இயக்க விதியும்: சண்டையும் (சிறுகதை)  

இயக்க விதியும்: சண்டையும் (சிறுகதை)  

     — அகரன் — 

பத்து வருடமாக மூன்று நட்சத்திரங்களை நெற்றியில் வைத்திருக்கும் விடுதியில் உள்ள சமையலறையில் வேலை செய்வது என்பது ஒன்றும் இந்திரர் அமுதம் போல் இனிப்பானதல்ல. ஏனெனில் அந்த விடுதியில் இதுவரை ஒரு விருந்தினராக இருந்து சாப்பிட்டதில்லை. 

அதற்கு காரணம் இல்லாமலில்லை. ஒருமுறை அங்கிருந்து உணவருந்த ஆசைப்பட்டால் எனது மாத ஊதியத்தில் கால் பங்கை செலவழிக்க வேண்டி ஏற்பட்டுவிடும்.  

இந்த வாய்ப்பு வீதியில் சந்தித்த ஒரு பெண்ணால் வாய்த்தது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். எனது இளம் மனைவியும் நம்பவில்லை. 

அன்று பிரான்சில் அதிக வெப்பம் பதிவாகி இருந்தது. மதிய வேலை முடிந்ததும் சமையலறையில் இருந்த வெப்பத்தை விட வெளியில் குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வெளியேறியபோது பிரான்ஸ் கொதித்துக்கொண்டிருந்தது. பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு முப்பதாயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்ற செய்தியை கைபேசி சுடச்சுட சொன்னது. எனது வண்டிக்குள் குளிரை நிறைத்து விட்டு வீடு நோக்கிப்போனேன். வருடத்தில் அதிசயமாக அழைப்பெடுக்கும் நண்பர் அழைப்பில் வந்தார். அவர் ஒரு வருடக் கதைகளை சில நிமிடங்களில் சொல்லிவிடும் அவசரத்தில் இருந்தார். அவர் என் வீட்டில் இருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் மற்றொரு அகதி.  

வண்டியை ஓரம்கட்டிவிட்டு உலகின் பெரிய கோட்டையின் (château de Versailles) அந்தப்புர வாசலுக்குச் செல்லும் ராணி வீதியில் (boulevard de la reine) உள்ள அழகாக தலை சீவப்பட்ட மரங்களுக்குக்கு கீழ் உள்ள நிழலில் வண்டியை நிறுத்தி விட்டு தொலை பேசிக்கொண்டிருந்தேன். 

அப்போது ஒர் இளம் பெண் அங்கு வருவோர் போவோரிடம் ஏதேதோ பேசிக்கொண்டிருந்துவிட்டு என் காரை நோக்கி வந்தார்.  

எனக்கோ தர்ம சங்கடம் என் கார் கண்ணாடி தானாக இறங்காது. அது என்னோடு ஒட்டுறவு வேண்டாம் என்று செயலற்றுக்கிடந்தது. 

அந்தப் பெண் நெருங்கியதும் நான் காரை விட்டு இறங்கி என் காருக்கு இளம் பெண்ணால் ஏற்பட இருந்த அவமானத்தை தடுத்துக்கொண்டு வணக்கம் சொன்னேன். 

‘’வணக்கம் கனவானே, எனது காரின் பற்றறி செயலிழந்துவிட்டது. உங்களிடம் அதை இயக்கும் இணைப்பான் உள்ளதா?’’ என்றாள். எனக்கோ பதட்டம். கார் ஓடுவதைத்தவிர எந்தப் பாவமும் செய்யாதவன் நான்.  

