பெண்ணில் பேசப்படாத ஒரு பக்கம்

பெண்ணில் பேசப்படாத ஒரு பக்கம்

(இறைவன் படைப்பில் பெண்கள் ஒரு அதிசயம். உலகை அழகு செய்யவே இறைவன் அவர்களைப் படைத்தான் என்று நம்புபவர்களும் உண்டு. ஆனால், அவர்களின் உடலில், உணர்வில் மறைந்துகிடக்கும் சில அம்சங்கள் அவர்களுக்கு சில சமயங்களில் நரகமாக இருப்பதும் உண்டு. ஆனால் அவற்றை ஆணுலகம் இலகுவில் புரிந்து கொள்வதில்லை. ஆசிரியர்)  


  — மருத்துவர் சிவச்சந்திரன் சிவஞானம் —

வந்தாலும் பிரச்சினை, வராவிட்டாலும் பிரச்சினை என்பது மாதவிடாய்க்கும் பொருந்தும். மாதவிடாய் ஏற்படும் காலத்தில் இது பெண்களில் பல பிரச்சினைகளை ஏற்படுத்துவது போல மாதவிடாய் நிரந்தரமாக நிற்பதாலும் பல பிரச்சினைகள் ஏற்படலாம். 

“இந்த மனிசிக்கு வேற வேலையே இல்லை, எப்ப பாரு தொண தொண என்றுகொண்டு ” 

உங்கள் அம்மாவையோ, அம்மம்மாவையோ யாரவது இப்படி திட்டி இருக்கலாம். அவர்களும் 50 வயதளவில் தொட்டதற்கெல்லாம்  அளவுக்கதிமாக எரிச்சலடையத் தொடங்கலாம். இது அவர்களில் வேண்டுமென்றே ஏற்படுக்கிற மாற்றமில்லை.  

அவர்கள் அறியாமல், மாதவிடாய் நிரந்தரமாய் நிற்பதால் உடலில் ஏற்படுகிற ஹோர்மோன்களின் குழறுபடிகளால் இது ஏற்படுகிறது. 

ஒரு பெண்ணுக்கு அண்ணளவாக 52 வயதளவில் “மாதவிடாய் வருவது” நிரந்தரமாய் இல்லாமல் போகும். ஆங்கிலத்தில் இது “மெனபோஸ்” எனப்படும். 

ஏன் இந்த மெனபோஸ் ஏற்படுகிறது? 

ஒரு பெண் பிறக்கும் போதே அவளின் சூலகத்தில் கருமுட்டைகள் உருவாகிவிடும். அவள் பூப்படைந்த பின் மாதா, மாதம் பல முட்டைகள் சிதைவடைய ஒரு முட்டை வளர்ந்து கருத்தரிக்கத் தகுதியுடையதாகும். கருத்தரிக்காத போது அந்த முட்டையும் அழிந்துபோகும். சூலகத்தில் முட்டை வளரும்போது கர்பப்பையும் குழந்தையைத் தாங்க தன்னை தயார்படுத்தும். குழந்தை தங்காமல் கருமுட்டை அழிந்த பின் கருப்பையின் உள்பகுதியும் சிதைவடைந்து வெளியேறும். அதுவே மாதவிடாயாகும். 

இது ஒவ்வொரு மாதமும் மீண்டும் மீண்டும் நடைபெறும். 

ஒரு கட்டத்தில் சூலகத்தில் இருக்கும் முட்டைகள் அனைத்தும் அழிந்துபோன பின், இந்தச் செயற்பாடு நிற்கும். அப்போது மாதவிடாய் ஏற்படுவது நிரந்தரமாக நிற்கும். 

சராசரியாக 52 வயதளவில் மாதவிடாய் நிரந்தரமாக நிற்குமென்றாலும், இது 40 வயதுக்குப் பிறகு எப்போது நின்றாலும் சாதாரணமானதாகவே மருத்துவர்களால் கருதப்படும். 

