அம்பாரைத் தேர்தல்: படிப்பினையும் எதிர்காலமும்

அம்பாரைத் தேர்தல்: படிப்பினையும் எதிர்காலமும்

 — எழுவான் வேலன் —

அம்பாரை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்காக மகிந்த ராஜபக்ச அணியினரால் களமிறக்கப்பட்டவர்தான் கருணா அம்மான்மற்றும்படி தான் வெல்வதற்கோ அல்லது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காகவோ போட்டியிட வந்தவர் அல்ல எனும் போலிப் பிரச்சாரம் கருணா அம்மான் அம்பாரையில் போட்டியிட முன்வந்த நாள் தொடக்கம் தற்போது வரை மிக வலுவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராலும் அவர்களின் புலம்பெயர் ஆதரவாளர்களினாலும் கட்டமைக்கப்பட்டு கூறப்பட்டு வருகின்றது.  

இதன் உண்மைத் தன்மையினையும் கருணா அம்மானின் தோல்விக்கான காரணங்களையும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியமானதாக இருக்கின்றது.  

முதலில்அம்பாரை மாவட்டத்துக்கு கருணா அம்மான் பொருத்தமான வேட்பாளர் என்ற தெரிவு எவ்வாறான அரசியல் சூழ்நிலையில் யாரால் எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக தெளிவு இருத்தல் வேண்டும்.   

தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பாக உள்ள காலம் வரை மேற்படி கட்சிகளின் தலைவர்கள் அம்பாரை மாவட்டத்துக்கான அரசியல் பொறிமுறையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரே மாதிரியான கொள்கையினையே கடைப்பிடித்து வந்துள்ளனர். அதாவது முஸ்லிம்கள் என்ன செய்தாலும் அது குறித்து கேள்வி கூட கேட்டு அவர்களின் மனதை நோகடிக்கக்கூடாதுஅவர்களுக்காக எந்தவிதவமான விட்டுக்கொடுப்பையும் நாம் விட்டுக் கொடுக்க வேண்டும் எனும் தாரக மந்திரத்தினை தமது தேசியக் கொள்கையாக 70 வருடங்களாக கடைப்பிடித்து வருகின்றனர். இக்காலப் பகுதியில் சமூகங்களுக்குள் ஏற்பட்ட மாற்றம் வளர்ச்சி முரண்பாடுகள்தேவைப்பாடுகள் என்பனபற்றி எவ்வித அக்கறையுமின்றி ஒரே கொள்கையினை ஒரு அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் மீது இத் தலைமைகள் திணித்து வந்துள்ளன.  

1956ம் ஆண்டு கல்முனைத் தொகுதியில் எம்.எஸ்.காரியப்பர் அவர்களையும் பொத்துவில் தொகுதியில் எம்.எம்.முஸ்தபா அவர்களையும் 1960ம் ஆண்டு கல்முனைத் தொகுதியில் எம்.சி.அகமட் அவர்களையும் தமிழரசுக் கட்சியில் நிறுத்தி தமிழர்களின் வாக்குகளால் அவர்கள் வெல்லவைக்கப்பட்டார்கள். அவர்கள் வெற்றியீட்டிய மறுகணமே ஆளும்கட்சிக்கு மாறி தமது இனத்துக்கு சேவையாற்றினார்கள்.  