ஆனாலும் இளம் பெண்ணுக்கு உதவுவதென உறுதியான முடிவெடுத்தேன். ஊரில் நானும் ஒர் இயக்கத்தில் இருந்தேன். அரச அடக்குமுறைக்கெதிராக போராட முப்பத்தி ஆறு இயக்கங்கள் இருந்ததாக சொல்கிறார்கள். அந்த முப்பத்தாறு இயக்கத்திலும் என் இயக்கம் இடம்பெறவில்லை. அதன் பெயர் சாரணர் இயக்கம். அதன் பத்து விதிகளில் நான் இப்போதும் மறக்காமல் இருப்பது. ‘எக்காலத்திலும் பிறர்க்கு உதவி புரிய வேண்டும்’ என்ற விதி. இளம் பெண்ணுக்கு உதவி புரிய எரியும் வெயிலில் தயாரானேன். அப்போது நம் உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த நண்பர் தன்னிடம் அதற்கான உபகரணங்கள் இருப்பதாக முந்திக்கொண்டார். அவர் ஒட்டுக்கேட்ட குரல் அப்படிப்பட்டது. 

சில நிமிடங்களிலேயே ஏதோ காத்துக்கொண்டிருந்தவர் போல அங்கு வந்து சேர்ந்துவிட்டார். அந்த வெம்மையில் துடித்துக்கொண்டிருந்த பெண்ணை என் வண்டிக்குள் குளிர் காற்றில் அமர்த்திவிட்டு நாமிருவரும் அந்த காரை உயிர் பெறச்செய்ய ஒரு மணிநேரம் போராடி ஒருவாறு இயங்கச் செய்தோம். இதில் என் பங்கு வாய்பார்த்தல் மட்டுமே. எங்கள் கடும் பணியை பார்த்த பெண்ணுக்கு கண்ணீர் வராத குறை. இப்படியானவர்களும் பிரான்சில் இருக்கிறார்களா என்றபடி தன் உதடுகளால் பெறுமதியான நன்றிகளை விதைத்தாள். 

பின்னர் எங்கள் பெயர்களை தான் கேட்காததிற்கு வருத்தம் தெரிவித்தாள். நண்பருக்கு அலுவல் இருப்பதாக அவர் கிளம்பியது எனக்கு வாய்ப்பாக போய்விட இளம்பெண் விசாரனையை நான் நளினமாக ஆரம்பித்தேன். அதன் விபரம் : 

‘’அவள் பெயர் அனா. பிரான்சில் உள்ள பொர்தோ என்ற இடத்தில் வைன் உற்பத்தி நிறுவனங்களை பரிசோதிக்கும் அலுவலர். உயிரியலில் டாக்டர் பட்டம் பெற்ற அனா, பிரான்சின் உலகப்புகழ் பெற்ற வைன் உற்பத்தி பரிசோதகராக வேலை செய்கிறாள். பொர்தோவில் 12000 வைன் உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள். உலகின் உயர்தர திராட்சை விளையும் நிலமும், அதனால் உயர்தர வைன் உற்பத்தியும் அங்கு நடக்கிறது. அதனால் பிரான்ஸ்க்கு 3.3 பில்லியன் வருமானம் வருகிறது. பாரிசுக்கு அடுத்தபடி அதிகமான அருங்காட்சியங்களும், நினைவகங்களும் இருக்கும் நகரம் பொர்தோ.‘’ இந்த விடயங்கள் எனக்கு வியப்பை தரவில்லை. அனா, உக்ரேனில் நடக்கும் யுத்தத்தால் இடம்பெயரும் பெண்களையும், குழந்தைகளையும் காப்பதற்காக தன் தொழிலை தற்காலிகமாக இடைநிறுத்திவிட்டு உக்ரேனிய எல்லைக்கே சென்று அகதிகளை அழைத்துவந்து; பிரான்சில் ஒரு குடும்பத்தை தங்கள் இல்லங்களில் வைத்துப் பார்க்கக்கூடிய குடும்பங்களிடம் பெண்களையும், குழந்தைகளையும் ஒப்படைக்கும் பணியை செய்கிறாள்.  

