தமிழர் அரசியலில் அரிச்சந்திரனைத்தேடி…! (காலக்கண்ணாடி 95) 

தமிழர் அரசியலில் அரிச்சந்திரனைத்தேடி…! (காலக்கண்ணாடி 95) 

     — அழகு குணசீலன் — 

“மேதகு” அற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தடம் புரண்ட இலங்கை அரச தேரை தனியொருவராக தூக்கி நிமிர்த்தி இருக்கிறார். அதைத் தொடர்ந்து இலங்கை அரசியலில் நாளுக்கு நாள் நல்லதும், கெட்டதும் நடந்து கொண்டிருக்கிறது. சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  

இந்த வகையில் அனைத்துக் கட்சிகளும் இல்லாத ஆனால் அதிக கட்சிகளைக்கொண்ட அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சி முக்கியமானது. இது நாட்டின் பொருளாதார, அரசியல் ஸ்த்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அவசியமானது. உண்மையில் அரசியல் உள் நோக்கில் ஆள் மாற்றங்களை கோராது நெருக்கடித்தீர்வுக்கு கூட்டுப்பொறுப்புடன் எப்பவோ செய்திருக்க வேண்டிய பணி இது.  

எனினும் இன்னும் காலம் கடந்துவிடவில்லை. ஜனாதிபதி தெரிவு எதிர்க்கட்சிகளுக்கு புத்தி புகட்டியிருக்கிறது. இதற்கு மேலும் வாய்ச்சவால்களைவிட்டு ஒத்துழைப்பை வழங்காது விட்டால் தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று எதிர்கட்சிகள் கருதுவதன் விளைவு இது. காலிமுகத்திடலில் இவர்கள் தமது வேறுபட்ட உண்மை முகங்களை மறைத்து அணிந்திருந்த முகமூடியை அவர்களே இப்போது கழற்றிவிட்டு ஜதார்த்த, நடைமுறை அரசியலுக்கு திரும்பி இருக்கிறார்கள். தடம்புரண்ட தேருக்கு வடம் பூட்டவும், இழுக்கவும் ஓடோடிவருகிறார்கள்.   

ரணிலை 100 வீதம் எதிர்த்து வாக்களிக்காத அல்லது டலஸ் அழகப்பெருமாவை 100 வீதம் ஆதரிக்காத தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு  பலகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. நிபந்தனையற்று ஆதரவை அறிவித்துவிட்டு பின்னர் ஜனாதிபதியை சந்தித்துப் பேசி பத்துக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இவை அனைத்தும் டலஸ்- சஜீத் கூட்டணியுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எழுதிய “மாட்டுத்துண்டில்” உள்ளவைதான். 

மட்டக்களப்பின் வயல்வாடிகளில் மாடு விற்பனை செய்பவரும், கொள்வனவு செய்பவரும் எழுதிக்கொள்கின்ற ஒரு கடதாசிதான் “மாட்டுத்துண்டு”. கள்ள மாட்டுக்கும் எழுதுவார்கள். வெள்ள மாட்டுக்கும் எழுதுவார்கள். இலங்கையின் பழம்பெரும் தமிழரசுக்கட்சியின் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும், டலஸ்- சஜீத் கூட்டுக்கும் இடையில் அவசர அவசரமாக கையால் எழுதப்பட்ட கடதாசி. ஒரு வித்தியாசம்  …விற்கப்பட்டது அங்கு மாடு இங்கு வாக்கு. 

இந்த “மாட்டுத்துண்டு” விவகாரம் மட்டுமன்றி, சம்பந்தர் ஐயாவின் அரசமாளிகையில் பூட்டிய(?) கதவுக்குள் நடந்த சம்பவங்களும், டலஸ்க்கு ஆதரவாக முடிவொன்றை எடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நகர்வுகளும், கதை கட்டல்களும், அழுத்தங்களும் தமிழர் அரசியலில் பேசுபொருளாகி உள்ளன. இந்த அரசியலில் அரிச்சந்திரனைத் தேடுகிறது காலக்கண்ணாடி. 

அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்தபோது சிறிதரன் எம்.பி. ரணிலைப் பார்த்து சொன்னது இது :- 

“நாங்கள் உங்களுக்கு வாக்களிக்காத போதும் நீங்கள் எங்கள் கோரிக்கைகளுக்கு இணங்கி இருப்பதற்கு நன்றிகள் ஐயா”. 

ஜனாதிபதி அதற்குச் சொன்ன பதில் இது:- 

“உங்களில் சிலர் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள்”  

அந்த சந்திப்பில் கலந்து கொண்ட எட்டுப்பேரில், முதுகெலும்பு உள்ளவர் உட்பட எவரும் இதனை முற்றாக மறுக்கவில்லை. அல்லது யார் அந்த துரோகிகள் என்று தமிழ்த்தேசிய மொழியில் கேட்கவும் இல்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு இது பெரும் தலைகுனிவு என்பதை காட்ட தலைகுனிந்து கீழே பார்த்திருக்கிறார்கள். சுமந்திரனும், சித்தார்த்தனும் இது விடயமாக தங்கள் கருத்தை வெளியிட்டதாக செய்திகள் வந்துள்ளன. 