1976ம் ஆண்டு பொத்துவில் இரட்டை அங்கத்துவத் தொகுதியாகப் பிரிக்கப்பட்டதன் பின்னரே ம.கனகரெட்ணம் அவர்கள் அம்பாரையில் முதல் தமிழ் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார். சுதந்திரம் கிடைத்த காலம் முதல் அம்பாரையில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாததால் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் சமூகப் பொருளாதாரச் சமமின்மை உருவாகியிருந்தது. இந்தச் சமமின்மையை நிவர்த்தி செய்து அம்பாரை மாவட்ட முஸ்லிம்களுக்குச் சமனாக தமிழர்களைக் கொண்டு வருவதற்கான எவ்வித அரசியல் பொறிமுறையும் கனகரெட்ணம் அவர்கள் வேட்பாளராக நின்று வெற்றியீட்டிய தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் இருக்கவில்லை. அதனை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்குக் கூட தமிழர் விடுதலைக் கூட்டணி அக்கறை காட்டவில்லை. இதன் காரணத்தினால் அம்பாரை மாவட்ட தமிழர்களின் நலன் கருதி கனகரெட்ணம் அவர்கள் ஆளும்கட்சியுடன் இணைந்து தமிழர்களுக்குத் தேவையான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தார். அதனை துரோகமாகப் பார்த்த தமிழ் தேசிய ஆயுததாரிகளால் அவர் சுடப்பட்டார்.  

1989 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியில் TELO, ENDLF, EPRLF ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. இத்தேர்தலில் TELO வின் சார்பில் போட்டியிட்ட திவ்வியநாதன் அவர்கள் வெற்றியீட்டினாலும் அவரால் எதுவும் செய்ய முடியாத நிலையே காணப்பட்டது.  

1994ம் ஆண்டு மாவை சேனாதிராசா அவர்கள் தனது யாழ் மாவட்டத்தை விட்டு அம்பாறையில் போட்டியிட்டார். மாவை சேனாதிராசா அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்டதை விரும்பாத அம்பாரைத் தமிழர்கள்அம்பாரை மாவட்ட தமிழர் மகாசபையின் சார்பில் சுயேட்சையாகப் போட்டியிட்டதன் காரணத்தினால் வாக்குகள் பிரிக்கப்பட்டு இம்முறை போல் தமிழர் பிரதிநிதித்துவம் அம்பாரையில் இல்லாமல் போனது. அதற்கான முழப்பொறுப்பும் தமிழர் விடுதலைக் கூட்டணியினையும் மாவை சேனாதிராசா அவர்களையுமே சாரும்.  

2000 ஆம் ஆண்டு EPDP யின் சார்பில் சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு குறுகிய காலம் தமிழர்களுக்கான அரசியலை முன்னெடுத்திருந்த போதும் ஒரு வருடத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதினால் அவரால் தொடர்ந்து அவ்வழியில் பயணிக்க முடியாமல் போய்விட்டது. 

2001, 2004, 2010, 2015 ஆகிய ஆண்டுகளில் முறையே சந்திரநேரு பத்மநாதன்பியசேனகோடிஸ்வரன் போன்றவர்கள் தமிழ் பிரதிநிதித்துவங்களாக இருந்த போதிலும் இவர்கள் எவ்வித அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்கவில்லை. கடைசியாக நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டு வந்து அவர்களைத் தாங்கிப் பிடித்த கூட்டமைப்பினரால் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்துக்கு ஒரு கணக்காளரைத்தானும் நியமிக்க முடியாத வங்குரோத்து அரசியலாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் இருந்ததை யாவரும் அறிவர்.  

இது போன்றே கிழக்குத் தமிழர்கள் நம்பி கையளித்த கிழக்கு மாகாண சபையையும் முஸ்லிம்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்து விட்டு தமிழ்த் தேசியக் கனவில் அம்பாரை மாவட்டத் தமிழர்களை தவிக்க விட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.  

பாராளுமன்றமாகாணசபை போன்ற ஜனநாயக வழியில் அதிகாரத்தினைப் பெற்று பல தமிழ் கிராமங்கள் முஸ்லிம் மயமாக்கலுக்கும் பல நூறு தமிழ் குடும்பங்கள் இஸ்லாமிய மதமாற்றத்துக்கும் உள்ளாக்கப்பட்டிருப்பதோடு தமிழர்களின் விவசாயம்அதுசார்ந்த பொருளாதாரம் என்பன திட்டமிட்ட வகையில் முஸ்லிம்களால் அழிக்கப்படுகின்றன. இவை தவிர வேலைவாய்ப்பில் புறக்கணிப்புஉட்கட்டுமான அபிவிருத்தியில் புறக்கணிப்புகல்விசமூகநலன் என்பவற்றில் புறக்கணிப்பு என தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்ந்த வண்ணமேயுள்ளன.  