இதை கேட்டபோது அவள் ஒரு தேவதை போலவே தெரிந்தாள். கண்ணாடி போட்ட கண்களும், உதடு முடியும் இடத்தில் உள்ள மச்சமும், கருவிளம் பூ போன்ற கண்களும், மட்டுமல்ல அவள் இதயம் பூமியில் உள்ள மானுடரில் அழகான இமயமாகத் தெரிந்தது. அனா, என் கதையை கேட்டபோது குளிர்களி சாப்பிடுவதுபோல அவற்றை சொல்லி முடித்தேன். அவளுக்கு என்னிலும், எனக்கு அவளிலும் ஆர்வம் அதிகமானது. கைபேசி இலக்கங்களையும் பரிசுத்த புன்னகையையும் பரிமாறி நாம் பிரிந்தோம். 

மூன்றாவது நாள் என் கைபேசிக்கு அனா ஒர் மாலை விருந்துக்கான அழைப்பை அனுப்பி இருந்தாள். அது நான் வேலை செய்யும் விடுதி என்பது அனாவிற்கு தெரியாது. 

முதன்முதல் உடையலங்காரம் செய்து ஊரில் திருவிழாவுக்குச் செல்வதுபோல் உணவருந்தச் சென்றேன். அங்கு அனாவும், அவளால் அழைத்துவரப்பட்ட மற்றுமொரு இளம்பெண் கரீனாவும் இருந்தார்கள்.  

என்னோடு வேலை செய்பவர்களால் இதை நம்பவே முடியவில்லை. நான் ஏதோ வித்தை காட்டுவதுபோல என்னைப் பார்ப்பதும், கொடுப்புக்குள் சிரிப்பதுமாக இருந்தார்கள். சமையலறையில் என்னுடன் வேலை செய்பவர்கள் ரகசியமாக எட்டிப்பார்த்தார்கள். அவர்களை காணாதவன் போல் இருக்க முயற்சி செய்தேன். அவர்கள் வயிற்றுக்குள் நான் அடுப்பெரிப்பதுபோல அவர்கள் கண்கள் தெரிந்தன. 

அனாவால் அறிமுகப்படுத்தப்பட்ட கரீனாவைப்போல் தோற்றமுள்ள பெண்ணை பிரான்சில் நான் பார்த்ததே இல்லை. முகத்தில் எந்த பூச்சுமற்று இருந்த அவள் தோற்றமும் நீண்ட கழுத்தில் தோன்றிக்கொண்டிருந்த நரம்புகளும் பார்க்கும் எவரையும் கட்டிப்போட்டுவிடும். 

என் மூளையில் ரோல்ஸ்ரோயின் ‘அன்னா கரீனா’ இவளைப்போல இருப்பாளோ? என்றுதான் எண்ணத்தோன்றியது. நாம் உணவையும், அனாவின் தெரிவில் வந்த வைனையும் அருந்தியவாறு கரீனா பற்றியும், உக்கிரேன் நாடு பற்றியும் அவளிடம் அறிந்துகொண்டிருந்தோம். . 

கரீனா குடும்பத்தில் ஒரே பிள்ளை. அவள் தாயார் சிறு வயதிலேயே இரத்தப்புற்று நோயால் இறந்துவிட்டார். அவர்கள் டெனீப்பர் நதிக்கு கிழக்குப் பகுதியில் கீவ் நகரில் இருந்து 200 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள சிறு நகரத்தில் வாழ்கிறார்கள். அவள் ‘கட்டட வரைபடவியல்’ கல்வியில் இறுதியாண்டு கற்றுக்கொண்டிருந்தபோது ரஸ்யா தன் குடும்ப தேசத்தின்மீது படை எடுத்திருக்கிறது.  

அவள் தந்தை கரீனாவை நாட்டைவிட்டு வெளியேற்றிவிட்டு தனது 55 வயதிலும் களமுனையில் தன்னிடம் திணிக்கப்பட்ட போரை எதிர்த்து நிற்கிறார். தந்தையைப்பற்றி கரீனா சொன்னபோது அவள் கண்கள் யாருமறியாது குளித்ததை, குரல் வழுக்கியதை நான் அவதானித்தேன். உக்ரேன் பற்றிய என் கேள்விகளை விரும்பிச் சாப்பிடும் பலகாரங்கள்போல் ஏற்று பதிலளித்தாள்.  

