி இந்திய அமைதிகாக்கும் படையினருடன் யுத்தம் புரிந்ததும்-முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் அமிர்தலிங்கத்தை 1989 இல் கொலை செய்ததும் (அவர் இந்தியாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டதால் என்பதாலேயே)- இந்திய மண்ணில் வைத்து (இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தை ஆதரித்து அனுசரித்தமைக்காக) முன்னாள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா உட்பட 13 தோழர்களை 1990இல் படுகொலை செய்ததும் ஈற்றில் 1991இல் இந்தியாவின் தமிழ்நாட்டில் வைத்து இந்திய -இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் பிதாமகரான முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் உயிரைத் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மூலம் காவுகொண்டதும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இழைத்த மாபெரும் அரசியல் மற்றும் இராணுவ முட்டாள்தனம் மட்டுமல்ல தமிழினத் துரோகமும் ஆகும். இந்த முட்டாள்த்தனம்தான் வரலாற்றில் முள்ளிவாய்க்கால் பேரழிவாக நடந்து முடிந்தது. ஆனால் தமிழ்ச் சமூகமும் அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் சக்திகளும் இதனை இன்னும் முற்று முழுதாக உணர்வதாயில்லை. ‘புலிச்சார்பு’ உளவியலிலிருந்து முழுத் தமிழ்ச் சமூகத்தையும் விடுவிக்க வேண்டியுள்ளது. ஏற்கெனவே தமிழீழ விடுதலைப் புலிகளும் புலிசார் அமைப்புகளும் இலங்கைத் தமிழர்களுடைய மனதில் இந்திய எதிர்ப்பு வாதத்தை விதைத்து வேரூன்ற வைத்துள்ளனர். இம் மனப்போக்கு தமிழர்களுக்கு என்றுமே உதவப் போவதில்லை. 

 இந்தியாவுக்கு எதிராகத் தமிழர் தரப்பினால் (தமிழீழ விடுதலைப் புலிகளால்) இழைக்கப்பட்ட துரோகங்களுக்குப் பிராயச்சித்தம் தேடும் வகையில்-இந்தியா இலங்கைத் தமிழர்களை நம்பும் வகையில் (இலங்கைத் தமிழர்களின் நலன்களையும் தனித்துவத்தையும் பேணிக் கொண்டு) இந்தியாவை முழுமையாக அனுசரித்துப் போகவும் வேண்டியுள்ளது. இதற்காகத் தமிழ்ச் சமூகத்தைத் தயார்படுத்த வேண்டியுள்ளது. இவையெல்லாம் இலேசுப்பட்ட காரியங்களல்ல. ஒட்டு மொத்த இலங்கைத் தமிழ்ச் சமூகத்தையும் அரசியல் மடைமாற்றம் செய்யும் இப்பாரிய ‘வேள்வித் தீ ‘ யிற்கு மீண்டும் மீண்டும் கூறியதைக் கூற வேண்டியுள்ளமை தவிர்க்க முடியாத ‘நெய் சொரியும் ‘வேலையாகிவிடுகிறது. 

மேலும், 09.04.2022 இல் கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பமாகி  நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசு எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழர்கள் பங்கு கொள்ளாமல் நடுநிலை வகிக்க வேண்டும் என்பதும் இப்போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே இவ் அரசியல் பத்தித் தொடர் வலியுறுத்திவரும் இன்னுமொரு விடயமாகும். காரணம், இந்தியா இந்த விடயத்தில் நடுவு நிலைமையை வகிப்பதால் இலங்கைத் தமிழர்களும் தேவை கருதி இந்தியாவை அனுசரித்துப் போகவேண்டும் என்பதற்காகத்தான். 

 ஆனால், வாசக அன்பர்கள் சிலர் இதனைச் சுட்டிக்காட்டி இப் பத்தித் தொடரில் இதுகுறித்து நான் முன்வைக்கும் வாதங்கள்- தர்க்கங்கள்- நியாயங்கள் -ஆதாரங்கள-சட்டங்கள சரியானவையாக இருந்தாலும் கூட, மறுபக்கத்தில் தமிழ் மக்களின் பரம எதிரிகளாகக் கருதப்படும் ராஜபக்சாக்களின் இருப்புக்கான வாதமாகவும் அமைந்துவிடும் ஆபத்தும் உண்டு எனவும் நல்லெண்ணத்துடன் என் கவனத்தை ஈர்த்துள்ளார்கள். 