இது ஒரு வகையில் வீரமுனைப் படுகொலை அட்டப்பள்ளப்படுகொலை போன்றவற்றின் மறுவடிவமாக அரசியல் அதிகாரத்தினை தமிழ் மக்கள் மேல் முஸ்லிம் அரசியல்வாதிகள் பயன்படுத்தும் வழி எனக் கூறப்படுகின்றது.  

எனவே இவற்றையெல்லாம் சீர் செய்து அம்பாரை மாவட்ட தமிழர்களின் சமூகப் பொருளாதாரம்கல்வி போன்றவற்றை முன்னேற்றகரமான நிலைக்கு கொண்டு வர வேண்டுமாக இருந்தால் அவற்றைச் செய்வதற்குரிய செயல்திறனும் அரசியல் பொறிமுறையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் கிடையாது என்பதை உணர்ந்த கல்முனையில் இதுவரைகாலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக உழைத்த அதன் தீவிர ஆதரவாளர்கள் கருணா அம்மானுடன் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியதோடு கல்முனையிலும் கல்முனைக்கு வெளியிலும் ஊர் முக்கிய பிரமுகர்களுடன் சிறு சிறு கூட்டங்களை ஒழுங்கு செய்து அக்கூட்டங்களில் எதிர்வரும் தேர்தல் குறித்து கலந்துரையாடப்பட்டு எடுக்கப்பட்ட முடிவே கருணா அம்மானை அம்பாரை மாவட்டத்தில் நிறுத்துவது என்பதாகும்.  

இந்த நிலையில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான அகில இலங்கை தமிழர் மகாசபை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஆதரிப்பது என்றும் அம்பாறை மாவட்டத்தில் கருணா அம்மானை ஆதரிப்பது என்றும் முடிவெடுத்திருந்தது. இதன் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை தமிழர் மகாசபை போட்டியிடாததோடு அம்பாரை மாவட்டத்தில் தனது கப்பல் சின்னத்தில் தலைமை வேட்பாளராக கருணா அம்மானை நியமித்தது.  

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கிழக்கின் அரசியல் நிலைமை தொடர்பாக மிகச் சரியான தூரநோக்குச் சிந்தனையிலான மக்கள் நிலைப்பட்ட முடிவை எடுத்திருந்தது. 

எனவே அம்பாரை மாவட்டத்தில் கருணா அம்மான் போட்டியிட வேண்டும் என்ற முடிவும் அவர் கப்பல் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற முடிவும் கருணா அம்மானின் தனிப்பட்ட முடிவோ அல்லது அவர் மிக அதிகமாக விசுவாசிக்கும் ராஜபட்சயினரின் முடிவோ கிடையாது. அது அம்பாரை மாவட்ட வரலாற்று நிர்ப்பந்தமாகும். அந்த வரலாற்று நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்தியது தமிழரசுக் கட்சி தொடக்கம் இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவங்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து தாங்களே தமிழ் தேசியத்தை சிதைத்து விட்டு அதற்கான பொறுப்பினை பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் தனிநபர்கள் மீதும் சுமத்துவதை வறட்டுத் தேசிய வாதிகளும் அவர்களின் ஊடகங்களும் கைவிடுதல் வேண்டும்.  

கருணா அம்மானின் தோல்விக்கான காரணங்கள் 

எந்த ஒரு வெற்றி தோல்வியையும் சரி அல்லது நிகழ்வுகளையும் சரி அகபுறக் காரணிகளே தீர்மானிக்கின்றன. அம்பாரை தேர்தல் நிலைமை தொடர்பாக நோக்குமிடத்து கருணா அம்மானின் வெற்றிக்கான புறக் காரணிகள் மிகச் சாதகமான நிலையிலே இருந்தன. அகக் காரணிகளே அவருடைய தோல்விக்கு அடிப்படையாய் இருந்திருக்கின்றன. அந்த வகையில் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.  