ரணில் விக்கிரமசிங்கவை ஈ.பி.டி.பி. ஆதரிக்கும் என்று திட்டவட்டமாகவும் வெளிப்படையாகவும் அறிவித்தவர் டக்ளஸ் தேவானந்தா. அதுமட்டுமின்றி தமிழ்த்தேசிய தரப்பில் சிலரை அணுகி ரணிலுக்கு ஆதரவளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். சம்பந்தப்பட்டவர்கள் டக்ளஸ் ஊடாக உறுதிமொழியை ரணிலுக்கு வழங்கினார்கள், வாக்களித்தார்கள். இதையே ரணில் கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.  

 மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் வீசிய வலையில் வீழ்ந்தவர்கள் யார்? சிறிதரன், செல்வம், விநோதரகலிங்கம், சார்ள்ஸ் என்று ஈ.பி.டி.பி வட்டாரங்களில் இருந்து இப்போது கசிவு ஏற்பட்டுள்ளது. இதை ரணிலுக்கு நினைவுபடுத்தவே சிறிதரன் பிரேரித்தார். ரணில் ஆமோதித்தார்.   

சட்டம், நீதித்துறையில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்றும் முன்னுக்குப்பின் முரணாகவும், சந்தர்ப்பவாதமாகவும் வாதிடும் சுமந்திரன் ஜனாதிபதியிடம் போராட்டக்கார்களை கைது செய்யக்கூடாது, கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என்று பத்தோடு பதினொன்றாக முன் வைத்த கோரிக்கைக்கு “அதை சட்ட, நீதித்துறை பார்த்துக் கொள்ளும்” என்று பதிலளித்துள்ளார் ரணில்.  

சம்பந்தர் அரசமாளிகையில் 18ம் திகதி கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது சொல்லாமல், கொள்ளாமல் ஒரு நபர் உள்ளே நுழைந்திருக்கிறார் . நுழைந்தவர் வேறு யாருமல்ல சஜீத். ஐயாவை குசேலம் விசாரிக்க வந்தாராம். இது சுமந்திரனின் ஏற்பாடு என்று கூறப்படுகிறது. நோக்கம் நாங்கள் சஜீத்துடன் தொடர்பில் இருக்கிறோம் என்பதை மற்றையவர்களுக்கு காட்டுவதற்கான முயற்சி. அப்போது சஜீத்தே வேட்பாளர் என்று இருந்தது. இந்த வரவு ரெலோ, புளட் தரப்புக்கு ஆச்சரியமாக இருந்துள்ளது. சம்பந்தர் வீடு என்ன வீதியோரக்கடையா? குசேலம் விசாரிக்க வந்ததை ஜனாவும், சிறிதரனும் உறுதி செய்துள்ளனர். 

19ம் திகதிக் கூட்டம் தொடர்ந்த போது ஏழுபேர் (10:7) பெரும்பான்மையான எம்.பி.க்கள் நடுநிலைமை வகிக்கின்ற நிலைப்பாட்டில் இருந்துள்ளார்கள். டலஸ் – சஜீத் அணிக்கு ஆதரவளிக்கவேண்டும் என்று சம்பந்தர், சுமந்திரன், சாணக்கியன் வாதிட்டுள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற கடும்வார்த்தைப் பிரயோகங்களை சிறிதரன் உறுதிப்படுத்தியுள்ளார். அப்போதுதான் வேறு வழியில்லாமல் இந்திய தூதரகத்தை உதவிக்கு இழுத்திருக்கிறார்கள். சிறிதரனின் கருத்துப்படி கூட்ட நேரத்தில் ரெலிபோன் எதுவும் வந்ததாக இல்லை. இறுதியாக டலஸ் நல்லவர் அவரை ஆதரிப்போம் என்று சம்பந்தர் சொல்ல, இந்திய தூதரக டெலிபோன் கதையை அதற்கு உறுதி சேர்க்கும் நோக்கில் சுமந்திரன் சொல்லி முடித்திருக்கிறார்.  

சம்பந்தர் ஐயா முதியவர், மூத்த அரசியல்வாதி, அவரின் கருத்தை மறுதலிக்க முடியவில்லை என்றெல்லாம் சிறிதரன் பேசுவது தமிழ்த்தேசிய அரசியலின் மிகப்பெரும் பலவீனம். இது தலைமைத்துவ பலவீனம் மட்டுமல்ல ஒட்டு மொத்த பாராளுமன்றக் குழுவின் “ஆமாப்போடும் அரசியல்” பலவீனமும் கூட. தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியை சம்பந்தர் ஐயாவின் முதுமைக்கு பலிகொடுக்க இவர்கள் அரசியல் செய்கிறார்கள். சம்பந்தர் ஐயா கண்ணை மூடினால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கதையும் அதோடு முடிய அதிக வாய்ப்பு இருக்கிறது. அதற்கு அதிக காலமும் தேவைப்படாது. 

