— கருணாகரன் —
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கியிருக்கலாம். மக்களுக்கு வாழ்க்கைச் சுமையாக. ஆட்சியாளருக்கு அரசியல் நெருக்கடியாக, ஆட்சிச் சுமையாக.
அதனால் அவர்கள் தீராத பிரச்சினைகளுக்குள்ளாகியிருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் இதற்குள் மிகப் பெரிய நன்மைகளைப் பெற்றிருப்பது ஒரு பெரிய கூட்டம். அது வணிகத்தரப்பாகும்.
முன்னெப்போதும் பெற்றிராத லாபத்தை இந்த நெருக்கடிக் காலத்தில் வர்த்தகர்கள் பெற்றிருக்கின்றனர். ஆம், அவர்கள் மட்டுமே. இன்னும் அவர்கள் லாபத்தைப் பெற்றுக் கொண்டேயிருக்கிறார்கள். இது அவர்களுக்குக் கிடைத்த கொடை – வரப்பிரசாதமாகும்.
ஏனென்றால் அவர்கள் வணிகத்தில் கேள்விக்கிடமில்லாத வகையிலான அதிகாரத்தை மிக உச்சமாகப் பெற்றிருக்கிறார்கள். எந்தப் பொருளையும் எந்த விலைக்கும் விற்கலாம். விற்காமல் பதுக்கலாம். பதுக்கிய பின் கறுப்புச் சந்தையை உருவாக்கலாம். யாரும் கேட்க முடியாது. அப்படிக் கேட்டால் அரசாங்கத்தை நோக்கியே கைகளை நீட்டுவார்கள். அப்படித்தான் செய்கிறார்கள். அனைத்தும் அரசின் தவறுகளே தவிர, தங்களுடைய தவறுகள் என்று ஒரு போதுமே சொல்லமாட்டார்கள்.
யுத்த காலத்தில், யுத்தம் நடைபெற்ற இடங்களில் கூட இந்த மாதிரி எல்லை மீறிய, கட்டற்ற, பொறுப்பற்ற, இதயமே இல்லாத சிறுமைத்தனமான வணிகம் நடைபெறவில்லை. அப்பொழுது ஓரளவுக்கு மக்களைக் குறித்தும் சமூகத்தைக் குறித்தும் சிந்திக்கும் ஒரு போக்கு, ஒரு தன்மை இருந்தது. அதை விட அன்று இவற்றைக் கண்காணிப்பதற்கான அதிகாரத் தரப்புகளும் (அரசு கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அரசாங்க நிர்வாகமும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலிகளின் நிர்வாகமும்) இருந்தன.
இப்பொழுது நிலைமை தலைகீழாகி விட்டது. அரசாங்கம் ஆட்டம் காணத் தொடங்கியதைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்த முற்பட்டது வர்த்தகத் தரப்பு. அதன் இயல்பே அதுதான். சந்தர்ப்பம் பார்த்துத் தவித்த முயலை அடிப்பது. யுத்தத்தின்போதும் இடையில் புலிகளுக்கும் அரசுக்கும் சுழித்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட தரப்பு இப்படிச் செய்ததுண்டு. இதனால் பாவனையாளர்கள் முற்று முழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பாவனையாளர் நலன் பேணுகை, பாவனையாளர் பாதுகாப்பு என்பதெல்லாமே இல்லாது போய்விட்டது. இது மிகப் பாதகமான ஒரு நிலையாகும். மக்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கத்துக்குத்தான் இதன் அபகீர்த்தி போய்ச் சேரும். காரணம், தங்கள் தவறுகளையும் குற்றங்களையும் மறைப்பதற்காக அவர்கள் அரசாங்கத்தையே காண்பிக்கிறார்கள் –முன்னிறுத்துகிறார்கள். இது எவ்வளவு நுட்பமான தந்திரோபயம்? எவ்வளவு கடை கெட்ட அயோக்கியத்தனம்! ஆகவே அரசாங்கத்துக்கும் இது பாதகமே.