உக்கிரேனியர்கள் டெனிபர் நதியின் கரையில் கீவ் நகரை மையமாகக்கொண்டு வைக்கிங் ரஸ் பேரரசை உருவாக்கி பலம்பொருந்தி இருந்த காலத்தில் தமிழ் நிலத்தில் சோழர்களின் பலம் வங்கக்கடலெங்கும் பரவிய காலம். பதின்மூன்றாம் நூற்றாண்டில் உலகின் பெரும் நிலத்தை தன் மடியில் போட்டுக்கொண்ட மங்கோலியன் செங்கிஸ்கானின் படைகளின் சதிராட்டத்தில் சிதறிப்போனது வைக்கிங் பேரரசு.  

முதல் உலகப்போரில் போலந்து அதன் நிலத்தின் மேற்குப்பகுதியை சுருட்டிக்கொண்டது. பின்பு 1922இல் உக்ரேன் சோவியத்தில் இணைந்ததும் உக்கிரேன் மொழி, கலாச்சாரம் வளர்க்கப்பட சோவியத் துணை நின்றது. அங்கிருந்து விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாது சோவியத்தின் அதிபராக இருந்த பிரஸ்நேவ் கூட உருவானார். 

இரண்டாம் உலக யுத்தத்தில் சோவியத் போலந்திடம் இருந்த உக்கிரேனிய நிலத்தை மீட்டெடுத்தது. ஆனால் கிட்லரின் கீவ் நகர முற்றுகைக்கெதிரான உக்கிரேனிய எதிர்ப்பு வரலாற்றில் மிக முக்கியமானது. அதில் 60 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். 

உலக யுத்தத்தில் இருந்து மீண்ட பின்னர் ஏற்பட்ட பஞ்சம் பல உயிர்களை அழித்தது. இதில் இருந்து மீண்டு ‘ஐரோப்பாவின் விளை நிலம்’ என்று சொல்லும்படி விவசாயத்தின் பூமியாக வளர்ந்தது. நிலக்கரி, உலகின் பெரிய இரும்புருக்கு ஆலை என சோவியத்தின் பிரமாண்ட வளர்ச்சியில் உக்கிரேனின் பங்களிப்பு முக்கியமானது. 

1986இல் செர்னோபில் அணு உலை அனர்த்தம் நடந்த அந்த நகர் உக்ரேனில் பகுதியை சேர்ந்தது. 1991இல் சோவியத் உதிர்ந்த போது எட்டு லட்சம் ராணுவ வீரர்களும், அணு ஆயுதங்களையும் ரஸ்யா பிரித்தளித்த ஓரே இரவில் உக்கிரேன் உலகின் இரண்டாவது அணு பலம் கொண்டதாக மாறியது. சிலகாலத்திலேயே அணு ஆயுத ஒழிப்பில் கைச்சாத்திட்டு அவற்றை ரஷ்யாவிடம் மீண்டும் கையளித்த கௌரவத்துக்குரியது உக்ரேன். 

சோவியத்தின் பாகமாக இருந்தபோது எல்லா உக்ரேனிய மக்களுக்கும் ரஸ்ய மொழி பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்பட்டது. அதனால் இன்று கிட்டத்தட்ட எல்லோருமே ரஸ்ய மொழி பேசுவார்கள். சோவியத்துக்காக போராடிய இராணுவ வீரர்கள், சோவித்தை கட்டியமைக்க உழைத்தவர்கள் இன்று உக்கிரேனிய முதியவர்களாக வாழ்கிறார்கள். 