1.      நிர்வாக ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுக்கோப்பான பிரச்சார செயலணி இல்லாமை. 

2.      நிதி வளம் போதாமை 

3.      பொருத்தமான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்படாமை 

4.      தலைமை வேட்பாளராகச் போட்டியிட்ட கருணா அம்மான் கட்சித் தலைமைகளின் ஆலோசனைகளை கேட்கத் தவறியமை. 

5.      தலைமை வேட்பாளரான கருணா அம்மான் தனிமனித உறவுகளையும் தொடர்பாடல்களையும் பேணத் தவறியமை. 

6.      மேடைப் பேச்சில் அரசியல் பக்குவமும் இங்கிதமும் இல்லாதமை. 

1.      நிர்வாக ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுக்கோப்பான பிரச்சார செயலணி இல்லாமை. 

மொத்த தமிழுலகமுமே கருணா அம்மானை தமிழ் இனத் துரோகியாகவும்ஒழுக்கமற்றவராகவும் அடையாளமிட்டு அந்த பிம்பம் நிலைபெற்று விட்ட சூழலில்த்தான் கருணா அம்மான் தேர்தலைச் சந்தித்தார். இவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்  முஸ்லிம் இனவாதிகள், புலம்பெயர் புலி ஆதரவாளர்கள்  என மூன்று அணியினரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தனர். இவரைத் தோற்கடிப்பதற்கான வியூகங்களை வகுத்து கோடிக்கணக்கான பணத்தினைச் செலவிட்டனர். சகல வளங்களும் கொண்ட ஒரு பலமான எதிரணியினையே கருணா அம்மான் தேர்தலில் சந்திக்க வேண்டியிருந்தது. இதனை எதிர்கொள்வதற்கு நிர்வாக ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுக்கோப்பான பிரச்சார செயலணி முக்கியமானதாகும். 

இந்தப் பிரச்சாரச் செயலணி ஒவ்வோர் கிராமங்களிலும் அடிமட்ட மக்கள் தொடக்கம் உச்சமட்ட மக்கள் வரை மக்களுக்கான அரசியல் எனும் கருத்தாக்கத்தைக் கொண்டு சென்று அதற்குப் பொருத்தமானவர் கருணா அம்மான்தான் எனும் செய்தியை கூறக்கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறான ஒரு செயலணியை கிராமங்கள் தோறும் நிறுவி பிரச்சாரத்தினை முன்னெடுப்பதற்கான திட்டத்தினை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கொண்டிருந்த போதிலும் அதனை ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு கருணா அம்மான் முயற்சி எடுக்கவில்லை என கிழக்கு தமிழர் கூட்டமைப்பு வட்டாரங்கள் குறைபடுகின்றன.  

அவர் தனது முன்னாள் போராளிகளும் அவருடைய விசுவாசிகளும் இப்பணியினைச் செய்வார்கள் என நம்பினார். அவர் நம்பிய போராளிகளுக்கு மக்கள் மட்ட அரசியல் அனுபவம் போதாமையினால் ஒவ்வோர் குடும்பங்களையும் தனிப்பட்ட ரீதியில் அணுகுவதை விடுத்து ஒவ்வோர் ஊர்களிலும் கூட்டங்களையே ஒழுங்கு செய்தார்கள். இக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்களை அடிப்படையாகக் கொண்டு வெற்றி நிச்சயம் எனும் அதீத நம்பிக்கையை அம்மானுக்கு ஊட்டினார்கள். தேர்தல் அனுபவம் இல்லாத அம்மான் இந்த கூட்டங்களிலும் வரவேற்புகளிலும் உளம் மகிழ்ந்து எதிர்கால வெற்றிக்களிப்பில் மூழ்கிப்போனார்.  