இங்கே நாம் பார்க்க வேண்டியது, செயலற்றுப்போன அரசுக்கு நிகராகவே சமூக அக்கறையும் உறை நிலைக்குப் போய் விட்டது. அரசாங்கத்துக்கு வெளியே உள்ள அரசியற் கட்சிகள், மக்கள் அமைப்புகளும் செயலற்று விட்டன. இதனால் நாட்டில் –அரசாங்கத்தில் ஏற்பட்ட நெருக்கடியையும் கட்டமைப்புச் சிதைவையும் தமக்குச் சாதமாகப் பயன்படுத்தியிருக்கும் வணிகத்தரப்பைக் குறித்துக் கவனம் செலுத்துவதற்கோ தவறுகளைக் கட்டுப்படுத்துவதற்கோ யாரும் அக்கறைப்படவில்லை. ஆகவே அரசும் சரி, பொது அமைப்புகள், ஊடகங்கள், அரசியற் கட்சிகள், தலைவர்கள் உட்பட எந்தத்தரப்பும் சரி இதைப்பற்றிச் சிந்திக்கவே இல்லை. முக்கியமாக இங்கே கண்டிக்கப்பட வேண்டியவர்கள், அரசியற் தரப்பினார். அதிலும் மக்கள் பிரதிநிதிகள். ஆனால் அவர்கள் இதைக்குறித்து வாயே திறக்கவில்லை.
பதிலாக இவர்களுடைய கரிசனை முழுவதும் அரசியல் நெருக்கடியிலேயே குவிந்திருக்கிறது. ஆளை ஆள் குற்றம் சுமத்திச் சொறிந்து கொள்கிற, அந்தச் சொறிதலில் இன்பம் காணுகிற, நன்மைகளைத் தேடுகிற போக்கு இது. உண்மையில் இது நாட்டுக்கும் நன்மையைத் தாராது. மக்களுக்கும் நன்மையைத் தராது.
இதனால் பகற் கொள்ளை என்று சொல்லக் கூடிய அளவுக்கு இந்த அநீதி –அப்பட்டமான கொள்ளையடிப்பு– வெளிப்படையான சுரண்டல் நடக்கிறது. இதன் காரணமாகப் பல லட்சம் மக்கள் தினமும் – ஒவ்வொரு நொடியும் பாதிக்கப்படுகின்றனர். இதைக் குறித்து எங்கும் முறையிடவும் முடியாது. யாரிடத்திலும் பேசவும் முடியாது. அந்தளவுக்கு நாடு இறுகிப் போயுள்ளது. அல்லது எல்லாமே சீரழிந்து விட்டன. இது பெருந்துயரம்.
அந்நியச் செலாவணியான டொலர் பிரச்சினை –தட்டுப்பாடு – வந்தபோது பொருட்களின் இறக்குமதியில் தடங்கல் அல்லது தடை ஏற்பட்டது. இதனால் சட்டெனப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு உருவாகியது. பதுக்கல்கள் நிகழ்ந்தன. ஆகவே இயல்பாகவும் செயற்கையாகவும் உருவாக்கப்பட்ட பொருள் தட்டுப்பாட்டில் படபடவென பொருட்களின் விலை ஏறியது. அல்லது விலை ஏற்றப்பட்டது. கேள்விகள் அதிகரிக்கப்படுவதற்கு ஏற்றமாதிரி சந்தையை வணிகச் சமூகம் தன்கைகளில் முழுதாகவே எடுத்துக்கொண்டது.
இது எப்படி நடந்தது?
இதற்குப் பிரதான காரணம், பதுக்கலைக் கட்டுப்படுத்தவோ கண்காணிக்கவோ அதற்குப்பொறுப்பான அரச நிர்வாகத் தரப்பு –விலைக் கட்டுப்பாட்டுச் சபை உள்பட அனைத்துத் தரப்பும் தவறியதேயாகும்.
ஆரம்பத்தில் சில அதிரடி நடவடிக்கைகள் அங்குமிங்குமாக மேற்கொள்ளப்பட்டதுண்டு. ஆனால் அதையும் கடந்து அல்லது அவர்களை உச்சிக் கொண்டு தமது கைங்கரியத்தைக் காட்டத் தொடங்கினர் வியாபாரிகள். இறுதியில் வர்த்தகர்களே வெற்றியீட்டினர். இரண்டு மூன்று மாதங்களில் தங்களைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களோ கேட்கக் கூடியவர்களோ இல்லை என்ற அளவுக்கு வளர்ச்சியடைந்தனர். இப்பொழுது இவர்கள் மாபெரும் மாஃபியாக்களாகிவிட்டனர். இது பெரு லாபத்தை வணிகச் சமூகத்துக்கு அளித்துள்ளது.
