— அறுமுக்குட்டிபோடி —
ஒரு மெகா கூட்டணியின் அவசியம்!
இலங்கையின் வரலாற்றில் நீண்டகாலமாக கோலோச்சிய தமிழ் தேசியம் என்னும் கருத்தாக்கம் கிழக்கு வடக்கு பிரதேசங்களில் மெல்ல மெல்ல பலவீனப்பட்டு வருகின்றது. நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் துரைராசசிங்கம் உட்பட பல முன்னாள் எம்பிக்கள் படுதோல்வியடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களுடைய அபிலாசைகளுக்கும் தமிழ் தேசிய கருத்தாக்கத்துக்கும் இடையிலான இடைவெளிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
தமிழ்த்தேசிய தலைமைகள் என்று சொல்லப்பட்டவர்கள் கிழக்கின் பல்லின, சமூக, பொருளாதார, வேலைவாய்ப்பு, மற்றும் தனித்துவங்களை கவனம்கொள்ளத்தவறிய புள்ளிகளிலிருந்தே கிழக்கு மாகாணத்தினது இந்த விலகல் ஆரம்பித்தது.
ஆயுதப் போராட்ட காலங்களிலிருந்து வெளிக்கிளம்பிய தமிழ் தேசியத்தின் மீதான இந்த அதிருப்திக் குரல்கள் அண்மைக்காலமாக மக்களது ஜனநாயக அங்கீகாரத்தையும் பெறத்தொடங்கியுள்ளன.
கிழக்குக்கான பல்வேறுவிதமான சமூகபொருளாதார தனித்துவங்களை முன்னிறுத்தி அதனை ஒரு அரசியல் பேசுபொருளாக மாற்றிவருபவர்களை நோக்கி அடித்தட்டு மக்களின் ஆதரவுத்தளம் பெருகிவருகின்றது. இதனை கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நன்கே புலப்படுத்தியுள்ளன. அத்தோடு புத்திஜீவிகளும் கல்விமான்களும் கூட தமிழ் தேசியத்தை நிராகரித்து செல்லும் கிழக்கின் அரசியல் மாற்றத்தில் தம்மை இணைத்துக்கொள்ள தொடங்கியுள்ளனர்.
கிழக்கு முடிவுகள்
அம்பாறையில் நீண்டகாலமாக செயற்பட்டுவரும் தமிழர் மகாசபை இம்முறை கருணாம்மானை தலைமை வேட்பாளராகக் கொண்டு களமிறங்கி வரலாறு காணாத ஆதரவைப்பெற்றுள்ளது. தமிழர் மகாசபையானது பாராளுமன்ற ஆசனத்தை கைப்பற்றத் தவறினாலும் தமிழ் தேசியத்தை முதலீடாக கொண்டியங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பின்தள்ளுமளவுக்கு தமிழர் மகாசபையை பெருவாரியான மக்கள் ஆதரித்துள்ளனர். இத்தனைக்கும் தமிழ் தேசியவாதிகளால் மன்னிக்கவோ மறக்கவோ முடியாத துரோகியாக தூற்றப்பட்டவர் கருணாம்மான்.
மட்டக்களப்பில் கிழக்கின் தனித்துவத்தை முன்னிறுத்தி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை தலைமையேற்று நடத்தும் சிவ.சந்திரகாந்தன்(பிள்ளையான்) கடந்த ஐந்து வருடங்களாக சிறையிடப்பட்டிருக்கும் நிலையிலும் வடக்கு கிழக்கில் தெரிவான தமிழ் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 25 பேரிலும் அதிகப்படியான விருப்பு வாக்குக்களை பெற்று வரலாற்று சாதனையொன்றை புரிந்துள்ளார்.
மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனை கூட தமிழர்களை மையப்படுத்தி ஒரு ஆசனத்தை தக்கவைக்கும் அளவுக்கு வெற்றியடைந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சி மாறி மகிந்த தரப்பில் இணைந்துள்ள வியாழேந்திரனும் தனக்கான மக்கள் ஆணையை பெற்றுள்ளார். அதனுடாக தமிழரசு கட்சியிலிருந்து வெளியேறி அரச சார்பு நிலைப்பாடு எடுத்தவர்கள் மீண்டும் போட்டியிட்டு வெல்வதில்லை என்கின்ற வரலாற்றை மாற்றி எழுத வைத்துள்ளனர் மட்டக்களப்பு மக்கள்.
திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள் கூட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பாரிய வாக்குச்சரிவை பதிவு செய்துள்ளது. 2015ஆம் ஆண்டு (45894)பெற்றுக்கொண்ட வாக்குகளைவிட இம்முறை (39570) சுமார் 6500 வாக்குகள் குறைவடைந்துள்ளது. அங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு ஆசனத்தை தக்கவைத்துள்ளமையை வெற்றியென கருதமுடியாது. திருமலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் போட்டியிட நேர்ந்து பத்தாயிரம் வாக்குகளை பெற்றிருந்தாலும் சம்பந்தரின் ஆசனம் கேள்விக்குறியாகியிருக்கும். இந்தநிலையில் கிழக்கு மாகாணம் ஆனது தமிழ் தேசிய பாதையிலிருந்து விலகிச் செல்வதை இனி யாரும் தடுக்கமுடியாது என்னும் நிலையேற்றப்பட்டுள்ளது.
அத்தோடு மட்டக்களப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில்வெற்றி பெற்ற கோவிந்தன் கருணாகரனும், சாணக்கியனும் கூட தமிழ் தேசிய பசப்பு வார்த்தைகளை நம்பியிருக்காது கடந்த காலங்களில் மக்களின் பிரச்சனைகள் மீது ஓரளவாவது கருசனைகொண்டு செயற்பட்டவர்கள் என்பதனால்தான் வெற்றியீட்ட முடிந்துள்ளது. இதில் குறிப்பாக கோவிந்தன் கருணாகரன் கடந்த காலங்களில் தமிழ் தேசிய ஊடகங்களால் துரோகியாகவே சித்தரிக்கப்பட்டு வந்தவர். அவரது வெற்றியானது வீட்டு சின்னத்தின் வெற்றியென்பதைவிட ‘டெலோ ஜனா’வின் வெற்றியென்பதே பொருந்தும்.
தமிழரசு கட்சியின் செயலாளர் துரைராசசிங்கமும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், யோகேஸ்வரன் போன்றோரும் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளிலும் கவனங்கொள்ளாது தமிழ் தேசிய வார்த்தையாலங்களுடன் காலத்தையோட்டியதன் காரணமாகவே மக்களால் மிக மோசமான முறையில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது பெற்றுக்கொண்டிருந்த வெற்றிகள் கிழக்குத்தமிழர்களின் வெற்றியாக இல்லாது போயிருக்கலாம். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்வியானது கிழக்குத்தமிழர்களின் வெற்றியாகுமா? என்பதை எதிர்காலமே தீர்மானிக்கும். ஏனெனில் கிழக்கு மாகாணத்துக்கான தனித்துவ பிரச்சனைகளை முன்னிறுத்தி அரசியல் செய்பவர்களுக்கு முன்னால் கிழக்குக்கான உறுதிமிக்க தலைமையொன்றை கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பு காத்திருக்கின்றது.
கிழக்குக்கான கட்டமைப்பு
அவ்வாறன்றி தமிழீழத்துக்காக தொடங்கிய இயக்கங்கள் பலபத்துகளாக தொடங்கி அழிந்து போனது போல கிழக்கிலும் பிரிந்து நின்று சீரழிதல் கூடாது. அதிகாரத்துக்காக அரசுடன் இணைந்து செயற்பட்டாலும் அதேவேளையில் எமது தனித்துவத்தை காத்துநிற்கும் வகையிலான கிழக்குக்கான பலமான கட்டமைப்பு ஒன்றின் அவசியத்தை நோக்கியே நாம் நகரவேண்டும். ஏனெனில் கிழக்கு மக்களின் எதிர்காலம் தற்போது கிழக்கின் தனித்துவம் பேசுபவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதனை யார் பொறுப்புடனும் உளசுத்தியுடனும் அணுகுகின்றார்களோ அவர்களே கிழக்கு மக்களின் நம்பிக்கையை பெறமுடியும். அவர்களாலேயே கிழக்குக்கான ஒரு பலமான தலைமையை உருவாக்கமுடியும்.