 உண்மையில், ராஜபக்சாக்களின் அரசியல் இருப்பைத் தொடர்ந்து தக்கவைப்பது எனது பேனாவின் நோக்கமல்ல. மாறாக, உள்ளூர் அரசியல் நீரோட்டத்தை விடவும் இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார அரசியல் நீரோட்டத்துடன் இணைந்து பயணிப்பதே தமிழர்களுக்குப் பாதுகாப்பானது என்பதே. இதனையும் ‘கூறியது கூறல்’ குற்றத்திற்கு ஆளாகினாலும் கூட மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டியுள்ளது. 

 எதிரியை வெல்வதற்குச் ‘சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வெல்வதும் தர்மமே’ என்ற கருத்தியலையும் தருணமறிந்து பயன்படுத்த வேண்டும் என்பதைத் தவிர வேறு நீண்ட விளக்கங்கள் இதற்குத் தேவையில்லையெனக் கருதுகிறேன். 

நிறைவாக, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘ஈழநாடு’ பத்திரிகையின் 29.07.2022 வெளியீட்டின் ஆசிரியர் தலையங்கத்தின் ஒரு பகுதியை (இறுதிப் பகுதியை) இங்கு மீண்டும் பதிவிடுவதன் மூலம் இப் பத்தியை நிறைவு செய்ய விழைகிறேன். 

 “……….இவை அனைத்தினதும் விளைவாகவே, 1987 ஜூலை 29 ஆம் திகதி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வை காணும் நோக்கிலேயே, இந்த ஒப்பந்தம் இடம் பெற்றது. ஒப்பந்தம் இடம் பெற்று 35 வருடங்களாகின்றன. இந்த35 வருடங்களில் தமிழர் அரசியலில் பல்வேறு விடயங்கள் நடந்து முடிந்துவிட்டது. ஆனாலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற மாகாணசபை முறைமையை தவிர,வேறு எந்தவொரு விடயமும் இப்போது தமிழர்களிடத்தில் இல்லை. பல விடயங்கள் இருக்கின்றன என்று கூறப்பட்டாலும் கூட, அவை அனைத்தும் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள்- என்னும் அடிப்படையில் தான் இருக்கின்றன. வெறும் விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் அரசியல் அடைவுகளாகிவிடாது. 

 இந்த 35 வருடங்களில் பல்வேறு விடயங்கள் இடம் பெற்றிருந்தாலும் கூட. ஈழத் தமிழர் விடயத்தில், 13 வது திருத்தச் சட்டத்தையே ஒரு கொள்கை நிலைப்பாடாகக் கொண்டிருக்கிறது. 13 வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், 13 வதுதிருத்தச் சட்டத்திலிருந்து-என்றும் அடிப்படையில்தான், இந்தியா விடயங்களை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. ஏனெனில்,ஈழத் தமிழர் விடயத்தில்இந்தியாவின் தலையீட்டுக்கான அஸ்திவாரமாக இருப்பது இந்திய-இலங்கை ஒப்பந்தம் மட்டுமே ஆகும். 

 இதே வேளை, தமிழர்கள் நம்பிக்கையுடன் நோக்கும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக் கூறல் பிரேரணைகளிலும்,அரசியல் தீர்வு தொடர்பான வலியுறுத்தலில். 13 வது திருத்தச் சட்டமே வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இதுவரை இந்தியாவினால் மட்டுமே வலியுறுத்தப்பட்டு வந்த குறித்த விடயம், தற்போது ஐக்கிய நாடுகள் சபையிலும் எதிரொலிக்கின்றது. இந்தப் பின்புலத்தில் சிந்தித்தால், ஈழத் தமிழர் தரப்புகள் 13 ஐ, சாதாரணமாக தவிர்த்து விட்டு அரசியலில் ஒருபோதும் பயணிக்க முடியாது என்னும் நிலைமையே அரசியல் யதார்த்தமாகிவிட்டது. யதார்த்தங்களை வார்த்தைகளால் புறம்தள்ளலாம். ஆனால், அவற்றின் மூலம் அரசியலில் ஆக்கபூர்வமான அடைவுகளை காணமுடியாது. 

 யதார்த்தங்களை எதிர்கொள்ளும் தற்துணிவு ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள், புத்தி ஜீவிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என்போருக்கு அவசியமானதாகும்” 

(நன்றி:’ஈழநாடு’)