சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்!

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்!

—அவுஸ்திரேலியாவிலிருந்து பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா—

“இது என் கதையல்ல என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை”

அழகிய இலங்கைத்தீவின் கிழக்குக் கரையோரம்.
அன்றாடம் கதிரவன் உதிக்கும் கடலோரம்.
கிழக்குப் பக்கம் இருப்பதால் கிழக்குமாகாணம்!
கிழக்கு என்பது அடைமொழியாக வரும்போது “கீழ்” என்றும் வரும்.
அதனால் கீழ்மாகாணம் என்றும் அழைக்கப்படும்.
ஆனால்,
கீழ்மாகாணத்தைக்
கீழான மாகாணமாக ஆக்குதற்குத் தங்களின்
மேலான செல்வாக்குக்களையெல்லாம் பயன்படுத்திய
அரசியல் தலைவர்கள்தான் எத்தனை,எத்தனை!
அரச உத்தியோகத்தர்கள்தான் எத்தனை, எத்தனை!
“வரவுக்கு” வந்தார்கள்,
வளத்தை அள்ளிச் சென்றார்கள்.
உறவுக்குக் கைகொடுத்தால்
ஒளிந்து நின்று மிதித்தார்கள்.
பச்சைமண் சுட்டமண் என்று
பாகுபாடு காட்டினார்கள்!
கல்விப் பங்கீட்டில்
கஞ்சத்தனம் செய்தார்கள்.
ஏமாற்றுக் காரர்களின்
எத்தனையோ சூழ்ச்சிகளை
எருவாகக்கொண்டதுதான்
இன்றைய கிழக்கிலங்கை!
அதிலும்
மட்டகளப்பு என்றால்
மாற்றான் தாய் மனம் கொண்டார்கள்.
அரச உப்பரிகைகளில் ஏறி
அமர்ந்திருந்தோர் தங்கள்
கபடநாடகங்களை அரங்கேற்றும்
களரியாக நினைத்தார்கள்
நீலக்கடல் தாலாட்ட நீண்டு கிடக்கும் அந்த மாநிலத்தில்
மத்தியில் அமைந்துள்ள
வனப்பான மாவட்டம்,
மட்டக்களப்பு!
மட்டக்களப்பு என்றால்
மட்டில்லா மகிழ்ச்சியின் களம்.
வந்தாரை வரவேற்று
வாழவைக்கும் நிலம்
அதனால்,
வந்தவர்களெல்லாம் தங்கினார்கள்,
வளம் பெற்றார்கள்,
வாழ்வில் நலம்பெற்றார்கள்.
தற்காலிகமாக வந்தவரும்
எக்காலமும் இனி, இதுதான் நிரந்தரமென
வசிப்பிடமாக்கி, வாழத்தலைப்பட்டார்கள்.
திரும்பிச் சென்றவர்களும்
திரண்ட செல்வத்தைத்
திரட்டிக்கொண்டு போனார்கள்.
வந்தாரை வாழவைத்த மட்டக்களப்பு மண்
விரும்பிவந்த யாரையும் வெறுங்கையோடு
திரும்பிச்செல்ல விட்டதில்லை
நீர்வளமும் நிலவளமும்
நிரம்பப்பெற்றது மட்டக்களப்புத் தமிழகம்
அது மனவளம் மிக்க நல்ல மக்களின் தாயகம்.
அந்த மண்ணிலே நிறைந்திருப்பது கனிவளம்.
மக்களின் மனதிலே உறைந்திருப்பது கவிவளம்
சிற்றாறும், வளமான குளங்களும்
வற்றாத நீர் பாயும் வாவிகளும், ஓடைகளும்,
மானோடும் காடுகளும், மயிலாடும் சோலைகளும்,
தானாக விளைகின்ற கழனிகளும் நிறைந்த நாடு அது.
கல்லாதோரும் கவிபாடும் அந்த நாட்டில்
தண்ணிரில் வாழும் மீன்கூட,
பண்ணோடு இசை பாடும்!
அந்த மக்கள் பேசும் தமிழிலும்
அன்பின் ஓசை கலந்திருக்கும்.
வற்றாத சிற்றாறு மட்டுநகர் வாவி
நீண்டு வளைந்து, நிமிர்ந்து ஓடி
வளமான அந்த மானிலத்தை
கிழக்கு மேற்காகப் பிரிப்பதனால்
காலையில் கதிரவன் எழுந்து வருகின்ற கிழக்குப்பக்கம்
“எழுவான் கரை” என்றும்
மாலையில் அது மறைந்து படுகின்ற மேற்குப்பக்கம் “படுவான் கரை” என்றும் பெயர்களைப் பெற்றன.
(நினைவுகள் தொடரும்)