— சீவகன் பூபாலரட்ணம் —-
‘நண்டெழுத்து நமெக்கெதற்கு’ என்றவரும் நாமே… ‘மும்மொழியில் பேசுதல் சிறப்பு’ என்பதும் நாமே…
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நாடாளுமன்றத்தில் மூன்று மொழிகளில் உரையாற்றியமை பலரது வரவேற்பை பெற்றிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு மும்மொழி அறிவைக் கொண்டிருந்து, அதனை தமிழ் புரியாத பெரும்பான்மை அங்கத்தவர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பயன்படுத்தியதை நாமும் வரவேற்கிறோம்.
அவர் மாத்திரமல்ல, யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஏ. சுமந்திரன், சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் அண்மைக்காலமாக தமிழ் அல்லாத உறுப்பினர்களுக்கு புரியும் வகையில் ஆங்கிலத்தில் அல்லது சிங்களத்தில் பேசி வருகின்றனர். இது நல்ல விடயந்தான்.
(நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானும்கூட சிங்கள மொழியில் பத்திரிகையாளர் கேட்கும் கேள்விகளுக்கு தனக்கு தெரிந்த சிங்களத்தில் முடிந்தவரை பதிலளித்ததை ஒரு காணொளியில் நான் பார்த்தேன். இதுதான் வடக்கு கிழக்கை சேர்ந்த, அங்கு பிறந்து வளர்ந்த பெரும்பான்மை தமிழ் இளைஞர்களின் நிலை. அவர் வெளிமாவட்டத்தில் படிக்க அவர் ஒன்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரின் அல்லது வர்த்தகரின் பிள்ளை அல்லவே. அதுவும் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பலர் நல்ல கல்லூரிகளில் தரமான கல்விகற்ற காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் அல்லவா பிள்ளையான் அடிப்படைக்கல்வி கற்றிருப்பார்)
ஆக, இங்கு பிரச்சினை என்னவென்றால், எமது வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மும்மொழியில் பேசாதது அவர்களது தகமையீனமா? என்ற கேள்விதான்.
அத்தோடு, அவர்களில் பெரும்பான்மையானோர் இன்று தமிழ் தவிர்ந்த ஏனைய மொழிகளில் பேச முடியாமல் போனதற்கு காரணம் என்ன என்பதும் இங்கு அடுத்த ஆராயப்பட வேண்டிய பிரச்சினை.
இந்தக் கேள்விகளோடு சேர்ந்து இன்னுமொரு கேள்வியும் இங்கு உருவாகின்றது. அதாவது, தமிழ் தவிர்ந்த ஏனைய மொழிகளிலும்(ஆங்கிலம், சிங்களம்) பாண்டித்தியம் பெற்றவர்களைத்தான் நாம் நாடாளுமன்ற அனுப்ப வேண்டுமா? என்பது அது.
இங்கு சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் கற்றது, வசித்தது எல்லாம் வடக்கு கிழக்குக்கு வெளியே. அல்லது அவருக்கு மும்மொழித் திறமையை தந்தவை அவரது வெளிமாவட்ட பரிச்சயம். அதேபோலத்தான் சுமந்திரன், விக்கினேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமாரும். இரா. சம்பந்தன் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர், 1956க்கும் முன்னர் படித்தவர்.
ஆக வெளிமாவட்ட பரிச்சயமே இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏனைய மொழிப் பரிச்சயத்தை தந்திருக்கிறது. அப்படியானால், நாம் இனி, வெளிமாவட்டங்களில் வசித்த அல்லது கற்றவர்களைத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆக்கவேண்டும் என்ற நிலைமை வந்துவிடும்.
1956 இல் தனிச்சிங்கள சட்டம் வந்த பிறகான நிலைமைகள்தான் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களை தமிழில் கல்வி கற்க வைத்தவையாகும். அதற்கு முன்னதாக இங்கு மிஷனரி பள்ளிக்கூடங்களும் ஏனைய பள்ளிகளும் நல்ல ஆங்கிலத்தை ஒரு சிறிய வட்டத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மாத்திரம் கற்றுக்கொடுத்தன. ஆனால், தமிழ் மொழிமூல கல்வி வாய்ப்பு எல்லோரும் கற்கலாம் என்ற நிலையை ஒரு புறம் ஏற்படுத்தினாலும் மறுபுறம் அவ்வளவாக இங்கு ஆங்கிலக் கல்வி நிலைக்கவில்லை.
அதேவேளை, தனிச்சிங்கள சட்டத்துக்கு எதிரான தமிழரசுக்கட்சி போன்ற தமிழ் தேசியவாதக் கட்சிகளின் நடவடிக்கைகள் தனித்தமிழ் கல்வியை வலியுறுத்தின. அவர்கள் வடக்கு கிழக்கில் தமிழ் மாணவர்கள் சிங்களத்தை கற்கக்கூடாது தனித்தமிழில் கற்க வேண்டும் என்று வலியுறுத்திய அதேவேளை, தமது குழந்தைகளை வடக்கு கிழக்குக்கு வெளியே சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் கற்பித்து அவர்களை மும்மொழி வல்லுனர்களாக்கினார்கள். ஆனால், வடக்கு கிழக்கில் சிங்களமோ சிறந்த ஆங்கிலமோ கற்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட கடந்த 50 ஆண்டுகளாக இருக்கவில்லை. அதனைப் பற்றி அந்தக் கட்சிகள் பெரிதாக கவலைப்படவுமில்லை. மாறாக தமது மேடைகளில் “நண்டெழுத்து நமக்கெதற்கு…” என்று சிங்களத்துக்கு எதிராக பேசி வேறு மொழி கற்கும் ஆர்வத்தை தமிழ் மாணவர் மத்தியில் குறைத்து வந்தனர்.
