கடவுள் என்ன நினைத்திருக்காரோ அதுதான் நடக்கும்!

கடவுள் என்ன நினைத்திருக்காரோ அதுதான் நடக்கும்!

— படுவான் பாலகன் —

கொரோனா பீதி காரணமாகஇந்த வருட ஆலய உற்சவங்கள் எல்லாம்  ஆரவாரம் இல்லாமல் அமைதியாகவே நடந்து முடிந்துள்ளன. உண்மையில், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத் தேரோட்டம் நடக்குமாநடக்காதாஎன்ற சந்தேகமே பலருக்கு எழுந்திருந்தது. 

 ‘எது எப்படியிருந்தாலும் கடவுள் என்ன நினைத்தாரோ அதுதான் நடக்கும். இதனைத்தான் கொக்கட்டிச்சோலை தேரோட்டமும் எடுத்தியம்பி இருக்கின்றது’ என்கிறார் சுப்பிரமணியம்.  

கொக்கட்டிச்சோலை பிரதான வீதியின் ஓரத்தில் இருந்த மரமொன்றின் கீழ் சுப்பிரமணியம் களைப்பாறிக் கொண்டிருந்தான். அப்பகுதியால் வருகை தந்த சிவலிங்கமும் அம்மரத்தின் கீழ் நின்றுகொண்டிருந்த சுப்பிரமணியத்தினைக் கண்டதும் மிதித்து வந்த துவிச்சக்கரவண்டியை நிறுத்தி அவரோடு பேச ஆரம்பித்தார். 

‘முன்பெல்லாம் வீட்டுக்கொரு துவிச்சக்கரவண்டியை காண்பதே கடினம். அவ்வாறு துவிச்சக்கரவண்டியை கண்டாலே காரைக் காணுகின்ற நினைப்பு. இப்போ வீதியில் துவிச்சக்கரவண்டியை காண்பது மிகவும் குறைவு. அவ்வாறு காண்பதென்றாலும் நம்மைபோன்ற வயது சென்றவர்கள் ஒரு சிலர் ஓடுவதினால்தான் காணமுடிகிறது. இந்த வீதியில் துவிச்சக்கரவண்டி ஓடுவதற்கும் பயமாக இருக்கு; அவ்வளவு வாகனங்கள் ஓடுகின்றன. வாகனம் ஓடுற காற்று வேகம் நம்மள வீழ்த்திவிடும் போல இருக்குது’ என கதையை ஆரம்பித்தான் சுப்பிரமணியம்.  

நீண்ட நாட்கள் இருவரும் சந்திக்காமையால்  இருவருக்குமான உரையாடல் நீண்டு கொண்டு போனது. சிறிது நேரத்தில் அண்மையில் முடிவடைந்த கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் பற்றியும் இருவரும் பேசத்தொடங்கினர். 

ஈழத்திருநாட்டில் உற்சவத்தினையே தேரோட்டம் என அழைப்பதென்றால்கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினைத்தான் இதுவொன்றே இவ்வாலயத்தின் தேரின் பழமையை எடுத்துக்காட்டுகின்றது. இவ்வாறான ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து கடந்த செப்டம்பர் 06ம் திகதி தேரோட்டமும்மறுநாள் காலை தீர்த்தோற்சவமும் நடைபெற்று நிறைவுபெற்றிருக்கின்றது. இவ்வாலயத்தின் மகோற்சவம் வழமையை விட ஆரவாரம் இல்லாமல் அமைதியாகவே நடந்து முடிந்திருக்கின்றது. இது தொடர்பில்தான் சிவலிங்கமும்சுப்பிரமணியமும் பேசிக்கொண்டனர். 

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொரோனா தொற்றுக் காரணமாக தேரோட்டம் மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன்தான் நடைபெற வேண்டும் என்பது மட்டுமல்லாதுவழமையாக நடைபெறுகின்ற அன்னதானத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அலங்கரிப்பதற்கும்ஆலய உற்சவம் தொடர்பில் பிரசுரங்களை வெளியிடுவதற்கும்ஆலயத்தில் கடைகள் வைப்பதற்கும் தடைகள் போடப்பட்டிருந்தன.  

அவ்வாறான விடயங்களை மேற்கொள்ளுகின்ற போதுமக்களின் தொகை அதிகரிக்கும்வெளியிடங்களில் இருந்து வருபவர்களின் மூலமாக கொரோனா தொற்று ஏற்படலாம் என்பது சுகாதார திணைக்களத்தின் அறிவிப்பு. இதற்கு கட்டுப்பட்டவர்களாக ஆலய வண்ணக்கு சபையினரும் சுகாதார திணைக்களத்தின் அறிவுரையோடு மகோற்சவத்தினை கொண்டு சென்றனர். ஆனாலும் தேரோட்டம் நடைபெறாது என்ற பேச்சு ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் தான்தோன்றியப்பனின் இரு தேர்களும் மக்கள் கூட்டத்தோடு ஆலயத்தினை சுற்றி வலம்வந்தன. தேரோடி நிறைவுபெற மழையும் பெய்தது. இது அங்கிருந்த மக்களுக்கு மகிழ்ச்சியை இரண்டிப்பாக்கியது. 