அதாவது ஒரு பெண்ணுக்கு 40 வயதுக்கு பின் மாதவிடாய் நிரந்தரமாக நின்றால் அச்சப்படத் தேவையில்லை. 

ஆனால், இந்த மொனபோஸ் நிலைமை பெண்களுக்கு பலவிதமான பிரச்சினைகளை கொடுக்கின்றது. 

மெனபோஸ் காரணமாக என்ன என்ன பிரச்சினைகள் ஒரு பெண்ணுக்கு ஏற்படுகிறது? 

“Hot flushes” என்பது உடலிலே நெருப்பு பரவுவது போன்ற உணர்வு ஏற்படுவதைக் குறிக்கும். அடிக்கடி உடலிலே சூடு பரவுவது போல உணர்வார்கள். மெனபோசினால் ஏற்படுகிற பொதுவான பிரச்சனை இதுவாகும்.  

உடல் பலவீனமடைந்ததாக உணர்வார்கள். மென்மையாக, பளபளப்பாக இருந்த தோல் உலர்ந்து சுருக்கம் உடையதாக மாறும்.  

பெண் உறுப்புப் பகுதி உலர்வடைந்து, உடலுறவின் போது வலி ஏற்படும். இதனால் உடலுறவில் நாட்டம் குறையும். 

‘இவளுக்கு இப்ப என்னில விருப்பமில்ல, வேற ஏதும் தொடர்போ?” என கணவனுக்கு சந்தேகம் ஏற்படும். குடும்பத்தில் சச்சரவு ஏற்படும். 

போதாக்குறைக்கு, மெனபோஸ் உடல் ரீதியான பிரச்சினைகளை மட்டும் ஏற்படுவதில்லை. உள ரீதியாகவும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.  

அடிக்கடி கோபப்பட வைக்கும், தூக்கம் குறையும், அதிகமாக கவலைப்படுவார்கள். ஏற்கனவே இவளுக்கு இப்ப என்னில ஆர்வமில்லை என்று புகைந்து கொண்டிருக்கும் கணவனின் எண்ணத்தில் அவளின் எரிச்சலடையும் தன்மை எண்ணெய் ஊற்றிவிடும். 

கணவன் மனைவிக்கு மட்டுமல்ல, அம்மா பிள்ளை, அம்மம்மா பேரப்பிள்ளைகளுக்கிடையான உறவிலும் பிரச்சினை வரலாம். 

இனிமேல், வீட்டிலிருக்கும் ஒரு பெண் ஐம்பதை அண்மித்த வயதுகளில் எரிந்து விழ தொடங்கினால், பதிலுக்கு நீங்களும் சண்டை பிடிக்காதீர்கள். அவளின் உடலிலும் உள்ளத்திலும் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை புரிந்துகொள்ளுங்கள். அதற்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்க உதவுங்கள். என்ன தீர்வு? இதற்கான பதிலை கட்டுரையின் கடைசிப் பகுதியில் எழுதுகிறேன். 

மெனோபோசினால் மேலே சொன்ன பிரச்சினைகளுக்கு அப்பால், மெனபோஸ் ஏற்பட்ட பின் ஒரு பெண்ணின் என்புகள் சிதைவடைவது அதிகரிக்கும். இது ஆங்கிலத்தில் osteoporosis எனப்படும். இதனால் சும்மா சறுக்கி விழுந்தாலே என்பு முறிவு ஏற்படலாம். 

மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகரிக்கும். மெனோபோசின் பின் டிமன்சியா எனப்படும் மறதித்தன்மை ஏற்படுகிற நோய் வருவதற்கான சந்தர்ப்பமும் அதிகரிக்கும். 