2.      நிதி வளம் போதாமை  

அம்பாரை மாவட்டத்தைப் பொறுத்தவரை போட்டியிடுகின்ற தமிழ் கட்சிகளில் ஏதோ ஒரு கட்சியில் ஒரே ஒரு தமிழ் பிரதிநிதிதான் தேர்வு செய்யப்படுவார் என்பதே யதார்த்தமாகும். அகில இலங்கை தமிழர் மகாசபை வேட்பாளர் பட்டியலைப் பொறுத்தவரையில் கருணா அம்மானே வெற்றியீட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் மற்றைய ஒன்பது வேட்பாளர்களும் கருணா அம்மானின் வெற்றிக்காக உழைக்கும் வேட்பாளர்களே தவிர தங்களுடைய வெற்றிக்காக உழைக்கும் வேட்பாளர்கள் அல்ல. தங்களுடைய வெற்றிக்காக அல்லாமல் மற்றவருடைய வெற்றிக்காக உழைக்கும் போது தங்களுடைய நிதியினையும் செலவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. வேட்பாளர்கள் கூட்டங்களை ஒழுங்கு செய்வதற்கும் தன்னுடன் அரசியல் பணி ஆற்றவந்தவர்களுக்கு தேனீர்சிற்றுண்டி மற்றும் உணவுபோக்குவரத்து என ஏகப் பட்ட செலவுகளை ஈடு செய்வதற்கும் அவர்களுக்கு நிதி வளங்கப்பட்டிருத்தல் வேண்டும். இவர்களுக்கான நிதி போதியளவு வளங்கப்படாததினால் அவர்கள் வினைத்திறனுடன் செயலாற்றவில்லை. இதனால் ஒவ்வொரு கிராமங்களும் அம்மானுக்காக அணிதிரட்டப்படவில்லை.  

3.      பொருத்தமான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்படாமை  

விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் முழு மாவட்டமுமே ஒரு தேர்தல் தொகுதியாக அமைவதன் காரணத்தினால் போட்டியிடுகின்ற கட்சி முழு மாவட்டத்திலிருந்தும் பரந்தளவிலான வாக்குகளைப் பெறவேண்டும். அவ்வாறு பெறவேண்டுமாக இருந்தால் வேட்பாளர் பட்டியலானது மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கின்ற மிகச் சிறந்த நபர்களை வேட்பாளர்களாகக் கொண்டிருத்தல் வேண்டும். அந்த வேட்பாளர்கள் தனது பகுதியில் ஆகக் குறைந்தது சராசரியாக 5000 வாக்குகளையாவது பெறக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும். ஆனால் அகில இலங்கை தமிழர் மகாசபையினருடைய வேட்பாளர் பட்டியலானது மேற்கூறப்பட்ட நியமங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது எனக் கூறமுடியாது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பொருத்தமானதொரு வேட்பாளர் பட்டியலாகவே அது காணப்பட்டது. இதனால் வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகள் அல்லது அவர்கள் சார்பாக கட்சி பெற்றுக் கொண்ட வாக்குகள் மிகக் குறைவானவையாகும். அகில இலங்கை தமிழர் மகாசபைக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் கருணா அம்மானை மையப்படுத்தி அளிக்கப்பட்ட வாக்குகள்தான் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.  

4.      தலைமை வேட்பாளராகச் போட்டியிட்ட கருணா அம்மான் கட்சித் தலைமைகளின் ஆலோசனைகளை கேட்கத் தவறியமை. 

