வாக்குமூலம்-25 

வாக்குமூலம்-25 

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

20.07.2022 அன்று புதிய ஜனாதிபதியைத் (இடைக்கால ஜனாதிபதியைத்) தெரிவு செய்வதற்காக 1981 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்திற்கிணங்கப் பாராளுமன்றத்தில் இடம் பெற்ற தேர்தலில் வேட்பாளர் டலஸ் அழகபெருமாவை (ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்மொழியப்பட்டு பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிசினால் வழிமொழியப்பட்ட பொதுஜன பெரமுனக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்) ஆதரிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த தீர்மானம் அக்கட்சித் தலைமைத்துவத்தின் அரசியல் மதியீனத்தை (மண்டூகத்தனத்தை) மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறது. 

தென்னிலங்கை அரசியல் நீரோட்டத்தைத் தெரிந்து கொண்டு -இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலைப் புரிந்து கொண்டு -பூகோள அரசியலின் போக்கை அறிந்து கொண்டு தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் எதிர்காலத்திற்கு எது நன்மை தரக்கூடியது என்ற சிந்தனைத்தளத்தில் இயங்காது கட்சிக்குள் இருக்கக்கூடிய சில தனிநபர்களின் வார்த்தைகளுக்குப் பின்னால் எடுபட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எடுத்த தவறான முடிவு அவரின் சுமார் அரை நூற்றாண்டு கால (45 வருடங்கள், 1977-2022) தமிழ்த் தேசிய அரசியலின் அனுபவ முதிர்ச்சியை அறவே வெளிப்படுத்தவில்லை. அதி குறைந்தபட்சம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் விரும்பும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்குச் சுதந்திரமாக வாக்களிக்கலாமென்ற தீர்மானத்தையாவது மேற்கொண்டிருக்கலாம்.  

அனேகமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டுத் தமிழ் ஊடகங்களும் (அரசியல் பத்தி எழுத்தாளர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் உட்பட) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் அல்லது நடுநிலை வகிக்கவேண்டுமென்ற கருத்தினையே பிரதிபலித்தன. ஆனால் ஜனநாயகம் பற்றி வாய் கிழியப் பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையான தமிழர்களின் எண்ணங்களைப் புறந்தள்ளிவிட்டுத்தான் டலஸ் அழகப்பெருமவை (சஜித் பிரேமதாச தரப்பை) ஆதரிக்க முடிவெடுத்தது. 

கொள்கை ரீதியாகவும்- சித்தாந்த ரீதியாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (சுமந்திரனும் சாணக்கியனும் ஆரம்பத்திலிருந்தே ஆதரவளித்தனர்) காலிமுகத்திடல் ‘அறகலய’ போராட்டத்திற்கு ஆதரவான -அதாவது ஊழல் அரசாங்கம் மற்றும் குடும்ப ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை ஒரு வாதத்திற்கு நியாயமானது என ஏற்றுக் கொண்டால் – அப்படியாயின் வெற்றி தோல்விகளைக் கணக்கிலெடுக்காமல் அனுரகுமார திசநாயக்காவுக்கல்லவா வாக்களிக்கத் தீர்மானித்திருக்க வேண்டும். அதில் ஒரு தர்க்கமும் நியாயமுவாவது இருந்திருக்கும். ஆனால் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த தீர்மானத்தில் எந்தவிதமான தர்க்கமும் இல்லை; நியாயமும் இல்லை. கொள்கையும் இல்லை; சித்தாந்தமும் இல்லை. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (சுமந்திரனும் சாணக்கியனும்) மூர்க்கமாக எதிர்த்த ஜனாதிபதி வேட்பாளரும் பதில் ஜனாதிபதியும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, அளிக்கப்பட்ட 223 வாக்குகளில் செல்லுபடியான 219 வாக்குகளில் 134 பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்த ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பபெருமவைவிட 52 வாக்குகள் கூடுதலாகப் பெற்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முகத்தில் தானே கரி பூசிக் கொண்டுள்ளது. அதன் மூலம் தமிழ் மக்களை அரசியல் கையறு நிலையில் நிறுத்தியுள்ளது. 

இது மட்டுமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அது உருவான ஆரம்ப காலத்திலிருந்தே தொடர்ந்து தமிழ் மக்களைப் பாதிக்கும் அரசியற் தவறுகளையே புரிந்து வருகிறது. அதன் தொடர்ச்சிதான் இப்போது நடந்த ஜனாதிபதித் தேர்தலில் டலஸ் அழகபெருமவை ஆதரிக்க அது எடுத்தமுடிவு. 

‘தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர்களின் தவறான தீர்மானம் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களின் அரசியற் பலத்தை வீணடித்துள்ளது’  என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவறான தீர்மானம் குறித்து கூறியுள்ள கூற்று தமிழ் மக்களின் சிந்தனையை எதிர்காலத்தில் நெறிப்படுத்துவதாக அமையட்டும். 

அதேபோன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிலொன்றான தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா முக்கியமான தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்றுத் தவறை மீண்டும் செய்துள்ளதாகவும்-மக்களின் எதிர்பார்ப்புகளையும், அபிலாசைகளையும் பொருட்படுத்தாது கூட்டமைப்பின் தலைமைத்துவம் அரசியல் ரீதியில் ஒரு சிலரின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கியிருப்பது மிகவும் தெள்ளத் தெளிவானது என்றும்- எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த தமிழ்த் தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் வாக்குகள் இப்போது தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்று குறித்துப் பேச முடியாத நிலையில் வீணாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியிருப்பது தமது கட்சிக்காரர்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மீது விரக்தியும் வெறுப்பும் கொண்டிருப்பதை வெளிக்காட்டுகிறது. 

உண்மை நிலையைக் கூறப்போனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தாய்க் கட்சியான (பிரதான பங்காளி கட்சியான) தமிழரசுக் கட்சியும் காலாவதியாகிவிட்டன. அதேபோன்று அதன் ஏனைய பங்காளிக் கட்சிகளான ‘ரெலோ’ வும்’ ‘புளொட்’ டும் -மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கட்சிகளெனத் தம்மைக் குறி சுட்டுக் கொள்ளும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணியும் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் (முன்னாள் ஈபிஆர்எல்எப்) கூடக் காலாவதியாகிவிட்ட கட்சிகளே. இவற்றிடம் நவீன அரசியல் சிந்தனைகளோ அணுகுமுறைகளோ இல்லை. கடந்த 70 வருடங்களுக்கும் மேலாகத் தமிழர் அரசியலில் அரைத்த மாவையே தேர்தலுக்குத் தேர்தல் மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் அகிம்சைப் போராட்டமும் தோல்வியுற்று ஆயுதப் போராட்டமும் தோல்வியுற்று 2009 யுத்தத்தின் பின்னர் இராஜதந்திரப் போராட்டம் என வர்ணிக்கப்பட்ட போராட்டமும் இப்போது தோல்வியுற்று விட்டது. 

தமிழ் மக்களுக்குள்ள ஒரேயொரு மாற்று வழி மேற்போந்த கட்சிகளையெல்லாம் பாவ புண்ணியம் பார்க்காது முற்றாக நிராகரிப்பதாகும். இதனூடாகவே தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு முற்போக்கான நேர்மறையான அரசியல் மாற்றம் ஏற்படவழி பிறக்கும்.