இவ்வளவு சிக்கல்களைத் தோற்றுவிக்கும் இந்த மெனபோஸ் பற்றி பெரிதாக எம் சமூகத்தில் பேசுவதேயில்லை. இங்கிலாந்து பாடசாலைக் கல்வியில் இந்தவருடம் முதல் “மெனபோஸ்” ஒரு பாட அலகாக உள்ளடக்கப்படுமளவுக்கு இது ஒரு முக்கியமான விடயமாக அந்த நாடு கருதுகிறது. 

மெனபோஸ் காரணமாக ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு? 

இந்தக் காலத்தில் உளரீதியாக ஏற்படுகிற பிரச்சினைகளைத் தவிர்க்கக் கூடியதாக பெண்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். தியானம், யோகாப் பயிற்சிகளில் ஆர்வமுள்ளவர்கள் அவற்றில் ஈடுபடலாம். குறிப்பாக இயலுமானவரை உடற்பயிற்சிகளை செய்வது உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். 

உளரீதியான பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதற்கு குடும்பத்து உறுப்பினர்களின் பங்களிப்பும் முக்கியமானது. ஒரு பெண் பூப்படையும் போது விழுந்து விழுந்து கவனிக்கும் சமூகம் , கட்டாயம் கவனிக்கவேண்டிய மாதவிடாய் நிறுத்தத்தைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறது.  

இந்தக்காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்களைப் புரிந்து மற்றைய குடும்ப உறுப்பினர்கள் அவர்களோடு முரண்பாடுகளை தவிர்ப்பது கட்டாயம்.  

இந்தக்காலத்தில் கணவர் மார் தங்கள் மனைவியோடு ஒவ்வொரு நாளும் ரொமான்டிக் வோல்க் ( romantic walk) போவது உடற்பயிற்சியாக இருப்பதோடு, பெண்களுக்கு எரிச்சலடையும் தன்மை, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும். 

ஏற்கனவே எழுதியது போல் இந்தக்காலத்தில் பெண் உறுப்பு உலர்வடைவதால் உடலுறவில் நாட்டம் குறைவதால் தாம்பத்திய உறவில் முரண்பாடுகள் வரலாம். இந்தச் சிக்கலை கணவர்மார் புரிந்துகொள்ள வேண்டும். 

இந்தப் பிரச்சினை உள்ள பெண்கள் உடலுறவின்போது பெண்ணுறுப்பை ஈரழிப்பாக வைக்கக்கூடிய ஜெல்(Gel) பயன்படுத்தலாம். வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் நீங்களே நேரடியாக பார்மசியில் அவற்றை வாங்கலாம். 

இந்தக் காலத்தில் பெண்களை உடல் ரீதியாக பாதிக்கிற மிக முக்கியமான விடயம் உடம்பிலே சூடு பரவுகிற உணர்வு (hot flushes).  

இதற்கு முதற்கட்டமாக அறையைக் காற்றோட்டமாக வைத்திருத்தல், மென்மையான ஆடைகளை அணிதல் போன்றவற்றை செய்து பார்க்கலாம். 

மெனபோசினால் ஏற்படுகிற அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம், உடம்பிலே ஈஸ்ரஜன் ஹோர்மோனில் ஏற்படுகிற குறைபாடு. 

மேலே சொன்ன ஆரம்ப நடவடிக்கை மூலம் தீர்வு கிடைக்காத பெண்களுக்கு கடைசியான தீர்வு ஹோர்மோன் மாத்திரைகளை வழங்குவதே. இவை இலவசமாக அரசாங்க வைத்தியசாலைகளில் கிடைப்பதில்லை. தனியாரில் மட்டுமே கிடைக்கிற துரதிஸ்டமான நிலை இன்னும் இலங்கையில் இருக்கிறது.  

இந்த மாத்திரைகள் வைத்தியரின் ஆலோசனையின் படியே எடுக்கப்படவேண்டும். அவ்வாறு வைத்திய ஆலோசனை மூலம் எடுத்தால் இந்த மாத்திரைகள் மிகவும் பாதுகாப்பானவையாகும்.