பதுக்கலைக் கட்டுப்படுத்தவில்லை என்ற நிலையில் அதில் ருசிப்பட்டவர்கள் அடுத்தாக விலையை ஏற்றத் தொடங்கினார்கள். முதலில் நாளுக்கு நாள் ஏறிய -ஏற்றப்பட்ட விலை பின்னர் காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என்றானது. இது மேலும் வளர்ச்சியடைந்து மணித்தியாலங்களுக்கிடையில் வேறுபடும் அளவுக்கானது. இப்பொழுது நொடிக்கொரு விலை என்றாகிவிட்டது.
இதை எதிர்க்க முடியாத நிலைக்குள்ளாகினர் மக்கள். அவர்களைப் பொறுத்தவரையில் எப்படியாவது பொருட்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டம். இல்லையென்றால் தேவைக்கதிகமாக அலைந்து அதிக சிரமங்களைப் படவேண்டும். சிலவேளை குறித்த பொருளைப் பின்னர் பெற்றுக்கொள்ளவே முடியாது என்றும் ஆகிவிடும்.
அதனால் எப்படியோ என்ன விலைக்கோ கிடைக்கின்ற பொருளைப் பெற்றுக்கொள்வோம் என்ற முடிவுக்குப் பலரும் வந்தனர். இதை மேலும் தமக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தியது வணிகத் தரப்பு.
இந்த வளர்ச்சி இன்று எல்லா இடங்களிலும் உருவாகி மனச்சாட்சிக்கே விரோதமான அளவுக்குள்ளது. மக்கள் தங்களுடைய கொள்வனவுச் சக்திக்கு அப்பால் பொருட்களைப் பெற முடியாமல் திணறுகின்றனர். இவ்வளவுக்கும் பெரும்பாலான பொருட்கள் ஏற்கனவே கையிருப்பில் இருந்தவை. அல்லது இங்கே களஞ்சியங்களில் இருந்தவையாகும்.
உதாரணமாக, சைக்கிள்கள், வாகன உதிரிப்பாகங்கள், துணி மற்றும் உடைகள், வீட்டுப் பாவனைப் பொருட்கள், மின் உபகரங்கள், மின்சாரப் பொருட்கள், மரப் பொருட்கள் என இந்தப் பட்டியல் நீளும்.
எரிவாயு, பெற்றோல், சீமெந்து, உரம், அரிசி, சீனி, மா, பருப்பு மற்றும் சில உணவுப்பொருட்கள் போன்றவற்றின் விலை உயர்வது தவிர்க்க முடியாதது. அவை அவ்வப்போது இறக்குமதி செய்யப்படுகின்றவை. அவற்றின் விலையை அரசாங்கமே அறிவித்தது. அல்லது அதற்குரிய நிறுவனங்கள் அறிவித்தன.
ஏனையவை அப்படியல்ல. ஆரம்பத்தில் – மூன்று மாதங்களின் முன்பு சைக்கிளொன்றின் விலை 30 ஆயிரமாக இருந்தது. இப்பொழுது தொண்ணூறு ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது எப்படி ஏற்பட்டது?உதிரிப்பாகங்களின் விலையும் அப்படித்தான். முதல்நாள் இரவு ஒரு விலை. மறுநாள் காலை அதே கடையில், அதே பொருள் வேறு விலையில் – கூடிய விலையில் விற்கப்படுகிறது. இதற்கு என்ன நியாயம் சொல்ல முடியும்?
இந்த அப்பட்டமான எல்லை மீறலுக்கு, அறம் மீறலுக்கு அளவே இல்லை. இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நாட்டிலே ஆட்சியாளர்களின், பெருந்தலைவர்களின் ஊழல், கொள்ளை லாபமீட்டல், சமூக விரோதச் செயற்பாடுகள் போன்றவற்றுக்கு எதிராக ஒரு பக்கத்தில் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
மறுபக்கத்தில் அத்தகைய நடவடிக்கைகள் சத்தமின்றி –அச்சமின்றி நடந்து கொண்டிருந்தது. நடந்து கொண்டிருக்கிறது. ஒரு கோத்தபாயவுக்குப் பதிலாக ஊரெல்லாம் பல கோத்தபாயக்கள் உருவாகி விட்டனர். ராஜபக்ஸக்கள் எங்கும் நிறைந்துள்ளனர் என்றுதானே அர்த்தம்!