இன்னொருவிதத்தில் உக்கிரேனின் உள்ள பல உயர் கட்டுமானங்கள் சோவியத் காலத்தில் கட்டப்பட்டவை. ரஸ்யர்களும் உக்கிரேனியர்களும் மோதகத்துக்குள் இருக்கும் பயறும் சர்க்கரையும் போன்றவர்கள். வரலாறு, மொழி, தரைத்தோற்றம் என மிக நெருங்கிய உறவுக்காரர். அவர்களுக்கிடையில்தான் இன்று யுத்தமும் வன்மமும் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்டிய கட்டுமானங்கள் மீதே ரஸ்யா குண்டு வீசுகிறது. இந்த யுத்தத்தை உருவாக்கியவர்கள் தேவதூதர்கள்போல ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும், ஸ்டிக்கர் வி்மான எதிர்ப்பு ஏவுகணைகளையும் கொடுக்கிறார்கள். இப்படித்தான் அவர்கள் யுத்தத்தை நிறுத்துகிறார்கள். சகோதர்களை சண்டையிட வைத்துவிட்டு சதைதின்ன தூர இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறது பூமியை விழுங்க இருக்கும் பருந்து. 

நாம் யுத்தம் பற்றி பேசியபோது ஸ்ராலின் காலத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளைப்பற்றியும், பிகாரின் பற்றியும் சொன்னாள். எனக்கு ஜெயமோகனின் ‘பின்தொடரும் நிழலின் குரல்’தான் நினைவில் வந்தது. கீவ் நகரில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான தேவாலயம் பற்றிக்கேட்டேன் இதுபற்றி அ.முத்துலிங்கம் ‘கடவுள் தொடங்கிய இடம்’ என்ற நாவலில் எழுதி இருந்தார். 

நம் பேச்சு ரஸ்ய இலக்கியங்கள் பக்கம் வந்தபோது, ‘’அவர்கள் எங்கள்மீது போர் தொடுப்பார்கள் என்று 24/02/2022 வரை நினைத்தே பார்த்திருக்க வில்லை. யார் யாரின் எதிரி? ஒரு கை மற்றக்கையை வெட்டுவதுபோல நாம் யுத்தம் செய்கிறோம். இதை யாரிடம் சொல்வது?’’ என்று கரீனா சொல்லிக்கொண்டிருந்தபோது அவள் கைபேசிக்கு அழைப்பு வந்தது. அவள் தந்தை இரவு 12 மணிக்கு அழைக்கிறார். குண்டுச்சத்தங்கள் கைபேசிக்குள்ளால் கேட்கிறது. அவள் தன் தாயும், தந்தையாகவும் இருக்கும் ஆதார சீவனுடன் உயிரால் உக்கிரேன் மொழியில் பேசினாள். 

அனாவிற்கு நன்றி சொல்லி, நண்பர்கள் ஆன அடையாளமாக கன்னங்களில் முத்தம் வைத்து வீடு வந்தேன். களமுனையில் உள்ள அவள் தந்தையின் நிலை என்னை வாட்டிக்கொண்டே இருந்தது. வீடு வந்ததும் மனைவி முகம் கறுத்தபடி பெரிய கண்களால் விசனமாக என்னை வரவேற்றாள். சந்தித்த கரீனா பற்றி அவளுக்குச் சொன்னேன். இருவரும் மௌனமாக இருந்தோம். அப்போது மனைவியிடம் ‘கரீனாவை எங்கள் வீட்டில் தங்க வைத்துப்பார்த்தால் என்ன?’ என்றேன். தன் உதடுகளால் அங்காலும் இங்காலும் பாம்பு ஓட்டிக்காட்டிவிட்டு. கதவை வேகமாக சாத்திவிட்டு தூங்கப்போய்விட்டாள். அவள் பதில் சொல்லத்தேவை இல்லை. செய்து காட்டிவிட்டாள். நானென்ன செய்வேன்? கரீனாவின் முகமும், எக்காலத்திலும் பிறர்க்கு உதவி புரிய வேண்டும்! என்ற இயக்க விதியும்தான் என் மனதில் நின்றது. அதற்காக எந்த சண்டையையும் வீட்டில் சந்திக்க தயாரானது அன்றைய எனது மீதி இரவு.