தேர்தல் கால வாக்குறுதிகளை மனதில் கொண்டு ஒழுங்கான திட்டமிடுதலுடன் வெற்றிபெற்றவர்கள் முன்னேறவேண்டும். அண்மையில் சமூர்த்தி உத்தியோகஸ்தர்களுக்கான வேலைவாய்ப்புக்காக அரசியல்வாதி ஒருவரின் பினாமிகள் இப்போதே ஒன்றரை லட்ஷம் ரூபாய்கள் விலைவைத்துள்ளதாக செய்திகள் பரவுகின்றன. இத்தகைய செய்திகள் மிகுந்த வேதனைக்குரியன. வேலைவாய்ப்புக்காக கைநீட்டி காசுவாங்கும் கேவலமான கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்கின்ற புதிய கலாசாரமொன்றை நாம் கிழக்கில் நிறுவுவோமென உறுதி கொள்ளவேண்டும். அதேபோல ஊழல்வாதிகளையும் மண் மாபியாக்களையும் கொந்துராத்துக்காரர்களையும் கோடீஸ்வரர்களாக்க மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை நாம் ஒவ்வொரு கணத்திலும் மறவாதிருக்க வேண்டும்.
கிழக்குக்கான மெகா கூட்டணி
அதுமட்டுமன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வெற்றி பெற்றவர்கள் கூட ஏனைய கிழக்கின் தனித்துவம் பேசும் தலைமைகளுடன் இணைந்து கிழக்குக்கான ஒரு மெகா கூட்டணியை உருவாக்குவது பற்றி சிந்திக்கவேண்டிய தருணம் இதுவாகும். உதாரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியல்ல. தமிழரசுக் கட்சியுடன் புளொட் மற்றும் டெலோ அமைப்புக்கள் கொண்டுள்ள ஒரு தேர்தல் கூட்டு அவ்வளவுதான். அதேபோல கிழக்கை அடிப்படையாக கொண்டியங்கும் புளொட், டெலோ போன்றவை கிழக்கு மாகாணத்தின் தனித்துவம் கருதி தமிழரசு கட்சியை விடுத்து கிழக்குக்கான மெகா கூட்டணியில் சங்கமிப்பது பற்றி சிந்திக்க முடியும்.
இத்தகைய முடிவானது கிழக்குக்கு வெளியே டெலோ போன்ற ஏனைய கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பாக தொடர்ந்தும் இயங்குவதற்கு தடையானதொன்று என கருதவேண்டியதில்லை. இதுகுறித்து தீர்க்கமான முடிவொன்றினை எடுக்கக் கூடிய தற்துணிவு ஜனா (கோவிந்தன் கருணாகரன்) போன்றவர்களிடம் இல்லாமல் இருக்க முடியாது.
எனவே விரைவில் வரவிருக்கும் கிழக்கு மாகாண சபை தேர்தலை தொடக்கப்புள்ளியாக வைத்து கிழக்கின் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைவது பற்றி தீவிரமாக பரிசீலிக்கவேண்டும். ஏனெனில் கிழக்கின் திசைவழியென்பது மிக நீண்டது. அது எமது மண்ணையும் மக்களையும் வளப்படுத்தி வாழவைக்க வேண்டுமென்கின்ற தாகம் கொண்டது. இது குறித்து கட்சிசார் மற்றும் தன்முனைப்பு அரசியலை புறமொதுக்கிவிட்டு சிரத்தையூன்றி நாம் சிந்திக்கவேண்டும். அதனை சாத்தியமாக்க சளைக்காத உரையாடல் மற்றும் வெளிப்படைத்தன்மை, விட்டுக்கொடுப்புகள், பொறுப்புணர்வு போன்றவை மிக மிக அவசியமானவையாகும்.