சிவனருளால் தேரோட்டம் நடைபெற்று முடிந்தாலும் பல்வேறு விடயங்கள் இதன் மூலமாக வெளிப்பட்டு நிற்கின்றன என்பது சிவலிங்கத்தின் கருத்து. படுவான்கரைப்பிரதேசம் என்றாலே வருவாரை வாவென்று அழைத்து வயிறாற உணவளித்து அனுப்புவதுதான் வழக்கமும்பழமையும். இதனால்தானோ என்னமோ! ஆலயத்தினைச்சுற்றி மடங்கள் அமையப்பெற்று ஆலய உற்சவம் ஆரம்பித்ததில் இருந்து நிறைவுபெறும் வரை அன்னதானம் வழங்குவதுண்டு. இதனால் ஆலயம் வரும் அடியவர்கள் உண்டி நிறைத்து வீடு செல்வர். ஆனால் இந்த வருட உற்சவத்தின் போது இதனை செய்யமுடியாதென சுகாதார திணைக்களம் கூறியமையினால் உற்சவத்தினை காணவந்த அடியார்கள் உணவின்றி சென்றமை, வழமையாக அன்னத்தினை தானமாக வழங்குவோருக்கு மனச்சங்கடத்தினை ஏற்படுத்தியிருந்தது. இதனால்அவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டதுண்டு.  

தேரோட்டம் தொடங்க முன்பே தேரோட்டத்தில் பொருட்களை வாங்கவென பட்டியல்களை போட்டிருப்பர். அப்பட்டியலுடன் தேரோட்ட நாளில் இனசனத்துடன் சென்றுபொருட்களை கொள்வனவு செய்வது சந்தோசத்தினை அளிப்பதுண்டு. குடும்ப உறவினர்களை கண்டுபேசி மகிழ்வதுமுண்டு. இதற்காக முன்கூட்டியே பணத்தினை சேகரிக்க வேண்டிய நிலையும் ஏற்படுவதுண்டு. அன்றன்றைக்கு உழைத்து குடும்பத்தினை கொண்டு செல்பவர்களுக்கு இவ்வாறான செலவுகளை ஈடு செய்வது மிகவும் கடினம்தான். ஆலயத்தில் வர்த்தக நிலையங்கள் போடப்படாமை செலவினை குறைத்திருக்கின்றது என அவ்வாறானவர்களும் கூறினாலும், தேர்த்திருவிழா ஞாபகமாக பொருள் எதனையும் வாங்கமுடியவில்லையே என்ற கவலையும் அவர்கள் மனதில் குடிகொண்டுதான் இருக்கிறது.  

இதற்கும் அப்பால் ‘இவ்வுற்சவங்களின் போதுபெண் தலைமைதாங்கும் குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள்அப்பம் சுட்டும் சிறுசிறு கடைகளை வைத்தும் குறைந்தளவிலான வருமானங்களை ஈட்டுவதுண்டு. அவ்வாறானவர்களின் வருமான வழி இதன் மூலமாக தடைப்பட்டிருக்கின்றமை வேதனைதான்’ என்கிறார் சிவலிங்கம். 

‘ஆடம்பரமாக செய்யப்படும் சோடனைக்கான செலவுகள்இவ்வருடம் அலங்காரம் தடை செய்யப்பட்டதால் குறைவடைந்துள்ளமை மகிழ்ச்சியை கொடுத்தாலும்வருடத்தில் ஒருமுறை செய்யப்படும் உற்சவ அலங்கரிப்புக்களை பார்வையிட்டு மனமகிழக்கூடிய சந்தர்ப்பம் இல்லாமல் போயிருக்கின்றது’ என்ற கவலையும் உள்ளதென்றார் சுப்பிரமணியம்‘சில குடிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் திருவிழாக்களின் போது பட்டாசுகளுக்காக அதிக பணத்தினை செலவு செய்வதுண்டுஆனால்இவ்வருடம் பட்டாசு கொழுத்துதலை அனைத்து திருவிழாக் குடிகளும் நிறுத்தியிருந்தமை பலரின் வரவேற்பையும் பெற்றிருந்தது’ என்றார்.  

ஆலயத்தில் நடைபெறும் கலைநிகழ்வுகளும் நிறுத்தப்பட்டமையினால்பண்பாட்டு கலைகளை நிகழ்த்துகை செய்யக்கூடிய சந்தர்ப்பம் இல்லாமல் போயிருக்கின்றது. கடந்த வருடம் கூத்துக்கள் அதிகம் இடம்பெற்றிருந்தன. ஆனால்இவ்வருடம் கலைநிகழ்வுகள் நிறுத்தப்பட்டமையினால் எந்தவொரு கலைநிகழ்வும் நடக்கவில்லை. இதனால் கலைஞர்களுக்கான களமும் தடைபட்டிருக்கின்றது.  

‘ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெற வேண்டும் என்ற நியதிக்கு இணங்ககொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டுமாகவிருந்தால் சுகாதார திணைக்களத்தின் அறிவுரைகளை கேட்க வேண்டும்’ எனக்கூறிய சுப்பிரமணியம், எப்படியிருந்தபோதிலும், ‘எது நடந்ததோ அது நல்லாகவே நடந்தது’ எனக்கூறியவனாக அவ்விடத்தில் இருந்து நகர்ந்தான்.