“மாட்டுத்துண்டில்” கையொப்பம் இடவில்லை என்று ஆரம்பத்தில் இருந்தபோதும் இப்போது ஒப்பமிட்டது உறுதியாகி உள்ளது. அந்தத்துண்டு “சம்பந்தரிடம் இருக்கட்டும்” என்று பலர் கூறியபோதும் டலஸ் -சஜீத்   “இல்லை சுமந்திரன் வைத்துக் கொள்ளட்டும்” என்று கூறியிருக்கிறார்கள். அப்போது சுமந்திரன் “அவர்கள் என்னை நம்புகிறார்கள் நான் வைத்துக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். 

ஆக, சம்பந்தரை டலஸ் -சஜீத் நம்பவில்லை.  

இது யார் வீட்டுக் கல்யாணம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதா? அல்லது டலஸ்-சஜீத் வீட்டுக் கல்யாணமா? எழுத்து மூல உடன்பாட்டை தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் யார் வைத்திருப்பது என்பதை தீர்மானிப்பதற்கு டலஸ்-சஜீத் இவர்கள் யார்? தமிழ் மக்கள் எப்போது டலஸ் -சஜீத்துக்கு உரிமை வழங்கினார்கள். இவை அனைத்தும் சுமந்திரனின் கரங்கள் அனைத்துக்கும் பின்னால் இருப்பதைக் காட்டுவதுடன், மற்றையவர்களின் கரங்கள் கட்டப்பட்டிருப்பதையும் காட்டுகிறது. 

இத்துண்டை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று ஜனா எம்.பி. கோரியிருக்கிறார். ஆனால் இவைதான் ரணிலிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்றால் ஜனாவின் கோரிக்கைக்கு இனி வலுச்சேர்க்க முடியாது. தமிழ்த்தேசிய அரசியலில் கடிதம், அறிக்கை, ஒப்பந்தம் என்று வந்தால் இயல்பாகவே சுமந்திரனின் கையோங்கிவிடுகிறது. அது அவரின் சட்ட, மொழி அறிவு குறித்தது அதில் தவறில்லை.   

ஆனால் தவறு எங்கு இருக்கிறது என்றால் சக பங்காளிக்கட்சிகளை புறக்கணித்து சுமந்திரன் தனித்து ஓடுவதில் இருக்கிறது. இது தமிழ்த்தேசிய அரசியலின் தடம் புரள் அரசியலுக்கு காரணமாகிறது. இன்னும் எவ்வளவு காலத்திற்கு   தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சுமந்திரனை  சும்மா பார்த்துக்கொண்டிருக்கப்போகிறது? சம்பந்தரின் கண்ணுக்குப்பின் பதவிச் சொத்துச் சண்டை  இன்னும் மோசமாகும். 

 தமிழர் அரசியலில் அரிச்சந்திரனாக இல்லாவிட்டாலும், அரிச்சந்திரனின் பக்கத்து வீட்டுக்காரனாகவாவது இருக்க வேண்டும் அல்லவா? பெரிய வீடு தமிழரசில் மாவையின் தலைமைத்துவம் செயற்படவில்லை. இலங்கையின் ஜனாதிபதி தெரிவு தொடர்பான கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளாதது தமிழ் மக்களுக்கு தமிழரசு தலைமை தாங்கும் தகுதியை இழந்துவிட்டதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. சிறிதரன் கூறுகின்ற மாவையின் வரவு – செலவு கணக்கு தமிழ் மக்கள் இட்ட கட்டளையை, பொறுப்பை மாவை தட்டிக்கழிப்பதாக உள்ளது. அதேபோல் ஜனாதிபதியை சந்தித்தபோது சம்பந்தர் கலந்து கொள்ளாததும் சுமந்திரனுக்கு வாய்ப்பை வழங்கி கூட்டமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல். 

 தமிழரசுகட்சி தமிழ்மக்களுக்கு கோரி நிற்கின்ற சம அந்தஸ்த்து, சமஉரிமை, சம பங்கு, சம கௌரவம் போன்றவற்றை தம்மோடுள்ள கூட்டாளிக் கட்சிகளுக்கு வழங்காதவரை நேர்மையான அரசியலை பங்காளிகளிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. இந்த நிலை நீடிக்கும்வரை தமிழர் அரசியலில் அரிச்சந்திரனை மட்டும் அல்ல, அவனின் பக்கத்து வீட்டுக்காரனையும் கூட தேடுவதற்கு வாய்ப்பில்லை. 

இல்லாத வாய்மையை எங்கு தேடுவது? 

 எப்படித்தேடுவது ?? 

 எவரிடம் தேடுவது ???