மிக நீண்டகால இராணுவ அணுகுமுறைகளைக் கொண்ட கருணா அம்மான் ஜனநாயக அரசியலுக்கு வந்தும் தன்னை ஜனநாயக அரசியல்வாதியாக மாற்றிக் கொண்டு செயற்பட முடியாமல் போய்விட்டது. குறிப்பாக அவர் போட்டியிட்ட கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளை பெற்று முடிவெடுத்து தேர்தல் பணிகளை முன்னெடுக்கக் கூடியவராக இருக்கவில்லை. தனது சொல்லுக்கு எதிர்க்கருத்து தெரிவிக்காதவர்களையும் தன்னையே முழுமுதல் என நம்பும் விசுவாசிகளையும் அவர் அதிகம் நம்பினார். கட்சியினால் கூறப்பட்ட அரசியல் கலந்துரையாடல்கள்மக்களை அரசியல் மயப்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் துண்டுப்பிரசுரங்கள் என எதுவுமே கருத்தில் எடுத்துக்கொள்ளப்படாததோடு இறுதி நேரத்தில் கட்சியின் தலைமை கூட கருணா அம்மானால் ஓரங்கட்டப்பட்டார். 

அம்மானுக்கு வெற்றியை விரும்பி அதற்காக உழைக்க முன்வந்தவர்களின் ஆலோசனைகளைத்தானும் கருத்தில் எடுத்துச் செயற்படவில்லை. ஆரம்பத்தில் அம்மானை அம்பாரை மாவட்டத்துக்கு பொருத்தமானவர் என அழைத்துவந்த பலர் ஓரங்கட்டப்பட்டு அம்மானுடைய அரசியல் பணிகளிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். இது கருணா அம்மானின் வெற்றியை கணிசமானளவுக்குப் பாதித்தது.   

5.      தலைமை வேட்பாளரான கருணா அம்மான், தனிமனித உறவுகளையும் தொடர்பாடல்களையும் பேணத் தவறியமை. 

ஒரு ஜனநாயக அரசியல்வாதிக்கு மிக அடிப்படையான பண்பு தனிமனித உறவுகளை விருத்தி செய்வதும் அவர்களுடன் ஒழுங்கான தொடர்பாடலைப் பேணுவதுமாகும். ஆனால் இந்த விடயம் கருணா அம்மானிடம் சிறிதும் காணப்படவில்லை. மிக முக்கியமான அரசியல் செயற்பாட்டில் இருந்தவர்கள் கூட அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாத நிலையே காணப்பட்டது. தவறவிடப்பட்ட அழைப்புகளைப் பார்த்து அவ் அழைப்புகளுக்கு ஒரு போதும் அவர் பதில் அழைப்பெடுத்து, அழைத்தன் நோக்கம் பற்றி அறிய விரும்பியதில்லை. குறுஞ்செய்தி அனுப்பினால் கூட அதற்கும் எவ்விதமான பதிலும் வழங்கமாட்டார். இதனால் பெரும்பாலான அம்பாறை மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அம்மான் மேல் கொண்டிருந்த நம்பிக்கையினை இழந்து போயினர்.  

தற்போதைய தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி மக்களுடன் ஒரு உறவாடுகையை அவர் மெற்கொள்ளவில்லை. அவர் கையாண்ட அரசியல் பிரச்சார வழிமுறையானது  1980 ஆண்டுகாலத்தவையாகும். அத்துடன் அவரை அவரது ஆதரவாளர்கள் வழிநடத்திய முறையானது சிக்கலானதாகும். ஒரு வேட்பாளராக அல்லாமல்ஒரு அமைச்சராகவே அவர் வழிநடத்தப்பட்டார்வரவேற்கப்பட்டார். இதனால் சாதாரண தனிமனிதர்கள் ஓரங்கட்டப்பட்டு விசுவாசக் குழுவின் அதிகாரம் மேலெழுவதை சாதாரண பொதுமகன் விரும்பவில்லை. ஆனால் அம்மான்  இவற்றைப் பற்றி எவ்வித அக்கறையுமின்றி விசுவாசக்குழுவின் போலி மாயைகளுக்குள் விழுந்து வெற்றிவாய்ப்பை நழுவவிட்டார். 

மேடைப் பேச்சில் அரசியல் பக்குவமும் இங்கிதமும் இல்லாதமை. 