ஆட்சியாளர்கள் மட்டும் தவறிழைக்கவில்லை. நாட்டிலுள்ள பல்வேறு தரப்பினரும்தான் தவறிழைக்கின்றனர். கொள்ளையடிக்கின்றனர். மக்களை ஏமாற்றிப் பிழைக்கின்றனர்.
இதைத் தெரிந்து கொண்டும் பல அரசியற் தலைவர்களும் எதையும் காணாத மாதிரியே இருக்கின்றனர். இறுதியில் எரிபொருளைக் கூடப் பதுக்கி கறுப்புச் சந்தையில் அதை விற்கும் நிலை ஏற்பட்டது. இதனால் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் ஏகப்பட்ட நெருக்கடிகள் உருவாகின. இதொரு பெரிய பிரச்சினையாக இன்று ஆகி விட்டது.
இதிலே வேடிக்கை என்னவென்றால் இப்பொழுது 450 ரூபாய்க்கு விற்கப்படும் எரிபொருள் விநியோகத்தைக் கண்காணிப்பதற்கு நான்கு ஐந்து அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 30 ஆயிரம் ரூபாய்ச் சைக்கிள் ஒரு லட்டம் ரூபாய்க்கு விற்கப்படுவதைக் கண்காணிப்பதற்கு யாருமே இல்லை.
இது தனியே சைக்கிளுக்கு மட்டுமானதல்ல. அனைத்துப் பொருட்களுக்குமான பிரச்சினையே.
மக்களின் முன்னேற்றத்துக்காகவும் அவர்களுடைய விடுதலைக்காகவும் தங்கள் உடலையும் உயிரையும் அர்ப்பணித்தது, அர்ப்பணிக்கின்றது ஒரு தரப்பு. இன்னும் தேசத்தின் நன்மைகளுக்காக, சமூகத்துக்காக தங்களை அர்ப்பணித்துச் செயற்படுகின்றனர் பலர். இந்த மாதிரியானவர்களின் மத்தியில் இவர்களோ – இந்தக் கொள்ளையர்களோ எந்த விதமான மனச்சாட்சியும் இல்லாமல் அறாவிலையில் பொருட்களை விற்கிறார்கள். கண்முன்னே கொள்ளையடிக்கிறார்கள்.
இதைப்பற்றி நமது சமூகத்தின் அக்கறை என்ன? பதில் என்ன? இதற்கான நடவடிக்கை என்ன?இதைக் கட்டுப்படுத்துவது எப்படி? இதற்கான தண்டனையை எப்படி, யார் வழங்குவது?
உண்மையில் ஒரு இடர் காலம் வரும்போது அதில் அனைத்துத் தரப்பும் இணைந்து நின்று ஆளுக்காள் உதவியாக, ஆறுதலாக, துணையாக இருக்க வேண்டும். அப்படித்தான் புலம்பெயர் சமூகம் இன்று பேருதவிகளைச் செய்து வருகின்றது. அது போர்க்காலமாக இருக்கலாம். போருக்குப் பிந்திய – மீள் குடியேற்ற காலமாக இருக்கலாம். சுனாமி, வெள்ளப்பெருக்கு, கொரோனா போன்ற பேரிடர் காலமாக இருக்கலாம். எந்த நெருக்கடியிலும் பேராறுதலை அளித்துக் கொண்டிருக்கிறது புலம்பெயர்ந்த சமூகம்.
உள் நாட்டிலும் பலரும் பல அமைப்புகளும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். இப்படியெல்லாம் இருக்கும்போது எந்தக் கூச்சமும் இல்லாமல் காலநேரம் பார்த்துத் தவிச்ச முயல் அடிப்போரை, அநீதி இழைப்போரை நாம் மன்னிக்கவே கூடாது. பாரதியார் சொன்னதைப்போல பாதகம் செய்வோரைக் கண்டால் நாம் பயந்துவிடக்கூடாது, அவர்கள் முகத்தில் காறி உமிழவே வேண்டும்.