இந்த நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் கடந்த 50 வருடங்களாக கற்று வந்த மாணவர்கள் எவ்வாறு வேறு மொழிகளில் பேசமுடியும். அதனைவிட கடந்த 35 வருடகாலப் போரும் அவர்களை தனிமைப்படுத்தி வைத்திருந்தது. அதற்காக, தமிழ் மொழியில் மாத்திரம் புலமை பெற்ற நமது ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் தரம் குறைந்தவர்கள் என்றும் கூறிவிட முடியாது. அவர்களிலும் தொழில் ரீதியாக சிறந்தவர்கள் இருந்திருக்கிறார்கள்.
அதுமாத்திரமல்லாமல் ஆங்கிலம் தெரிந்தவர் மாத்திரந்தான் நாடாளுமன்றம் செல்ல வேண்டும், அவர்களுக்குத்தான் அந்த தகமை இருக்கிறது என்று யாராவது வாதிட்டால், அது, சேர். பொன் இராமநாதன் போன்றவர்கள் ‘படித்தவர்களுக்கு மாத்திரந்தான் வாக்குரிமை கொடுக்க வேண்டும், உயர் சாதியினருக்கு மாத்திரந்தான் வாக்குரிமை கொடுக்க வேண்டும்’ என்று ஒரு காலத்தில் வாதிட்டதற்கு சமனாகிவிடும். படுமோசம்.
அதுமாத்திரமல்ல, ஜி.ஜி. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம், திருச்செல்வம் என்று “சட்ட, ஆங்கில மேதைகளால்” ஒரு காலத்தில் நிறைந்து காணப்பட்டதுதான் இலங்கை நாடாளுமன்றம். அவர்கள் பேசியதைக் கேட்டு இந்த இனவாத சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது பிரச்சினை எல்லாவற்றையும் புரிந்துகொண்டார்களா? திருந்தி எமது உரிமைகளை ஓரளவாவது கொடுத்து விட்டார்களா?
சிங்கள, ஆங்கில மொழி தெரிவது நல்லதுதான் முடிந்தால் அந்த மொழியில் பேசுங்கள் அதற்காக இனவாதக் காது கொண்டவர்கள், மொழி பெயர்ப்பு ஒலிவாங்கியை காதில் போட்டால் மாத்திரம் புரிந்து, திருந்திவிடுவார்கள் என்று கனவு காணாதீர்கள்.
அடுத்தது இலங்கையை சேர்ந்த ஒரு மக்கள் பிரதிநிதிக்கு தனது சொந்த மொழியில் நாடாளுமன்றத்தில் பேசுவது அவரது, அவரைத் தேர்ந்தெடுத்த மக்களது உரிமை. அதனை முழுமையாக பயன்படுத்துங்கள். உங்களுக்கு தமிழில்தான் சிந்திக்க முடியும் என்றால் தமிழிலேயே பேசுங்கள். உங்கள் உரிமையை விட்டுக்கொடுக்காதீர்கள். சிங்கள, ஆங்கில புலமை உள்ளவர்கள் அந்த மொழிகளில் பேசுங்கள். ஆனால், அது தெரியாதவர்கள் தகைமை குறைந்தவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடாதீர்கள்.
உகந்த அளவில் தாய் மொழியையும் தொடர்பு மொழிகளையும் கற்றுக்கொள்ளும் ஒரு வாய்ப்பை வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஏற்படுத்தாதது அரசியல்வாதிகளின் தவறுதான். அதுவும் இவ்வளவு காலமும் அதிக அளவில் வடக்கு, கிழக்கு மாகாண மக்களை பிரதிநிதித்துவம் செய்து வந்த தமிழரசுக்கட்சி, தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் அதன் தொடர்ச்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கும் அந்த தவற்றில் அதிக பங்கு இருக்கிறது.
இனிச்செய்ய வேண்டியது, உங்கள் மொழிக்கொள்கையை மாற்றுங்கள். “நண்டெழுத்து நமக்கெதற்கு…” என்று மேடைக்கு மேடை கூறிவந்த, உங்கள் முன்னோடிகளின் நடவடிக்கைக்காக வடக்கு, கிழக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கோருங்கள். அந்த இரு மாகாண மக்களின் பிள்ளைகளுக்கு எதிர்காலத்திலாவது தமிழையும் அதனுடன் சேர்த்து ஏனைய இரு மொழிகளையும் தரமான வகையில் கற்றுக்கொடுக்க வழி செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு மாத்திரம் வெளிமாவட்டங்களில், வசதியான தேசிய, சர்வதேசிய பாடசாலைகளில் பல மொழிக் கல்வியை புகட்டாமல், எங்கள் இரு மாகாணங்களில் வாழும் அனைத்து தமிழ் மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுங்கள். ஒருவேளை, எதிர்காலத்தில் அவர்கள், உங்களைவிடவும் சிறப்பாக மும்மொழிகளில் என்ன இன்னும் பல மொழிகளில் உலக அரங்கில் தமிழர்களுக்காக உரத்து குரலெழுப்பக்கூடும்.
அடுத்தது உங்களுக்கு சிங்களம் நன்கு தெரிந்தால், சிங்கள ஆட்சியாளர்களிடம் பேசுவதோடு மாத்திரமல்லாமல், சிங்கள மக்களிடமும் சென்று பேசுங்கள். அவர்கள் சிலவேளை தமிழ் மக்களின் நிலைமையை புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.