அவருடைய மேடைப் பேச்சுக்கள் பெருமளவானவை தனிப்பட்டவர்கள் மேல் தாக்கதலாகவே இருந்தன. உயர் தகுதிவாய்ந்த ஒருவர் இவ்வாறு பேசுவது அவருடைய அரசியல் பக்குவமின்மையையே வெளிக்காட்டியது. மிக நல்ல உதாரணம், ‘ஒரே இரவில் 3000 இராணுவத்தினரைக் கொன்றோம்’ எனக் கூறி ஒரு அரசியல் சூறாவளியை ஏற்படுத்தியிருந்தார். இவ்வாறே பலரையும் தனிப்பட்ட முறையில், இன ரீதியாக ஏளனம் செய்தும் இங்கிதமில்லாமல் தாக்கினார். இவ்வாறான அந்தப் பேச்சுக்களால் பலர் அசௌகரியமடைந்தனர். இது மக்களை அவரிடமிருந்து அன்னியப்படுத்தியதோடு அவருடைய எதிராளிகளை விழிப்படைய வைத்து அவருக்கெதிராக தீவிரமாகச் செயற்படவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது.  

எனவே மேற்கூறிய காரணங்களையும் மீறி கருணா அம்மான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்றால் அது கருணா அம்மான் எனும் தனிமனிதனுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் அல்ல, அவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் தங்களுடைய தேவைகள் பிரச்சினைகள் என்ன என்று பாருங்கள்கேளுங்கள் என்ற மக்கள் திரளுகையினதும்  பிரதிபலிப்பாகும்.   

அம்பாரைத் தமிழ் மக்கள் இனி என்ன செய்வது

பெருமளவான அம்பாரைத் தமிழ் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தொடர்ந்தும் அந்த மக்களின் பிரச்சினைகள் தேவைகள் என்பவற்றைக் கவனத்தில் எடுக்காது மேலிருந்து திணிக்கப்படும் தமிழ்த் தேசியத்தினால் எவ்வித பயனும் இல்லை என்பதும் இதனால் ஒரு சில பேர் வாழ்கிறார்கள் என்பதும் கடந்த 70 வருடகாலத்துக்கும் மேலாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அவ்வழியில் பயணம் செய்து தங்கள் இருப்பையே இல்லாமலாக்கி விடும் நிலைமையை அம்பாரை மாவட்டத் தமிழர்கள் விரும்பவில்லை.  

இருக்கின்ற ஒரே வழி கிழக்கில் பலமான வாக்குவங்கிகளையுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி. அகில இலங்கை தமிழர் மகாசபை ஆகியன தங்களுக்கிடையிலான கொள்கை வேறுபாடுகளை மறந்து இந்த மக்களுக்காக ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு இம்மக்களை சமூகபொருளாதாரகல்வி போன்றவற்றில் ஏனைய சமூகங்களுக்குச் சமனான நிலைக்கு கொண்டுவருவதற்கான அரசியல் செயல்திட்டத்தினை முன்னெடுப்பதாகும். 

அகில இலங்கை தமிழர் மகாசபை இவ்வாறான ஒரு ஒன்று திரளுகைக்காக கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எனும் ஒரு அரசியல் கூட்டை உருவாக்கியிருக்கிறது. எனவே அந்தக் கூட்டின் கீழ் அனைவரும் ஒன்று திரண்டு இந்த மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும். இந்தப் பொறிமுறையை விடுத்து தங்களுடைய கட்சி அரசியலுக்காகவும் தங்களுடைய அரசியலுக்காகவும் கிழக்குத் தமிழ் மக்களை அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்த முனையும் அனைத்துக் கட்சிகளையும் கிழக்கு மக்கள் நிராகரிக்க வேண்டும். அவ்வாறு நிராகரிக்கும் போதுதான் அம்பாரையும் அதன்பின் திருகோணமலையும் அதன்பின் மட்டக்களப்பும் காப்பாற்றப்படும் என்பதே இன்றைய யாதார்த்த நிலையாகும்.